Thursday, June 5, 2014

வேலூர் மழை, மாநகராட்சி அவலம், பிரியங்கா மரணம்



 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து வேலூரில் இறந்த பிரியங்கா பல மோசமான உண்மைகளை தன்னையறியாமலேயே அம்பலப் படுத்தி இருக்கிறாள்.

நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம், தொலைக்காட்சிகளில் கூட பார்த்திருக்கலாம்.

வெயிலால் சபிக்கப்பட்ட வேலூரில் அன்றொரு நாள் அபூர்வமாய் கனத்த மழை. மழையின் வேகத்தில் கழிவு நீர்க் கால்வாய்கள் நிரம்பி வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலை எது, கால்வாய் எது என்று தெரியாமல் (ஆமாம், கால்வாய்க்கு என தடுப்புச் சுவர் கிடையாது) கால்வாயில் கால் வைத்த அந்தப் பெண் அடித்துச் செல்லப்பட்டாள். காப்பாற்ற கை கொடுத்த தந்தையின் கரங்களிலிருந்து  நழுவியது அந்தப் பெண் மட்டுமல்ல அதன் உயிரும் கூட

நோய் நீங்கி குணமாகி செல்ல வேண்டும் என்ற விருப்பத்தோடு வேலூர் நோக்கி வருபவர்கள் ஏராளம். இந்தியாவின் கிழக்குப் பகுதி மக்களுக்கு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது அப்படி ஒரு நம்பிக்கை. ஒரிஸ்ஸா தொடங்கி அஸ்ஸாம் வரை உள்ள மாநிலத்து மக்களால் மருத்துவமனையும் சரி மருத்துவமனை அருகில் உள்ள சாலைகளும் விடுதிகளும் நிரம்பி வழியும். நோயாளி மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தினரே வருவார்கள்,

அப்படி ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சகோதரியின் சிகிச்சைக்காக பெற்றோருடன் வந்தவள் பிரியங்கா. அன்றைக்கு அவளது பிறந்த நாளும் கூட. கடவுளின் ஆசி பெற தேவாலயம் சென்று வணங்கி வரும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. சாலையோரத்தில் ஒதுங்கியவள் சிதைந்து போன சடலமாகத்தான் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டாள்..

தவறி விழுந்து இறந்தவளின் சடலத்தை அப்போதே எடுக்க முடிந்திருந்தால் ஒரு விபத்து என்ற அளவில் அந்த ஒரு மணி நேரத்தோடு எல்லாம் முடிந்திருக்கும். அவ்வளவு விரைவில் யாரின் கைக்கும் சிக்காத பிரியங்கா வேலூர் மாநகரத்தின் அவலத்தை, நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தி விட்டாள்.

இடைப்பட்ட இந்த மூன்று நாட்களில் மாநகராட்சிப் பணியாளர்கள், குறிப்பாக துப்புறவுத் தொழிலாளர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கப்பற்படைத் தளத்தின் கமெண்டோக்கள் ஆகியோர் போர் முனையில் பணியாற்றுவது போல் மும்முரமாக தீவிரமாக பணியாற்றினாலும் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

காரணம்.

ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு

கால்வாய்கள் பல இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. அதன் மீதே பல கடைகள் கட்டப்பட்டிருந்தன. எப்போது தொடங்கியது அந்த ஆக்கிரமிப்புப் படலம் என்பது யாருக்கும் தெரியவில்லை. யாருடைய ஆதரவால் நடந்தது, துணை போன அதிகாரிகள் யாரென்பதெல்லாம் கோப்புக்களை தோண்டினால் ஒரு வேளை கிடைக்கலாம். அவர்கள் பணியில் இருந்து ஓய்வும் பெற்றிருக்கலாம். உலகத்திலிருந்து கூட ஓய்வு பெற்றிருக்கலாம். கடைகள், வீடுகள் மட்டுமல்ல சி.எம்.சி மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடமே கால்வாயின் மீதே கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். கால்வாய் மீது கட்டப்பட்ட சில கட்டிடங்களை இடித்தார்கள் என்பதே நிலைமையின் தீவிரத்தை உண்ர்த்தும்.

ஆக்கிரமிப்புக்கள் காரணமாகவே தேடுதல் பணி தாமதமடைந்தது. இன்னொரு முக்கியக் காரணம் கால்வாய்களை சுத்தம் செய்யாதது. பிளாஸ்டிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், வணிகக் கழிவுகள் என பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் அடைத்துக் கொண்டுள்ளது. ஒரு வேளை அப்படி ஒழுங்காக சுத்தம் செய்யப்பட்டிருந்தால் சாலை எது, கால்வாய் எது என்று தெரியாத நிலையே ஏற்பட்டிருக்காது. இறுதியில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் சகதிக்குள் புதையுண்ட நிலையில் இன்று காலை கண்டெடுத்துள்ளனர். இன்னும் ஆழமாக புதையுண்டு இருந்தால் கண்டெடுப்பது இன்னும் சிரமமாக இருந்திருக்கும்.இன்னும் சொல்லப்போனால் சம்பவம் நடந்த திங்கட்கிழமையன்று மழை பெய்தது வெறும் இரண்டு மணி நேரம்தான். அதற்கே இப்படி. மணிக்கணக்கில், நாள் கணக்கில் என்றால்?

ஐந்து ஆண்டுகள் முன்பாக பாதாள சாக்கடைப் பணி துவங்கியது. இன்னும் அப்பணி நிறைவடையவில்லை. அதற்காக வெட்டப்பட்ட குழிகள், சாலைகள் இன்னும் மரணக்குழிகளாகவே இருக்கிறது. அப்பணி  நிறைவடைந்து செயல்படும் சாத்தியம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவேயில்லை. மோசமான சாலைகள் விபத்துக்களை ரத்தினக் கம்பளத்தோடு வரவேற்கின்றன.

மாநகராட்சி நிர்வாகம் என ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால் மாநகராட்சி இனியாவது செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் பிரியங்காவின் மரணத்தால் உருவாகியுள்ளது. ஆக்கிரமிப்புக்களை கறாராக அகற்றுவது, ஆக்கிரமிப்பு செய்தவர்களையும் துணை போன அதிகாரிகளையும் தண்டிப்பது, மோசமான சாலைகளை சீரமைப்பது, கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்து பராமரிப்பது, பாதாள சாக்கடைத் திட்டத்தை முடிப்பது என்று  மாநகராட்சிக்கு பல பணிகள் உடனடியாக உள்ளது.

துயரம் தோய்ந்த மரணம் ஒட்டு மொத்த வேலூர் மக்களின் மனதையும் ரணமாக்கியுள்ளது. இன்னொரு சோகம் நிகழ வாய்ப்பில்லாமல் இனியாவது நிர்வாகம் விழித்துக் கொள்ளும் என்று இன்னமும் கூட மக்கள் நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றுவார்களா? காற்றில் பறக்க விடுவார்களா?

2 comments:

  1. காற்றில் பறக்க விடுவார்களா ??????

    ReplyDelete
  2. செய்தித் தாள்களில் படித்து வேதனை அடைந்தேன்! இனியாவது விழித்துக் கொள்வார்களா?

    ReplyDelete