Monday, November 14, 2016

எல்லோருக்குமான, ஒரு சீரியஸான பிரச்சினை





மிகுந்த கவலையோடு இந்த பதிவை எழுதுகிறேன்.

மோடியின் ஏழை மக்கள் மீதான துல்லிய தாக்குதலுக்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவை காப்பீட்டு நிறுவனங்கள். புழக்கத்தில் உள்ளவையில் 85 % ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் என்கிற போது, அவற்றால் எந்த பயனும் இப்போது கிடையாது என்ற நிலைமையில் அதன் தாக்கம் இங்கேயும் எதிரொலிக்கிறது.

எத்தனையோ விதங்களில் இன்சூரன்ஸ் பிரிமியத்தை செலுத்த முடியும் என்றாலும் எழுபத்தி ஐந்து சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ரொக்கமாக நேரடியாகவோ அல்லது முகவர்கள் மூலமாகத்தான் அலுவலகத்தில்தான் செலுத்துகிறார்கள்.

ஒன்பதாம் தேதியிலிருந்து பெரும்பாலான அலுவலகங்களில் பண வசூல் என்பது அநேகமாக இல்லை. ஒரு நாளைக்கு பல லட்ச ரூபாய் வசூலிக்கும் அலுவலகங்களில் சில ஆயிரம் ரூபாய் கூட வசூல் இல்லை.

அத்தியாவசியமான செலவுகளுக்கே காசில்லாமல் சிரமப்படும் மக்களைப் பொறுத்தவரை காப்பீட்டு பிரிமியம் என்பது இரண்டாம் பட்சமாகத்தான் தோன்றும்.

இன்னும் ஐம்பது நாட்கள் வரை நிலைமை சீராகப் போவதில்லை என்று மோடியும் ஜெய்ட்லியும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்றால் அதை விட இன்னும் அதிகமான காலம் பிடிக்கும் என்பதுதான் யதார்த்தம். அது வரை மக்கள் மீண்டும் இன்சூரன்ஸ் அலுவலகம் பக்கம் வருவார்களா என்பது சந்தேகமே. அப்படி நிலைமை சீரானாலும் கூட வர வேண்டிய தொகை முழுமையாக வருமா என்பது இன்னும் பெரிய சந்தேகம்தான்.

ஆனால் அதன் விளைவுகள் என்ன ஆகும்?

பணம் செலுத்த வேண்டிய தவணை நாள் தவறிப் போனால் அபராத வட்டி செலுத்த நேரிடும். அத்தொகையை தேச நலனுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்றுதான் மோடி சொல்வாரா?

இப்பிரச்சினை காரணமாக பாலிசி காலாவதியாகி பாலிசிதாரர் இறப்பார் என்றால் இறப்பு உரிமம் கொடுக்க முடியாத நிலை உருவாகும். இந்த பேரிழப்பையும் அந்த குடும்பம் சகித்துக் கொள்ளதான் வேண்டும் என்று மோடியும் அவரது மூளையற்ற ஜால்ராக்களும் சொல்வார்களா?

பழைய 500, 1000 நோட்டுக்களை காப்பீட்டு பிரிமியத்திற்கு வாங்கலாம் என்று அரசு முடிவெடுத்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு வரும். இந்த கோரிக்கை வலுவாக எழுப்பப் பட்டுள்ளது.

இதை ஏற்க மறுத்தால் “இவர்கள் இரக்கமற்றவர்கள், இதயமற்றவர்கள்”.

1 comment:

  1. இப்பிரச்சினை காரணமாக பாலிசி காலாவதியாகி பாலிசிதாரர் இறப்பார் என்றால் இறப்பு உரிமம் கொடுக்க முடியாத நிலை உருவாகும்.

    வேதனை
    வேதனை

    ReplyDelete