Sunday, September 28, 2025

கரூர் மரணங்கள் - யாரெல்லாம் பொறுப்பு?

 


நேற்று கரூரில் நடைபெற்ற நெரிசல் மரணங்கள்  மனதை மிகவும் பாதித்தது. எல்லா அழிவுகளைப் போலவும் இங்கேயும் பெண்களும் குழந்தைகளும்தான் அதிக அளவில் மரணமடைந்துள்ளனர்.

இதனை ஒரு துயர சம்பவம், துன்பியல் நிகழ்வு என்றெல்லாம் கடந்து போய் விட முடியாது.

இதனை வெறும் விபத்து என்றும் சுருக்கிட முடியாது, கூடாது. கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டிய சோகம் இது.

இச்சம்பவத்தின் முதல் குற்றவாளி கண்டிப்பாக விஜய் மற்றும் அவருக்கு ஆலோசனை கூறும் அறிவிலி தலைவர்களும்தான்.

அந்த காலத்தில் எம்.ஜி.ஆருக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அவரை பார்த்து விட்டு போவார்கள் என்று சொல்லி உசுப்பேத்தி விஜய்க்கும் தான் ஒரு எம்.ஜி.ஆர் என்ற நினைப்பு வந்து விட்டது. அதனால்தான் 12 மணிக்கு வர வேண்டிய கூட்டத்திற்கு மாலை ஏழு மணிக்கு வருகிறார். 

அத்தனை நேரம் சோறு, தண்ணி இல்லாமல் வெயிலில் காத்து நிற்பவன் சோர்வாகி விழாமல் என்ன செய்வான்? கூட்டத்தை காக்க வைக்காமல் குறித்த நேரத்திற்கு வருவதற்கு விஜய்க்கு என்ன கேடு? 

ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று தெரிகிற போது எதற்கு சாலையில் கூட்டம் நடத்த வேண்டும்? ஒரு மைதானத்தில் நாற்காலிகள் போட்டு நடத்த வேண்டியதுதானே!

எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் உட்படாத தற்குறிகளாகத்தான் தன் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ளாத விஜய்க்கு எதற்கு அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள்?

இந்த மரணங்களுக்கான முதல் குற்றவாளி கண்டிப்பாக விஜய்தான். 

விஜய் மீது மட்டும் பழி போட்டு தமிழ்நாடு அரசோ  காவல்துறையோ தப்பித்துக் கொள்ள முடியாது.

கரூரின் துயரங்கள் விஜயின் முந்தைய கூட்டங்களில் கூட நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்தது. ஏதோ அந்த மக்களின் அதிர்ஷ்டம் அவர்கள் உயிர் தப்பித்து விட்டனர். அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு விஜயின் சாலையோரக் கூட்டங்களுக்கு அரசு அனுமதி மறுத்திருக்க வேண்டும்.  "என்ன பயந்துட்டீங்களா ஸ்டாலின் அங்கிள்?" என்று விஜய் பேச வாய்ப்பு தரக்கூடாது என்று விஜய் கூட்டங்களை அனுமதித்த அரசும் இந்த மரணங்களுக்கு பொறுப்பு.

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மக்கள் திரளும் போதே காவல்துறை  அந்த சாலையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கட்டுக்கடங்காமல் கூட்டம் சேரும் போது கலைத்து விட்டிருக்க வேண்டும்.  அதையும் விஜய் கலாய்ப்பாரே என்ற பயத்தில் தங்களுக்கென்ன என்று அலட்சியமாக இருந்த காவல்துறையும் இந்த மரணங்களுக்கு பொறுப்பானவர்கள்தான்.

பொறுப்பின் சதவிகிதம் வேண்டுமானால் 80:10:10 என்று இருக்கலாம். ஆனால் அனைவரும்தான் பொறுப்பு.

அதே சமயம் கொஞ்சம் கூட பொறுப்பில்லாதவர் விஜய் என்பது அவர் சம்பவ இடத்தை விட்டு ஓடி சென்னைக்கு பறந்ததில் என்பதில் புரிகிறது. 

பெரும் தவறிழைத்த விஜயுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை WE STAND WITH VIJAY என்று அவரது ரசிகக் கண்மணிகள் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் அரசியல் புரிதல் அற்ற மூடர்கள். அப்படித்தான் சொல்வார்கள். நாதக வும் பாஜக வும் ஏன் அப்படிப்பட்ட நிலை எடுக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் மூவருமே கூட்டாளிகள். . . .




3 comments: