நூல் அறிமுகம்
நூல் : நாMMMம் ஏன்
கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும் ?
ஆசிரியர் இ.பா.சிந்தன்
வெளியீடு பாரதி புத்தகாலயம்,
சென்னை – 18
விலை ரூபாய் 95.00
உங்களுடைய ஜி-பே
கணக்கு முடங்கினால்? வாட்ஸப் செயல்படாமல் போனால்? கூகிள் கூட மௌனமாகி விட்டால்?
உங்களால் இணையத்தின் எந்த வசதியையும் பயன்படுத்த முடியாத
சூழ்நிலை உருவானால்? காரணம் சொல்லாமல் வேலையிலிருந்து துரத்தப்பட்டால்? உங்கள் நிறுவனம்
உற்பத்தி செய்கிற பொருட்களுக்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டால்? இந்தியா மீது
அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால்? அதனால் மற்ற நாடுகளும் இந்தியாவுடன்
வர்த்தக உறவுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால்?
நினைக்கவே
பதற்றமாக இருக்கிறதல்லவா? இந்த நிலையை கியூபா அறுபதாண்டுகளாக சந்தித்துக்
கொண்டிருக்கிறது என்று சொல்லி கியூபா சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி அறிய நம்மை
தயார்படுத்துகிறது இந்த நூல்.
அமெரிக்காவின்
பொருளாதாரத் தடையினால் கியூபா இன்று சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு
முன்பாக கியூப நாட்டின் வரலாற்றையும் பல நூற்றாண்டுகளாக கியூப மக்கள் சந்தித்து
வரும் இன்னல்களைப் பற்றியும் அந்த நாட்டில் வசந்த காலம் வந்தது பற்றியும் விரிவாக
பேசுகிற நூல் இது.
இயற்கை எழில்
கொஞ்சுகிற, மூன்று பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த கியூபாவில் 1492 ம்
ஆண்டு ஒரு கப்பல் வருகிறது. அந்த கப்பல் ஸ்பெயினில் இருந்து கொலம்பஸை சுமந்து
கொண்டு வந்தது. கியூப மண்ணில் கரும்பு விரைவாகவும் சுவையாகவும் வளரும் என்ற
உண்மையை கொலம்பஸ் அறிந்து கொண்டதுதான் கியூப மக்களுக்கு உருவான பிரச்சினைகளின்
வேர். ஸ்பெயின் முதலாளிகள் சர்க்கரை உற்பத்தி செய்யவும் கியூபாவின் இதர முக்கியமான
உற்பத்தி பொருட்களான சுருட்டு மற்றும் ரம் தயாரிக்கவும் கியூபா ஸ்பெயினுடைய
வேட்டைக்காடாக மாறுகிறது. அந்த நாட்டு மக்கள் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.
1511 லியே
விடுதலைக்கான போராட்டம் அந்துவே என்பவரால் தொடங்கப்பட்டு அது நசுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்பும் பல்வேறு காலகட்டங்களில் ஸ்பெயின் ஆதிக்கத்திற்கு எதிராக நிக்கோலஸ்
மொராலஸ், ஹோஸே அண்டோணியோ, கார்லோத்தே, NHநார்சிசோ லோபஸ் ஆகியோர் போராடியுள்ளனர்.
ஸ்பெயின் ஆதிக்கத்திற்கு எதிராக பல தென்னமிரிக்க நாடுகளில் போராடி வெற்றி கண்ட
சைமன் பொலிவார் இவர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்துள்ளார்.
1868 ல் தான்
கியூபாவின் விடுதலைப் போராட்டம் என்பது விரிவாக நடந்துள்ளது. மானுவல் செஸ்படஸ்
என்ற சர்க்கரை முதலாளி, தன் ஆலையில் அடிமை முறையை ஒழிப்பதாக அறிவித்து
ஸ்பெயினுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை நடத்த முறையான ராணுவத்தை அமைத்து
போராடுகிறார். பத்தாண்டுகள் நடந்த போராட்டத்தின் விளைவாக கியூபாவில் இருந்த அடிமை
முறை ஒழிக்கப்படுகிறது. மானுவல் செஸ்படஸ்தான் கியூபாவின் தந்தையாக பிடல் காலத்தில்
மதிக்கப்படுகிறார்.
அதன் பின்பு
ஹோஸே மார்த்தி, ஒரு படையை திரட்டி போராடுகின்றார். மக்களின் எழுச்சிக்கு முன்பு
ஸ்பெயின் தடுமாறுகிறது. கியூபா விடுதலையின் வெற்றிக் கோட்டை நெருங்குகிற நேரம்
கியூப எல்லையில் நிறுத்தப் பட்ட மூன்று அமெரிக்க கப்பல்கள் தகர்க்கப்படுகிறது. இதை
பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா கியூபாவிற்குள் நுழைகிறது.
அமெரிக்கா
கியூபாவை எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆண்டது என்பதையும் அமெரிக்க ஆதரவு
கியூப ஜனாதிபதிகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக எப்படி செயல்பட்டு தங்களை
வளப்படுத்திக் கொண்டார்கள் என்பதை அடுத்த அத்தியாயங்கள் விளக்கும். அமெரிக்க
ஆதிக்கத்தை வீழ்த்துவேன் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று அமெரிக்க
அடிமையாக செயல்பட்ட பாடிஸ்டா ஆட்சியின் அவலங்களுக்கு எதிராக தோழர் பிடல் கேஸ்ட்ரோ
தலைமையில் போராடத் தொடங்குகிறார்கள். அவர்களின் முதல் தாக்குதல் முயற்சி தோற்றுப்
போய் நீதிமன்றத்தின் முன்பாக பிடல் நிறுத்தப்படுகிறார். (தன் மீதான
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து அவர் ஆற்றிய உரை “வரலாறு என்னை விடுதலை
செய்யும்” என்ற தலைப்பில் நூலாக வந்துள்ளது. அனைவரும் அவசியம்
படிக்க வேண்டிய, எழுச்சியும் உற்சாகமும் தரும் நூல் அது), பிடல் மீண்டும் படை
திரட்டுகிறார். உலக இளைஞர்களுக்கெல்லாம் இன்றைக்கும் ஆதர்ஸமாக திகழும் சே அவருடன்
கை கோர்க்கிறார். பல முனைகளில் போர் நடக்கிறது. பாடிஸ்டா அமெரிக்காவிற்கு
ஓடுகிறார். சென்ற முறை கைதியாக வந்த தோழர் பிடல் கேஸ்ட்ரோ இம்முறை 1959ம் வருடம்
ஜனவரி எட்டாம் தேதியன்று வெற்றி வீரராக கியூபத் தலைநகர் ஹவானாவிற்குள் நுழைகிறார்.
“ஒரு புதிய
தேசத்தின் முகம்” என்ற அத்தியாயம் கியூபாவின் புரட்சிகர அரசு எடுத்த பல்வேறு
நடவடிக்கைகளை விளக்குகிறது. அன்னிய நாட்டு முதலாளிகள் சொத்துக்கள் தேச
உடமையாக்கப்படுகின்றன. நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கறுப்பின மக்கள் மீதான
தடைகள் நீக்கப்பட்டு சமத்துவம் மலர்கின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள்
வைத்துள்ளவர்களிடமிருந்து உபரி வீடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு வீடற்றவர்களுக்கு
வழங்கப்படுகின்றன, கல்விக்கும் எழுத்தறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல வீரர்கள் உருவாகின்றனர்.
சுகாதாரத்திற்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை மிகச்சிறந்த மருத்துவர்களையும்
உருவாக்குகிறது. பல விதமான வைரஸ்களை அமெரிக்கா பரப்பி நோய்களை பரவச் செய்கையில்
அவற்றை துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றி பெருகிறது. கொரோனா சமயத்தில் முகக் கவசமான
மாஸ்க் கூட கிடைக்காத சூழலில் மூன்று தடுப்பூசிகளை உருவாக்கி வெனிசுலா, வியட்னாம் போன்ற
நாடுகளுக்கு அனுப்பியது என்பது ஒரு சாதனை.
இது கியூபாவின்
சாதனைப் பக்கம் என்றால் வேதனைப் பக்கம் மிகுந்த வலி நிறைந்தது. கியூபப் புரட்சி
அரசு உருவான 1959 ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐசனோவர் தொடங்கி அவருக்கு பின்
வந்த கென்னடி முதல் இன்றைய ட்ரம்ப் வரை அந்த அரசை வீழ்த்த முயற்சித்துத்தான்
வருகின்றனர். பிடலை கொல்ல தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் நடந்தன. அந்த
முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் கியூபாவின் வாழ்வாதாரத்தை அழிக்க பொருளாதாரத்
தடைகள் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தனர். புரட்சிக்கு முன்பு அளித்திருந்த 30 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியில் 7 லட்சம்
டன்னை குறைத்தனர். அதனை இறக்குமதி செய்ய சோவியத் யூனியன் வந்ததால் ஒட்டு மொத்த
இறக்குமதியையும் ரத்து செய்தனர். சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு சர்க்கரை
உற்பத்தி குறைந்து தற்போது தன்னுடைய தேவைக்கே பிற நாடுகளை நம்பும் நிலையில்
நின்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலில் கியூபாவை இணைத்து மற்ற
நாடுகளிடமிருந்து கியூபாவை அன்னியப் படுத்தியுள்ளது. கியூபாவிற்கு பொருட்களை
கொண்டு செல்லும் கப்பல்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமெரிக்க துறைமுகங்களில் அனுமதிக்கப்படாது
என்ற உத்தரவு கியூபாவிற்கு அடிப்படை பொருட்கள் கிடைப்பதில் நெருக்கடியை
ஏற்படுத்தியது. கியூபாவிற்கு இடைஞ்சல் தரவே ஹெல்ம்ஸ்-பர்ட்டன் சட்டம் என்ற பெயரில்
ஒரு சட்டமே பல தடைகளை கொடுத்துள்ளது.
சோஷலிசக்
கொள்கையை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக சென்றால் கியூபா தப்பி பிழைக்குமே என்று
நம் மனதில் கேள்வி எழுந்தால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஆதிக்கத்தை
ஏற்றுக் கொண்ட அருகாமை நாடுகளான ஹெய்தி, டொமினிக் குடியரசு, போர்ட்டோ ரிக்கோ போன்ற
நாடுகளின் அவல நிலையை அடுத்த அத்தியாயம் விளக்குகிறது.
கியூபாவிற்கு
ஆதரவாக நாம் ஏன் நிற்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிய ஆசிரியர் பிரிக்ஸ்
கூட்டமைப்பின் மூலம் கியூபாவிற்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக
நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கியூப நாட்டின் வரலாற்றோடு
இன்றைய நிலைமைகளையும் இணைத்து நல்லதொரு நூலை அளித்த தோழர் இ.பா.சிந்தன்
அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இந்த ஆண்டு
ஏப்ரல் மாதம் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலகக் கூட்டம்
கியூப மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட ஒவ்வொரு தோழரும் ரூபாய் 200.00 அளிக்க வேண்டுமென்று
அறைகூவல் விடுத்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அளித்த அறைகூவல்
எவ்வளவு பொருத்தமானது என்பதையும் நாம் இன்னும் கூட அதிகமான தொகையை
அளித்திருக்கலாம் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிற நூல் இது.
வேலூர் சுரா
"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது.

நல்ல நூலாய்வு
ReplyDelete