Monday, February 23, 2015

ரவா பருப்பு இனிப்புக் கொழுக்கட்டை

சமையல் பதிவு போட்டு நீண்ட நாட்களாயிற்றே என்று இரண்டு தோழர்கள் கேட்டது  கொஞ்சம் உசுப்பி விட்டது. புதிய முயற்சிகள் எதுவும் செய்வதற்கான காலமும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் இப்படி ஒரு கேள்வி வந்த பின்பு சும்மா இருக்க முடியுமா?

என்ன செய்யலாம் என்ற சிந்தனைக்கு என் மனைவி மூலமே விடை கிடைத்தது. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, ரவா, மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு காரக் கொழுக்கட்டை செய்திருந்தார்கள். அதன் ருசி பிரமாதமாக இருந்ததால் அதையே இனிப்பாக மாற்றி விடலாம் என்று முடிவு செய்தேன்.நேற்று கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு செய்த    அந்த முயற்சி வெற்றிகரமாக வந்ததால் இங்கே உங்களுக்கான ரவா பருப்பு கொழுக்கட்டை. சொதப்பியிருந்தாலும் அதனை பதிவிட்டிருப்பேன் என்பது வேறு விஷயம்.

முதலில் கடலைப் பருப்பு மற்றும் பயத்தம்பருப்பு ஒவ்வொன்றும் ஒரு முக்கால் ட்ம்ப்ளர் எடுத்துக் கொண்டு ஊற வைக்கவும். ஊற வைத்த அந்த பருப்போடு ஒன்றரை ட்ம்ப்ளர் வெல்லம் மற்றும் தேங்காய் துறுவலை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.



பிறகு முந்திரி பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் நெய் சேர்த்து ரவாவை வறுக்கவும். இன்னொரு அடுப்பில் சுடு தண்ணீர் வைக்கவும். ரவா நங்கு வறுபட்டதும் சுடுதண்ணீரை (நன்றாக கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும்) கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கேசரி போல வரும்வரை கிளரவும். பின்பு இதோடு ஏற்கனவே அரைத்து வைத்த பருப்பு கலவையையும் வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறுங்கள். கொஞ்சம் திடமான பிறகு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 




அடுத்து இந்த கலவையை கைகளிலியே வட்டமாக தட்டிக் கொள்ளுங்கள். அப்படி தயார் செய்ததை இட்லி பானையில்  வைத்து  இட்லி தட்டில் கொஞ்சம் நெய் தடவி சில நிமிடங்கள் வேக வைக்கவும்.



அடுப்பிலிருந்து எடுத்து மேலே ஒரு செர்ரி பழம் வைத்து அலங்கரித்து சாப்பிடவும்.



பின் குறிப்பு 1 : ஒவ்வொரு நிலையிலும் புகைப்படம் எடுக்க கேமரா தயாராக இருக்க வேண்டும்.

பின் குறிப்பு 2 : இந்த ரவா பருப்பு இனிப்பு கொழுக்கட்டைக்கு நான் பேடண்ட் எல்லாம் வாங்கப் போவதில்லை. ஆகவே யாரும் ராயல்டி பற்றி கவலைப்பட வேண்டாம். 


1 comment:

  1. உசுப்பி விட்ட அந்த இரண்டு பேரும் நீண்ட காலம் நல்லா வாழணும்.

    ReplyDelete