Sunday, June 8, 2014

ராஜீவ் காந்தி, மருத்துவ மனை மற்றும் பொன்னியின் செல்வன்

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றலாம். நேற்று வலைச்சரத்தில் திரு சொக்கன் சுப்ரமணியன் "பொன்னியின் செல்வன்" நாவலை கருப்பொருளாக கையாண்டிருந்தார். அதைப் படித்தவுடன்  பொன்னியின் செல்வனுடனான என்னுடைய ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தூண்டியது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் பிரதமரான ராஜீவ் காந்தி கொஞ்ச நாளிலேயே மக்களவையைக் கலைத்து விட்டு தேர்தலை கொண்டு வந்தார்.தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் நெய்வேலி வந்தார். அந்த சமயம் கல்லூரி செமஸ்டர் விடுமுறை என்பதால் நான் நெய்வேலியில் இருந்தேன். 

பிரச்சாரக் கூட்டம் நெய்வேலி மந்தாரக் குப்பத்திற்கு வெளியே ஒரு எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பொட்டல் காட்டில் மதிய வேளையில் நடந்தது. சைக்கிளில்  போகிறேன், போகிறேன், போய்க் கொண்டே இருக்கிறேன். ஆனால் மைதானம் வரவில்லை. வானத்தில் ஹெலிகாப்டர் தெரிந்ததும் இன்னும் வேகம் வேகமாக மிதித்து அங்கே போனேன். மைதானம் வந்ததும் அப்படியே சுருண்டு விட்டேன். ஆனால் வந்தது செக்யூரிட்டி ஹெலிகாப்டர். ஒரு மணி நேரம் கழித்து ராஜீவ்காந்தி வந்தார், பேசினார், போய் விட்டார். மீண்டும் சைக்கிளை மிதித்து வீடு வந்து படுத்தவன் அன்று முழுதும் சாப்பிடக்கூட எழவில்லை. காய்ச்சல் அடிக்கத்தொடங்கி விட்டது. 

லோக்கலில் இருந்த மருத்துவரிடம் இரண்டு நாள் போனாலும் காய்ச்சல் குறையவில்லை. டைபாய்டாக இருக்கலாம் ஆகவே என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு சென்று விடுங்கள் என்று அவர் கூறி விட்டார். அங்கே சென்றதும் உடனடியாக அட்மிட் ஆக சொல்லி விட்டார்கள். 

இன் பேஷண்ட் ஆன மறு நாள் குணமாகி விட்டது. இரண்டு நாட்கள் அப்சர்வேஷனில் இருந்தால் நல்லது என்று மருத்துவர் ரங்கபாஷ்யம் சொல்ல சும்மா படுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் வீட்டில் இருந்த பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் கொண்டு வரச் சொன்னேன்.கல்கியில் தொடராக வந்ததை கிழித்து என் அப்பா பைண்ட் செய்து  வைத்த நூல்கள் அவை.

நான் இருந்தது சி ஸ்பெஷல் வார்ட். இரண்டு பெட்டுகள் உண்டு. இந்த இருவரைப் பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் உண்டு. நான் பொன்னியின் செல்வன் முதல் பாகம் படித்து முடித்தவுடன் அந்த நர்ஸ் அதை படிக்கத் தொடங்கினார்கள். ரொம்ப நாளா படிக்கனும்னு நினைச்சது இப்பதான் சான்ஸ் கிடைச்சது என்று அவர்களுக்கு ரொம்பவுமே சந்தோஷம். நான் படித்து முடித்த பாகங்களை வீட்டிற்கு எடுத்துப் போய் விடுவார்கள்.

இரண்டு நாள் அப்சர்வேஷன் மூன்று நாள் அப்சர்வேஷனாக மாறியது. நானும் பொன்னியின் செல்வன் ஐந்து பாகஙகளும் படித்து முடித்து விட்டேன்.  ஆனால் சிஸ்டரோ நான்காம் பாகத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தார்கள். அன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி பேசும்போதே அவர்கள் அவசரம் அவசரமாக மறுத்தார்கள். டாக்டர் சாலிட் ஃபுட் சாப்பிட்டு என்ன ரியாக்சன் என்று பார்த்து விட்டு டிஸ்சார்ஜ் செய்யலாமே எனச் சொல்ல அவரும் ஒகே என்று போய் விட்டார்.

நான் பரிதாபமாக  சிஸ்டரைப் பார்க்க "ஏய் நீ போய்ட்டா அப்புறம் நான் ஐந்தாவது பாகத்தை எப்படி முடிக்கிறது?" என்று கேட்டாரே ஒரு கேள்வி. நீங்க நிதானமா படியுங்க, நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கெஞ்சி கூத்தாடி மறுநாள் டிஸ்சார்ஜ் ஆனேன்.

வாசிப்பு ருசி உள்ள யாராலும் பொன்னியின் செல்வன் படிக்காமல் இருக்க முடியாது. எனக்கு நினைவு தெரிந்து ஒரு எட்டு முறையாவது முழுமையாக படித்திருப்பேன். தொடர்கதையாக வந்து படித்தது கணக்கில் வராது. 

இப்போது காலையில் மீண்டும் ஐந்து பாகங்களையும் எடுத்து வைத்து விட்டேன். கடந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் விகடன் வெளியீடு மொத்தமாக வாங்கியது.  வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான, அருண்மொழி, குந்தவை, நந்தினி, பூங்குழலி, சேந்தன் அமுதன், செம்பியன் மாதேவி, பழுவேட்டரையர்கள், அநிருத்த பிரம்மராயர், ரவிதாசன், இடும்பன் காரி ஆகியோரோடுஅடுத்த பயணம் தொடங்குகிறது

அந்த புத்தகத்தில் உள்ள வண்ணப்படங்கள் உங்களுக்காக கீழே. 

3 comments:

 1. காலத்தை வென்ற காவியம் அல்லவா?

  ReplyDelete
 2. பலமுறை படித்த நாவல்! மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்து! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. டிஸ்சார்ஜ் ஆவதற்கு எப்படியெல்லாம் கெஞ்ச வேண்டியிருக்கு,.

  நானும் விகடன் வெளியீட்டில் தான் பொன்னியின் செல்வன் வைத்திருக்கிறேன்.

  ReplyDelete