Saturday, October 23, 2010

கையில் விலங்கு.. கண்ணில் ஒளி... நெஞ்சில் உறுதிபாக்ஸ்கான் தொழிற்சாலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட  சி.ஐ.டி.யு சங்க மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் அ. சவுந்தரராஜன், காஞ்சி மாவட்டச்செயலாளர்
தோழர் முத்துக்குமார், மற்றும் பாக்ஸ்கான் கம்பெனித் தொழிலாளர்கள் பத்து
தோழர்கள் என பனிரெண்டு தோழர்களும் நேற்று மாலை பிணையில் விடுதலை
ஆனார்கள். உள்ளிருப்புப் போராட்டத்திற்காக முதலில் கைது செய்யப்பட்ட 319
தோழர்களில் இந்த பனிரெண்டு தோழர்கள் மீது மட்டும் தமிழக அரசு முதல் வழக்கிற்கு பிணை பெற்றபோதே மீண்டும் ஒரு பொய்வழக்கு போட்டு மறுபடியும்
வேலூர் சிறைக்கே அனுப்பி விட்டது.  நீதிமன்றம் செல்லும் வழியில் கைவிலங்கு
பூட்டி இழிவு படுத்தியது. அப்படி ஒரு கொடுமை நடக்கவேயில்லை என்று கூசாமல்
பொய் கூறிக்கொண்டே  இருக்கிறது.  

வேலூரில் உள்ள தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் எல்லோருமே  'சிறைப்பணிகள்  ஒருங்கிணைப்புக் குழு'   என்று தனியாக ஆட்களுக்கு வேலைப் பிரிவினை  செய்து கொடுக்கக்கூடிய அவசியத்தை தமிழக அரசு உருவாக்கி வருகின்றது. சகிப்புத்தன்மையும் பொறுமையும் சிறிது கூட இல்லாததால் போராடுபவர்களை சிறைக்கு அனுப்புவதே தற்போதைய நிகழ்வாகி விட்டது.

கைது செய்யப்பட்ட தோழர்கள் நேற்று விடுதலையானார்கள். சரியான தகவல்
பரிமாற்றத்திற்கான  கால அவகாசம் இல்லாத போதும் வேலூரின் கடைக்கோடியில் 
உள்ள தொரப்பாடி மத்திய சிறை முன்பு கிட்டத்தட்ட இருநூறு தோழர்கள் குவிந்து
விட்டனர். சிறைச்சாலை வளாகமே அதிரும் வண்ணம், " அஞ்ச மாட்டோம், அஞ்ச 
மாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்" என்ற முழக்கங்களுக்கு இடையே 
தோழர்கள் வெளியே வந்தனர்.  

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் தோழர் நாராயணன் ஆகியோர் சிறை சென்ற தோழர்களுக்கு
மாலை அணிவித்து கவுரவிக்க சிறை வாசலிலேயே ஒரு கூட்டமும் நடைபெற்றது.
தோழர் ஏ.எஸ் பேசுகிறபோது பின்னால் நின்று கொண்டிருந்த அந்த பத்து
பாக்ஸ்கான் தொழிலாளர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். செவி பேச்சைக்
கேட்டுக்கொண்டிருந்தாலும் பார்வை பத்து தோழர்கள் மீதே இருந்திருந்தது.

அவர்களின் வயது அதிகபட்சம் இருபத்தி ஐந்துக்கு மேல் இருக்காது. அத்தனை பேரும் இளைஞர்கள். பத்து நாள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த
அவர்களின் முகத்தில் சிறிதுகூட பதட்டமோ, வாட்டமோ இல்லை. உற்சாகமாகவே
இருந்தார்கள். தோழர் ஏ.எஸ் போராட்டம் தொடரும் என்றும் மற்ற தோழர்கள்
அடிபணியாமல் உறுதியோடு உள்ளனர் என்று கூறும்போது இவர்களின் முகத்தில்தான்
என்ன ஒரு ஒளி!

இருபத்தி ஐந்து வயதிற்குள் அவர்கள் சந்தித்த சோதனைகள்தான் எத்தனை?
போராட்டத்திற்காக கைது ஆகி விடுதலை பெறும் நேரம் மீண்டும் கைது, வழக்கு.
கொலை, கொள்ளை குற்றவாளிகள் போல கைவிலங்கு மாட்டி அவமானம்,
அடக்குமுறைக்கு உள்ளனார்கள். தோழர் சவுந்திரராஜனுக்கோ, அல்லது தோழர்
முத்துக்குமாருக்கோ சிறைவாசமோ, அடக்குமுறை மிரட்டல் தர்பார் எல்லாம்
புதிதல்ல. அவர்கள் அதிலேயே ஊறிப்போய் உரம் பெற்றவர்கள்.

பொதுவாக இந்த வயது இளைஞர்கள், ஊதியம் வாங்கினோமா, உல்லாசமாய்
பொழுதைக் கழித்தோமா என்று இருக்கையில் உரிமைக்கான போராட்டம் நடத்தி
சிறைவாசம் அனுபவித்தும் உறுதியோடு அந்த இளைஞர்கள் நின்ற காட்சி
உண்மையிலேயே பிரமிப்பை உருவாக்கியது.

பாவம் தமிழக முதல்வர்! அடக்குமுறை மூலம் போராட்டங்களை ஒடுக்கி விடலாம்
என்று காவல்துறையை ஏவி விட ஏவி விட தொழிலாளர்களோ உறுதியாகிக் கொண்டே வருகிறார்கள். போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உறுதியான போராளிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள்
தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனங்களின் நிர்வாகங்களை மட்டுமல்ல
அவர்களுக்கு வால் பிடிக்கும் தமிழக அரசு போன்ற தொழிலாளர் விரோத
அரசுகளையும் வீழ்த்தி விடுவார்கள்.

5 comments:

 1. இவை எல்லாம் வெளியே தெரியவில்லை.

  ReplyDelete
 2. //பாவம் தமிழக முதல்வர்! அடக்குமுறை மூலம் போராட்டங்களை ஒடுக்கி விடலாம்
  என்று காவல்துறையை ஏவி விட ஏவி விட தொழிலாளர்களோ உறுதியாகிக் கொண்டே வருகிறார்கள். போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
  உறுதியான போராளிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள்
  தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனங்களின் நிர்வாகங்களை மட்டுமல்ல
  அவர்களுக்கு வால் பிடிக்கும் தமிழக அரசு போன்ற தொழிலாளர் விரோத
  அரசுகளையும் வீழ்த்தி விடுவார்கள். //

  true. thanks for sharing.

  ReplyDelete
 3. Steeled in Baattle என்ற சீனமொழி நாடகம் படித்துள்ளேன். நீண்ட பயணத்தின் போது கிராமம் கிராமமாகப் பொட்டுக்கொண்டு பொனதாகச்சொல்வார்கள்.அந்தபத்து இளஞர்களும் உலையிலிருந்து எடுத்த உருக்காக மாறிவிடுவார்கள்.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

  ReplyDelete
 4. ஆனந்த் மற்றும் மதுரை சரவணன்

  தங்களின் வருகைக்கு நன்றி,

  மாயா, சீதா மோதல் என்று ஒரு பக்கத்திற்கு
  இன்றைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  முதலாளித்துவ ஊடகங்கள் என்றைக்கு தொழிலாளிகள் பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்டுள்ளன? பிரான்ஸ்
  நாட்டு தொழிலாளர்கள் போராட்டம் குறித்து
  இந்தியப்பத்திரிக்கைகள் எழுதாது, தொலைக்காட்சிகள் படம் காண்பிக்காது. ஆனால் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியின் மனைவி கவர்ச்சியான உடையில் தோன்றினார் என்று மட்டும் பக்கம் பக்கமாக எழுதும்.

  ReplyDelete