Friday, January 31, 2014

காந்தியைக் கொன்றது ஒரு இந்து/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ஆர்   எழுதிய முக்கியமான ஒரு கட்டுரை கீழே
காந்தி ஏன் கொல்லப்பட்டார்?
ஜி. ராமகிருஷ்ணன் (இன்றைய தமிழ் இந்து தினசரியில்)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”
உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்
யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.
மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். 
காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”

அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!
என் உயிர் போகட்டும்!

காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.

மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.

“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.
“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”
தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.

தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர்,

Thursday, January 30, 2014

நான் கூட இப்ப யு ட்யூபில்

நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அறிக்கை
மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எங்கள் 
தென் மண்டலத்தின் சார்பில் எனக்கும் கிடைத்தது.



அந்த பத்து நிமிட உரையை எங்களின் ஆரணி கிளையின்
தோழர் தமிழ்வாணன், வீடியோவாக எடுத்தது மட்டும்
அல்லாமல் அதை யு ட்யூபிலும் பதிவேற்றினார்.

அதன்  இணைப்பு     இங்கே இருக்கிறது. 

எச்சரிக்கை : இது ஒரு ஆங்கில உரை. கொஞ்சம் தடங்கல்
எல்லாம் இருக்கும்.  


இன்னும் வெறியோடு அலையும் தோட்டா





ஒரு முதியவரின்
உடல் துளைத்து
உதிரம் குடித்தும்
இன்னும் வெறியடங்காத
அந்த தோட்டா
ரத்த ருசி சுவைக்க
இந்தியா முழுதும்
அலைந்து கொண்டே
இருக்கிறது.

அயோத்தியில் கடப்பாறையாக,
ஒரிசாவில் பெட்ரோல் கேனாக,
குஜராத்தில் சூலமாக,
முசாபர் நகரில் வீடியோவாக
விதம் விதமாய்
வடிவம் எடுத்தும்
இன்னும் தணியவில்லை
அதன் ரத்த தாகம்.

சவங்களின் மீது
சாம்ராஜ்யம் அமைக்க
தொடர்கிறது
தோட்டாவின் பயணம்.

அண்ணலின் சமாதியில்
மலர் வளையம் தேவையில்லை.
ரோஜா இதழ்களை
தூவிடவும் அவசியமில்லை.
சிலைக்கு மாலையிடும்
சடங்கையும் சற்றே
ஒதுக்கி வைத்து

வெறி கொண்ட தோட்டாவின்
பதவிக்கான பயணத்தை
முறியடித்து
அமைதிப் பூங்காவாய்
தேசத்தை மாற்றி விட்டு
பிறகு செலுத்துவோம்
நம் அஞ்சலியை.

Wednesday, January 29, 2014

நச்சைத் தூவிய காவிப்பூனைகளுக்கு பால் கசக்கிறதாம்.....



நேற்று முன் தினம் தமிழருவி மணியன் பற்றி நான் இட்ட பதிவிற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் கே.கோபாலன் என்று ஒரு சங் பரிவார ஆதரவாளர் பல கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்த கேள்விகள் இங்கே.
இப்போது உள்ளவர்களில் மோடிதான் தகுதி உள்ளவர் என்பது அவர் கருத்தாக இருக்கும். என் போன்றவர்களின் கருத்தும் அதுதான்.

நீங்கள் கூறும் மத வெறி என்பதன் அர்த்தம் என்ன.

50
பேரை கொளுத்தும் அளவுக்கு துணிவு அந்த மிகச்சிலருக்கு எங்கிருந்து வந்தது. திருப்பி அடித்தால் மதவாதி என்று பெயர் வைப்பீர்களா. (அங்கு நடந்த கொடுமைகளுக்கு முதல் காரணம் யார்). இஸ்லாமின் பெயர் கொண்ட கட்சிகள் மத்வாதக் கட்சிகள் இல்லையா.

யாருமே பொய்த் தொழாத ஒரு இடத்தை இடித்தால் (அதைக் கட்டுவதற்கான பணத்தை அவர்கள் எங்கிருந்து கொண்டுவ்ந்தார்கள் என்று யாரும் கேட்டவில்லை) அதற்கு பதிலடி மும்பையில் 150 உயிரை வாங்குவதுதானா. அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள் என்று கூறி மழுப்புவீர்களா. (ஒரு உயிரை எடுப்பது பெரிய பாவம் - யார் செய்தாலும்)

சிறுபான்மையினர் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகளும் மசூதிகளும் தீர்மானிக்கின்றன என்பது இங்குள்ள ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும். நாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழுகிறோம் என்று உங்களால் கூற முடியுமா.

மதங்களோடு மற்ற கட்சியினர் எப்போதும் சாதிகளை ஏன் இணைக்கிறார்கள் (பிஜேபி ஒரு பிராமணர் கட்சி என்று ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் கூறினார்). நீங்களும் இவரில் ஒருவரா. சாதி, மத்ங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு வேட்பாளரை இந்தியாவில் எந்தக் கட்சி இதுவரை நிறுத்தியிருக்கிறது.

வேலை காலியில்லை என்ற போர்டுகள் போய். ஆள் தேவை என்ற போர்டுகள் வந்ததற்கு அன்னிய முதலீடு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியுமா. மோடியும் அதையே விரும்புகிறார்.

மோடியின்மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் எத்தனை.

எங்களிடம் எல்லாம் இருக்கிறது எனும் நீங்கள் இதற்கெல்லாம் பதில் கூற முடியுமா.

கே. கோபாலன்
அவருக்காகவே இந்த ஸ்பெஷல் பதிவு.

மத அடிப்படைவாதத்தை நான் எதிர்க்கிறேன். அது இந்து மத அடிப்படைவாதமாக இருந்தாலும் சரி, இஸ்லாம், கிறித்துவ அடிப்படை வாதமாக இருந்தாலும் சரி. அடிப்படைவாதம் மேலாதிக்கத்தை தக்க வைக்கவும் ஒடுக்க முறையை நீடிக்க வைக்கவுமே ஆசைப்படும் என்பதுதான் நான் கற்றுக் கொண்டது. நடைமுறையில் காண்பது. மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லோரும் அடிப்படைவாதிகள் அல்ல. ஆனால் அடிப்படைவாதிகள் தாங்கள்தான் எல்லோருக்கும் குத்தகைதாரர்கள் என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள்.

முதலில் அவருடைய பின்னூட்டத்தில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். ஐம்பது பேரைக் கொன்றதற்கு பதிலடி தருவது தவறா என்று கேட்கிற அவரே, மசூதியை இடித்ததற்காக 150 பேரை மும்பையில் கொன்று பதிலடி தருவது நியாயமா என்றும் கேட்கிறார். அப்படியென்றால் பதிலடி நீங்கள் மட்டும் தரலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறது அல்லவா?

சரி, இப்போது விளக்கங்களுக்குச் செல்கிறேன்.

மத சார்பின்மை நாடு என்பது என்ன? மக்களுக்கு மதம் இருக்கலாம். ஆனால் ஒரு அரசு எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதுதான். அரசு நிகழ்ச்சிகளில் சரஸ்வதி வந்தனமும் அவசியமில்லை, தொழுகையும் தேவையில்லை, ஜெபமும் வேண்டாம் என்பதுதான். பல்வேறு விதமான மதம், மொழி, இனம் உள்ள இந்தியா போன்ற ஒரு நாடு எந்த மத அடிப்படையிலும் தனது கொள்கைகளையோ சட்டங்களையோ வகுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் மத சார்பின்மை. இப்படி இருக்கிறதா என்ற கேள்வி அவசியமில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும்.

இஸ்லாமிய மதக்கட்சிகள் கிடையாதா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தலித் அமைப்புக்கள் இருக்கும் போது நாங்கள் ஜாதி சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாதா என்று சில அமைப்புக்கள் கேட்பது போன்ற கேள்வி இது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒன்று திரள்வதற்கும் ஆதிக்க சக்திகள் தங்களின் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு போன்றதுதான் இது. பாஜக மதவாதத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்கிறது. மத உணர்வுகளை ஏன் தூண்டுகிறது. வெறும் நாற்காலிக்காக மக்களை துண்டாடுகிறதே.

இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் பல தார மணம் மூலம் தங்களின் மக்கட்தொகையை பல மடங்கு அதிகரித்து விட்டார்கள் என்று ஒரு விஷமப் பிரச்சாரத்தை செய்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் வீழ்ச்சிதான் அடைந்துள்ளது என்பதை நிரூபணமாக்கி விட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வாழ்வு ஆகியவற்றில் அவர்கள் மிகவும் பின் தங்கியுள்ளார்கள் என்பதை நீதியரசர்கள் ராஜேந்திர சச்சார், ரங்கநாத் மிஸ்ரா ஆகியோரின் அறிக்கைகளும் தெளிவுபடுத்தி விட்டன.

இந்தியாவில் மதக்கலவரங்களுக்கு ஊற்றுக்கண் யார்?

சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத சங் பரிவாரம்தான் இந்தியாவை பிரிக்க வேண்டும், முஸ்லீம்களை இந்தியாவை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தது. சவர்க்கரும் கோல்வாக்கரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தியதன் விளைவாகவே பிரிவினை கோஷத்தை முகமது அலி ஜின்னாவும் முன் வைக்கிறார்.

மசூதிகள் கட்ட பணம் எங்கே இருந்தது என்று யாரும் கேட்கவில்லை என்று நேற்று சொன்னாலும் முந்தைய பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்தார். கோயில்களை கட்ட அரசர்களுக்கு எங்கிருந்து பணம் வந்ததோ அங்கிருந்துதான் மசூதிகளை கட்டவும் பணம் வந்திருக்கும். அரசுகளுக்கோ இல்லை அரசர்களுக்கோ சொந்தமாக ஏது பணம்? எந்த மதத்து கடவுள் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று வானைக் கிழித்து கொட்டியிருக்கிறார். எல்லாமே மக்களின் பணம்தான். வரியாக வசூலிக்கப்பட்ட பணம். அடுத்த நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமாக இருந்தாலும் அதுவும் அந்த நாட்டு மக்கள் பணம்தான்.

இதிலே கூடுதலாக இன்னொன்றும் சொல்ல வேண்டும். இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின் போது கோயில்களை இடித்தார்களே என்ற பிரச்சாரம் வேறு அவ்வப்போது செய்வார்கள். பின்னூட்டம் வருவதற்கு முன்பாக நானே அதற்கும் பதில் சொல்லி விடுகிறேன். இன்றைக்கு பல கோயில்கள், அவை எந்த மதத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் பணம் அள்ளும் பொக்கிஷமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் பொக்கிஷத்தை பாதுகாக்கும் காவல் அறைகளாக இருந்தது. பொக்கிஷத்தை களவாட கோயில்களை இடித்தார்கள். அது இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் அல்ல. இந்து மன்னர்கள் இடித்த இந்துக் கோயில்களும் ஏராளம். தமிழக மன்னர்களால் இடிக்கப்பட்ட சமண, புத்த வழிபாட்டுத் தளங்கள் இங்கேயே ஏராளமாக உள்ளது. ஆகவே அது அப்போதைய போர்களின் ஒரு பகுதி. நகையாக இருந்த செல்வங்களை அன்று கொள்ளையடித்தார்கள். இன்று அமெரிக்கா எண்ணெய் வளமாக கொள்ளையடிக்கிறது.  

வழிபடாத மசூதியை இடித்தோம் என்கிறார். அங்கே வழிபாடு நடக்க முடியாமல் ராமர் சிலையை திருட்டுத்தனமாக வைத்தது யார்?

இதிலே ராஜீவ் காந்தியின் முட்டாள்தனமும் கையாலாகததனமும் அடங்கியிருக்கிறது. பூட்டிக் கிடந்த பிரச்சினையை மீண்டும் திறந்து விட்டது அவர்தான். தலாக் செய்யப்பட்ட ஷாபானுவிற்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை செயல்படுத்த முடியாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்து ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அதை சமன் செய்யும் பொருட்டு இந்து அடிப்படைவாதிகளை குளிர வைக்க மசூதிக்கு உள்ளே இருந்த ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதித்தார். இதிலே ருசி கண்ட காவிப் பூனைகள் செங்கல்லை தூக்கிக் கொண்டு ரத்த யாத்திரை கிளம்பி எம்.பி சீட்டுக்களை அதிகமாக்கிக் கொண்டது. 

பாஜக முதலில் நடத்திய கர சேவையின் போது கலவரங்கள் நடந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு எதிராக மாணவர்களை தூண்டி இன்னொரு கலவரத்திற்கு வித்திட்டது. தேசம் முழுவதும் மிக அதிகமான கலவரங்கள் நடந்தது என்பதும் நம்பிக்கையின்மையும் உருவானது என்பதும் டிசம்பர் ஆறு மசூதி இடிப்பிற்கு பிறகே. மசூதி இடிப்பிற்குப் பின்பு சிவசேனை வெறியாட்டத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை மூடி மறைத்து விட்டு மசூதி இடிப்புற்காக மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்று கோபாலன் திரித்து சொல்கிறார்.  குண்டு வெடிப்பு எனும் பயங்கரவாதச் செயலை நான் நியாயப்படுத்தவில்லை. விடுபட்டுப் போன ஒரு நிகழ்வை சொல்கிறேன். அதே நேரம் பரிவார அமைப்புக்கள் குண்டு வைத்ததையும் நினைவு படுத்துகிறேன்.

கோத்ரா ரயில் எரிப்பு மோசமான செயல். அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு தொடர்பே இல்லாத அப்பாவி மக்களுக்கு பதிலடி தருவார்களா? அதுவும் ஆயிரக்கணக்கானவர்களை கொடூரமாகக் கொலை செய்யலாமா? அதை நாயின் மகன் காரில் அடிபட்டால் என்று இரக்கமே இல்லாமல் வர்ணிக்கிற ஒரு அரக்க குணம் கொண்ட மனிதரை, அந்த கொடூரங்களில் ஈடுபட்டவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்த இரக்கமில்லாத கொடியவரை, ஏன் இப்போது முசாபர்நகர் கலவரங்களை முன்னின்று நடத்திய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிரீடம் சூட்டி, மாலை அணிவித்து சால்வை போர்த்தி கௌரவித்த ரத்த வெறி பிடித்தவர்தான் பிரதமருக்கு தகுதியானவராம்.

ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். ஐம்பது பேர் இறந்ததற்கு பதிலடி கொடுத்தது தவறா என்று நெஞ்சில் கொஞ்சமும் ஈரம் இல்லாமல் கேட்கிற மனிதர்கள், ஏன் இந்திரா காந்தி இறந்த போது சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி காங்கிரசை விமர்சிக்கிறீர்கள். உங்கள் பதிலடி சரியென்றால் அதுவும் சரிதானே. ஆனால் நாங்கள் சொல்வோம். இரண்டும் தவறு. ஹெ.கே.எல்.பகத், ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் போன்றவர்களும் தண்டனைக்குரியவர்கள். அவர்களை பாதுகாப்பது காங்கிரஸ் செய்யும் அயோக்கியத்தனம்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பெரு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையையும் விட குறைவாக கொடுப்பது ஊழல் கிடையாதா? நிலக்கரி ஊழல், கிருஷ்ணா கோதாவரி படுகை ஊழல் காங்கிரஸ் செய்தது என்றால் இவர் செய்தது மட்டும் என்னவாம். இவர் மீது சி.ஏ.ஜி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை எந்த ஊடகமும் வெளியிடவில்லை என்றால் இவர் சுத்த சுயம்பிரகாசமா என்ன? இவர் மீதான ஊழல்கள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அதற்கு எந்த பாஜக ஆட்களும் பதில் சொல்லவில்லை. கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திசை திருப்புவதே இவர்களின் பிழைப்பாக மாறி விட்டது.

உலகமயம் உலகெங்கும் தோற்றுப் போய்விட்டது. அது உயிரற்ற ஒரு சவம் என்றால் அந்த சவத்தை மன்மோகனின் தோளிலிருந்து இவர் தன் தோளிற்கு மாற்ற துடிக்கிறார், அவ்வளவுதான். அன்னிய முதலீடு வந்ததால் வேலையின்மை பிரச்சினை தீர்ந்து விட்டதாம். கோபாலன் சார் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள். அரசாங்க புள்ளி விபரங்களே உண்மை நிலையை சொல்லும்.

உலகப் பொருளாதார நெருக்கடி வந்த நேரம், உலக வங்கி அமைத்த ஒரு பொருளாதார  நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை என்ன தெரியுமா?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டின் உள்நாட்டு சேமிப்பை அதிகப் படுவதே தீர்வாக இருக்க முடியுமே தவிர, அன்னிய முதலீடு அல்ல. உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அதற்கு ஏற்ற முறையில் அமைய வேண்டும்.

ஆனால் உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிப்பதற்கு பதிலாக அதனை சர்வ தேச நிதி மூலதனத்திடம் ஒப்படைக்கும் வேலையை இப்போதைய காங்கிரஸ் அரசு செய்கிறது. அதற்கு துணை போவது பாஜக. பென்ஷன் மசோதா, வங்கி மசோதா ஆகியவற்றை நிறைவேற்றிய கூட்டுக் களவானிகள் இருவரும்தான்.

ஜாதி,மதம் பார்க்காத கட்சி இருக்கிறதா என்று கேட்டுள்ளார். இதோ இடதுசாரிகள் இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. எங்களை ஆதரியுங்களேன்.

பின் குறிப்பு : நான் எழுதியுள்ள விஷயங்களுக்கு தொடர்பில்லாமல் திசை திருப்பும் நோக்கோடு போடப்படும் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

கலைஞருக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?



திமுகவின் உட்கட்சி விவகாரங்கள் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

ஆனால் என்னுடைய ஐயமே வேறு.

அது என்னவோ தெரியவில்லை, எப்போதெல்லாம் திமுகவில் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக ஏதாவது குரல் வருகிறதோ அப்போதெல்லாம் யாருடைய உயிருக்காவது அபாயம் வந்து விடுகிறது.

வைகோ வின் செல்வாக்கு அதிகரித்து எங்கே அவர் ஸ்டாலினின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றி விடுவாரோ என்ற நிலை வந்த போது அப்போது கலைஞரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத உளவு அறிக்கை சொல்லியது.

இப்போது அழகிரி  போர்க்குரல் எழுப்பிய போது “ ஸ்டாலின் மூன்று நான்கு மாதங்களில் செத்துப் போய் விடுவான்” என்று கூறுவதை எப்படி என்னால் தாங்க முடியும் என்று கேட்கிறார்.

இருபதாண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்தப்பட்ட திரைப்படத்தின் ரீமேக் போலவே தோன்றுகிறதே....

காட்சியமைப்புக்களையும் வசனங்களையும் மாற்றுங்கள் கலைஞரே, இப்போது இல்லாவிட்டாலும் கூட உங்கள் குடும்பப் பிரச்சினை தீர்ந்து அறிக்கை விடும் போதாவது “ கண்கள் பனித்தது, இதயம் இனித்தது” வசனத்தை கொஞ்சம் மாற்றி சொல்லி விடுங்கள்.

Tuesday, January 28, 2014

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இப்போதும் ராமர் படம் கிடையாது.

நாக்பூர் மாநாட்டிற்கு  வந்த சில  தமிழக தோழர்கள்  அங்கே இருந்த 
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு போய் விட்டு வந்தார்கள். அங்கே 
அளக்கப்பட்ட கதைகளை  அத்தோழர்கள்  பதிவு செய்கிற போது 
நானும் அதை  பகிர்ந்து கொள்வேன்.

முன்னர் ஒரு பத்திரிக்கையாளர், அந்த அலுவலகத்தில்  ராமர் படமே கிடையாது  என்று   எழுதியிருந்தார். 

நான்கு  வருடத்திற்கு பிறகும் அதே நிலைதான்.

அகண்ட பாரதன், கோல்வால்கர், ஹெட்கேவர், சவர்க்கர்  படங்களை 
வைத்துள்ள  அந்த அலுவலகத்தில் இப்போதும்  ராமர் பாடம் கிடையாது.

ராமர் கோயில் என்பது ராமர் மீதுள்ள பக்தியால் அல்ல, உணர்வுகளை,
வெறியைத் தூண்டி நாற்காலியை கைப்பற்றும்  கீழ்த்தரமான செயல் என்பதை 
இந்திய மக்கள்  வேண்டும்.