Sunday, July 21, 2019

ஜல்லிக்கட்டு போல திரள்வீராக . . .

தஞ்சையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாட்டை முன்னிட்டு தமிழகமெங்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தவுள்ள் விரிவான உரையாடலை சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா துவக்கி வைத்து பேசியதை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அனுபவச் செறிவோடு அந்த சிம்மக் குரலோர் பேசிய காணொளியை காண

இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடியதுபோல்... தமிழுக்காக ஒன்று கூடியதுபோல்...
பொதுவுடமைப் போராளி என்.சங்கரய்யா வேண்டுகோள் !
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3-வது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஆகஸ்ட் மாதம் 15,16,17 தேதிகளில் நடைபெறுவதாக அறிகிறேன். அந்த மாநாட்டினையொட்டி தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி தமிழக மக்கள் மத்தி யில் ஒரு விரிவான விவாதத்திற்கு (ஒரு மாத கால விவாதத்திற்கு) இந்த முன்னணி ஏற்பாடு செய்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன்.  அதை துவக்கி வைக்கக்கூடிய முறையில், ஒரு சில வார்த்தைகளை இன்று உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நல்ல பல சேவைகளை கடந்த சில ஆண்டு களாக செய்து வருகிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கு தீண்டாமைக் கொடுமைகள் நடக்கிறது என்று தெரிந்தவுடன், அங்கு சென்று, அதில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கலப்பு திருமணங்களால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளில் பாதிக்கப்படக்கூடியவர்க ளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், அவர்க ளுக்கு சட்ட உதவிகள் கிடைப்பதற்கும், அவர்கள் வாழ்வு நிம்மதியாக இருப்பதற் கும், உதவிகள் செய்வதற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகிறது.  இந்த முன்னணி ஒரு மேடைதான். அனைத்து அபிப்பிராயங்களைக் கொண்ட மக்களும், சகலவித கருத்துக்களை கொண்ட அரசியல்வாதிகளும் சேர்ந்து, தீண்டாமை என்பது ஒரு கொடிய முறை; அது அகற்றப்பட வேண்டும் என்று எண்ணம்கொண் டவர்கள்.இதை முன்வைத்து, தமிழகத்தில் தீண்டாமையை அகற்றுவதற்கு அனைவரும் ஒன்றுகூடுவது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன்.
ஆலய நுழைவு 
தமிழக வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்த ஆலய நுழைவுப் பிரவேசத்தில் பட்டியலினத்தவர்களும் வேறு பல சாதியினரும் கோவிலில் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது. தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் அந்த கட்டுப்பாட்டை உடைத்து, ஏராளமான பட்டியலிடப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கோவில்களில் மத வழிபாடு செய்யும் உரிமையை பெற்றுத் தருவதில் போராடி வெற்றி பெற்றனர். தமிழக கோவில்களில் பட்டியலினத்த வர்களும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்கு தடையின்றி செல்வது இன்றைக்கு அமலில் உள்ளது. இது மாபெரும் வெற்றி. இந்த நடவடிக்கையை அன்றைக்கு வைதீ கத்தில் நம்பிக்கை கொண்டிருந்த சிலர் எதிர்த்தனர். ஆனால் ஒரு சில வாரத்திலே இது தவிர்க்க முடியாத மாற்றம் என்று ஒத்துக் கொண்ட அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கி றேன். தமிழகத்தில் அந்த நடவடிக்கை எடுப்ப தற்கு முன்னால்  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசிய விடுதலை இயக்கம் போராடி யது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பட்டியலினத்தவர்களையும் தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்தில் கொண்டு வர வேண்டு மென விரும்பினார்கள்.  அப்படி விரும்பியபோது, அவர்களின் வாழ்க்கை நிலையை கண்டு அதை மேம் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட னர். தேசிய விடுதலை இயக்கத்திலிருந்த தலைவர்களும் தொண்டர்களும் சேரிகளு க்கு சென்று, அப்பகுதி குழந்தைகளை குளிப்பாட்டி, அவர்களுக்கு ஆடை உடுத்தி, அந்த சேரியையும் சுத்தம் செய்யும் நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு விடுதலை போராட்ட இயக்கம் மீது ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது. அவர்க ளும் இதில் பங்கு கொண்டார்கள். ஆக, இப்ப டிப்பட்ட முறையில் அவர்களையும் போராட் டத்தில் இணைத்துக் கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சுதந்திரத்தைப் பெறுவதிலே வெற்றி கண்டது. 
திருப்புமுனை

இதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை இடதுசாரிகளால் உண்டாக்கப்பட்டது. 1943-ம் ஆண்டிலிருந்து தொடங்கி, இன்று தமிழகத்தின் நெற்களஞ் சியமாகிய தஞ்சாவூர் கழனியிலேதற்போது மூன்று மாவட்டங்களாக பிரிந்திருக்கக்கூடிய இந்த மண்ணிலே நிலமற்றவர்களுக்கு எதிரான கொடுமைகளையும் தீண்டாமைக ளையும் எதிர்த்து இரு முனைகளிலான போராட்டத்தை அன்றைக்கு இந்த இயக் கங்கள் ஏற்படுத்தின.  இடதுசாரிகளின் தலைவர்களும் ஊழி யர்களும் நூற்றுக்கணக்கில் திரண்டு மிராசு தாரர்களின் கொடுமைகளை எதிர்த்து பொரு ளாதாரக் கோரிக்கைகளையும், மறுபுறம் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து சமூக விடுதலைக்காகவும் தஞ்சை கழனி யிலே நடத்திய இயக்கம் காட்டுத் தீ போல் பரவியது.  அவ்வாறு பரவிய இயக்கம், தஞ்சையில் உள்ள ஏராளமான விவசாயத் தொழிலா ளர்களையும், பட்டியலிடப்பட்ட இனத்தை சார்ந்த தொழிலாளர்களையும் ஏழை விவ சாயிகளையும் ஒன்றிணைத்து அந்த விவ சாய, விவசாயத் தொழிலாளர்கள் இயக்கம் இன்றைக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவி இருக்கிறது. அதன்மூலம் ஏற்பட்ட நன்மைகள் இரண்டு.
இரண்டு நன்மைகள் 
அவற்றில் ஒன்று, பொருளாதார ரீதியிலும் வர்க்க ரீதியிலும் நிலப்பிரபுக்களிடமிருந்து அதிகப்படியான கூலியை பெறுவது, அங்கே தொழிலாளர்களுடைய வசதிகளை பெறுவது. மற்றொன்று, கொடுமையான தீண்டாமை முறையை எதிர்த்து, அதிலிருந்து விடுபடு வது. அன்றைக்கு தமிழகத்தில் இடதுசாரிக ளால் ஏற்படுத்தப்பட்ட இந்த இயக்கமானது பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இன்றைக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் தமிழகத்தில் இருக்கிறோம். 
எந்தச் சூழலில்?

 இந்தியாவில் ஒரு மதச்சார்பற்ற அரசு இருப்பதை விரும்பாத சக்திகள், ஒரு மதச் சார்பற்ற சமுதாயம் ஏற்படுவதை விரும்பாத பிற்போக்கு சக்திகள், மதவெறியை தூண்டி விட்டு இந்திய மக்களை பிளவுபடுத்துவதற் காக இருக்கக்கூடிய சக்திகள், இந்தியா ஜன நாயக குடியரசாக திகழ்வதை எதிர்க்கக்கூடிய சக்திகள், மாநில சுயாட்சி உரிமையை வன்மை யாக எதிர்க்கக்கூடிய சக்திகள், மாநில மொழி களின் சமத்துவத்தை கடுமையாக எதிர்க்கக் கூடிய சக்திகள் இன்றைக்கு நம் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் இருக்கும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இதை மனதில் வைத்து, தமிழ்நாட்டில் ஆலய நுழைவு பிரவேசத் திருப்பு முனைக்குப் பிறகும் தீரமிக்க விவசாயத் தொழிலாளர் இயக்கம் என்ற இந்த திருப்பு முனைக்குப் பிறகும் நாம் போராடியிருக்கி றோம். அதற்கு எடுத்துக்காட்டு வெண்மணி. வெண்மணி என்பது நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிராக, வர்க்கப் போராட்டத் திற்கு எதிராக, விவசாயத் தொழிலாளர்களுக் கும், ஏழை விவசாயிகளுக்கும் எதிராக நிகழும் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து தஞ்சை கழனியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் பரவி யிருக்கிறது. இந்த இயக்கத்தை தோற்றுவித்து நடத்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தொழிற் சங்கங்கள், மாணவர் சங்கம், மாதர் சங் கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக் கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கி றேன்.
பெரும்பங்காற்றிய இடஒதுக்கீடு 
இன்று, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்தியாவிலேயே அதிகப் படியான இடஒதுக்கீடு இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. இது மிகவும் போராடிப் பெற்ற முடிவு. இதன்மூலம் பட்டியலினத்து மாண வர்கள் படித்திருக்கிறார்கள். வேலையில் இருக்கிறார்கள். இது 2 விதத்தில் உதவியி ருக்கிறது. ஒன்று பொறியியல், மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படித்து முன்னேறி யிருக்கிறார்கள். இரண்டு, மத்திய-மாநில அரசுகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. ஆகவே, இதுவும் தீண்டா மைக் கொடுமையை ஒழிப்பதிலே பெரும் பங்காற்றியிருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆகவே, இந்த இடஒதுக்கீட்டை நாம் பாது காத்துக் கொண்டு மேலும் தீண்டாமைக் கொடு மையை முற்றிலும் ஒழிப்பதில் நாம் ஈடுபட வேண்டும். அப்படி பார்க்கும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கேரள அரசாங்கத்தின் முடிவு இன்று அமலாக்கத்திற்கு வந்திருக்கிறது. இது இதர மாநிலங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய நட வடிக்கை. இதுவும் தீண்டாமையை ஒழிக்கும் வேறொரு நடவடிக்கையாகும். எனவே, இப்படிப்பட்ட சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் 3-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் இவர்களது நோக்கம் என்ன வென்றால், கிராமத்தில் தீண்டாமைச் சுவர் எழுப்பி, பட்டியலினத்தவர்கள் தனிமைப்படுத் தப்பட்டு, மற்றவர்களுடன் கலந்து கொள்ள முடியாமல் செய்வதற்கான முயற்சிகளை முறியடிப்பது, கலப்பு திருமணம் செய்ப வர்கள் மீதான தாக்குதலை தடுத்து, அவர் களை பாதுகாப்பது என தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
மாற்றுக் கருத்துள்ளவர்களையும் அழைத்து...
மேலும் தீண்டாமைக் கொடுமையிலி ருந்து தமிழகத்தை முழுமையாக விடுவிப்ப தற்கான ஒரு விரிவான கலந்துரையாடலை நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறது. நான் முன்னணி ஊழியர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த கலந்துரையா டலை மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் அழைத்து, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பொறுமையாகக் கேட்டு, இந்த தீண்டாமை என்பது கொடியது. இது அகற்றப்பட வேண்டியது என்பதை அவர்க ளும் புரிந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய வகை யில் நடத்த வேண்டும். இது மிகவும் கடின மான காரியம் என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊழியர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அவர்கள் மிகுந்த பொறு மையை கையாண்டு சேரிகளிலே, கிராமங்க ளிலே, சந்து முனைகளிலே, சாவடிகளிலே பஞ்சாயத்து பேசுவது போல் பேச வேண்டும். அதாவது, எந்தவித குரோதமும் இல்லாம் அன்யோன்யமாக விட்டுக் கொடுப்பதை போல் பேசி, இந்த  தீண்டாமை, கலப்பு திரு மணம், மேல் சாதி, கீழ் சாதி என்று கூறி கலவ ரத்தில் ஈடுபடுவது தவறானது என்பது பற்றி எல்லாம் நாம் அவர்களிடம் பேசியாக வேண்டும்.
பள்ளிகளில் ஒரே சீருடை, பஸ், ரயில்களில் பயணிக்கும் போது எந்த சாதியும் தெரியாது. ஆனால், கிராமங்களில் கலப்பு திருமணத் தின் போது மட்டும் சாதி வந்துவிடுகிறது. எனவே, இந்த கலப்பு திருமணத்தை ஊக்கு விப்பது, இன்றைக்கு தீண்டாமைக் கொடு மையை நிரந்தரமாக ஒழிப்பதற்கு உதவி செய்யும் என உங்களிடத்தில் நான் தெரி வித்துக் கொள்கிறேன். 
எல்லோரும் சமம்
அதோடு மட்டுமல்ல, பெண்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய அரசியல மைப்பில் சகல மக்களும் சமத்துவ உரிமை பெற்றவர்கள். எல்லோரும் சமம் (All are Equal) பாரதியார், பாரதிதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பல முற்போக்கு கவிஞர்கள், இன்று இந்தியாவில் நிலவும் சாதிய கொடுமைகளை எதிர்த்து  பாடிய பாடலை தமிழ் மக்கள் மீண்டும் படிக்க வேண்டும். 

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே...
வெள்ளைபரங்கியரை துரை என்ற காலமும் போச்சே...”
“சாதிகள் இல்லையடி பாப்பா...”
“இழிவு கொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லையே...”

போன்ற பாடல்களை பாரதியார் பாடியி ருக்கிறார். பாரதியார், பாரதிதாசன், பட்டுக் கோட்டை மற்றும் பிற கவிஞர்கள் மனித நேயம், மனித சமுதாய ஒற்றுமை, சமத்து வத்தையும் பாடியிருக்கிறார்கள். வகுப்புவாத நிலைமைகளை உண்டாக்கு கிறவர்கள் மாணவர்கள் மத்தியில் பேசு கிறார்கள். இன்று நான் கேள்விப்பட்டேன், சாதியை எடுத்துக் காட்டும் வகையில் நோன்பு கயிறு கட்டுவது என்று. இவையெல்லாம் நம்மை மேலும் மேலும் பிளவுபடுத்தக் கூடியவை.
பெண் கல்வி உரிமை, வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வ தை ஆதரிக்க வேண்டும். தமிழ்நாட்டு பாரம் பரியப்படி சாதியையும் தீண்டாமை கொடுமை களையும் நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் எப்படி அனைத்து தமி ழர்களும் ஒன்றுகூடினார்களோ, தமிழ் மொழியை மத்திய அரசு அலுவல் மொழி யாகக் கொள்ள வேண்டும் என அனைவரும் போராடுவது போன்று தமிழகத்தில்  தீண்டா மைக் கொடுமையை முற்றிலும் ஒழிக்க போராட வேண்டும்.  

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நடத்த திட்டமிட்டிருக்கும் விரிவான கலந்துரையாடலை பயன்படுத்தி, லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து அவர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் பங்கேற்கச் செய்ய வேண்டும். பல கருத்து உடையவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.  இந்த மாநாடு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.


நன்றி - தீக்கதிர் 21.07.2019

No comments:

Post a Comment