Saturday, February 21, 2015

எரியும் பனிக்காட்டில் தொலைந்து போன தூக்கம்





திங்கட்கிழமையன்று கள்ளக்குறிச்சி செல்ல வேண்டியிருந்தது. முதல் நாள் சரியாக தூங்காததால் பயணத்தை உறக்கத்தில் கழிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் தொடர்ச்சியாக அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டிருந்ததால் இனி தூங்க முடியாது என்று எண்ணி கையில் எடுத்துச் சென்றிருந்த நூலை படிக்கத் தொடங்கினேன். சில பக்கங்கள் போனதுமே முற்றிலுமாக தூக்கம் தொலைந்து போனது. கள்ளக்குறிச்சியிலிருந்து திரும்பி வருகையிலும் வெளிச்சம் இருக்கும் வரை படித்தேன். மீண்டும் செவ்வாயன்று வாணியம்பாடி சென்றிருந்தேன். போகும் போது பேருந்தில் லிங்கா ஒளிபரப்பானதால் படிக்க முடியாத அளவிற்கு சப்தம் இருந்தது. வரும் போது சிக்கல் இல்லை. ஆனாலும் மீதமிருந்த பக்கங்களை வீட்டிற்கு வந்து படித்து முடித்தேன். அதன் பின்பும் உறக்கம் இல்லை. அதுதான் அந்த நூல் உருவாக்கிய பாதிப்பு. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

நூல்                           : எரியும் பனிக்காடு
ஆங்கிலத்தில்                  : Red Tea
ஆசிரியர்                      : பி.எச்.டேனியல்
தமிழில்                       : இரா.முருகவேள்
வெளியீடு                     : பொன்னுலகம் பதிப்பகம்
                                திருப்பூர்
விலை                        : ரூபாய் 200.00

ஆனைமலைக்காடுகளில் தழைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
… நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேநீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்….

என்ற ஆதவன் தீட்சண்யாவின் கவிதை இந்நூலின் மொத்த கதையையும் ஐந்தே வரிகளில் சொல்லி விடுகிறது. தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளிகள் கொத்தடிமையாய் அவதிப்பட்ட அவலத்தை சொல்கிற நூல் இது.

நெல்லை மாவட்டம் கயத்தாறு பக்கத்தில் உள்ள மயிலோடை கிராமத்து விவசாயக் கூலி கருப்பன், பஞ்சம் காரணமாக வேலை தேடும் போது பொள்ளாச்சிக்கு மேலேயுள்ள ஆனைமலையில் உள்ள குமரி மலை டீ எஸ்டேட்டின் மேஸ்திரி சங்கர பாண்டியனின் ஆசை வார்த்தைகளில் மயங்கி தன் மனைவி வள்ளியோடு தேயிலை எஸ்டேட் கூலி வேலை பார்க்க முன் பணம் வாங்கி புறப்படுகிறான். பயணத்தில் தொடங்குகிற அவஸ்தை வள்ளியின் இறப்பு வரை நீடிக்கிறது.

மிக்க் கடுமையான உழைப்பு, மிகக் குறைந்த கூலி, குளிரில் உடலை உறைய வைக்கும் மண் தரையிலான குடிசைக்குள் இரண்டு குடும்பங்கள், மனிதக் கழிவுகள் கலக்கும் ஓடையிலிருந்து எடுக்கப்படும் சுகாதாரமற்ற தண்ணீர், மலேரியாவில் கொத்து கொத்தாக பலியாகும் தொழிலாளர்கள், குழந்தைகள், மழைக்காலத்தில் உடலோடு ஒட்டிக் கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், மாட்டுத் தொழுவத்தைத்தை விட மோசமான மருத்துவமனை, வார்ட் பாயாக இருந்தவன் மருத்துவராக சிகிச்சை அளிக்கும் கொடுமை, உழைப்புச் சுரண்டலை மகிழ்ச்சியோடு மேற்கொள்ளும் மேஸ்திரிகள்,  பொய்க்கணக்கு எழுதும் எழுத்தர்கள், கடனுக்குப் பொருள் அளித்து ஏய்த்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரி, பெண்களை பாலியல் இச்சையோடு வேட்டையாடும் வெள்ளைக்கார மேலாளர்கள், அவர்களின் இரக்கமற்ற நடைமுறைகள். இவைதான் டீ எஸ்டேட்டுகளில் நிலவிய சூழல்.

இதில் சிக்கிக் கொள்கிற கருப்பனும் வள்ளியும் எஸ்டேட்டை விட்டு வெளியேற நினைக்கிறார்கள். ஆனால் வருடம் ஒரு முறைதான் கணக்கு முடிக்கப்படும் என்பதால் பொறுமையோடு காத்திருக்கிறார்கள். ஆனால் முதல் வருடத்தில் கடன் முடியவில்லை. இரண்டாவது வருடம் கடன் முடிந்தாலும் கையிருப்பு இல்லை. மூன்றாவது வருடத்திலாவது கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு ஊருக்குப் போகலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வள்ளியின் உடல்நிலை மோசமாகி அவள் இறந்து போகிறாள். அவளது சடலத்தை புதைத்த மறுநாளே கருப்பனை வேலைக்கு வரச்சொல்லி மேஸ்திரி அடித்து இழுத்துப் போவதோடு முடிந்து போகிறது இக்கதை.

கூலிகளை சுரண்டும் மேஸ்திரிகள், மேஸ்திரிகளை ஆட்டி வைக்கும் எழுத்தர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் தலைமை எழுத்தர்கள், இவர்கள் அனைவரையும் தனது அடிமையாகக் கருதும் வெள்ளைக்கார பொது மேலாளர் என்று பிரமிட் வடிவிலான சுரண்டல் அமைப்பை காணலாம். தங்களுக்கு மேலே உள்ளவர்கள் தங்களை எப்படி கொடுமைப் படுத்துகிறார்கள் என்று தங்களுக்குள் விவாதிப்பவர்கள் தங்களுக்கு கீழேயுள்ளவர்களை மதிப்பதில்லை என்ற முரண்பாடும் வெளிப்படும் தருணங்கள் பல. இப்படிப்பட்ட சூழலில் புதிதாக பணியில் சேரும் ஒரு மருத்துவர் மட்டுமே மனிதராக நடந்து கொள்கிறார்.

முன்னூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இருந்தாலும் வேகமாக நகருகிறது. பல இடங்களில் நம்மை அதிர வைக்கும். மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே வராதபடி மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. எப்படிப் பட்ட இன்னல்களை பாட்டாளி மக்கள் அனுபவித்தனர் என்பதையும் நாம் எப்படிப்பட்ட பொன்னுலகில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஆனைமலை காரமல் எஸ்டேட்டில் மருத்துவராகச் சேர்ந்து அங்கேயிருந்த மோசமான நிலையைக் கண்டு கொதித்து தேயிலைத் தொழிலாளர்களுக்கான சங்கம் அமைத்து அவர்களை அணி திரட்டியவர்தான் இதன் மூல நூலான Red Tea யினை ஆங்கிலத்தில் எழுதிய பி.எச்.டேனியல் என்பதும் அதற்கு முன்னுரை வழங்கியது அப்போதைய துணை ஜனாதிபதியும் தொழிற்சங்கவாதியுமான திரு வி.வி.கிரி என்பதும் ஒரு முக்கியமான தகவல்.

மேஸ்திரியின் ஆசை வார்த்தையில் மயங்கி எஸ்டேட்டில் சிக்கிக் கொள்ளும் தொழிலாளர்களின் நிலையை மோடியின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி இன்று தவிக்கும் இந்திய மக்களின் நிலையோடு ஒப்பிடலாம்.

3 comments:

  1. கடைசி பாராவைத் தவிர, நூல் விமரிசனம் அருமை. நல்ல நூல். நான் படித்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது.

    ReplyDelete
  2. இந்த மனதை உருக்கும் கதையைத்தான் பாலா என்ற நபர் பரதேசி என்ற (படப் பெயருக்கேற்றார்போல) குப்பையாக எடுத்தார்.

    ReplyDelete
  3. THE LAST PARA IS THE BEST OF ALL. YES PEOPLE ARE CHEATED BY BJP FOR NOT DOING ANYTHING
    THEY PROMISED BE IT RAISING THE INCOME TAX LIMIT TO 5 LAKHS ,BRINGING BLACKMONEY FROM
    SWISS BANKS AND NOW ADANI GETS BILLIONS OF DOLLARS AS LOAN. FROM SBI. HOPE IT
    DOESNOT GO LIKE KINGFISHER AIRLINES.

    ReplyDelete