Friday, June 20, 2014

இதுதான் பத்திரிக்கை தர்மமாம்



சர்வதேச மகளிர் தினத்தன்று ஒவ்வொரு நாளிதழும் ஒவ்வொரு விதமாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த போது ஒரு நாளிதழ் மட்டும் ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. ஒரு விளிம்பு நிலைப் பெண் ஒருவர் டாஸ்மாக் கடை வாசலில் நின்று குடிப்பது போன்ற படத்தைப் போட்டு “இதற்குத்தானா பெண் விடுதலை?” என்று தலைப்பும் போட்டது. மகளிர் தினத்தையும் பெண்களையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட அந்த நாளிதழைக் கண்டித்து அனைத்திந்தீய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

பத்திரிக்கை நிர்வாகம் மாதர் அமைப்புக்களோடு பேச்சு வார்த்தை நடத்தியது. வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிடுவதாக ஒப்புக் கொண்டது. ஆர்ப்பாட்டத்தைப் பற்றி செய்தி சேகரிக்க எல்லா பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தாலும் எங்களது நாளிதழ் தவிர வேறு யாரும் அச்செய்தியை வெளியிடவில்லை.

ஒரு வாரமான பின்பும் அப்பத்திரிக்கை மறுப்பு தெரிவிக்கவில்லை. மகளிர் அமைப்புக்கள் தொலைபேசியில் பேசிய பின்பு ஒரு வழியாக மறுப்பறிக்கை வெளியிட்டது. அதில் கூட “ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்த, கிராப் தலையோடுள்ள, லிப்ஸ்டிக் பூசிய பெண்கள் வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னணியில்” என்ற ரீதியில்தான் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிகழ்வு நடந்த சில தினங்களுக்குப் பிறகு மனித உரிமை கமிஷன் சார்பாக “மனித உரிமைகளை பாதுகாப்பதில் பத்திரிக்கைகளின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்த போது இச்சம்பவத்தை குறிப்பிட்டு மனித உரிமைகளை ஊடகங்களிடமிருந்துதான் பாதுகாக்க வேண்டும் என்று பேசினேன். எனக்குப் பிறகு பேசிய ஞானியும் அதை வழிமொழிந்து பேசினார். ஆனால் இறுதியாக பேசிய அந்த பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் எந்த பதிலும் சொல்லாமல் நன்றி வணக்கம் எனக்கூறி முடித்து விட்டார்.

மற்ற பத்திரிக்கைகள் ஏன் செய்தி வெளியிடவில்லை என்றால் “ஒரு பத்திரிக்கைக்கு எதிராக இன்னொரு பத்திரிக்கை எப்படி செய்தி வெளியிடுவது? அது பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரானது. எனவே செய்தி வெளியிடவில்லை என்று விளக்கம் சொன்னார்கள்.

உண்மைகளை மறைப்பதற்கு பத்திரிக்கை தர்மம் என்று சொல்கிறார்கள்.


17.06.2014 அன்று வேலூரில் நடைபெற்ற தோழர் சரோஜ் நினைவு நாள் சிறப்புக்கருத்தரங்கில் “உண்மைகளை மறைக்கிறதா ஊடக அரசியல்?”என்ற தலைப்பில் தீக்கதிர் பொறுப்பாசிரியர் 
தோழர் அ.குமரேசன் பேசியதிலிருந்து.


2 comments:

  1. குறிப்பிட்ட நாளிதழின் போக்கு மாறட்டும்

    ReplyDelete
  2. சர்வதேச மகளிர் தினத்தன்று ஒவ்வொரு நாளிதழும் ஒவ்வொரு விதமாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த போது ஒரு நாளிதழ் மட்டும் ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. - எந்த நாளிதழ் என்று குறிப்பிடாமலேயே கண்டிப்பது என்ன தர்ம்மமோ?

    ReplyDelete