நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி.
உகாண்டாவின் ஜனாதிபதியாக யுவேரி முசுவேனி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்த செய்தி சொன்னது,
யுவேரி முசுவேனி என் வாழ்க்கையில் மிக மிக முக்கியமானவர்.
ஆமாம்.
நிஜமாகத்தான்.
பிப்ரவரி 1986 ல் எல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறுகிறது. வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று கனவாக இருந்த எல்.ஐ.சி கட்டிடத்திலேயே நேர்முகத் தேர்வு, அதுவும் 12 வது மாடியில். பரவசமும் பதற்றமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
நேர்முகத் தேர்வு தொடங்கியது.
ஒப்பந்தச்சட்டம் தொடர்பாக முதல் கேள்வி. தொண்டையில் இருந்த பதில் வாயில் வரவில்லை, வெறும் காற்றுதான் வந்தது.
"FRESH FROM COLLEGE, FIRST CLASS, 75 MARKS IN BUSINESS LAW, BUT YOU ARE NOT ABLE TO REPLY TO THIS SIMPLE QUESTION"
என்று தேர்வுக்குழுத் தலைவர் நக்கலாக சொல்கிறார்.
கண்களும் மூளையும் இதயமும் இருண்டு போன சூழலில் தேர்வுக் குழுவின் இன்னொரு உறுப்பினர் உகாண்டாவின் ஜனாதிபதி யார் என்ற கேள்வியை கேட்கிறார்.
இடி அமீனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மில்டன் ஓபாடே ஆட்சியை ராணுவக் கலகம் மூலமாக கலைத்து விட்டு நானே ஜனாதிபதி என்று அறிவித்து பதவியில் அமர்ந்தவர் யுவேரி முசுவேனி. முதல் நாள் செய்திதாளில்தான் அந்த செய்தியை படித்திருந்ததால் உடனடியாக
யுவேரி முசுவேனி
என்று சொல்ல அவரும் வெரி குட் என்றார்.
இன்னொரு உறுப்பினர், இந்தியாவின் இளைய முதல்வர் யார் என்று கேட்க அஸ்ஸாம் முதல்வர் பிரஃபுல்ல குமார் மொஹந்தா என்று பதில் சொல்ல இன்னொரு வெரி குட் டும் கிடைத்தது.
அதன் பின்பு கேள்விகள் பொருளாதாரத்திலிருந்து. நான் படித்த மதுரை சௌராஷ்டரா கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் திரு முஸ்தபா எங்களுக்கு பொருளாதாரத்தை அமிர்தம் போல புகட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பின்பு எல்லாம் சுகமே.
எனக்கு நேர்முகத் தேர்வில் நம்பிக்கை கிடைக்க காரணமாக இருந்த யுவேரி முசுவேனி இன்னமும் ஜனாதிபதியாக பதவியில் தொடர்கிறார். நான் ஓய்வு பெற்று விட்டேன். அரசியல் பதவிகளுக்கு ஏது ஓய்வு?

No comments:
Post a Comment