Wednesday, November 23, 2016

கேட்க திகட்டாத பாடல்
இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மறைவு இன்னொரு துயரம். 

நான் முதன் முதலில் கேட்ட கர்னாடக இசைக் கச்சேரி என்பது திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களுடையதுதான். சிறு வயதில் கேட்ட அந்த கச்சேரி என்பதால் நினைவில் இல்லை. 

கர்னாடக இசையில் ஆர்வம் வந்த பிறகு அவருடைய கச்சேரியைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.திருவையாறு தியாகராஜர் உற்சவத்திற்கு நான் சென்ற வருடங்களில் அவர் வருவது நின்று போயிருந்தது. ஆனாலும் அவருடனான இசைத் தொடர்பு காசெட்டுக்கள் வாயிலாக இருந்து கொண்டுதான் இருந்தது. 

கேட்கத் திகட்டாத அவரது குரல் தனித்துவமானது. கம்பீரமானது. அப்படியே ஆளை மயக்கும். ராக ஆலாபனையும் கற்பனாஸ்வரங்களும் நம்மை கட்டிப் போடும். 

மொழி புரியாவிட்டாலும் கூட பத்ராசலம் ராமதாஸர் கீர்த்தனைகளை அவர் பாடும் போது உருகி விடுவோம். உற்சவ சம்ப்ரதாய கிருதிகள் உற்சாகம் தரும்.

அவரது காசெட்டுக்களில் என்னிடம் இருந்தவை  பெரும்பாலும் ஒரே ராகத்தில் அமைந்த கீர்த்தனைகள், பஞ்சரத்ன கீர்த்தனை, தவிர ஒரு காஸெட் முழுதும் ஒரு கீர்த்தனை அல்லது இரண்டு கீர்த்தனை என்பது போலத்தான் அமைந்திருக்கும். "நகுமோ" அதில் ஒன்று. 

அவரது சமகாலத்திய இசை மேதைகளான பீம்சேன் ஜோஷி, ரவிசங்கர், பிஸ்மில்லாகான் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருது பாலமுரளிக்கு வழங்கப்படாதது ஒரு குறையே. 

பாலமுரளி கிருஷ்ணா பற்றி இவ்வளவு பேசி விட்டு அவரது பாடல்களை கேட்காமல் எப்படி இந்த பதிவை நிறைவு செய்வது?

இப்பாடலைக் கேட்க ஒரு யுகம் கூட போதாது.

மௌனத்தில் விளையாடியது மனசாட்சியா ?  அல்லது அவரின் குரலா?

ராஜாவின் இசையில் வந்த இப்பாடலில் அவரையும் பார்க்கலாம், மெல்லிசை மன்னரையும் கூட.

கேட்கத் திகட்டாத பாடலாக இருந்தாலும் எனக்கு பிடிக்காத பாட்டு இது.
சிவாஜி கதாநாயகன் என்பதால் வில்லனாக நடித்த நம்பியாருக்காக குரல் கொடுத்த பாலமுரளி கிருஷ்ணாவால் மிருதங்கத்தை சமாளிக்க முடியாமல் தோற்றுப் போவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பாடலை பாட பாலமுரளி கிருஷ்ணா ஒப்புக் கொண்டிருக்கக்கூடாது. பாடலை பார்த்தால் இதில் உள்ள பல அபத்தங்கள் தெரியும். சின்ன பாடகருக்கு மிகப் பெரிய மிருதங்க மேதை வாசித்தாலும் இப்படி எல்லாம் எங்கும் உட்கார மாட்டார்கள். உட்கார்ந்ததும் கிடையாது. 

இந்த மலையாளப்பாடலில் பாலமுரளியும் கே,ஜே.யேசுதாசும் இணைந்து பாடியிருப்பார்கள். மிகவும் அழகாக காட்சிகள் அமைந்திருக்கும், முந்தைய பாடலுக்கு முற்றிலும் முரணாக.

இப்படி ஒரு பாடலையும் கூட  அவர் பாடியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொலைபேசியை மாற்றும் வரை வருகிற ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும் பாலமுரளி கிருஷ்ணா "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" என என்னோடே இருந்திருக்கிறார். 

இன்று மீண்டும் சின்னக் கண்ணன்  வந்து விட்டான். 

பின் குறிப்பு : காலத்தால் அழியாத ஒரு கலைஞனுக்கான  அஞ்சலி இது. காவி அனாமதேயங்கள் தயவு செய்து இப்பதிவிலும் உங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

 1. சின்னக்கண்ணன் அவரை அழைததுவிட்டான்.

  ReplyDelete
 2. you have a very good taste in
  Music!!!
  -
  A'Ars(Ananai)

  ReplyDelete