Wednesday, July 19, 2023

சங்கிகள் அறிய வேண்டிய வரலாறு.

 தோழர் மு.இக்பால் அகமது பகிர்ந்து கொண்ட அருமையான வரலாற்றுத் தகவலை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். சந்திராயனை அனுமன் தூக்கிச் சென்றது போன்ற படம் போடும் சங்கிகளும் ஏன் சந்திராயன் மாதிரியை திருப்பதிக்கு தூக்கிச் சென்ற சில விஞஞானிகளும் கூட அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது.

 


 

  மேரி மக்தலீனாவின் அருளாசியும் இந்திய விண்வெளி சாதனைகளும்

 

இந்தியாவில் முதன்முதலாக ஒரு ராக்கெட் ஏவப்பட்டது கேரளாவில் திருவனந்தபுரத்தில் தும்பா என்ற கடற்கரை ஓர மீனவ கிராமத்தில் இருந்துதான்.

 

அப்போது ISRO கிடையாது. 1962இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு National Committee for space research என்ற ஆய்வு நிறுவனத்தை அணுசக்தி துறையின்கீழ் நிறுவினார். அவருக்கு தூண்டுதலாக இருந்தவர் குஜராத்தை சேர்ந்த விக்ரம் சாராபாய் என்ற விஞ்ஞானி. ISRO முறையாக நிறுவப்பட்டது 15.8.1969 அன்று.

 

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா, 1975இல் அதை விண்ணில் ஏவியது சோவியத் யூனியன்.

 

திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிமீ வடக்கில் உள்ள கடற்கரை மீன்பிடி கிராமம்தான்   தும்பா. புனித பிரான்சிஸ் சேவியர் பதினாறாம் நூற்றாண்டில் கேரளாVவுக்கு வந்தபோது தங்கியிருந்த கிராமம் அது. மண் சுவராலும் தென்னை ஓலைகளாலும் ஒரு தேவாலயத்தை புனித பிரான்சிஸ் கட்டுகின்றார். ஏறத்தாழ100 வருடங்களுக்கு பிறகு புனித பார்தலோமியோவ்வுக்கானஆலயமாக மண்சுவர் அகற்றப்பட்டு நிலையான கட்டிடம் கட்டப்பட்டது.

 

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஆலயம் மேரி மக்தலீன் ஆலயமாக மாறியது. ஆலய கட்டுமானம் நடந்துகொண்டு இருந்தபோது கடற்கரையில் ஒதுங்கிய மிக அழகிய சந்தனமர சிலைதான் அந்த மேரி மக்தலீன் உருவச்சிலை. அதுவே ஆலயத்தின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகியது. அதுவரை காணப்படாத மிகப்பெரிய மரம் ஒன்று அதே கரையில் ஒதுங்க, அதுவே ஆலயத்தின் கொடிமரமாக ஆக்கப்பட்டது. மரித்த யேசு உயிர்த்து எழுந்தபோது மேரி மக்தலீனுக்கே முதலில் காட்சியளித்தார் என்பது கிறித்துவ மக்களின் நம்பிக்கை.

... ...

 

இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்தை எங்கே நிறுவலாம் என்ற கேள்வி எழுந்தபோது புவியின் காந்தப்புல நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்த தும்பா சிறந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டது

 

அன்று விக்ரம் சாரா பாயும் ஹோமி பாபாவும் திட்டமிட்டபடி சாராபாய் மேரி மக்தலீன் ஆலயத்தின் பிஷப் ஆக இருந்த ரெவரெண்ட் பீட்டர் பெர்னார்டு பெரீராவை சந்திக்கிறார். அது ஒரு சனிக்கிழமை. தும்பாவின் அருமையை பிஷப்புக்கு எடுத்துச்சொல்லி சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஆலயம், நிலம் அனைத்தையும் அரசுக்கு விட்டுத்தருமாறு சாராபாய் வேண்டுகிறார். பிஷப் புன்னகை புரிந்து மறுநாள் வர சொல்கின்றார்

 

ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டுக்கூட்டத்தில் கூடியுள்ள கிறித்துவ மக்களிடையே பிஷப் உரையாற்றுகிறார்: என் குழந்தைகளே! இங்கே புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி வந்துள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்காக நமது ஆலயத்தையும் நான் வாழும் வீட்டையும் விட்டுக்கொடுக்குமாறு அவர் நம்மிடம் வேண்டுகிறார். விஞ்ஞானம் உண்மையை தேடுகிறது, அது தனிமனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்துகிறது. மதத்தின் உயரிய வடிவம் என்பது ஆன்மீகமே. ஆன்மீகவாதிகள் கடவுளிடம் எதை வேண்டுகிறார்கள்? மனித மனங்களில் அமைதியை வேண்டுகிறார்கள். சுருக்கமாக சொல்வேன் - நானும் விக்ரமும் ஒரே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம் - விஞ்ஞானமும் ஆன்மீகமும் கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டுகின்றன, எதற்கு? மனிதனின் சிந்தனையும் உடலும் வளம் பெற வேண்டும் என்பதற்கே. ஆக, குழந்தைகளே, கடவுளின் ஆலயத்தை ஒரு நெடுங்கால விஞ்ஞான திட்டத்திற்காக ஒரு விஞ்ஞானி கேட்கிறார், கொடுத்து விடலாமா?

 

கூட்டத்தில் பெரும் அமைதி நிலவுகிறது. ஒருசில நொடிகள் மட்டுமே. அதன்பின் ஒட்டுமொத்த சபையும் 'ஆமென்' என்று முழங்க அந்த நொடியில் இருந்து தொடங்குகிறது எதிர்கால இந்தியாவுக்கான விண்வெளி ஆய்வு.

... ....

 

Thumba Equatorial Rocket Launching Station என்ற

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமும் முதல் ராக்கெட் ஏவுதளமும் கிறித்துவ மக்கள் மனமுவந்து அளித்த இடத்தில்தான் அமைந்தது. தேவாலயமும் சுற்றி இருந்த மீனவ மக்களின் வீடுகளும் காலி செய்யப்பட்டன. ஆலயத்தின் மேரி மக்தலீன் பீடத்திற்கு முன்புதான் இந்தியாவின் முதற்கட்ட ராக்கெட்டுகள் பலவும் வடிவமைக்கப்பட்டன, உருவாக்கப்பட்டன. அமெரிக்கா NASAவில் செய்யப்பட்டு இந்தியா வாங்கிய Nike-Apache ராக்கெட் மேரி மக்தலீனுக்கு முன்புதான் ஒருங்கிணைக்கப்பட்டது

 

ஆலயத்தின் மையமான இடத்தில் TERLS நிர்வாக அலுவலகம் இயங்கியது. பின்னர் ராக்கெட் கட்டுமானத்திற்கு என தனி கட்டிடம் கட்டப்பட்டபோது ராக்கெட் பணிகள் அங்கே மாற்றப்பட்டன. அதன்பின் ஆலயமும் பிற கட்டிடங்களும் விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டன. ஏவுதளத்தின் பக்கத்தில் இருந்த ஒரு தொடக்கப்பள்ளிதான் ஏவுதள அலுவலகம் ஆக இருந்துள்ளது. பின்னர் அது நூலகமாக மாற்றப்பட்டது.

 

மிக உயர்ந்த அழகிய ஆலயத்தின் கட்டுமானத்திற்கோ மேரி மக்தலீன் உருவச்சிலைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி பாதுகாக்கப்பட்டது

 

கிராமத்தின் மீனவ மக்கள் கடற்கரையின் மீதான தம் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. தமது மீன்பிடித்தொழில் நடவடிக்கைகள், வலைகளை காய வைப்பது ஆகிய அன்றாட வாழ்க்கையை இதே கடற்கரையில்தான் நடத்தி வந்தார்கள். ராக்கெட் ஏவும் முன்பு அறிவிக்கப்பட்டால் கடற்கரையில் தமது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்து ஒத்துழைப்பார்கள்.

 

விண்வெளி ஆய்வின் தொடக்க காலத்தில் வெளிநாடுகளில் இருந்த தலைசிறந்த விஞ்ஞானிகளை அரசு தேர்வுசெய்து இங்கே வரச்செய்தது. அப்படி வந்த விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கி நேராக ராக்கெட் ஆய்வு மையத்திற்கு வந்தால் ஆலயத்தில் இருந்த 'குடியிருப்பு' பகுதிக்கு செல்வதும் அதன் பின்னர் வந்து சேரும் குடும்பத்தினரும் இந்த 'குடியிருப்பு' பகுதியில்தான் வசிக்க வேண்டும்

 

ஆலயத்தை சுற்றி இருந்த பழைய செங்கல் கட்டிடங்களும் கூட பயன்பாட்டில்தான் இருந்துள்ளன. ராக்கெட் கட்டுமான பிரிவு, காவலர் பிரிவு, உணவகம் உள்ளிட்ட பல துறைகள் இயங்கியுள்ளன. பிஷப்பின் இல்லத்தில்தான் TERLS இன் இயக்குனருக்கும் பிற மூத்த விஞ்ஞானிகளுக்கும் ஆன அலுவலகம் ஆக இருந்துள்ளது.

 

1985இல் தும்பா ஏவுதளமும் குடியிருப்பு பகுதிகளும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களுக்கு இடம்பெயர்ந்த பின்னர், ஆலயம் விண்வெளி ஆய்வுக்கண்காட்சியாகமாக மாறியது.

... ...

 

இந்தியாவின் முதல் SLV3 வடிவமைத்தவர் அப்துல்கலாம். ரோஹிணி செயற்கைக்கோளை சுமந்து சென்றது. நாள் 18.7.1980.

 

அப்துல் கலாம், சின்யா ராமச்சந்திர ராவ் சத்யா ஆகியோரால் அங்கே வடிவைக்கப்பட்ட ஒரு எந்திரத்தை 1968 பிப்ரவரி 2 அன்று அன்றைய பிரதமர் இந்திரா இயக்கி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதே நாளில் Centaur rocket மாலை 6 மணிக்கு இந்திராவே இயக்கி ஏவுவதாகவும் திட்டமிடப்பட்ட து. மிக அபாயகரமான ஒரு வேதிப்பொருள் அடங்கிய ஒரு சாதனத்தை அந்த ராக்கெட்டுடன் இணைக்கும் வேலையில் விஞஞானி சி ஆர் சத்யா ஈடுபட்டு வருகிறார். நேரமோ ஓடிக்கொண்டிருக்க, மூன்று கி மீ தொலைவில் இருந்தவர்களுக்கு ஜீப் அனுப்பி வைக்க நிர்வாகம் மறந்துவிட்டதேவேறு வழியின்றி சத்யாவும், வேலப்பன் நாயரும் சைக்கிளில் காரியாரில் வைத்து தள்ளிக்கொண்டு போன காட்சியை கருப்பு வெள்ளை யில் படம் ஆக்கியவர் உலகப்புகழ் பெற்ற Henri Cartier Bresson!!! 

 


விக்ரம் சாராபாய் 1942இல் மிருணாளினியை மணம் புரிந்தார், அவர்களது மகள் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய். கேப்டன் லட்சுமி அவர்களின் இளைய சகோதரிதான் மிருணாளிணி

... ...

 இன்று பிற்பகல் 2.30க்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து

ஏவப்பட்ட சந்த்ராயன் 3 விண்கலத்தை விண்ணுக்கு எடுத்துக்கொண்டு சென்ற ஏவுவாகனம் LVM3. 

 

சந்த்ராயன் 3 வெற்றி பெறட்டும்! ஆமென்.

 

- மு இக்பால் அகமது

No comments:

Post a Comment