Saturday, October 23, 2010

கையில் விலங்கு.. கண்ணில் ஒளி... நெஞ்சில் உறுதி







பாக்ஸ்கான் தொழிற்சாலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட  சி.ஐ.டி.யு சங்க மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் அ. சவுந்தரராஜன், காஞ்சி மாவட்டச்செயலாளர்
தோழர் முத்துக்குமார், மற்றும் பாக்ஸ்கான் கம்பெனித் தொழிலாளர்கள் பத்து
தோழர்கள் என பனிரெண்டு தோழர்களும் நேற்று மாலை பிணையில் விடுதலை
ஆனார்கள். உள்ளிருப்புப் போராட்டத்திற்காக முதலில் கைது செய்யப்பட்ட 319
தோழர்களில் இந்த பனிரெண்டு தோழர்கள் மீது மட்டும் தமிழக அரசு முதல் வழக்கிற்கு பிணை பெற்றபோதே மீண்டும் ஒரு பொய்வழக்கு போட்டு மறுபடியும்
வேலூர் சிறைக்கே அனுப்பி விட்டது.  நீதிமன்றம் செல்லும் வழியில் கைவிலங்கு
பூட்டி இழிவு படுத்தியது. அப்படி ஒரு கொடுமை நடக்கவேயில்லை என்று கூசாமல்
பொய் கூறிக்கொண்டே  இருக்கிறது.  

வேலூரில் உள்ள தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் எல்லோருமே  'சிறைப்பணிகள்  ஒருங்கிணைப்புக் குழு'   என்று தனியாக ஆட்களுக்கு வேலைப் பிரிவினை  செய்து கொடுக்கக்கூடிய அவசியத்தை தமிழக அரசு உருவாக்கி வருகின்றது. சகிப்புத்தன்மையும் பொறுமையும் சிறிது கூட இல்லாததால் போராடுபவர்களை சிறைக்கு அனுப்புவதே தற்போதைய நிகழ்வாகி விட்டது.

கைது செய்யப்பட்ட தோழர்கள் நேற்று விடுதலையானார்கள். சரியான தகவல்
பரிமாற்றத்திற்கான  கால அவகாசம் இல்லாத போதும் வேலூரின் கடைக்கோடியில் 
உள்ள தொரப்பாடி மத்திய சிறை முன்பு கிட்டத்தட்ட இருநூறு தோழர்கள் குவிந்து
விட்டனர். சிறைச்சாலை வளாகமே அதிரும் வண்ணம், " அஞ்ச மாட்டோம், அஞ்ச 
மாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்" என்ற முழக்கங்களுக்கு இடையே 
தோழர்கள் வெளியே வந்தனர்.  

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் தோழர் நாராயணன் ஆகியோர் சிறை சென்ற தோழர்களுக்கு
மாலை அணிவித்து கவுரவிக்க சிறை வாசலிலேயே ஒரு கூட்டமும் நடைபெற்றது.
தோழர் ஏ.எஸ் பேசுகிறபோது பின்னால் நின்று கொண்டிருந்த அந்த பத்து
பாக்ஸ்கான் தொழிலாளர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். செவி பேச்சைக்
கேட்டுக்கொண்டிருந்தாலும் பார்வை பத்து தோழர்கள் மீதே இருந்திருந்தது.

அவர்களின் வயது அதிகபட்சம் இருபத்தி ஐந்துக்கு மேல் இருக்காது. அத்தனை பேரும் இளைஞர்கள். பத்து நாள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த
அவர்களின் முகத்தில் சிறிதுகூட பதட்டமோ, வாட்டமோ இல்லை. உற்சாகமாகவே
இருந்தார்கள். தோழர் ஏ.எஸ் போராட்டம் தொடரும் என்றும் மற்ற தோழர்கள்
அடிபணியாமல் உறுதியோடு உள்ளனர் என்று கூறும்போது இவர்களின் முகத்தில்தான்
என்ன ஒரு ஒளி!

இருபத்தி ஐந்து வயதிற்குள் அவர்கள் சந்தித்த சோதனைகள்தான் எத்தனை?
போராட்டத்திற்காக கைது ஆகி விடுதலை பெறும் நேரம் மீண்டும் கைது, வழக்கு.
கொலை, கொள்ளை குற்றவாளிகள் போல கைவிலங்கு மாட்டி அவமானம்,
அடக்குமுறைக்கு உள்ளனார்கள். தோழர் சவுந்திரராஜனுக்கோ, அல்லது தோழர்
முத்துக்குமாருக்கோ சிறைவாசமோ, அடக்குமுறை மிரட்டல் தர்பார் எல்லாம்
புதிதல்ல. அவர்கள் அதிலேயே ஊறிப்போய் உரம் பெற்றவர்கள்.

பொதுவாக இந்த வயது இளைஞர்கள், ஊதியம் வாங்கினோமா, உல்லாசமாய்
பொழுதைக் கழித்தோமா என்று இருக்கையில் உரிமைக்கான போராட்டம் நடத்தி
சிறைவாசம் அனுபவித்தும் உறுதியோடு அந்த இளைஞர்கள் நின்ற காட்சி
உண்மையிலேயே பிரமிப்பை உருவாக்கியது.

பாவம் தமிழக முதல்வர்! அடக்குமுறை மூலம் போராட்டங்களை ஒடுக்கி விடலாம்
என்று காவல்துறையை ஏவி விட ஏவி விட தொழிலாளர்களோ உறுதியாகிக் கொண்டே வருகிறார்கள். போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உறுதியான போராளிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள்
தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனங்களின் நிர்வாகங்களை மட்டுமல்ல
அவர்களுக்கு வால் பிடிக்கும் தமிழக அரசு போன்ற தொழிலாளர் விரோத
அரசுகளையும் வீழ்த்தி விடுவார்கள்.

Saturday, October 16, 2010

(வெறியேறிய) குரங்கின் கையில் பூமாலை- தமிழகம்?

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு  (இத்தனை நாளாக கலைஞர்  என்று
மரியாதையாகத்தான்  எழுதி வந்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகள் மூலம்
அந்த மரியாதையை அவர் அனைத்து தரப்பு மக்களிடமும் இழந்து வருகின்றார்.
நானும் மக்களில் ஒரு பகுதிதானே!)  பதட்டம்  வந்து விட்டது. இரும்புக்கரம்
வந்து விட்டது.

"தொழிலாளர் தோழன் நான்தான், பெரியார், அண்ணாவை
சந்திக்காவிட்டால் நானும் கம்யுனிஸ்டாக  இருந்திருப்பேன், மேதினத்திற்காக
விடுமுறை விட்டவன் நான்தான், மேதினப்பூங்கா அமைத்தவன் நான்தான்"
இதெல்லாம் அவர் வழக்கமாக பீற்றிக் கொள்வது. அவர் கம்யூனிஸ்டாக
மாறாமல் போனது ஒரு நல்ல விஷயம். அப்படியே இருந்திருந்தாலும் என்றோ
அவர் திருப்பூர் ஆசாமி போல ஓடிப் போயிருப்பார்.

பாக்ஸ்கான் தொழிற்சாலைப் பிரச்சினையிலும் சரி என்.எல்.சி ஒப்பந்த
ஊழியர் போராட்டத்திலும் சரி திமுகவின் தொ.மு.ச தனது கருங்காலி
குணாம்சத்தின்படியே  நடந்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சிக்காலத்தில்  என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சி நடந்தபோது  அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடினார்கள். பங்குகளை   தொழிலாளிகளுக்கு விற்கலாம்  என ஆலோசனை வழங்கினார் கருணாநிதி.
 ஆனால் இந்த ஆலோசனையை   ஏற்கமுடியாது என்று   வெளிப்படையாகவே  என்.எல்.சி தொ.மு.ச அன்றைய தலைவர் ராஜ வன்னியன்   கூற  , போராட்டத்தில் தொ.மு.ச வும்     தொடர்ந்தது. அதன்   பின்தான்  அமைச்சரவை விலகல் என திமுக கூற  அப்பிரச்சனை   முடிவிற்கு வந்தது.
ஆனால் அடுத்து வந்த தொ.மு.ச தேர்தலில் ராஜ வன்னியன் தோற்றுப்
போவதை திமுக தலைமை உறுதி செய்தது. இது நெய்வேலி மக்கள்
அனைவரும் அறிந்த உண்மை.

 தொ.மு.ச வை ,அதன்  துரோகத்தை பாதுகாக்க  போராடிய   பாக்ஸ்கான் தொழிலாளர்களை, சி.ஐ.டி.யு வின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்  தோழர்  அ.சவுந்தரராஜன்  உள்ளிட்ட தலைவர்களை  மீண்டும் மீண்டும்
கைது செய்கிறது பொய் வழக்கு  போடுகிறது.   இவரது தலையீட்டாலும்
தொமுச துரோக ஒப்பந்தம் செய்து கொண்டதாலும்தான்  நெய்வேலி
ஒப்பந்ந்த தொழிலாளர் போராட்டம் நீடிக்கிறது. ஆனால் இவரோ வழக்கம்
போல் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் போடுகிறார். (யாராவது   கருணாநிதியின்
கடிதங்கள் என்ற தலைப்பில்   முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யலாம். புத்தகமாய்
வெளியிட்டால் கற்பனை  இலக்கியத்திற்கான  நோபல் பரிசு கிடைக்குமோ!
அத்தனை கடிதங்களின் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் கின்னஸ் பரிசு கூட
கிடைக்கலாம்!)   இது என்ன இரட்டை வேடம்?

வயதாகி விட்டதாலோ, அல்லது குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவோ
குவித்து வைத்துள்ள கோடிகளை  எப்படி பாதுகாப்பது என்ற அச்சமோ அல்லது
தோல்வி பயமோ தமிழக முதல்வரை இன்று யாராவது போராட்டம் என்று
சொன்னாலே எரிச்சலூட்டுகிறது. தான் உருவாக்கி வருகின்ற மாயை கலைந்து
போகின்றதே என்று ஆத்திரம் வருகின்றது.  வார்த்தைகளில் காட்டி வந்த
கடுமை காவல்துறை  நடவடிக்கைகளிலும் இப்போது தெரிகின்றது.

வெறியேறிய குரங்கின் கைகளில் சிக்கிய பூமாலையாக தமிழகத்தின்
தொழிலாளர்கள் நிலை மாறி விட்டது.

Friday, October 8, 2010

யாராவது விளக்கம் சொல்லுங்களேன்?






மேலே உள்ள படங்களை பாருங்கள், என் வீட்டு முனையில் உள்ள
மின் கம்பம் மீது லாரி மோதி மின் கம்பம் இரண்டாக உடைந்து
விட்டது. நள்ளிரவு நேரத்திலும் மின் வாரிய அதிகாரிகள் அங்கே
வந்து வேறு கம்பம் வைப்பதற்கான இழப்பீட்டு தொகையை
லாரிக்காரர்களிடம் வாங்கி மூங்கில் கம்புகளில் முட்டு கொடுத்து
விட்டு சென்று விட்டனர். மறு நாளே மாலைக்குள்ளாக வேறு
புதிய கம்பமும் நிறுவி விட்டார்கள்.

எனது கேள்விகள் என்னவென்றால்
 என்னத்தான் லாரி மோதினாலும் கான்கிரீட் கம்பம் இப்படி
இரண்டாக உடையுமா?

அல்லது உற்பத்தியின்  மாமூல் கோளாறு விபத்தின் மூலம்
அம்பலமாகி விட்டதா?

உடைந்து விழுந்த கான்கிரீட் கம்பத்தை மூங்கில் கம்புகள்
தாங்குமா?

அதுவும் நொறுங்கினால் மிகப் பெரிய அழிவு ஏற்படாதா?

இந்தக் கேள்விகளை மின் வாரியத்திடம் கேட்பதில் எவ்வித
பயனும் கிடையாது. மின் தடை ஏற்படும் வேளையில் மீண்டும்
எப்போது மின்சாரம் வரும் என்ற கேள்விக்கே பதில்
கிடைப்பதில்லை.

விஷயம் அறிந்தவர்கள் விளக்கம் தாருங்களேன்!

Saturday, October 2, 2010

கிராமத்து வரவேற்பு - சரியான கலக்கல்

பணியில் சேர்ந்த இருபத்தி ஐந்து  ஆண்டுகளில்  எத்தனையோ
தோழர்கள் பணி நிறைவு பெற்றுள்ளனர். பொதுவாக தோழர்கள்
ஒய்வு பெறும் நாளன்று பாராட்டு விழாக் கூட்டம் நடக்கும். நல்ல
வார்த்தைகள் பேசி நினைவுப்பரிசு அளித்து வீடு வரை கொண்டு
போய்விடுவோம். வீடு வரை செல்லும் தோழர்களின் எண்ணிக்கை
ஒய்வு பெறும் தோழர்களைப் பொறுத்து  மாறும். அவர்களது
வீட்டில் அளிக்கும் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு அரை மணி
நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவோம். இதுதான்
வழக்கமான நடைமுறை.

நேற்று முன்தினம் ராமதாஸ் என்ற தோழர் ஒய்வு பெற்றார்.
வாட்ச்மேனாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். அவருக்கும்
அலுவலகத்தில் நிர்வாகம் சார்பாக ஒரு விழா. அன்று ஒரு மூத்த
அதிகாரி ஒருவரும் ஒய்வு பெற்றதால் வெளிச்சம் என்னவோ அவர்
மீதே அதிகமாக இருந்தது.பின்பு அவர் பணியாற்றிய எங்களது
பிரிவில் ஒரு விழா. அலுவலக நேரம் முடிந்த பின்பு   சங்கத்தின்
சார்பில்  ஒரு  விழா. அங்கே உண்மையான உணர்வுகள்
பகிரப்பட்டு அவரது ஊருக்குப் புறப்பட்டோம்.

அப்போது அயோத்தி ஆலமரத்தடி தீர்ப்பு வந்திருக்கவில்லை.
அதனால் பெண் தோழர்கள் வீட்டிற்கு புறப்பட ஆண்கள் மட்டும்
ஒரு வேனிலும் இரண்டு சக்கர வாகனங்களிலும் புறப்பட்டோம்.
போகும் வழியெல்லாம் போலீஸ் படை, எவனாவது மாட்டினால்
அடித்து நொறுக்கும் வெறியோடு.

அவரது கிராமத்து எல்லை நெருங்கியபோது  ஆச்சர்யம் தொடங்கியது.
பேண்டு முழக்கத்தோடு கிராமத்து மக்களும் உறவினர்களும்
காத்திருந்தனர். அங்கேயே அவருக்கு மாலை, சால்வை எல்லாம் போட்டு
மோதிரம் அணிவித்து  உறவினர்கள் கௌரவிக்க பேரக்குழந்தைகள்
பூங்கொத்து அளித்தன. அவரது வீடு வரை ஊர்வலமாகவே அழைத்து
வரப்பட்டார்.

வீட்டில் நுழையும் முன்பு ஒரு பிரம்மாண்ட ஆளுயர மாலை அணிவிக்க,
பட்டாசின் சத்தத்தை மேளத்தின் முழக்கம் மூழ்கடித்தது. அவரது வீட்டு
மாடியில் நான்காவது கூட்டம். அங்கே அலுவலகத் தோழர்கள்  அனைவருக்கும்
கதராடை அணிவிக்கப்பட்டது. திருமண விருந்து போல அனைவருக்கும்
சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது.

எனது இருபத்தி ஐந்து ஆண்டு பணிக்காலத்தில்  ஒய்வு பெற்று வீடு திரும்பும்
ஒரு தோழருக்கு இப்படி ஒரு வரவேற்பளிப்பு அளிக்கப்பட்டு நான்
பார்த்ததில்லை.  இதிலே முக்கியமாய் சொல்ல வேண்டிய விஷயம்,
தோழர் ராமதாசிற்கு மகன்கள் கிடையாது. இரு மகள்கள்தான். அத்தனை
ஏற்பாடுகளையும் ஆசையாய் செய்திருந்தது அவரது  மறுமகன்கள்தான்.

பாசத்தை பரிமாறிக் கொண்ட அந்த வரவேற்பு என்றென்றும்
நினைவில் நிலைத்திருக்கும்.

 

Sunday, September 26, 2010

இந்த சாமர்த்தியம் ஏன் எனக்கு வரவில்லை?

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தில்
தொழிலுறவு மேலாளராக இருந்தவர், அதிகார கித்தாப்பில்
வந்த புதிதில் எங்களோடு அதிகம் மோதியவர், பின்பு சங்கம்
சொல்வது சரியாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு
இணக்கமாகச் சென்றவர், தற்போது பணியிலிருந்து ஒய்வு
பெற்றவர், இரு தினங்களுக்கு முன்பு சொந்த வேலையாக வேலூர்
வந்தார். அலுவலகம் வந்து பார்த்தார். பழைய கதைகள்
பேசினோம். மற்றவர்களைப் பார்க்க முதல், இரண்டாவது
மாடிகளுக்குச் செல்லும் முன் என் மகனின் பெயர், என்ன
படிக்கிறான் என்றெல்லாம் கேட்டார். ரகுநந்தன் என்று
சொன்னதும் நல்ல பெயர் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

அன்று மாலை வீடு வந்ததும், என்னுடைய அலுவலகத்திலேயே
பணியாற்றும் என் மனைவி வியப்பாக ஒரு தகவலை பகிர்ந்து
கொண்டார். அந்த மேலாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு
நல்ல ஞாபக சக்தி, நம் மகனின் பெயரை பத்தாண்டுகளுக்கு
மேலானாலும் நன்றாக ஞாபகம்  வைத்துக் கொண்டு
ரகுநந்தன் நன்றாக படிக்கிறானா? என்று கேட்டார் என
வியந்து போனார். அப்போது பக்கத்தில் இருந்தவர்களும்
அவரது ஞாபக சக்தியைக் கண்டு பிரமித்தே போனார்களாம்!
அவரும் எப்படி நான் மறக்க முடியும் என்று ஒரு சீன்
போட்டிருக்கிறார்.

என்னிடம் பெயரைக் கேட்டு விட்டு மாடிக்குச்சென்று தான்
எவ்வளவு தூரம் உங்களையெல்லாம் நினைவில் வைத்துள்ளேன்
என்று சொல்வதும் ஒரு சாமர்த்தியம்தான். ஆனால் கொடுமை
என்னவென்றால் இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகள் உலகெங்கும்
நிறைந்துள்ளார்கள் என்பதும் மிகவும் சரியானவர்கள் என
நாம் நம்புகிற பலரும் கூட இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளின்
வசீகரப் பேச்சால் தடம் புரள்வதும்தான். உணமையாகவும்
நேரடியாகவும் பேசக்கூடியவர்கள், நடந்து கொள்ளக்கூடியவர்களை
இது போன்றவர்கள் சமயத்தில் போட்டுத்தள்ளி விட்டும்
முன்னே போய்க் கொண்டே இருப்பார்கள்!

நீண்ட நாட்களாக நான் என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி
இதுதான்.

இந்த சாமர்த்தியம் ஏன் எனக்கு  வரவில்லை?

Saturday, September 25, 2010

எந்தக் கொம்பனும் எதுவும் செய்ய முடியாது.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு
நேற்றும் இன்றும். இன்று மதியம் பேரணியும், பொதுகூட்டமும்
என்று முடிவு செய்திருந்தார்கள். பேரணியை துவக்கி வைக்க
என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் சத்துணவு ஊழியர்கள் 
கையில் துப்பாக்கியும் பீரங்கியும் எடுத்து வருவார்கள்
என்பதற்காக, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக காவல்துறை
பேரணிக்கான அனுமதியை மறுத்து விட்டது. ஆனால் சில
தினங்கள் முன்பாகத்தான் டாஸ்மாக் மணம் வீச விநாயகர்
ஊர்வலம் நடத்த அனுமதித்தார்கள் என்பது கவனத்திற்குரியது.
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று சொல்லவில்லை.

பேரணியை துவக்கி வைக்கிற வேலை இல்லாததால் வேறு சில
பணிகளை முடித்து விட்டு தாமதமாகத்தான் சென்றேன். அங்கே
நான் கண்ட சில காட்சிகள் உண்மையிலேயே அற்புதமானது.
கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள், அதிலே
கிட்டத்தட்ட 85 %  பெண் தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு மிகப் பெரிய அடக்குமுறையை சந்தித்து அதன் காயம்
இன்னமும் வலித்துக் கொண்டிருக்கிறபோது, தலைமை
முழுவதுமே அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் பணி நீக்கம்
இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போது, மோசமான ஒரு
பொய்ப்பிரச்சாரத்தை  முதலமைச்சரே முன் நின்று செய்யும்
வேளையில்  இந்த அளவு தோழர்கள் பங்கேற்றது என்பது
உண்மையிலேயே மகத்தானது. மெய் சிலிர்க்க வைத்த
அத்துணைத் தோழர்களுக்கும் செவ்வணக்கம்.

கூட்டத்திற்கு அனுமதிக்கடிதம் வழங்கவில்லை என்ற
ஞானோதயம்  திடீரென காவல்துறைக்கு வர மேடைக்கு
அருகே வந்து சலம்பல் செய்தார் ஒரு அதிகாரி. கூட்டம்
முடியும் நேரம் என்றதும் சற்று அமைதியாய் போனார்.
அப்போது மேடையில் பேசிய அரசு ஊழியர் சங்கப்
பொறுப்பாளர் காவல்துறையின் அணுகுமுறையை
விமர்சனம் செய்ய, வேதாளம் மீண்டும் முருங்கை
மரத்தில் ஏறி விட்டது. மீண்டும் சலம்பல், குழப்பம்,
அதிகார அதட்டல், மிரட்டல், உருட்டல் என எல்லாமே
நடந்தது. மேடையையும் கூட்டத்தையும் ஒரு காவலர்
வீடியோ வேறு எடுக்கத்தொடங்கி விட்டனர்.

இத்தனை களேபரம் நடந்தும் ஒரு தோழர் கூட
இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அங்கிருந்து
தப்பிக்கலாம் என்ற சிந்தனையே இல்லாமல் நடப்பதை
மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மன உறுதியும்
போராட்ட உணர்வும் இல்லாவிடில் இது சாத்தியமில்லை.
இந்தத் தோழர்களைத்தான்  சுற்றுலா என்று சொல்லி
ஏமாந்து வந்தவர்கள் என கொச்சைப்படுத்தினார் கலைஞர்.

இன்று அவர்கள் காண்பித்த நெஞ்சுரம் கண்டு வியந்து
சொல்கிறேன்.

எந்தக் கொம்பனும் அவர்களை எதுவும் செய்திட முடியாது.

Sunday, September 19, 2010

நீதி தேவதை கண் திறப்பாளா?

ரூ தினங்களுக்கு  இந்து நாளிதழில் பார்த்த செய்தி
அதிர்ச்சியளித்தது. உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை
நீதிபதிகள் பதினாறு பேரில்  எட்டு பேர் ஊழல்  பேர்வழிகள்
என பிரபல வழக்கறிஞரும்  மொரார்ஜி தேசாய் காலத்திய
மத்திய சட்ட அமைச்சருமான திரு சாந்தி பூஷன் குற்றம்
சுமத்தியுள்ளார். அதுவும் ஏதோ தமிழக அரசியல் தலைவர்கள்
போல மேடை உதார் இல்லாமல் உச்ச நீதி மன்றத்திலேயே
பட்டியல் அளித்து அங்கே நடக்கும் அவமதிப்பு வழக்கு ஒன்றில்
தன்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்.
வலுவான ஆதாரங்களின் பின்னணியில்  மட்டுமே இவ்வாறு
செய்ய முடியும்.

இந்திய ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களான
அரசும் நிர்வாகமும் ஊழல் கறை பிடிந்ததாய் மாறி பல காலம்
ஆகி விட்டது. நான்காவது தூணான ஊடகம் பெரும்பாலும்
சார்புத்தன்மை உடையதாகவே உள்ளது. ஒரே நம்பிக்கையாக
இருந்த நீதித்துறை மீதும் சீர்குலைவின் நிழல் படியத் துவங்கி
விட்டது. கீழ் மட்டத்தில் இது அதிகமாகவும் மேலே செல்லச்செல்ல
குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் தகர்ந்து போய் விட்டது.

நாங்கள் நீதிபதிகள், எங்கள் சொத்துக்கணக்குகளை  வெளியிட
முடியாது என்று எப்போது முரண்டு பிடிக்க ஆரம்பித்தார்களோ,
அப்போதே தெரிந்து விட்டது, இவர்கள் மடியில் கனம் இருக்கிறது
அதனால்தான் பயப்படுகின்றனர் என்று. தங்களைத் தாங்களே
தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை வேறெங்கும் நாம் காண
முடியாது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு சபர்வால் இருந்தபோது
அவரது  மகன்களின் வணிக நலன்களுக்காகவே  ஏழை மக்களின்
குடிசைகளை இடிக்க ஆணையிட்டார் என்ற குற்றச்ச்சாட்டு
எழுந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஆக்கிரமிப்பு புகழ்
தினகரன்,பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான  பல்வேறு
நீதிபதிகள் என்று பெரிய பட்டியலே உண்டு.

இப்போது  எட்டு தலைமை நீதிபதிகள் மீதே புகார் என்கிற போது
ஊழல் புரையோடிப்போயுள்ளது  என்பதைத்தான் காண்பிக்கிறது.
மத்தியரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.
அவர்கள்தானே ஊழல்களின் பாதுகாவலர்கள்.

நீதி   தேவதை   கண் கட்டை  அவிழ்த்து  சுட்டேரிக்காவிட்டால்  இவர்கள்
தொடர்ந்து இப்படியேதான் இருப்பார்கள்