Thursday, November 10, 2022

போர்ஜரி செய்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி.

 



இந்த செய்தியை ஒரு தோழர் ஒரு குழுவில் பகிர்ந்திருந்தார்.

 


தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் யோக்கியதை என்ன என்பதை இச்செய்தி விளக்குகிறது.

 நவம்பர் 2015 ல் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அனில் தேசாய் என்ற 18 வயது வாலிபன் பாரதி AXA இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பத்து லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்து கொள்கிறான். ஆக 2016 ஸ்ல் அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவரை அணுகுகிறான். சிகிச்சை பலனில்லாமல் 01, செப்டம்பர் அன்று இறந்து போகிறான்.

 அவனது வாரிசுதாரரான அவனது அம்மா, காப்பீட்டுத் தொகையை கோருகிறார். பணம் தர பாரதி AXA இன்சூரன்ஸ் மறுக்கிறது. நுகர்வோர் நீதிமன்றம் செல்கிறார். 28 ஆகஸ்ட் 2016 அன்றுதான் முதல் முறையாக அவர் மருத்துவரை சந்திக்கிறார். நான்கு நாட்களில் இறந்து போய் விட்டார் என்ற மருத்துவரின் சான்றிதழை அவர் சமர்ப்பிக்க இன்சூரன்ஸ் கம்பெனியோ இன்னொரு சான்றிதழை காட்டுகிறது.

 அதே மருத்துவரின் லெட்டர் பேடில் “அனில் தேசாய்க்கு இரண்டு மூன்று வருடங்களாக சிறுநீரகக் கோளாறு இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் எழுதி இருந்தது. இந்த உண்மையை பாலிசி எடுக்கையில் மறைத்து விட்டதால் பணம் தர முடியாது என்று சாதித்தது.

 கடைசியில் நுகர்வோர் நீதிமன்றம் மருத்துவரை விசாரணைக்கு அழைக்க குட்டு உடைந்தது. கம்பெனி சமர்ப்பித்த சான்றிதழைப் பார்த்த மருத்துவர் அது தனது கையெழுத்தில் எழுதப்பட்டது அல்ல என்றும் ஏராளமான பிழைகள் இருப்பதாகவும் தனது லெட்டர்பேட்டை தன் மருத்துவமனையில் இருந்து திருடியிருக்கலாம் என்று சொல்லி விட்டார்.

 பாலிசிதாரருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற பாரதி AXA இன்சூரன்ஸ்  போர்ஜரி  செய்துள்ளதை கண்டித்த நுகர்வோர் நீதிமன்றம் பாலிசி உரிமத்தொகையோடு, 8 % வட்டியும், ஒரு லட்ச ரூபாய் இழப்பீடும் வழக்குச் செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாயும் கொடுக்கச் சொல்லி தீர்ப்பளித்தது.

 1956 க்கு முன்பு இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இப்படித்தான் பாலிசிதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து வந்தார்கள்.

 அதே மோசடிப் பேர்வழிகள் மோசடி வேலைகளை மீண்டும் துவக்கி விட்டார்கள். இன்சூரன்ஸ் வளர்ச்சி ஒழுங்காற்று ஆணையம் இதையெல்லாம் கண்டு கொள்ளாது. அவர்கள் தனியாருக்கு வளர்ச்சி ஆணையம். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டு (ஒழுங்காற்று) ஆணையம். ஆயிரம் தனியார் கம்பெனிகள் வந்தாலும் அவை எல்.ஐ.சி யின் நிழலின் அருகில் கூட நெருங்க முடியாது.

 ஆனாலும் இது போன்ற மோசடி நிறுவனங்களை முன்னேற்றத்தான் “பொதுத்துறை நிறுவனங்கள் சாவதற்காகவே பிறந்தன (BORN TO DIE) என்று ஒருவர் சொன்னார்.

 அவர் இந்தியாவுக்கு பிரதம மந்திரியாம்.

No comments:

Post a Comment