Friday, July 19, 2019

முப்பது வருடங்களுக்கு முன் இதே நாளில் . . .




இந்த நாள் வாழ்க்கையின் முக்கியமான நாள். அதிகாரபூர்வமான ஆவணங்கள் படி இன்றுதான் பிறந்த நாள். உண்மையான பிறந்த நாள் மே 19 ஆக இருந்தாலும் பள்ளியில் சேர்க்கையில் பத்து மாதங்கள் முந்தைய நாளை கொடுத்து விட்டார்கள். அதனால் பத்து மாதங்கள் முன்பே ஓய்வு பெற வேண்டியிருக்கும்.

அதைத் தவிரவும் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் நடைபெற்ற ஒரு சம்பவம்தான்.

நெய்வேலி கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  ஒரு சாதாரணப் பிரச்சினையை அன்றிருந்த கிளை நிர்வாகமும் கோட்ட நிர்வாகமும் சொதப்பிய காரணத்தால் அது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியது. அவ்வப்போது மோதல்கள், போராட்டங்கள், சமரசப் பேச்சு வார்த்தை, அதன் முறிவு என்றெல்லாம் போய்க் கொண்டிருந்தது.

18 ஜூலை 1989 அன்று ஒரு ஊழியருக்கும் முகவர் என்ற போர்வையில் உலவிய ஒரு தவறான நபருக்கும் ஒரு வாக்குவாதம். அநாகரீகமான வார்த்தைகளை அந்த நபர் பேசியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளை நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். அவருக்கு முதலில் ஒரு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்து  பிறகு நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக் கொண்டது.

மறு நாள் காலை அலுவலகத்திற்கு வர வீட்டிலிருந்து வெளியே வந்தால் ஊழியர் குடியிருப்பின் முன்பாக நெய்வேலியின் பிரபலமான மூன்று அடியாட்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  முந்தைய நாள் பிரச்சினைக்கு உள்ளான தோழரைத்தான் தாக்க வந்துள்ளார்கள் என்று நினைத்து அலுவலகம் சென்று ஊழியர்களை திரட்டுவோம் என ரவிக்குமார் என்ற தோழரின் சைக்கிளில் அமர்ந்து அலுவலகத்திற்கு புறப்பட்டால் அந்த அடியாட்கள் என்னை தாக்கினார்கள். 

விளக்கம் கேட்கும் கடிதத்தை கொடுத்த கிளை நிர்வாகம் “தப்பா நெனைச்சுக்க வேண்டாம், எங்களுக்கு இஷ்டமில்லை. யூனியன் கடுமையாக பேசினதாலதான் தர வேண்டியிருக்கு” என்று போட்டுக் கொடுத்ததால்தான் தாக்குதலின் இலக்காக நான் மாற்றப்பட்டேன் என்பது பிறகு தெரிய வந்தது.

வாயில் குத்தியதில் பல் உடைந்து உதடு கிழிந்து ஐந்து தையல்கள் போட்டு ஒரு வாரம் மருத்துவ மனையில் இருக்க நேரிட்டது. உடலில் வேறு காயம் இல்லை. ஆனாலும் உதட்டில் காயம் என்பதால் “பிரியாணி கூட சாப்பிடலாம்” என்று சொன்னாலும் தையல் பிரிக்கும் வரை  வெறும் ஜூஸ் மட்டுமே ஸ்ட்ராவில் குடிக்க வேண்டிய நிலைமை. முழுக்க முழுக்க தோழர்களால் சூழப்பட்டிருந்த காலமாக மருத்துவமனைக் காலம் அமைந்திருந்தது. பேசுவது சிரமம் என்பதால் எழுதிக் கொடுத்தே தகவல் பரிமாற்றமும். அப்போதே அது காமெடியாக இருந்தது.

சங்கத்தின் வலிமையை நேரடியாக உணர்ந்து கொள்ள வைத்த சம்பவம் அது. கோட்டத்தின் தலைவர்கள் தோழர் ஆர்.ஜகதீசன், தோழர் ஆர்.கேசவன் உடனடியாக நெய்வேலி வந்தார்கள். கோட்டம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனாலும் அன்றைய  கோட்ட நிர்வாகம் சுணக்கமாகவே இருந்ததால் போராட்ட நடவடிக்கைகள் தீவிரமானது.

மருத்துவ மனையிலும் என்.எல்.சி நிறுவனத்தின் சி.ஐ.டி.யு மற்றும் ஹெ.எம்.எஸ் சங்கத் தோழர்கள் வந்து பார்த்தார்கள். அன்றைய சி.ஐ.டி.யு சங்க பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் “இவர் எங்கள் தோழர். கவனமாக சிகிச்சை அளியுங்கள்” என்று என்.எல்.சி பொது மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் சொன்னது மட்டுமல்ல, முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையிடமும் வலியுறுத்தினார்.

சற்றே ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது தாக்குதலின் நோக்கம். தொழிற்சங்கத்திலிருந்து முழுமையாக ஒதுங்கி விட வேண்டும் என்பது குடும்பத்திலிருந்து வந்த நிர்ப்பந்தம். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி திருக்காட்டுப்பள்ளியில் இருந்த என் அக்கா வீட்டில் ஒரு வாரம் போல இருந்து விட்டு நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி, வேலூரில் நடைபெற்ற கோட்டச்சங்கத்தின் இரண்டாவது மாநாடுதான்.

 உள்ளத்தில் உறுதி கொடுத்தது அந்த சம்பவம்தான். எந்த பிரச்சினையானாலும் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் கூட.  இதை விட என்ன பெரிய சவால் வரப்போகிறது என்ற மனோபாவத்தையும் அளித்தது அச்சம்பவமே!

பிகு

காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் அடியாட்களின் பெயர்களை பதிவு செய்து கைது செய்தது. ஆனால் ஏவி விட்டவர்களை விட்டு விட்டது (பணம் விளையாடியது என்று கேள்வி).

இரண்டு வருடங்களுக்குப் பிறகு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அந்த அடியாளில் ஒருவர் என்.எல்.சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட  நெய்வேலி அமராவதி திரை அரங்கில் தற்காலிக ஊழியர். தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வது என்று அப்போது என்.எல்.சி நிர்வாகம் எடுத்த முடிவை வழக்கு இருந்த காரணத்தால் அவருக்கு அமலாக்க முடியவில்லை. உதவி செய்ய வேண்டும் என்று ஒரு தூதுவர் மூலமாக என்னிடம் வந்தார்கள்.

கோட்டத் தலைவர்களோடு ஆலோசித்து நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன்.

எய்தவர்கள் சொகுசாக இருக்கையில் அம்புகளை மட்டும் ஏன் பழிக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

பிகு 2

எய்தவர்கள் மூன்று பேர். அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து போனார். இன்னொருவர் கொலை வழக்கிலும் மோசடி வழக்கிலும் சிக்கி சிறைக்குப் போனார். மூன்றாமவர் திவாலாகி காணாமல் போய் விட்டார்.

9 comments:

  1. இந்த படத்தை பார்க்கும் போது பேரின்பமாக இருக்கின்றது
    இன்னும் பல அடி உதைகளை வாங்க வாழ்த்துகின்றேன்

    வாழ்த்துவோர்
    ஜெயதாஸ் பராபரன்
    கிருஷ்ணாகரன் A.R
    முத்துராஜ் ஜெயசீலன்
    செல்வராஜ்

    ReplyDelete
    Replies
    1. உன்னை மாதிரி ஆளுங்களுக்குத்தான் அந்த பிகு 2.
      அவர்களின் கதியை நீயும் அடைய என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

      Delete
    2. இப்படியே சாபம் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்

      கம்யூனிஸ்ட் போராளி லீலாவதியை போட்டு தள்ளிய திமுக ரவுடிகள் இன்று பதவிகளில்

      கொலைகாரர்கள் சிறை செல்ல விடாமல் காப்பாற்றிய திமுக தலைவர் கருணா முதலமைச்சர் ஆனார்

      அதுக்கு உடந்தையாக இருந்த ஸ்டாலின் உடன் இன்று அதே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டணி

      காலம் எவ்வளவு கொடுமையானது

      Delete
    3. Do you believe in God? Karma?

      Delete
    4. //இப்படியே சாபம் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்

      கம்யூனிஸ்ட் போராளி லீலாவதியை போட்டு தள்ளிய திமுக ரவுடிகள் இன்று பதவிகளில்

      கொலைகாரர்கள் சிறை செல்ல விடாமல் காப்பாற்றிய திமுக தலைவர் கருணா முதலமைச்சர் ஆனார்

      அதுக்கு உடந்தையாக இருந்த ஸ்டாலின் உடன் இன்று அதே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டணி

      காலம் எவ்வளவு கொடுமையானது// இது என்ன சம்பந்தமில்லாத பின்னூட்டம்?

      Delete
    5. //Do you believe in God? Karma?// கிடையாது. அந்த பிகு 2 - அம்பை எய்தவர்கள் நிலை என்ன ஆனது என்ற தகவலுக்காகத்தான். அந்த பொறுக்கி அனாமதேயத்திற்கு அப்படிப்பட்ட செருப்படியும் தேவைப்படுகிறது

      Delete
  2. //கோட்டத் தலைவர்களோடு ஆலோசித்து நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன்.//

    Great decision. God bless you all.

    ReplyDelete
  3. சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் உங்களை போன்ற தோழர்கள் அர்ப்பணிப்பு என்றும் போற்றுதலுக்குரியது -பத்ரிநாத்

    ReplyDelete