Sunday, November 27, 2016

புரட்சித்தலைவருடனான அனுபவங்கள்
(ஆகஸ்ட் 13-ம் தேதி தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளையொட்டி தேசாபிமானி மலையாள நாளிதழில் CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் DYFI அகில இந்தியத் தலைவரும், 1992-ல் கியூபா பாதுகாப்பு ஆதரவுக் குழுவின் அமைப்பாளராக செயல்பட்டவரும், கேரள முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான தோழர் M.A.பேபி எழுதிய கட்டுரை...அந்தக் கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் தோழர்.M.A.பேபி, தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி மறுபதிவிட்டுள்ளார்...)

புரட்சி சூரியன்

638 முறை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஎ மற்றும் அவர்களது வழிகாட்டலின் பேரில் செயல்பட்ட மாஃபியாக்களும் கொலைசெய்ய முயற்சித்தும் உயிருடன் வாழும் புரட்சிநாயகன். வரலாற்றில் இடம்பிடித்த ஈடுஇணையற்ற அந்த புரட்சியாளரைப் பற்றிய நினைவுகள் மனதில் தனித்துவத்தோடு நிற்கக் காரணம் என்ன..? ஹவானாவில் இந்திய தூதரகத்தில் ஏற்பட்ட எனது அனுபவம் இது.

24 வருடங்களுக்கு முன்பு 1992 டிசம்பர் இறுதியில் “கரீபியன் பிரின்சஸ்” என்ற கப்பலின் மூலம் கொல்கத்தாவின் ஹால்டியா துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட 10,000 கிலோ கோதுமை மற்றும் 10,000 கிலோ அரிசியுடன் ஹவானா துறைமுகத்தை அடைந்த போது அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாங்கள் சென்றிருந்தோம். தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித், முன்னாள் கம்யூனிஸ்ட் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான மரியாதைக்குரிய மறைந்த கே.என்.சிங் மற்றும் நான் ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தோம். நிகழ்ச்சியில் தோழர்கள். ஃபிடல் காஸ்ட்ரோ, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோர் உரையாற்றினார்கள். ஓவியர் எம்.எஃப்.ஹுசைனின் மகன் ஷம்ஷாத் ஹுசைன் வரைந்தஃபிடலின் ஓவியத்தை தோழர். ஃபிடலுக்கு பரிசளித்தோம். தனது படத்தை தோழர். ஃபிடல் ஒரு சிறு குழந்தையின் களங்கமற்ற குதூகலத்துடன் ஆச்சரியமாகப் பார்த்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தோழர். ஃபிடலின் அலுவலகத்தில் அவரை சந்திக்கச் செல்லும்படி மொழிபெயர்ப்பாளர் எங்களிடம் கூறினார். சுமார் இரண்டரை மணிநேரம் நீண்ட ஒரு உரையாடல் எங்களுக்காக காத்திருந்தது. அதைப்பற்றி பின்னர் கூறுகிறேன்.

அதற்கடுத்த தினம் தூதரகத்தில் இரவு உணவின் போது, அந்த சூடான, ஆச்சரியப்படுத்தும் செய்தி வெளியாகியது...சிறிது நாட்களாக தனது சக தோழர்களிடம், தோழர். ஃபிடல் ஒரு வேண்டுகோளை உறுதியாகக் கூறி வருகிறார்...மிக நீண்டகாலமாக தலைமைப் பொறுப்பில் செயல்பட்டு வரும் தனக்கு ஓய்வு அளிக்க ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதே, அந்த வேண்டுகோள்... சக தோழர்கள் இதை ஒத்துக்கொள்ளவில்லை. தோழர். ஃபிடல் அந்த பொறுப்பில் நீடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் தோழர். ஃபிடலும் தனது வேண்டுகோளை பிடிவாதமாக வலியுறுத்தி வந்தார்.

20-வது வயதில் தொடங்கிய அரசியல் போராட்டங்கள்...நாற்பதாண்டுகள் நீண்ட தலைமைப்பொறுப்புகள் என்றெல்லாம் அறுபது வயதுகளில் இருந்த தோழர். ஃபிடல், தனது ஓய்வுக்கான காரணங்களாகக் கூறினார். சுமார் 35 வருடங்கள் அரசின் தலைமைப் பொறுப்புகளையும் அன்றையதினம் நிறைவேற்றி முடித்திருந்தார். ஓய்வு பெறுவதற்காக விடாப்பிடியான வாதங்கள் செய்துவந்த தோழர். ஃபிடல், தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் சுறுசுறுப்பான செயல்பாட்டைக் நேரில் கண்டதோடு ஓய்வுபெறும் முடிவைக் கைவிட்டார். தோழர்.சுர்ஜித்துக்கு தோழர். ஃபிடலைவிட 10 வயது அதிகம். 2008 வரை ஆட்சிப் பொறுப்பிலும், 2011 வரை கட்சிப் பொறுப்புகளிலும் தொடர தோழர். ஃபிடலுக்கு தோழர்.சுர்ஜித் முன்மாதிரியாக இருந்தார் என்பது இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

90 வயதான தோழர். ஃபிடல் 5 வருடங்களுக்கு முன்பு கட்சியின் எல்லா பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். 8 வருடங்களுக்கு முன்னால் அரசுப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். தங்களால் இயன்ற வரையிலும் கட்சிக்கும் நாட்டுக்கும் கடினமாக உழைப்பதே எல்லா கம்யூனிஸ்டுகளின் கடமை, அதேநேரம் உடல்ரீதியான இயலாமை ஏற்படும்போது பிரதான பொறுப்புகளை மற்ற தோழர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற செயல்பாட்டு அணுகுமுறையின் கம்யூனிச உதாரணமே தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ என்ற மகத்தான கம்யூனிஸ்ட்.

1978-ல் உலக வாலிபர்-மாணவர் சங்கமம் ஹவானாவில் நடந்தபோது, 52 வயதான தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவை முதன்முதலாக சந்தித்தேன். பிரகாஷ் காரட், பிமன் பாசு, மாணிக் சர்க்கார், உத்தப் பர்மன், இந்திராணி மஜும்தார் முதலிய தோழர்கள் எங்கள் இந்தியக் குழுவிலிருந்தனர். கேரளத்திலிருந்து டி.பி.தாசன், முல்லைப்பள்ளி ராமச்சந்திரன், ராமு காரியாட், டி.வி.பாலன், முதலியவர்களும் எங்கள் குழுவில் இருந்தார். நிகழ்வின் கடைசி தினத்தில் பிரம்மாண்டமான “லெனின் பூங்கா”வில், கலந்து கொண்ட பிரதிநிதிகள் சுதந்திரமாக கலந்துரையாடவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கிடையில் தோழர். ஃபிடல் எங்கள் முன்னே திடீரென தோன்றி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன்பிறகு ஏற்பட்ட அனுபவமே நான் முதலில் குறிப்பிட்டது. சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஏறத்தாழ மூன்று மணிந்நேரம் தோழர்.சுர்ஜித்துடன் நடந்த உரையாடலுக்கு நான் சாட்சியம் வகித்தேன். “எங்கள் நாட்டுக்கு நீங்கள் கொண்டுவந்த இந்த பொருளுதவிக்கு பதிலாக, இந்தியாவுக்கு நாங்கள் என்ன திரும்பத் தரவேண்டும்..?” தோழர். ஃபிடலின் இந்த கேள்விக்கு தோழர்.சுர்ஜித் இவ்வாறு பதிலளித்தார். “மிகவும் எளிமையான இந்த பொருளுதவி எங்கள் மானசீக ஆதரவின் அடையாளமேயாகும். இந்திய மக்கள் எல்லோரும், தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் உங்களுக்கு பின்னால் நங்கள் அணிவகுத்து நிற்கிறோம். நங்கள் செய்த இந்த உதவி அரசியல் ரீதியான, சர்வதேச உணர்வினால் ஏற்பட்ட உந்துதலினால் மட்டுமே நடந்தது. அதோடு கம்யூனிஸ்டுகள் என்ற முறையில் இது எங்களது கடமையுமாகும். இதில் கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ்காரரான கே.என்.சிங் எங்களுடன் இருப்பதும் அதன் ஒரு பகுதியே ஆகும்.” என்று மிகப் பொருத்தமாக எங்கள் பிரதிநிதிக்குழுவின் தலைவர் தோழர். சுர்ஜித் பதிலளித்து முடித்தவுடன், நான் சின்ன விஷயம் ஒன்றைக் கூறட்டுமா என்று தோழர்.சுர்ஜிதிடம் கேட்டேன். இவர் என்ன வீண் ஜம்பம் பேசப் போகிறாரோ என்றவாறு என்னை ஒருகணம் பார்த்துவிட்டு, இருப்பினும் நான் கியூபா பாதுகாப்பு ஆதரவுக் குழுவின் அமைப்பாளர் அல்லவா..சரி சொல்லுங்கள் என்று என்னைப் பேச அனுமதி தந்தார். 

கியூபாவிலிருந்து பிரதிபலன் ஏதும் எதிர்பார்த்து நாங்கள் இந்த உதவியைச் செய்யவில்லை என்ற தோழர். சுர்ஜித்தின் வார்த்தைகளை அடியொற்றி, “விளையாட்டு, கலை, கலாச்சாரத் துறைகளில் சில உதவிகள் கியூபாவிலிருந்து கிடைத்தால், கியூப ஆதரவுக் குழுவின் செயல்பாட்டை ஜனரஞ்சகமாகவும், மேலும் உறுதிப்படுத்தவும் உதவும் என்றும் கூறினேன். உதாரணமாக, 1992 (ஜூலை-ஆகஸ்ட்) ஒலிம்பிக்கில் அனைத்து முன்னேறிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி கியூபா 5-ம் இடத்திற்கு முன்னேறியதைக் குறிப்பிட்டேன். சில காட்சி ரீதியான விளையாட்டுப்போட்டிகளை நடத்தலாம் என்று கூறினேன்.

இதைக்கேட்ட தோழர். ஃபிடல் பலமாகச் சிரித்தார். “இந்திய-கியூப விளையாட்டுப் போட்டிகளில் நாம் கவனமாக இருக்கவில்லையெனில் இந்திய-கியூப நல்லுறவே சிதைந்துவிடும். காரணம், குத்துச் சண்டையிலும் மல்யுத்தத்திலும் கியூபாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்களுக்கு போட்டிகளுக்கிடையில் காயம் ஏற்பட்டால் நம்மையெல்லாம் அது வேதனைப்படுத்தாதா..?” என்று கூறி உடல் குலுங்கக் குலுங்க பலமாகச் சிரித்தார். நாங்களும் அவருடன் சேர்ந்து சிரித்தோம். மேலும் ”எங்கள் கால்பந்து அணி பலவீனமானது. அவர்களை அனுப்புவதே சிறந்தது. இந்திய கால்பந்து அணி கியூப அணியைத் தோற்கடிக்க முடியும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

“தோழர்! உங்கள் நண்பரான எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்யேசை இந்தியாவில் நடக்கும் கியூபா ஆதரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்ய இயலுமா?” என்று எனது அடுத்த கேள்வி வந்தது. “மிகவும் சிரமமான வேலை” என்று கூறி மிகவும் பலமாகச் சிரித்தார். மார்க்வேஸ் விமானப் பயணத்திற்கு அஞ்சுபவர். டெல்லியில் நடந்த அணிசேரா அமைப்பின் மாநாட்டிற்கு வரும்போது கயிற்றால் கட்டி இழுத்தது போன்று அவரை வற்புறுத்தியதால், தயங்கித் தயங்கியே விமானத்தில் ஏறினார் என்ற கதையைக் கூறினார்.

“சரி நீங்கள் கொரியேரியுடன் பேசிப்பாருங்கள்” என்று தோழர். ஃபிடலே ஒரு விஷயத்தை முன்மொழிந்தார். மறைந்த மரியாதைக்குரிய கொரியேரி கியூபா ஆதரவு இயக்கத்தின் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், பிரபல நடிகரும் ஆவார். “நான் அவரிடம் பேசிவிட்டேன். அவரது வழிகாட்டுதல்படியே நான் தங்களிடம் இதுபற்றி பேசுகிறேன் தோழர்!” என்று நான் கூறிய உடன் “சரி...நடக்குமா என்று தெரியவில்லை” என்று தன்னைத்தான் கூறியவாறே ஆழ்ந்த சிதனையில் மூழ்கினார்.

பின்னர் சர்வதேச அளவில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் அந்த இதிகாசநாயகனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் நிகழ்வில் துவக்கம் முதல் இறுதிவரை விவாதங்களை கூர்ந்து கவனித்தும், சிற்சில விஷேச விவாதங்களில் குறிப்புகளை எழுதிக் கொடுத்துக் கொண்டே சபையிலிருக்கவும் செய்த தோழர். ஃபிடல், எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும், வரலாற்றை உருவாக்குபவரின் அழியாத ஓவியத்தையே பிரதிபலிக்கிறார். தோழர். ஃபிடலும் சேகுவேராவும் கியூப மக்களின் வாழ்க்கையையும், இலத்தீன் அமெரிக்காவின் அரசியலையும் எப்படி புரட்டிப்போட்டார்கள் என்பது ஒரு வீரமிக்க வரலாறு.

சே குவேராவுடன் சேர்ந்து இலத்தின் அமெரிக்காவையும் அதன் மூலம் உலகத்தையும் தலைகீழாக புரட்டிய ஈடுஇணையற்ற புரட்சிநாயகனான தோழர். ஃபிடல் வழக்கமாக எழுதும் கட்டுரைகளில் கவனமாக கையாளும் வார்த்தைகள் மூலம் உலகின் தாறுமாறான நிகழ்ச்சிபோக்குகளை எளிமையாக கூறிவருகிறார். அமெரிக்காவுடனான கியூபாவின் உறவு எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற கேள்விக்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னால் அவர் அளித்த, தீர்க்கதரிசனமான பதில் இன்று பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. 

 “அமெரிக்காவுக்கு கறுப்பின அதிபரும், வாடிகனுக்கு இலத்தீன் அமெரிக்க போப்பும் வருகிற போது அமரிக்கா-கியூபா உறவு இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்று அன்றைய தினம் அந்தக் கேள்விக்கு தோழர். ஃபிடல் பதிலளித்திருந்தார். சுரண்டலற்ற ஒரு உலகத்திற்காக போராடும் ஒவ்வொருவருக்கும் போராட்ட நெருப்பும், ஒளியும் கொடுக்கும் உந்துசக்தியின் கோபுரங்களாக தோழர்கள். ஃபிடலும் சேகுவேராவும் இருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தால் கொலை செய்யப்படாது இருந்திருந்தால், 88 வயதான சேவும், தனது மூத்த சகோதரனின் இடத்திலுள்ள ஃபிடலின் பிறந்த நாளுக்கு வாழ்த்துசொல்ல இருந்திருப்பார்.

இப்பதிவை முக நூலில் பகிர்ந்து கொண்ட தோழர் SadanThuckalai அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

No comments:

Post a Comment