Sunday, March 4, 2018

திரிபுரா: அடித்தால் திருப்பி அடி






2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களுக்குப் பின்பு தன் மகனின் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி தொகுதியில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த ஒரு தோழர் வந்திருந்தார். அவர் எங்கள் சங்க அலுவலகமாக சரோஜ் இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அவர் சி.பி.ஐ(எம்) உறுப்பினர் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வேறு எந்த முதலாளித்துவக் கட்சி உறுப்பினர் அந்த நூறு ரூபாய் வாடகை உள்ள சின்ன அறையில் தங்குவார்!

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி அவரோடு விவாதித்த போது அவர் சொன்ன சில காரணங்களில் மிகவும் முக்கியமாக அவர் வலியுறுத்தியது ஒரு விஷயத்தை.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் மாவோயிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டவர்களோடு இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களை தாக்கியபோது அவர்களை திருப்பித் தாக்குவதற்கு பதிலாக சட்டரீதியான வழிமுறைகளை மட்டுமே கையாள்வது என்று எடுக்கப்பட்ட முடிவு மோசமான விளைவுகளை உருவாக்கி விட்டது.

திரிணாமுல் கட்சி  குண்டர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களும் கட்சித் தொண்டர்களும் இழந்து விட்டார்கள். அதனுடைய விளைவும் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கு ஒரு முக்கியக் காரணம் என்றார். இந்த அணுகுமுறையில் மாற்றம் இல்லாவிட்டால் சட்டப்பேரவையை இழக்கும் அபாயமும் உண்டு என்றார் அவர்.

அவர் வந்து போன சில மாதங்களுக்குப் பின்பு இன்னொரு அரிய வாய்ப்பு கிடைத்தது.

சி.ஐ.டி.யு சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது. அம்மாநாட்டை சி.ஐ.டி.யு சங்கத்தின் அன்றைய அகில இந்திய தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் எம்.கே.பாந்தே துவக்கி வைத்தார்.  முன்பே ஏலகிரி வந்திருந்த தோழர் எம்.கே.பாந்தேவுடன் கடலூர் வரை உடன் பயணிப்பதற்கான வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது.

அந்த பயணத்தின் போது எந்த வித தயக்கமும் இல்லாமல் நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த முன்னாள் எம்.பி சொன்ன கருத்தை கூறி அது சரியா என்று அவரிடம் கேட்ட போது 

அதை அவர் ஆமோதித்தது மட்டுமல்லாமல் திருப்பி தாக்குவது. தற்காப்பு செய்யாமல் இருப்பது ஆகியவற்றால் மேற்கு வங்க தோழர்கள் மத்தியில் பாரம்பரியமாக இருந்த போராட்ட உணர்வு மங்கியுள்ளதாகவும் அதை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

இதனை இப்போது நினைவுபடுத்த வேண்டிய தேவையை நேற்று முதல் திரிபுராவில் நடக்கும் சம்பவங்கள் உருவாக்கியுள்ளது.

ஆம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்களை தொடங்கியுள்ளனர். 

இதனை தடுக்க காவல்துறையை நம்ப முடியாது. அவர்கள் புதிய ஆட்சியாளர்களின் குண்டர்களுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள்.

இந்திய தேர்தல் முறையின் அபத்தம் காரணமாக பாஜகவை விட அதிக சதவிகிதம் வாக்குகள் வாங்கியும் சி.பி,ஐ(எம்) அங்கே ஆட்சியை இழந்துள்ளதே தவிர 44.7 % மக்கள் ஆதரித்துத்தான் உள்ளார்கள். இத்தாக்குதல்களை உறுதியோடு சந்திக்க தவறினால் இந்த ஆதரவுத்தளம் அரிக்கப்படுவதற்கான ஆபத்து உள்ளது. பாஜக தாக்குதலின் நோக்கமும் அதுதான்.

மேற்கு வங்க அனுபவத்தின் படிப்பினையாக தாக்குதல்களுக்கு திரிபுரா தோழர்கள்  தக்க எதிர்வினை ஆற்ற வேண்டும். 

"அடித்தால் திருப்பி அடி"

இதுதானே தோழர் பி.சீனிவாசராவ் கற்றுக் கொடுத்த அடிப்படைப் பாடம்.



2 comments:

  1. since comrade goons indulged in violence and killed patriots for 25 years during its autocratic rule in Tripura they are in the receiving end now. None will come to rescue. 'Hit back' is not one-sided. Elimination should continue till the last commie remains. Jai hind.

    ReplyDelete
    Replies
    1. ஃப்ராடு செஞ்சு ஆட்சிக்கு வந்த திருட்டுப்பசங்க திமிராத்தான் பேசுவீங்க.
      உங்கள் ஆணவத்திற்கெல்லாம் மக்கள் மரண அடி கொடுக்கத்தான் போகிறார்கள்

      Delete