Wednesday, October 19, 2011

உள்ளாட்சிகள் உயிர்பெறட்டும்!

 - - - தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

மாநகராட்சிகளிலிருந்து சிற்றூராட்சிகள் வரை உள்ளாட்சித் தேர்தல்களின் பிரசாரம் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைவிட பரபரப்பாக உள்ளது. காரணம், ஊராட்சி வார்டு முதல் மாநகராட்சி மேயர் வரை லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு பல லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவதுதான்.



மத்திய அரசைவிட, மாநில அரசைவிட மக்களோடு நெருக்கமாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். மத்திய அரசுக்குத் தனியான அதிகாரப்பட்டியல், மாநில அரசுக்குத் தனியான அதிகாரப்பட்டியல், இரண்டுக்கும் சேர்த்து பொதுப்பட்டியல், இவைகளன்றி 73-வது, 74-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனியாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1992-ம் ஆண்டு கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (நகர்பாலிகா) சட்டத்திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 29 அதிகாரங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 18 அதிகாரங்களும் வழங்கிடும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் அளித்தது.




மத்திய அரசிடமிருந்து கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் தமிழ்நாடு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான அதிகாரம் வழங்கிட முன்வரவில்லை. தமிழகத்தில் இக்காலத்தில், 10 ஆண்டுகள் திமுக ஆட்சியிலிருந்தது. 3-வது முறையாக அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.


கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சிசெய்த திமுக, அதிமுக தலைமை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான அதிகாரங்களையும், நிதி ஆதாரங்களையும் வழங்கவில்லை, உரிய நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.மாவட்ட ஊராட்சிகள்:
மத்திய அரசு, மாநில அரசு போன்று உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட அரசாகச் செயல்பட வேண்டுமென்பதுதான் 73-வது, 74-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் நோக்கம். ஆனால், தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் தலைமையும், மாவட்ட ஊராட்சி என்ற அமைப்பை ஏற்கவில்லை. இதனால் மாவட்ட ஊராட்சிகளுக்கு அதிகாரமளித்து சுயமாக இயங்கிட வகைசெய்யவில்லை. உதாரணமாக, மாவட்ட ஊராட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட வேண்டும். இத்திட்டக் குழு ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு உள்பட்ட கிராமங்கள், நகரங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி அமலாக்கிட வேண்டும். ஆனால், இத்தகைய மாவட்ட திட்டக் குழுக்கள் கூடிக்கலையும் அமைப்புகளாகவே நீடித்துவருகின்றன.
ஆண்டுத்திட்டங்களை உருவாக்கிடவோ, அவைகளை அமலாக்கிடவோ, மாவட்ட ஊராட்சிகளுக்குப் போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு ஆங்கிலேயர் காலத்தில் அளிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், இன்றும் குறுநில மன்னர்கள்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சிகள் பெயரளவில்தான் உள்ளன.


ஊராட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்பட்டால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும். மத்திய அரசு, மாநில அரசு நிர்வாகத்தில் மக்களின் நேரடிப் பங்கேற்புக்கு வாய்ப்பில்லை. ஆனால், கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி உறுப்பினர்களையும், ஊராட்சித் தலைவரையும் வாக்களித்துத் தேர்வு செய்த மக்களுக்கு அந்த நிர்வாகத்தில் பங்கெடுக்க நல்ல வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஊராட்சிமன்றத் தலைவர் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி ஆண்டுத்திட்டத்தை உருவாக்குவதிலும், திட்ட அமலாக்கத்தை பரிசீலிப்பதிலும் கிராமத்து மக்களை ஈடுபடுத்திட இயலும்.


ஊராட்சியின் வரவு செலவு உள்ளிட்ட, ஊராட்சி மன்றத்தினுடைய பணிகள் அனைத்தையும் கிராம சபையில் விளக்கி மக்களுடைய ஒப்புதலைப்பெற வேண்டும் என்ற ஷரத்து உள்ளது. இங்குதான் ஜனநாயகத்தின் வேர் உள்ளது. இந்த முறையில் ஜனநாயகத்தின் அடித்தளம் அமைந்திட வேண்டுமென்பதே மத்திய சட்டத்திருத்ததின் நோக்கம். ஆனால், இத்தகைய முறையில் ஊராட்சிகள் செயல்பட அரசு அதிகாரிகள் உதவி செய்வதில்லை, சுய நலமிகளும் அனுமதிப்பதில்லை. ஊராட்சித்தலைவர் பதவி பல லட்சத்துக்கு ஏலம் விடப்படுவதில் இருந்தே அடித்தள ஜனநாயகம் என்ன பாடுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


நகர்ப்புற உள்ளாட்சிகள்:மூன்றடுக்கு உள்ளாட்சி குறித்த 73-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவைகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த சட்டம் இல்லை.


சில திருத்தங்களைச் சேர்த்து 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டம்தான் இன்றும் அமலில் உள்ளது. இதைப்போலவே 1920-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்ட நகராட்சி சட்டத்தின் கீழ்தான் நகராட்சிகளும் பேரூராட்சிகளும் இயங்கி வருகின்றன.


அரசியல் சட்டத்திருத்தத்தில் (நகர்பாலிகா) குறிப்பிடப்பட்டுள்ள 18 அதிகாரங்கள் தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. இதில், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் ஆர்வமில்லை. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஓர் ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சமூக நீதி:உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படும் தலித் மக்கள், பெண்கள் சுயமாகச் செயல்பட இயலவில்லை. கடந்த ஆண்டுகளில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிலர் ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், பலர் தாக்கப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகள் சுயமாகச் செயல்பட உதவிசெய்யாமல் சம்பந்தப்பட்ட குடும்பங்களில் உள்ள ஆண்கள் அதிகாரம் செலுத்துவது பல பகுதிகளில் உள்ளன. இத்தகைய தவறான போக்குக்கு முடிவுகட்டிட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


நிதியாதாரம்:ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசு அமைத்திடும் நிதியாணைக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து செய்திடும் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழகத்தில் 4-வது நிதியாணைக்குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகளும் கடந்த மாத இறுதியில் அரசுக்கு அளிக்கப்பட்டது. முதல் நிதியாணைக்குழு, அரசின் வரிவருவாயில் ஐந்தாண்டுகளில் 8 முதல் 12 சதவிகிதம் வரை உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட பரிந்துரைத்தது. ஆனால், அது அமலாக்கப்படவில்லை. அடுத்து, மூன்று முறை நிதியாணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் 10 சதவிகிதம் மட்டுமே இறுதியாக உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நிதியாணைக் குழுக்கள் உரிய பரிந்துரைகளைச் செய்வதில்லை என்பது ஒருபுறமிருக்க, அவற்றின் குறைந்தபட்ச பரிந்துரைகளைக்கூட மாநில அரசு அமலாக்கிட முன்வருவதில்லை. இருக்கிற சில வரிவருவாய்களையும் மாநில அரசு குறைத்துவிட்டது. உதாரணமாக, ஊராட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த வீட்டுவரி இணை மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சிகளின் செயல்பாட்டை நிதிப்பற்றாக்குறை மிகக் கடுமையாகப் பாதித்துவருகிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பல திட்டங்களும், கடமைகளும் நிறைவேற்றப்படாததற்கு நிதிப்பற்றாக்குறையே காரணம் என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.


ஆனால், அதிமுக-திமுக இரண்டு கட்சிகளின் தலைமைகளும் அதைப் பொருள்படுத்துவதாகவே இல்லை. மத்திய அரசு தன்னுடைய வரிவருவாயில் 30.5 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு நிதியாக ஒதுக்கீடு செய்கிறது. மாநில அரசு தன்னுடைய வரி வருவாயில் குறைந்தபட்சம் மூன்றில் ஒருபகுதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும்.




ஊழல்கள் ஒழிந்திட:உள்ளாட்சிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்னையாக இருப்பது வளர்ச்சிப்பணிகளுக்குப் பாதிப்பு என்றால், மறுபக்கம் கிடைக்கிற சிறு நிதி கூட ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக மக்களுக்குப் பயன்படாமல் கொள்ளைபோகும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் இரு துருவங்களாக அரசியலில் சண்டமாருதம் செய்வார்கள். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் புரிந்துணர்வுடன் கமிஷனை பங்குபோட்டுக் கொள்வார்கள்.



உள்ளாட்சிகளில் ஊழல் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நீதிபதி தலைமையில் ஊழல் தடுப்புக்குழு அமைக்க வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றைக்கு ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் நிலையில், உள்ளாட்சிகளில் ஊழல் நடைபெறாமல் தடுக்கவும், ஊழல் செய்தவர்கள்மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கவும் அதிகாரமுள்ள ஊழல் தடுப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் பிரிவு 205-இன் கீழ் பதவி நீக்கம் செய்திட மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.




உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தம் கோரி திட்டங்களை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கிறபோது, சிண்டிகேட் அமைத்து டெண்டர் இல்லாமலேயே வேலை ஒப்பந்தங்களைப் பெறுகிற முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமாக டெண்டர் விடும் முறையும் கொண்டுவர வேண்டும்.
உள்ளாட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தேர்தல் பிரசாரத்தில் விவாதப்பொருளாக பெருமளவு இடம்பெறவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. நடைபெறவுள்ள தேர்தல் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும். உள்ளாட்சிகள் உயிர்பெறட்டும்.



கட்டுரையாளர்:

(மாநிலச் செயலர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

நன்றி - தினமணி

1 comment:

  1. //ஆனால், அதிமுக-திமுக இரண்டு கட்சிகளின் தலைமைகளும் அதைப் பொருள்படுத்துவதாகவே இல்லை.//

    இதை கூட்டணி வைத்துக் கொள்ளும் முன்பு CMP போட்டு விட்டு பேசியிருந்தால் நியாயமாக இருந்திருக்கும்

    ReplyDelete