Tuesday, January 31, 2017

அந்த உச்ச நடிகரை தெரியாதென்றவர்.பன்முகப் பரிமாணம் கொண்டவர் பாட்டையா பாரதி மணி அவர்கள். அவருடைய மாமனாரான மூத்த எழுத்தாளர் க.நா.சு பற்றி பாட்டையா தனது “புள்ளிகள், கோடுகள், கோலங்கள்” நூலில் ஒரு அத்தியாயமே எழுதியிருப்பார். இன்று திரு க.நா.சு அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு அந்த  அத்தியாயத்தின் ஒரு சுவாரஸ்யமான பகுதியை மட்டும் கீழே தந்துள்ளேன்.ஹிந்திக் கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர் தில்லிக்கு வரும்போது அவரது குல்மோஹர் என்க்லேவ் வீட்டில் சிலசமயம் விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒரு தடவை அமிதாப் பச்சன் வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh‘என்று அறிமுகப்படுத்தினார். க.நா.சு. அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத க.நா.சு. கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.

வீட்டுக்கு வந்ததும் என் மனைவி ஜமுனா, ‘ஏம்ப்பா! உனக்கு அமிதாப் பச்சனைத் தெரியாதா? போனவாரம் தானே இந்தியா டுடே-யில படிச்சே! இந்த தஞ்சாவூர் கிருத்திரமம் தானே வேண்டாங்கிறது!’ என்றதற்கு, க.நா.சு-வின் பதில் ஒரு நமுட்டுச்சிரிப்புதான்! 

பத்திரிகைகளுக்கு பல வருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப்பச்சன் முதல் தடவையாக பம்பாய் ஃபிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப் பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் கேட்ட கேள்விதான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால்தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, என்னை இந்தியாவில் சிறு குழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப் பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப் பார்த்தேன். இல்லை…..ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’


2 comments:

  1. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது..... இவை போன்ற நிகழ்வுகளை பாடமாகக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. க நா சு பல எழுத்தாளர்களை புறக்கணித்து புண்ணியம் தேடிக்கொண்டவர் என்பதே அவரைப் பற்றிய விமர்சனமாக இருந்திருக்கிறது.அதனை அவர் மகள் போட்டுடைத்திருக்கிறார்.ஆம் அவர் சிறந்த நடிகர் தான்.

    ReplyDelete