Tuesday, April 15, 2025

எம்.எஸ் மீதான பாசமல்ல,கிருஷ்ணா மீதான வன்மமே

 



 

                                          

நூல் அறிமுகம்

 

நூல்                                                    : எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

ஆசிரியர்                                         : டி.எம்.கிருஷ்ணா

தமிழில்                                             : அரவிந்தன்

வெளியீடு                                        : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்,

                                                               நாகர்கோயில்

விலை                                                 ரூபாய் 50.00

 

மியூசிக் அகாடமி கடந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் திரு டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்த போது அதற்கு எதிராக சிலர் அறிக்கைகள் வெளியிட்டனர்,  நீதிமன்றத்துக்குக் கூட ஒருவர் சென்றார். கர்னாடக இசை மேதை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஒரு கட்டுரையில் இழிவு படுத்தி விட்டார் என்பது எதிர்ப்புக்கான காரணங்களில் ஒன்றாக சொல்லப்பட்டது.

 

அந்த கட்டுரையின் தமிழாக்கம்தான் இந்த நூல். அந்த நூலை முழுமையாக படிக்கும் போதுதான் எப்படிப்பட்டதொரு பொய்ப் பிரச்சாரம் நடந்துள்ளது என்பதை உணர முடியும்.

 

இந்த நூலின் தொடக்கமே டி.எம்.கிருஷ்ணா, தன் குருவான செம்மங்குடி சீனிவாச அய்யரோடு ஒரு தியாகராஜர் கீர்த்தனையை கற்றுக் கொள்கையில் அங்கே வருகிற எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அவர்களோடு இணைந்து பாடிய நெகிழ்ச்சியான அனுபவத்துடனேதான் அமைந்துள்ளது. “நாட்டின் மகத்தான இரு இசைக் கலைஞர்களோடு இணைந்து நான் பாடிக் கொண்டிருந்த அந்த மதியப் பொழுதை எந்நாளும் என்னால் மறக்க இயலாது. இது தூய்மையான, உண்மையான உயிர்த்துடிப்பு கொண்ட உத்வேகமூட்டும் நினைவு” என்று விவரிக்கிறார் அவர்.

 

பொலிவியாவில் மலையேற்றத்துக்கு சென்ற போது 16,000 அடி உயரத்தில் கூடாரத்தில் நீண்ட இரவுகளில் துணையாய் இருந்ததும் எம்.எஸ் ஸின் பாடல்களே என்று கூறும் டி.எம்.கிருஷ்ணாவா அவரை இழிவு படுத்தினார்? அப்படி என்ன நூலில் எழுதப்பட்டுள்ளது?

 

திருமதி எம்.எஸ் அவர்களின் துவக்க கால வாழ்க்கையைப் பற்றியும் அப்போதே அவர் இசையில் உச்சத்தை தொடுவார் என்பதற்கான அடையாளம் இருந்ததாக விவரிக்கிற அவர், பின்பு தன் அன்னையோடு முரண்பட்டு ஆனந்த விகடன் பிரிவு மேலாளர் திரு சதாசிவம் வீட்டில் தஞ்சமடைந்ததையும் சதாசிவம் எம்.எஸ் ஸை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதையும் எழுதுகிறார்.

 

அதன் பின்பு எம்.எஸ் அவர்களின் இசை வாழ்வு உட்பட ஒட்டு மொத்த வாழ்க்கையும் சதாசிவம் அவர்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை நூல் விவரிக்கிறது. எந்த கச்சேரியில் எந்த பாடலை எத்தனை நேரம் பாட வேண்டும், எந்த புடவை அணிய வேண்டும் உட்பட எல்லாவற்றையும் சதாசிவமே முடிவு செய்வார் என்பதையும் சில சமயங்களில் கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கையில் கூட அந்த கீர்த்தனையை நிறுத்தி விட்டு, அவசரமாக புறப்படப்போகும் வி.ஐ.பி பார்வையாளருக்காக பஜன் பாடலை பாட வைப்பார் என்பதையும் நூலில் பதிவு செய்துள்ளார்.  அதே போல அதிகமான கை தட்டல்கள் கிடைக்கும் என்பதற்காக ஒவ்வொரு கச்சேரியிலும் சங்கராபரணம் ராகத்தையே பிரதான பாடலாக பாட வைப்பார் என்பதையும் மற்ற பல ராகங்களையும் அவர் மிகச்சிறப்பாக பாடுவார் என்றாலும் அதற்கான வாய்ப்பு அவருக்கும் ரசிகர்களுக்கும் மறுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இது புதிதான செய்தி அல்ல, கர்னாடக இசை ரசிகர்கள் அறிந்ததுதான்.

 

துளசிதாசர், கபீர், குருநானக் ஆகியோரின் பாடல்கள், ரபீந்திர சங்கீத், மீரா பஜன் என பலவகை இசைகளை தீவிரமாக கற்றுக் கொண்டதன் விளைவாக பாடலை இயற்றியவர், அதன் தன்மை, நோக்கம் ஆகியவற்றுக்காக தன்னுடைய ஆளுமையின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிடும் ஆசிரியர் பல வகை இசைகளை அவர் பாடினாலும் ஒரு வகை இசையின் சாயல் இன்னொரு சாயலில் கொஞ்சமும் இருக்காது என்று சொல்லி இது கண்டுகொள்ளப்படாத அபார சாதனை என்றும் பாராட்டுகிறார்.

 

அதே போல  கச்சேரிகளில்  துக்கடா என்றழைக்கப்படும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க எம்.எஸ் தான் காரணம் என்று சொல்கிற கிருஷ்ணாஅவர் அழகாக பாடும் துக்கடாக்களின் சமய ரீதியிலான அம்சத்தில் கவனம் செலுத்தும் ரசிகர்கள் எம்.எஸ் அவர்களின் இசை ஞானத்தை பொருட்படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார். இன்றளவும் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படும் “வெங்கடேச சுப்ரபாதம்” பாடியது அவர் இசை வாழ்வில் பெரிய வீழ்ச்சியை அளித்தது என்றும் அவரது இசையை ரசிகர் தெய்வீக இசை என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு விட்டார் என்றும் குறிப்பிடுகிறார்.

 

இந்த நூலில் அவர் வைக்கிற விமர்சனம் என்பது பக்க வாத்தியங்களுடன் செய்கிற பயிற்சி என்பது பிழையற்ற கச்சேரி என்ற வடிவத்தை கொடுத்தாலும் படைப்பூக்கம் குறைந்து போய் விடுகிறது என்பதுதான். அது அவர் இசைத்திறனை சிறுமைப் படுத்துகிறது இதனைக்கூட  இசைக்கலைஞர் அல்லாத ஒருவர், அவர் கணவராக இருந்தாலும் கட்டுப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்.

 

எம்.எஸ் ஸிற்குள் ஒரு சோகம் குடி கொண்டிருந்தது என்றும் அவர் இசை வாழ்வின் மீது செலுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் அந்த சோகம் உருவாகியிருக்கலாம் என்று கணிக்கிற கிருஷ்ணா கர்னாடக இசை உலகில் தனக்கான அங்கீகாரம் அவரது ப்ஜனைகள், துக்கடாக்கள் ஆகியவற்றுக்காக கிடைத்தது போல கர்னாடக இசை வடிவங்களான கீர்த்தனை, வர்ணம், தில்லானா போன்றவைக்காக கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எப்போதுமே அவருக்கு இருந்தது என்பதையும் பதிவு செய்கிறார்.

 

நூலின் இறுதிப் பத்தியில் கிருஷ்ணா நிறைவாக சொல்வது மிக முக்ககியம்.

 

“எம்.எஸ் மன உறுதி மிக்கவர், வலிமையானவர், கவனக்குவிப்பும் அர்ப்பணிப்பும், துணிச்சலும் கொண்டவர்,  உள் முகமானவர், வெள்ளை உள்ளம் கொண்டவர்,  மென்மையானவர், கர்னாடக இசை உலகம் அவர் இசையை   எளிமைப்படுத்தி தெய்வீக இசை, சாதாரண இசை என்னும் இரண்டு வகைமைக்குள் அடக்கி விட்டது. அவரது இசை இந்த இரண்டு அம்சங்களையும் கொண்டிருந்ததுடன் இவை இரண்டுக்கும் இடையிலும் இருந்தது. அவரும் அவரின் இசையும் நம்மை எப்போதும் வசீகரிக்க தவறுவதில்லை. உண்மையான எம்.எஸ் எங்கே இருக்கிறார் என்னும் பதிலளிக்கப்படாத கேள்வியை அவரும் அவர் இசையும் என்றுமே எழுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்”

 

மறைந்த இசை மேதை பற்றி தற்கால இசை மேதை தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக எழுதியுள்ளார். அதனை முழுமையாக படிக்காதவர்கள் மட்டுமே டி.எம்.கிருஷ்ணா, திருமதி எம்.எஸ்.சுப்புலட்சியை இழிவு படுத்தி விட்டார் என்று கூக்குரல் எழுப்புவார்கள். படித்தும் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டால் அவர்கள் மனதில் கிருஷ்ணா மீது வன்மம் நிரம்பியிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

 

(எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக எழுதியது)

 

 

No comments:

Post a Comment