Friday, February 13, 2015

உடைந்து நொறுங்கிய ரேடியோ பெட்டி

 http://cdn.mhpbooks.com/uploads/2014/09/shutterstock_104927240.jpg

இன்று உலக வானொலி தினம் என்ற தகவலைச் சொல்லி தன்னுடைய மறக்க முடியாத சில அனுபவங்களை எங்களது புதுவைத் தோழர் சாய் ஜெயராமன் அவர்கள் பகிர்ந்து கொண்டு என்னையும் கொஞ்சம் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வைத்து விட்டார்.

எங்கள் வீட்டிலும் அந்த காலத்தில் ஒரு பெரிய ரேடியோ இருந்தது. சில சமயம் தலையில் தட்ட வேண்டும். மொட்டை மாடி வரை நீண்டிருக்கும் ஏரியல் ஒயரை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் ஒழுங்காக வேலை செய்யும். நான் சிறுவன் என்பதால் எனக்கான தேர்வு என்று எதுவும் கிடையாது. மற்றவர்கள் என்ன கேட்கிறார்களோ அதைத்தான் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனாலும் பெரிய சாய்ஸ் என்று கிடையாது. ஏனென்றால் திருச்சி வானொலி நிலையமும் ரேடியோ சிலோனும் மட்டுமே கேட்கும். ரேடியோ வைத்துக் கொள்ளவே லைசன்ஸ் வாங்க வேண்டும். வருடம் ஒரு முறை அஞ்சல் நிலையத்திற்குச் சென்று பணம் கட்ட வேண்டும். ஊதாக்கலரில் அதற்கென்று ஒரு பாஸ்புக்கே உண்டு.

பொதுவாக செய்திகளை அறிந்து கொள்ள இருந்த ஒரே ஊடகம் அப்போது வானொலி மட்டுமே. ஆனால் அது அரசின் செய்திகளை மட்டுமே சொல்லும் ஊடகம். அவசர நிலைக்காலத்தில் எப்போதும் இந்திராவின் இருபது அம்சத் திட்டத்தையும் சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத் திட்டத்தையும் போற்றிக் கொண்டே இருந்தது ஆல் இன்டியா ரேடியோ. எத்தனையோ பேர் செய்தி வாசித்தாலும் நினைவில் நிற்பது சரோஜ் நாராயண சுவாமியும் ஜெயா பாலாஜியும்தான்.

அதே போல ரேடியோ சிலோனைக் கட்டி ஆண்டு நம்மை கவர்ந்திழுத்தவர்கள் அப்துல் ஹமீதும் கே.எஸ்.ராஜாவும். "திரை விருந்து" என்று அறிவிக்கும் போதே நம்மை பரபரப்பு தொற்றிக் கொள்ளும். திரைப்படங்களுக்கு செல்ல வாய்ப்பில்லாத போது ஆறுதல் அளிப்பது 'ஒலிச் சித்திரம்" தான். இன்றைய டாப் டென் பாடல்கள் நிகழ்ச்சிக்கு முன்னோடி ரேடியோ சிலோனில் ஒலிபரப்பான "இசைச் செல்வம்" நிகழ்ச்சிதான். அதிலே வெளியேறும் நிலையிலிருந்த "என்னடி மீனாட்சி" மீண்டு முதலிடம் வந்தது பற்றி முன்னரே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்பு பிறகு வந்தது. அதிலே ஹார்லிக்ஸ் குடும்பம் என்ற நிகழ்ச்சியில் வரும் முகப்புப் பாடலான "சுசித்ரா சங்கர் ராஜூ, ரவி, சுஜாதா" இன்னும் நினைவில் இருக்கிறது. வானொலியில் நேரடி ஒலிபரப்பு  என்றால் அது பெரும்பாலும் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனைதான். பாக்கெட் ரேடியோவை காதில் வைத்து சாலையில் நடப்பவர்களுக்கு தனி மரியாதைதான். சென்னையில் ஒரு பொங்கல் தினத்தன்று இங்கிலாந்தோடு நடைபெற்ற போட்டிக்குத்தான் முதலில் தமிழில் வர்ணனை ஒலிபரப்பானது. ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம்மூர்த்தி, கூத்தபிரான், அப்துல் ஜப்பார் ஆகியோர் வர்ணனை செய்தார்கள்.   என் நினைவு சரியாக இருக்குமானால் கார்சன் காவ்ரி வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ் அவுட்டானார். ஆனால் அந்த போட்டியில் இந்தியா இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்தது. அதெல்லாம் கிரிக்கெட் சூதாட்டமாக மாறுவதற்கு முன்பு அதன் மீது நாட்டமிருந்த காலத்தில். கிரிக்கெட் தவிர நேரடி ஒலிபரப்பு என்றால் தலைவர்களின் இறுதி ஊர்வலம்தான். காமராஜர், பெரியார், ராஜாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் இறுதி ஊர்வலத்தை வானொலியில் கேட்டுள்ளேன்.

திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் 9 வது முதல் 12 வது எனது அக்கா வீட்டிலிருந்து படித்தேன்.அவரும் எங்கள் பள்ளி ஆசிரியர்/ எங்கள் பள்ளிக்கு நேர் எதிரில்தான் வீடு. சாவி பெரும்பாலும் என்னிடம்தான் இருக்கும். இரண்டு பீரியடுகளுக்குப் பிறகு பத்து நிமிட இடைவெளி கொடுப்பார்கள். அப்போது நண்பர்களோடு ஓடி வந்து கதவைத் திறந்து  ஸ்கோர் கேட்டு விட்டு மறுபடியும் ஓடி வகுப்பிற்குச் செல்வோம். ஆட்டத்தின் சுவாரஸ்யத்தில் தாமதமாக வகுப்பிற்குச் சென்று திட்டு வாங்கியதும் உண்டு.ஸ்கோர் என்னடா என்று கேட்ட ஆசிரியரும் உண்டு.  

பல நல்ல கர்னாடக இசைக்கச்சேரிகளை வானொலியில் கேட்டதுண்டு. தேர்தல் காலத்தில் முடிவுகளை அறிந்து கொள்ள  வானொலிதான் ஒரே வழி. 1977 சட்டப் பேரவைத் தேர்தலில் முதலில் லீடிங் பற்றிய அறிவிப்பே எம்.ஜி.ஆர் அருப்புக் கோட்டையில் முன்னணியில் உள்ளார் என்ற செய்திதான். ஆனால் அதைச் சொல்லவே இரவு ஒன்பது மணியாயிற்று. அதே  தேர்தல் பிரச்சாரத்திற்கும் முதன் முதலாக அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது அதிமுகவிற்கான நேரத்தில் எம்.ஜி.ஆர் பேசிய பிறகு "வாசலிலே இரட்டை இலை கோலமிடுங்க" என்ற பாட்டை வேறு ஒலிபரப்பினார்கள்.

தொலைக்காட்சியின் அறிமுகம், பல சேனல்களின் நுழைவு இதனால் வானொலி என்பது கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குப் போய் விட்டது. இன்றைய இளைஞர்கள் பலருக்கும் பழைய வானொலி பற்றிய பரிச்சயமே கிடையாது. இன்றைய பண்பலைகளை வானொலியோடு ஒப்பிடவே முடியாது. 

வானொலி பற்றிய மறக்க முடியாத ஒரு அனுபவம் உண்டு. அதுதான் தலைப்பும் கூட. 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற பின்பு   நடந்த பென்சன் & ஹெட்ஜஸ் கோப்பையின் இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கல்லூரி விடுதியில் ஒரே ஒரு மாணவனிடம்தான் பாக்கெட் ரேடியோ இருந்தது. அவனைச் சுற்றி எல்லோரும் நின்று நேரடி ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.  இந்தியா வெற்றி பெற்றவுடன் உற்சாகமாக கைகளை உயர்த்தி அவன் கூச்சலிட அவன் கையிலிருந்த ரேடியோ நழுவி கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது. இரண்டாவது மாடியிலிருந்து  விழுந்தால் வேறென்ன ஆகும்?

4 comments:

 1. வானொலி தந்த இன்பம் மகிழ்ச்சி
  இன்றைய ஊடகங்களில் கிடைப்பதில்லையே
  நன்றி நண்பரே

  ReplyDelete
 2. இன்றைய பண்பலைகளை வானொலியோடு ஒப்பிடவே முடியாது. -----

  அவை பண்பற்ற அலைகள்.

  ரேடியோ என்றாலே பலருக்கும் வரும் ஒரு ஏகாந்த உணர்வு. நினைவுகளை உசுப்பும் பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. நீங்கள் பகிர்ந்த பலவும் என் நினைவுகளை விட்டு அகலாதவை..., "ரேடியோவும் நானும்"... இரு வருடங்களுக்கு முன் என் தளத்தில் எழுதியது உங்கள் பார்வைக்கு
  http://www.malarinninaivugal.blogspot.com/2012/07/blog-post_26.html

  ReplyDelete