Wednesday, January 4, 2017

காக்கிகளின் சென்னை அராஜகம் - முழு ரிப்போர்ட்

சென்னையில் காக்கிகள் நடத்திய அராஜகம் குறித்து இன்றைய தீக்கதிரின் வெளிவந்த முழுமையான தொகுப்பு.  ரசித்து ரசித்து அரங்கேற்றப்பட்ட குரூரம்

 


காவல்துறையினரின் அத்துமீறல் களையும், காவல்நிலைய சித்ரவதைகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதைகள் பல திரைப்படங்களாக வந்திருக்கின்றன. படமெடுக்கிறவர்களால் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு சென்னையில் காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம் நடத்தியதைக் கண்ட அதிர்ச்சியோடுதான் 2016ம் ஆண்டு விடைபெற்றது. 

புத்தாண்டுப் பிறப்பை வரவேற்கக் கையில் கொஞ்சமாவது பணம் எடுக்கச் சென்றவர்கள் ஏமாந்து நின்ற நிலையில், மக்களை மத்திய அரசு இப்படிக் கைவிட்டதற்குக் கண்டனம் முழங்குவதற்காகக் காலையில் மேடவாக்கம்-மாம்பாக்கம் சந்திப்பில் கூடினார்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். பொதுமக்களுக்கோ, பொதுச் சொத்துகளுக்கோ எவ்வித இடையூறும் செய்யாத அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பள்ளிக்கரணை காவல்துறையினர், பாலியல் அவமதிப்பு உள்ளிட்ட முதல் கட்ட வன்மத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். இது பற்றி விசாரிப்பதற்காகப் பிற்பகலில் தலைவர்கள் சென்றபோது இரண்டாம் கட்ட வன்மம் அரங்கேற்றப்பட்டது.

பதறவைக்கும் வன்முறை

எப்படியெல்லாம் காவல்துறையினர் அநாகரிகத்தின் உச்சத்திற்குப் போனார் கள்? இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற் காகத்தான் இப்படித் தாக்கினார்களா? வழக்கமான லத்திக்கம்பு மட்டுமல்லாமல் கொய்யா மரக்கட்டை, தடிமனான இரும்புக் கம்பி, கனத்த கேபிள் குழாய் முதலியவை பயன்படுத்தப்பட்டதன் பின்னணியில் இருந்த உண்மை நோக்கம் என்ன? வன்முறையால் உடலில் ஏற்பட்ட வலி இன்னும் மாறாமல் இருக்கிறவர்களின் அனுபவங்கள் மனித உரிமைகள் பற்றிய அக்கறை உள்ள ஒவ்வொரு நெஞ்சத்தையும் பதற வைக்கின்றன. இப்படிப்பட்டவர்களின் காவலிலா சமூகம் இருக்கிறது என்ற கவலையைத் தருகின்றன.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தாமோதரன் மற்றும் சுரேஷ், திவாகர், கிருஷ்ணன், கார்த்திக், சுபாஷ், ஹனிஃபா, சந்தீப், ஜெயக்குமார், செல்வகுமார், பாலகிருஷ்ணா, அழகேசன், அனீஷ், ஜெயவேலு ஆகிய 14 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்ததென விசாரிக்கச்சென்ற இடத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா, தலையில் பட்ட பலத்த அடியின் தாக்கத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய மாணவர் சங்கத்தின் விக்னேஷ் மருத்துவமனையிலிருந்து செவ்வாயன்று வீடு திரும்பியிருக்கிறார். 

வினோத், சூரியா, குமார், சூரி, செல்வராஜ், சுரேஷ், சுசி, வசந்தி, மார்ட்டின், குணசேகர், தயாளன், ஜான்பாஷா, ராஜூ, வீராரெட்டி, பன்னீர் செல்வம் ஆகியோர் கூறுகிற விவரங்கள் அவர்களது உடலிலும் மனதிலும் ஆறாத காயங்களைக் காட்டுகின்றன.

நேரடியாக அடி

ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்,நமக்கான கோரிக்கைகளாக இருக்கிறதே என பொதுமக்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எவ்வித முன்னறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல், கலைந்துபோகச்சொல்லி ஆணையிடாமல் காவலர்கள் நேரடியாக அடிக்கத் தொடங்கினர். பிடிபட்டவர்களின் கைப்பேசிகளைக் கைப்பற்றித் தொடர்ந்து அடித்தனர். 

சிலருடைய கைப்பேசிகளை அவர்கள் கண் முன்பாகவே தடியால் ஓங்கி அடித்து நொறுக்கினர். ஓட முயன்றவர்கள் சாலையில் ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு இடத்தில் நின்றிருந்த காவலர்களால் அடிக்கப் பட்டார்கள். தகவலறிந்து வந்த ஒரு தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். வேறு ஊடகங்களிலிருந்து வந்தவர்கள் சிக்னல் அருகில் முடக்கப்பட்டார்கள்.ஓடியவர்கள் சாலையோரங்களில் இருந்த டெலிபோன் பூத், கடைகள், உணவகங்களுக்குள் புகுந்து தப்பிக்க முயன்றபோது, காவலர்களும் உள்ளே நுழைந்து கண்ணாடிகளை உடைத்து, பிடிபட்டவர்களை அடித்தார்கள். 

அதில், அக்கடைகளில் பொருள்கள் வாங்கவும் உணவு சாப்பிடவும் வந்திருந்த வாடிக்கையாளர்களும் தப்பவில்லை.இவையெல்லாம், இது ஏதோ திடீரெனக் கையாளப்பட்ட வன்முறையல்ல, முன்கூட்டியே வகுக்கப்பட்ட ஒரு திட்டத் தின்படி நிகழ்த்தப்பட்டதுதான் என்பதை உணர்த்துகின்றன. அதை மேலும் உறுதிப் படுத்துவது போல, பிடித்துச் செல்லப் பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு கல்யாண மண்டபத்திலும் அடி தொடர்ந் தது. மண்டபத்தின் வளாகக் கதவுகளும் அரங்கக் கதவுகளும் மூடப்பட்டன. வாலிபர் சங்கத்தினரை மூலைக்கு மூலை விரட்டி விரட்டி அடித்தனர்.

ஜாலியாக...

அடிப்பதில் புதிய முறைகளை சோதனை செய்துபார்ப்பது போல, சிலரை அங்கிருந்த கூரை மின்விசிறியைக் குதித்துத் தொடுமாறு கட்டாயப்படுத்தினர். அப்படித் தொடாவிட்டால் அடி விழும் என்றனர். அவ்வளவு உயரத்தில் உள்ள விசிறியைத் தொட முடியாதெனத் தெரிந்தும், குதிக்க முயன்றவர்களை எகிற முயன்றபோதே காவலர்கள் அடித்தனர்.ஆண்களின் சட்டைகளைக் கழற்றிவிட்டு அடித்த காவலர்கள், சிலரை ஒரு மேசையின் விளிம்பில் கால் பாதங்ககளை வைத்துக் குனிந்து தரையில் கைகளை ஊன்றித் தலைகீழாக நிற்கச் செய்தனர். 

நெடு நேரம் அப்படியே இருக்க வேண்டும் என்றனர். அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல், மேசை மட்டத்திற்குக் கீழே புட்டம் இறங்கினால் உடனே புட்டத்தில் அடித்தனர்.அடிப்பதற்கு வெளியே பயன்படுத்திய ஆயுதங்களோடு, உள்ளே விளக்குமாறுகளையும் எடுத்துக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் பெண் காவலர்களும் சேர்ந்துகொண்டனர்.அடிக்கும்போது காவலர்களின் முகங்களில் ஆத்திரம் எதுவும் வெளிப்படவில்லை. மாறாக, ஜாலியாக சிரித்து, ரசித்து ஒவ்வொரு அடியும் விழுந்தது. ஜாலியின் இன்னொரு பகுதியாக, இழிவான வசை வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே அடித்தனர். 

தெருக்களில் சிலர், மற்றவர்கள் காதைப் பொத்திக் கொள்கிற அளவுக்கு பிறப்புறுப்புகளையும் பாலியல் உறவுகளையும் அடையாளப்படுத்துகிற வசவுச்சொற்களை வீசிக்கொண்டே போவார்களே, அப்படிப்பட்ட சொற்களால் அர்ச்சனை செய்துகொண்டே அடித்தார்கள் காவலர்கள்.அடிபட்டதில் சிலர் மயக்கமடைந்தபோது ஒரு அதிகாரி, “நீங்கள் செத்தால் கூட கவலைப்பட மாட்டோம். கேஸை வேற மாதிரி எழுதிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்,” என்றார்.வக்கிரத்தின் மற்றொரு பக்கம் இன்னும் கேவலமானது: மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் களைக் கேட்டுக் குறித்தபோது, பெயரைச் சொன்னதும் அப்பா பெயரைக் கேட்டார்கள். அதைச் சொன்னபோது, “இனிமே உங்க அப்பா பெயர் நடராஜ்னு சொல்லு,” என்று சொல்லிச் சிரித்தனர். 

அதாவது, காவல் நிலைய ஆய்வாளர் நடராஜ் அவர்களது தாய்களோடு உறவுகொண்டதால் பிறந்தவர்கள் என்று அர்த்தமாம். பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்களோடு பெண்கள் இந்தக் காவலர்களை அணுக முடியுமா?ஆட்டோ தொழிலாளி தயாளன் மீது அடிவிழுந்தபோது, அவர் ஒரு இதய நோயாளி என்பதை மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். “ஹார்ட் பேஷன்ட் டுன்னா எதுக்கு போராட்டத்திலே கலந்துகொண்ட,” என்று கேட்டு தொடர்ந்து அடித்தார்கள்.கையைத் தூக்கச் சொல்லி, ஓடிவந்து வயிற்றில், குடல் கலங்குகிற அளவுக்கு மிதித்தது இன்னொரு வகை தாக்குதல்.

வீரம்

“வாலிபர் சங்க மெம்பர்கள்னா என்ன பெரிய வீரர்கள்னு நினைப்பா, இப்ப உங்க வீரத்தைக் காட்டுங்க பார்க்கலாம்” என்று கேட்டபடி அடித்தார் ஒரு காவலர். “நாங்க 20 பேருக்குள்ள இருக்கிறோம், எங்களை 30 போலிஸ், 40 போலிஸ் சேர்ந்து அடிக்கிறீங்க, இதுதான் உங்கள் வீரமா,” என்று கேட்டார்கள் போராட்ட வீரர்கள். 

அக் கேள்வியின் வெப்பத்தை காவல்துறையினரால் தாங்க முடியவில்லை என்பதன் அடையாளமாக, அப்படிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது.அதை விட, ஒரு தோழரை எழுந்து நிற்க முடியாத அளவுக்கு அடித்து நொறுக்கிவிட்டு, ஒரு அதிகாரி சட்டையைக் கழற்றிக் கிட்டே, “இப்ப என்னோட ஒத்தைக்கு மோதுறியா,” என்று கேட்டு நெருங்கினார்,கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்த வீரக்காவலர்கள் பலரது சட்டைகளில் பெயர் அடையாள வில்லைகள் இல்லை. பலர் அரைச் சீருடையயுடன்தான் நுழைந்தனர். 

இதுவும், முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதான்.மற்றொரு ஆட்டோ தொழிலாளி ராஜூவின் மண்டையில், 16 தையல்கள் போடுகிற அளவுக்குக் காயத்தை ஏற்படுத்தினர். ஒரு போலிஸ் அடிக்க, ஓடியவரை எதிரில் வந்த இன்னொரு போலிஸ் அடித்தார். கீழே விழுந்தவரை மாற்றி மாற்றி மிதித்தார்கள்.போராட்டத்தில் கலந்துகொண்டவர் களை குழுக்களாகப் பிரித்ததிலேயே, தனித் தனி குழுக்களாக அடித்து உதைக்கிற திட் டம் இருந்தது.

 வன்முறையோடு கலந்த பாலியல் வக்கிரம்
 
காவல்துறையினரின் இந்த வன்முறையோடு கலந்ததுதான் பாலியல் வக்கிரம். அவர்கள் பயன்படுத்திய சொற்களின் வக்கிரங்கள் மட்டுமல்ல, நடந்துகொண்ட இதர முறைகளிலும் அது வெளிப்பட்டது.சொல்லப்போனால், பிரச்சனை முற்றியதே, ஒரு பெண்ணின் மார்பில் ஒரு அதிகாரி கைவைத்ததிலிருந்துதான். சங்கக்கொடியை நெஞ்சோடு சேர்த்துப்பிடித்திருந்தார் அந்தப் பெண். 

கொடியைப் பறிப்பது போல மார்பில் கைவத்தபோது, அவரது முகத்தில் வெளிப்பட்ட புன்னகை, அது தற்செயலாகக் கை படுகிற நிகழ்வல்ல என்பதைக் காட்டியது.இது பற்றி விசாரிக்கச் சென்றபோதுதான் பிற்பகலில் இரண்டாம் தவணைத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணிடமே, “நான் என்ன உன் ....யைப் பிடித்துக் கசக்கினேனா,” என்று கல்யாண மண்டபத்தில் கேட்டார் குற்றம் செய்த அதிகாரி.டி சர்ட் அணிந்திருந்த மற்றொரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அந்த அதிகாரி, “இப்படியெல்லாம் டிரஸ் பண்ணிட்டு வந்தால் கை வைக்கத்தான் தோணும். நான் என் பேன்ட்டைக் கழற்றிட்டு வரட்டுமா,” என்று கேட்டிருக்கிறார். 

அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு அருகில் வலுவாகக் கட்டையால் அடித்தார்கள். அவரால் நடக்கவோ, கழிப்பறை செல்லவோ கூட முடியாத நிலை.பெண்களிடம், சங்கத்தின் ஆண் நிர்வாகிகள் பெயர்களைக் குறிப்பிட்டு, “அவனோடு உனக்கு என்ன தொடர்பு... அவன் கூடத்தான் படுப்பியா,” என்றெல்லாம் கேட்டதுதான், அச்சிலேற்றக்கூடிய சொற்களில் நாகரிகமானது.... ஆழமாக காயம்பட்ட ராஜூவின் தலை.,ஜி.செல்வா,குமார்,மார்ட்டின்

 ஏனிந்த ஆத்திரம்?
 
மத்திய அரசின் ஒரு நடவடிக்கையைக்கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்காகவா இவ்வளவு அடக்குமுறை ஏவப்பட்டது?வேளச்சேரி, பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய காவல்நிலையங்கள் ஏற்கெனவே சித்ரவதைகளுக்குப் பெயர்போனவை. இந்தக் காவல் நிலையங்ளின் அத்துமீறல்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் அந்த அத்துமீறல்களை எதிர்த்துத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. உண்மைகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.இதனால் ஆத்திரத்துடன் இருந்தவர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி வன்முறையைய் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். ‘‘தலைவர்களை அடித்தால் மற்றவர்களும் பயப்படுவார்கள்,’’ என்று சொல்லிச் சொல்லியே அடித்திருக்கிறார்கள்.‘‘இதற்காகத்தான் நான் மூணு வருசமா காத்திருந்தேன்,’’ என்றாராம் அதிகாரி நடராஜ். கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும், வாலிபர் சங்கம் பற்றியும் இழிவான சொற்களைச் சொல்லிக்கொண்டே அடித்திருக்கிறார்கள்.‘‘இளைஞர்கள் எந்தப் பக்கமும் ஓட முடியாதபடி வளைத்துத் தாக்கப்பட்டதைப் பார்க்கிறபோது, விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் அக்கிரமம் பற்றிப் படித்தது நினைவுக்கு வருகிறது,’’ என்றார் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிக்குழு செயலாளர் ராமன்.இவர் விசாரிக்கச் சென்றபோது, ‘‘இவன்தான் தூண்டிவிடுகிறவன்,’’ என்று சொல்லி இவரையும் தாக்கியிருக்கிறார்கள்.

‘‘பெண்களை எப்படி இது போல திரிய விடுறாங்க,’’ என்று காவலர்கள் கேட்டதைக் குறிப்பிடுகிறார் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வனஜா. ‘‘இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். இந்த இளைஞர்கள் அனைவரும், வர்தா புயல் தாக்கியபோது ஓடி ஓடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள். 2 நாட்களுக்கு முன்பாகத்தான் ரத்ததான முகாம் நடத்தி ரத்தம் வழங்கினார்கள்,’’ என்றார் அவர்.இயக்கத்தை ஒடுக்குவதுதான் காவல்துறையினரின் நோக்கம் என்கிறார் சிஐடியு தலைவர் பிரேமா. ‘‘போராட்ட இயக்கங்களில் பங்கேற்பவர்களின் தைரியததை இழக்கவைக்கத்தான் இந்த வன்முறை. பெண்களைக் கடைசிவரையில் வாடி, போடி என்றுதான் பேசியிருக்கிறார்கள்,’’ என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மருத்துவமனையில் தலையில் எம்.ஆர். ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் செல்வா, ‘‘உதவி ஆணையருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோதே ஆய்வாளர் நடராஜ் பின்னால் வந்து என்னை அடித்தார்,’’ என்று தெரிவித்தார். மற்ற இளைஞர் களை அடித்தபோது செல்வா எங்கே என்று கேட்டு அடித்திருக்கிறார்கள் என்பதை மற்றவர்களும் குறிப்பிட்டார்கள்.‘‘இனி வரும் நாட்களில் காவல்துறையினரின் எந்தவொரு அத்துமீறலிலும் இயக்கம் தலையிடுவதைத் தடுக்கிற நோக்கத்துடன்தான் இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதனாலெல்லாம் இயக்கம் பின்வாங்கிவிடாது,’’ என்றும் அவர் கூறினார்.

பெண்கள் பொதுத்தளத்திற்கு வருவதற்கு முட்டுக்கட்டைகள் வரிசையாகப் போடப்படுவதன் தொடர்ச்சியாகவும் இந்தத் தாக்குதலைப் பார்க்கலாம் என்கிறார் வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் தீபா.பாலியல் துன்புறுத்தல்களும், அவமதிப்புகளும் வன்மையான கண்டனத்திற்கு உரியவை. இளைஞர்கள் மக்களின் பிரச்சனைக்காகப் போராட முன்வருவது சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் போக்கு. அதை ஏன் காவல்துறையினர் தங்கள் சொந்தப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்,’’ என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

‘‘அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுகிறபோது, பங்கேற்றவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதுதான் காவல்துறையின் பணி. ஆனால் அந்தக் கடமையை நிறைவேற்றாமல் பள்ளிக்கரணை காவல்துறை இப்படி நடந்துகொண்டது மனித நாகரிகத்தையே இழிவுபடுத்துகிற செயல்,’’ என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ. பாக்கியம்.‘‘இந்த வன்முறைக்கு அதிகாரிகளே தலைமை தாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

காவல்துறையின் மீதான மக்கள் நம்பிக்கை சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களும் ஊடகவியலாளர்களும் நீதிபதிகளும் இருக்கிற தலைநகரத்திலேயே இந்த நிலைமை என்றால் தமிழகத்தின் பிற பகுதிகளில் எப்படி இருக்கும்,’’ என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.எல்லோருமே சுட்டிக்காட்டியது போல, இது இந்த நேரத்திற்காகவே காத்திருந்து நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதற்கு இன்னொரு சான்றையும் குறிப்பிட முடியும்.

‘தீக்கதிர்’ புகைப்படச் செய்தியாளர் செ. கவாஸ்கர் தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்த காவலர்கள் அவரது கேமராவைப் பறித்துச் சென்றனர். அதைத் திரும்பப் பெறுவதற்கே ஒரு போராட்டம் தேவைப்பட்டது. காலையில் கைப்பற்றப்பட்ட கேமரா இரவில் திரும்பிவந்தபோது, அதில் பதிவாகியிருந்த வாலிபர் சங்கப் போராட்டம், காவல்துறை தடியடி ஆகிய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன. செய்யப்போகும் அக்கிரமத்துக்குத் தடயம் எதையும் விட்டுவைக்கக்கூடாது என்ற திட்டமாகத் தானே இது இருக்க முடியும்?இவற்றுக்கிடையே, இதில் ஒரு அரசியல் பின்புலமும் இருக்கிறதோ என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது, பள்ளிக்கரணைப் பகுதிகளில் திடீரென முளைத்துள்ள சுவரொட்டிகள். 

பிரதமர் மோடியின் நடவடிக்கையை இழிவுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தும் அந்தச் சுவரொட்டிகள் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ளன. மாநில அதிமுக அரசின் இன்றைய நிலையை மத்திய ஆளுங்கட்சி பயன்படுத்திக்கொள்ள முயல் வதன் ஒரு பகுதியாக இதை ஏன் பார்க்கக்கூடாது என்று தாக்குதல்களைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் கேட்டதைத் தள்ளுபடி செய்வதற்கில்லைதான்.

தொகுப்பு : தோழர் அ.குமரேசன்.

அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை ஆட்கள் மீது தமிழக அரசு என்ன நடவ்டிக்கை எடுக்கப் போகிறது?

முதல்வருக்கு வேண்டுமானால் யார் காலிலாவது விழுந்து கொண்டே இருப்பது உவப்பாக இருக்கலாம். ஆனால் அதை போராடும் உழைப்பாளி மக்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். எங்களிடம் நீங்கள் மண்ணைக் கவ்வும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 


3 comments:

 1. What is this idiot revolution. Sasikala is taking over the entire tamilnadu government without even uttering a single word and not even coming out of her house.
  In contrast young Tamil people are are beaten and molested in the streets and they cannot achieve anything by this action. Don't you understand stupidity of this port tam?

  ReplyDelete
 2. மிகவும் வேதனையான தகவல்.
  ஜாலியன்வாலாபாக் செயல் அந்நியர்களால் நடத்தபட்டது. சொந்த நாட்டு மக்களை ஆடு,மாடு,கோழிகளை விட கேவலமாக நடத்துவதற்கு இருப்பது தமிழக போலீஸ்.

  ReplyDelete
 3. எவ்வளவு துராம் மக்கள் மீது அராஜகத்தில் ஈடுபட்டால், அந்தளவுக்கு இரும்புதலைவி, ஆளுமை கொண்ட தலைவி என்று பாராட்டுக்களை அள்ளி வழங்குவார்கள் என்ற ஆசையும் புதிய புரட்சிகர அரசுக்கு,தலைமைக்கு வந்திருக்கலாம் :(

  ReplyDelete