Wednesday, June 18, 2014

ஆட்டின் தாடியை அறுக்க மோடிக்கு ஏன் இவ்வளவு மோகம்?ஆட்டுக்கு தாடி போல மாநிலத்திற்கு கவர்னர் என்பது அறிஞர் அண்ணா சொல்வது. பொதுவாக ஆளுனர் பதவி என்பது அலங்காரமாய் இருந்த காலம் உண்டு. பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்று காலத்தை ஓட்டிய கவர்னர்கள் உண்டு. என்ன அடிக்கடி அமைச்சர்களை மாற்றி ஆளுனருக்கு வேலை கொடுக்க அம்மா போல வேறு யாரும் கிடையாது.

பொதுவாக மத்திய அமைச்சரவையிலிருந்து ஓய்வு கொடுக்க வேண்டியவர்கள் மனம் நோகாமல் அவர்கள் சுகபோக வாழ்வை அனுபவிக்க ஆளுனராக்கப்பட்டதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு எதிரான கட்சி மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தால் அவர்களுக்கு தலைவலி கொடுப்பதற்கு ஆளுனர்களை பயன்படுத்துவது என்பதை காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் ஒரு அரசியல் மரபாக மாற்றி விட்டார்கள்.

யெடீயூரப்பா ஆட்சிக்கு தலைவலி கொடுக்கவே கர்னாடக மாநிலத்திற்கு பரத்வாஜ் ஆளுனராக அனுப்பப்பட்டார். மேற்கு வங்க இடது முன்னணி அரசிற்கு தர்ம சங்கடங்களை உருவாக்குவதே அங்கு ஆளுனராகச் சென்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி எம்.கே.நாராயணனின் பணியாக இருந்தது. ஆந்திர ஆளுனர் மாளிகையை கேளிக்கை விடுதியாக மாற்றிய பெருமை என்.டி.திவாரி தாத்தாவிற்கு உண்டு. தமிழகத்திலும் பர்ணாலாவின் பேரன்கள் பேரங்கள் பல நிகழ்த்திய செய்தி நிறையவே வந்திருக்கிறது. புதுவையில் துணை நிலை ஆளுனராக இருந்த சிங்கின் லீலைகள் பிரசித்தி பெற்றது.

மொத்தத்தில் ஆளுனர்களால் மாநிலங்களுக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் கிடைத்ததில்லை என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் அனுபவம்.

ஆனால் மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு அனுசரணையாக ஆளுனர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் முந்தைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுனரை மாற்ற வேண்டும் என்று துடிக்கின்றார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சியோ பாரதீய ஜனதாவோ விதி விலக்கில்லை.

மன்மோகன்சிங் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களை மாற்ற வேண்டும் என்று மோடி விரும்புகிறார். நீங்களாகவே பதவி விலகுங்கள் என்று மரியாதையாக மிரட்டப்படுகிறார்கள். நீயே பதவி நீக்கம் செய்து கொள் என்று சிலர் திமிறுகிறார்கள்.

தங்கள் ஆட்கள்தான் ஆளுனராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற மோடி உதாசீனம் செய்கிற இரண்டு விஷயங்கள் உண்டு,

வாஜ்பாய் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் நீக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் எழுப்பியது பாரதீய ஜனதா கட்சிதான். எதிர்கட்சியாக எடுக்கும் நிலை ஆளும்கட்சியாகும் போது மாறி விடுகிற இலக்கணத்தை இவரும் பின்பற்றுகிறார்.

பாரதீய ஜனதா கட்சியினர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், ஆளுனர் என்பவர் ஆளும் கட்சியின் தலையாட்டி பொம்மை கிடையாது, அவர்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்வதோ, பதவி நீக்கம் செய்வதோ கூடாது என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

பார்ப்போம். சட்டத்தின் பெயரால் ஆட்சி செய்வோம் என்று பதவிப் பிரமாணம் எடுத்துள்ளவர்கள், நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறார்களா இல்லை மிதிக்கப் போகிறாரார்களா என்பது இன்னும் சில தினங்களில் தெளிவாகி விடும்.

2 comments:

 1. ராமன் ஸார்,

  அன்று கம்யூனிசம் ஒரு காதறுந்த ஊசி என்று நான் சொன்னபோது, என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா, காமெடி எழுதுவதோடு நிருத்திக் கொள்ளுங்கள் என்று இழிவாக அறிவித்தீர்களே. இப்போ என்ன சொல்றீங்க தோழரே.

  கார்ல் மாக்ஸின் காலம் கடந்துவிட்டது. அவர் ஊரிலேயே அவரை யாரு கண்டு கொள்வதில்லை. நம்ம ஊர் தோழர்கள் இப்போது பார்ப்பனீயம், சமூக நீதி என்று புதிய அத்தியாயம் தொடங்கி விட்டார்கள். (ஒரு நண்பர் தனது பதிவில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாரும் ஏன் உயர்சாதிக் காரர்களாக இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்).

  தோழரே, தயவுசெய்து வங்கி ஊழியர்களுக்காகவும் ஆட்டோ ஒட்டுனர்களுக்காகவும் பரிந்து பேசுவதை விட்டு விடுங்கள். எனக்கு கம்யூனிசத்தின் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய்விடும்.

  நன்றி,

  கோபாலன்

  ReplyDelete
 2. வாங்க கோபாலன், வரும்போதே அபாண்டமாக புகார் சொல்றீங்களே! உங்கள் மொழியில்தான் நான் பதில் கொடுத்தேன். அது இழிவு என்றால் அதற்கு நீங்களே பொறுப்பு.

  மற்றபடி பாரதியின் வார்த்தைகளில் சொல்கிறேன்.

  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியிருக்கிறது.

  ReplyDelete