Tuesday, February 10, 2015

சாணக்யபுரியில் சகுனிகளின் சரிவு தொடங்கியது




புதுடெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, கட்டுக்கடங்காத மோடி அலை காணாமல் போய் விட்டது. பொய்களை நெசவு செய்து அலங்காரமாய் உடுத்திய ஆடை கிழியத் தொடங்கி விட்டது. மக்களவைத் தேர்தலில் புதுடெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக இப்போது சட்டமன்றத் தேர்தலில் வெறும் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்று, காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை டெல்லியில் இழந்திருப்பது சுவாரஸ்யமான நகை முரண். இத்தேர்தல் முடிவுகளுக்கும் மோடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று பாஜகவின் ஊது குழல்கள் மீண்டும் மீண்டும் அபஸ்வரமாக ஒலிக்கும் போதே அது மோடியின் வீழ்ச்சியின் துவக்கப்புள்ளிதான் என்பதன் ஒப்புதல் வாக்குமூலமாகத்தான் அது நம் செவிகளில் இன்பத் தேனாகப் பாய்கிறது. மோடியை வளர்ச்சி நாயகன் என்று வர்ணித்து அவர் புகழ் பாடிய பல்லக்குத் தூக்கிகள் இப்போது  முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு பதுங்குவதை பார்க்கவே பரவசமாகவுள்ளது.

கலவரங்கள் தொடர்ந்தால் எங்களின் வெற்றிகள் தொடரும் என்று அராஜகமாக அறிவித்தார் பாஜகவின் தலைவர் அமித் ஷா. சிறியதும் பெரியதுமாய் ஏராளமான கலவரங்களை கட்டவிழ்த்து விட்டார்கள். விகாஸ்புரியில் சிறுபான்மை சமூகத்தினரை அகதிகள் முகாமிற்கு அனுப்பினார்கள். கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். தங்களை ஆதரிக்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று ஆபாசமாகப் பேசினார்கள். மோடி மந்திரம் மட்டும் போதாது என்று கிரண் பேடியையும் களத்தில் இறக்கி நேர்மை நாடகமாடினார்கள். ஹரியானாவிலும் ஜார்கண்டிலும் வென்றதைப் போல காஷ்மீரில் அதிக இடங்களைப் பெற்றது போல டெல்லியிலும் பெறுவோம் என்று வீரம் பேசினார்கள். ஆனால் டெல்லி வாக்காளர்கள் இவர்களின் முகத்தில் கரியைப் பூசி விட்டார்கள்.

வானத்தை வில்லாய் வளைத்து நட்சத்திரங்களை அம்புகளாய் தொடுத்து சொர்க்கத்தை மண்ணுக்கு வரவழைப்பேன் என்ற ரீதியில் வாய்ப்பந்தல் போட்டு ஆட்சிக்கு வந்த மோடி மீதான மாயை மக்களிடமிருந்து அகலத் தொடங்கி விட்டது என்பதைத்தான் புதுடெல்லி தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.

“நல்ல நாள் வரும்” என்ற வெற்று முழக்கத்தை நம்பி ஏமாந்தவர்களுக்கு ரயில் கட்டண உயர்வு என்ற முதல் பரிசை வழங்கினார். அதன் பின்பு அவரது ஆட்சியின் நடவடிக்கைகள் முழுதுமே எளியோரைத் தாக்கி வலிமையானவரிடம் அடி பணிவது என்ற தன்மையிலேயே இருந்தது. கறுப்புப் பணத்தை கைப்பற்றி பதினைந்து லட்சம் ரூபாய் அளிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு இருக்கும் சமையல் எரிவாயு மானியத்தையும் பறிக்கிறாரே என்ற  எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.

ஒபாமாவை குளிர வைக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்களை சூடாக்கியது. ஒன்பது லட்ச ரூபாய் ஆடை அணிந்த ஆடம்பரம் மூலம் அணு சக்தி சரணாகதியை திசை திருப்ப முடியவில்லை. அவசரச் சட்டங்கள் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றினார். கொடியவன் கோட்சேவை புனிதனாக மாற்ற கோயில் கட்டுவோம் என்ற முயற்சியில் மோடியின் பிம்பம் தகர்ந்தது. அரசியல் சாசனத்தின் முன்னுரையிலிருந்து “மதச்சார்பற்ற, சோஷலிச” ஆகியவற்றை அகற்றினால் என்ன என்ற கேள்வி, இவர்கள் பதவியில் தொடர்வது நாட்டுக்கு நல்லதா என்ற கேள்வியை உருவாக்கியது. தேர்தல் கூட்டங்களில் புலியாய் பாய்ந்து வீர வசனம் பேசுபவர் நாடாளுமன்றத்தில் எலியாய் பதுங்கியது நகைப்பிற்கு இடமானது. அரியணை அளித்த பாதுகாப்பில் மத வெறி சக்திகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை, ஒற்றை மொழி, ஒற்றை மத, ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயன்றதை, அறிவியலுக்குப் பொருந்தாத கற்பனைகளை அறிவியலாய் கட்டமைக்கப் பார்த்ததை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற மக்களின் ஆத்திரம் வாக்குச் சீட்டில் தணிந்துள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நீண்ட காலம் யாரும் ஏமாற்ற முடியாது என்பதைத்தான் புது டெல்லி தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. சதிகளை நிகழ்த்தி சதிராட்டம் போட்டு வந்த சகுனிக் கும்பலின் சரிவு சாணக்யபுரி என்றழைக்கப்படுகிற தலைநகரில் தொடங்கியுள்ளது இந்தியாவிற்கு நல்ல காலம் தொடங்கியுள்ளது என்பதையும் சொல்கிறது.

தூய்மை இந்தியா என்ற விளம்பர நாடகத்தை துவக்கி கையில் துடைப்பத்தை ஏந்தி காட்சியளித்த மோடியை வீழ்த்தியுள்ளது துடைப்பம் சின்னத்தைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி என்பது இன்னொரு சுவாரஸ்யம்.

மகத்தான வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிற நேரத்தில் “உங்களை நம்பி ஆதரவளித்துள்ள மக்களின் நலன் காக்கும் விதத்தில் உங்கள் செயல்பாடு அமையட்டும்” என்பதையும் அழுத்தமாக சொல்ல வேண்டும்.
  


2 comments:

  1. DELHI DEBACLE: RED SALUTE TO THE PEOPLE OF DELHI FOR TEACHING A STRONG LESSON THAT
    ANTI-LABOUR AND PRO CORPORATE POLICIES OF BJP WILL NOT HOLD WATER WITH THE PEOPLE
    OF INDIA AND THE MODI MAJIC IS ONLY A MYTH. THIS WILL REFLECT IN BIHAR ELECTIONS ALSO.

    ReplyDelete
  2. Big check point for Modi in Delhi. Hope he will control the fringe elements in and out of the party. otherwise no one will help BJPs downfall.

    ReplyDelete