Saturday, January 28, 2023

ஜோஷிமத்துக்கு போகாதீங்க . . .

 


ஜோஷிமத்தில் என்ன நடக்கிறது?

 


ஜோஷிமத் உத்தர்கண்டில் இருக்கிற ஒரு சின்ன நகரம்.  ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிற நான்கு சங்கர மடங்களான சிருங்கேரி, துவாரகா, பூரி, ஜோஷிமத் ஆகிய நான்கு மடங்களில் ஒன்று அங்கே இருக்கிறது.

 காஞ்சி சங்கர மடம் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதல்ல, சிருங்கேரி மடத்தின் கிளையாக கும்பகோணத்தில் அமைக்கப்பட்டு அது பின் காஞ்சிக்கு மாறி இறையாண்மை கொண்ட தனி மடமாக அறிவித்துக் கொள்ளப்பட்டது என்று மற்ற மடங்கள் சொல்லும் பஞ்சாயத்து இந்த பதிவுக்கு அவசியமில்லை.

 ஜோஷிமத் இந்தாண்டின் துவக்கத்தில்  ஊடகங்களில் அடிபட்டு இப்போது காணாமல் போயுள்ளது. ஜோஷிமத்தில் செய்யும் ஆய்வுகள் தொடர்பாக எந்த ஒரு அமைப்பபும் எந்த ஊடகத்திடமும் வாய் திறக்கவே கூடாது என்று ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகம் பிறப்பித்த சுற்றறிக்கையே  ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம்.

 சரி அப்படி என்னதான் அங்கே பிரச்சினை?

 நான்கு செண்டிமீட்டர் அளவில் ஊர் புதைந்து போயுள்ளது. உள்ளூர் சாலைகள் முதற்கொண்டு தேசிய நெடுஞ்சாலைகள் வரை விரிசல் கண்டுள்ளது. சில இடங்களில் சாலையே காணாமல் போய் விட்டது.  861 கட்டிடங்களில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. 181 வீடுகள் மக்கள் வசிக்க லாயக்கற்றது என அறிவிக்கப்பட்டு அந்த வீடுகளில் உள்ளவர்கள் அகற்றப் பட்டுள்ளனர்,

 278  குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு அனுப்பப் பட்டுள்ளனர். உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க  இரண்டு பெரிய விடுதிகளும் மூன்று தனியார் கட்டிடங்களும் இடிக்கப்பட்டு விட்டன.  எங்கிருந்து வருகின்றது என்று தெரியாமலேயே ஒரு நொடிக்கு 540 லிட்டர் என்று வெளியேறிய தண்ணீர் இப்போது ஒரு நிமிடத்திற்கு 182 லிட்டர் என்ற அளவில் தண்ணீர் வருகிறது. ஜோஷிமத் சங்கர மடத்தில் கூட விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

 அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

 பல ஆய்வகங்கள் சோதனை சேய்து வருகின்றன. அந்த முடிவுகளைத்தான் வெளியே, ஊடகங்களுக்கு சொல்லக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுள்ளது மோடி அரசு.

 தடைக்கு என்ன காரணம் என்பதை பின்னர் பார்ப்போம். ஆனால் இங்கே நிலைமை மோசமானதற்கு காரணம் அறிய பெரிய ஆய்வுகள் அவசியமில்லை.  இமயமலைப் பகுதியில் கட்டிடங்கள் கட்ட பல விதிகள் உண்டு. ஆனால் அவை எதுவும் கண்டு கொள்ளப்படாமல் புற்றீசல் போல முளைத்த கட்டிடங்கள், ஆசிரமங்கள், என்.டி.பி.சி அமைக்கும் ஒரு அனல் மின் நிலையம், நெடுஞ்சாலைப் பாலங்கள் போன்ற கட்டுமானப்பணிகள்  ஜோஷிமத்தை பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு என்ற நிலைக்கு தள்ளி விட்டது. விரிசல் விழுந்த கட்டிடங்கள் உயிருக்கு அபாயம் என்ற நிலையில்தான் உள்ளது.

 அரசு ஏன் செய்திகளை மறைக்கப்பார்க்கிறது?

 உத்தர்கண்டின் முக்கியத் திருவிழா சார்தம் யாத்திரை. புண்ணியத் தளங்களாக கருதப்படுகிற  யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு இடங்களுக்கு செல்வதே சார்தம் யாத்திரை. இந்த யாத்திரையின் நுழைவாயில் ஜோஷிமத். ஜோஷிமத்தான் பக்தர்களுக்கான தங்கும் வசதிகள் உள்ள ஊர். இந்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 7500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்குமாம். ஜோஷிமத் பற்றிய உண்மைகள் தெரிந்து பக்தர்கள் வராமல் போனால் இத்தனை பணமும் வராமல் போய் விடுமே என்பது மட்டுமே அரசின் கவலை.

 20,000 மக்கட்தொகை  தொகை உள்ள போதே இந்த நிலை என்றால், விரிசல் விழுந்த கட்டிடங்களில் அவர்கள் தங்கினால் என்ன ஆகும்?

 இந்து மதக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டே இந்துக்களின் உயிர்களோடு விளையாடுகிறது.

 எனவேதான் சொல்கீறேன்.

 ஜோஷிமத்துக்கு போகாதீங்க.

No comments:

Post a Comment