Tuesday, November 22, 2016

மீண்டும் ஒரு பேரிழப்புகணத்த இதயத்தோடு எழுதப்பட்ட சுற்றறிக்கையை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உற்சாகமும் உறுதியும் வேகமும் நேசமும் உடைய அன்புத்தோழர் லிடியா அவர்கள் எங்கள் கோட்டத்தின் மகளிர் துணைக்குழு அமைப்பாளர். மகளிர் தோழர்கள் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக உந்து சக்தி. முன்னுதாரணம். சிறப்பான குணாம்சங்கள் கொண்ட அத்தோழரை இழந்து தவிக்கிறோம். ஒரு மாத காலத்திற்குள்ளாக இரண்டு அஞ்சலிக் குறிப்புகள் எழுத நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. நானே என்னை சபித்துக் கொள்கிறேன்.


தோழர் லிடியா அவர்களுக்கு வீர வணக்கம்அன்புத்தோழர் சி.வி அவர்களின் மறைவினால் உண்டான கண்ணீர் காயும் முன்பே இன்னொரு இடியாக நம் நெஞ்சங்களில் இறங்கியுள்ளது தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா அவர்களின் மறைவுச் செய்தி.

நம் வேலூர் கோட்டத்தின் மகளிர் துணைக்குழு அமைப்பாளரும் முன்னாள் துணைத்தலைவருமான தோழர் லிடியா 20.11.2016 அன்று வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முயற்சிகள் மூலம் 1989 ம் ஆண்டு தேசிய தொழில் தீர்ப்பாணையம் (NIT) மூலம் எல்.ஐ.சி பணியில் இணைந்த தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா, தன்னை சங்கத்தில் முழுமையாக இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் முன்னணி செயல் வீரராகவும் திகழ்ந்தார்.

திருவண்ணாமலை கிளைச்சங்கத்தின் பொறுப்பாளராக திறம்பட செயல்பட்ட அவர் மகளிர் தோழர்களை சங்க நடவடிக்கைகளில் திரட்டுவதிலும் மும்முரமாக ஈடுபட்டார். கோட்டத்தின் மகளிர் துணைக்குழு அமைப்பாளராக பல மகளிர் தோழர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டார்.

வேலூர் கோட்டச்சங்கத்தின் பனிரெண்டாவது பொது மாநாட்டை 1999 ம் வருடம் திருவண்ணாமலையில்  நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மாநாட்டு வரவேற்புக்குழுச் செயலாளராக வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி முத்திரை பதித்தார். மாநாடு துவங்குவதற்கு இரு தினங்கள் முன்பாக அவரது மகன் வேலூர் சி,,எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தன் குடும்பத்தினரை மகனை கவனிக்கச் சொல்லி விட்டு மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை திரும்பினார் என்பது அவரது மகத்தான சங்க உணர்விற்கு அடையாளம்.

பல்வேறு அகில இந்திய, தென் மண்டல மாநாடுகளில் பிரதிநிதியாக நமது கோட்டத்தின் சார்பில் கலந்து கொண்டிருக்கிறார். தொலைதூரப் பயணங்களோ அல்லது பல நாட்கள் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டுமோ என்பதோ அவரது இயக்க நடவடிக்கைகளுக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை. கொல்கத்தாவிலும் மைசூரிலும் நடைபெற்ற முதலாவது, இரண்டாவது அகில இந்திய மகளிர் மாநாடுகளில் கலந்து கொண்ட பெருமையும் அவருக்கு உண்டு. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் அகில இந்திய மகளிர் மாநாட்டில் தென் மண்டலக்  கூட்டமைப்பின் சார்பாக உரையாற்றும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது, அவரது பணிகளுக்கான அங்கீகாரம்.

எப்போதுமே உற்சாகமாக இருப்பது மட்டுமல்ல, உடனிருப்பவர்களுக்கும் அந்த உற்சாகத்தை கடத்தும் மந்திரம் அறிந்தவர். அனைவரோடும் பரிவாக பழகுகிற அன்பு மிக்க தோழர். எந்த ஊருக்கு பயணம் சென்றாலும் அங்கே கிடைக்கும் முக்கியமான பொருட்களை தோழர்களுக்குத் தர வேண்டும் என்று ஏராளமாய் வாங்கி எடுத்துச் செல்வார். மகளிர் மாநாட்டிலும், கோட்ட கலை விழாவிலும் நடனமாடி பாராட்டுக்கள் பெற்றவர்.

பாலிசிதாரர்களுக்கு உரிய சேவை கிடைத்திட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். சங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, அற்புதமான பணிக் கலாச்சாரத்திற்கும் சொந்தக்காரர். அலுவலகப் பணியில் சமரசம் கூடாது என்பதை அனைவருக்கும் வலியுறுத்தி தானே ஒரு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தோடு அவரது பணி முடிந்து விடவில்லை. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை நகர, மாவட்ட பொறுப்பாளராக முத்திரை பதித்தவர். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக களத்திலே பொங்கி எழுந்தவர். இடதுசாரி தத்துவங்களின் மீதான நம்பிக்கையால் முற்போக்கு இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டவர்.

குடும்பத்தினரையும் சங்க நடவடிக்கைகளில் இணைத்திட்டவர் அவர். அகில் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  இயக்கங்களைப் பற்றியும் நடவடிக்கைகள் பற்றியும் அவர்களுக்குள்ள புரிதல் நம்மை சிலிர்க்க வைக்கும். மகளிர் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்திய ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் பதிவு செய்வதற்கு தன்னுடைய மகனை பயன்படுத்தினார். தனக்கிருக்கும் நட்பு வட்டத்தை சங்கத்தின் நலனுக்காக பயன்படுத்தும் திறனுடையவர் என்பது சரோஜ் இல்லக் கட்டுமானப் பணிக்காக திருவண்ணாமலையில் நடைபெற்ற கங்கை அமரன் இசை நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி, மீண்டும் சிகிச்சை என்று தொடர்ச்சியாக பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்ட போதும் அவரது உறுதி கொஞ்சமும் குறையவில்லை. நான் முழுமையாக குணமாகி சங்கப்பணிகளில் எப்போதும் போல செயல்படுவேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

அது போலவே இந்தாண்டு தொடக்கத்தில் குணமாகி மீண்டு வந்தார். திருவண்ணாமலையிலும் விழுப்புரத்திலும் நடைபெற்ற மகளிர் துணைக்குழு கூட்டங்களின் போதும் சரி, வேலூரிலும் புதுச்சேரியிலும் நடைபெற்ற பத்தொன்பதாவது மகளிர் மாநாட்டில் பங்கேற்ற போதும் சரி, தோழர் லிடியா அவர்களின் உற்சாகமான செயல்பாட்டை நம்மால் பார்க்க முடிந்தது. “எந்த ஒரு பிரச்சினைக்காகவும் நாம் துவண்டு போய் சோர்ந்திடக் கூடாது. உறுதியோடு இருந்தால் எப்படிப்பட்ட நோயோ, பிரச்சினையோ நம்மை எதுவும் செய்திட முடியாது. அந்த நம்பிக்கையை என்னைப் பார்த்துப் பெறலாம்” என்பதுதான் அவர்  அனைத்து நிகழ்வுகளின் போதும் அழுத்தமாகச் சொன்ன செய்தி.

1994 ம் வருடம் புதுச்சேரியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பேசுகையில் “நான் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இறந்தாலும் கூட எனது உடலில் ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் கொடி போர்த்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார். பணி ஓய்வுக்கு ஐந்து வருடங்கள் இருக்கும் போதே அவ்வாறு நிகழ்ந்தது பெருந்துயரம்.

தோழர் லிடியா அவர்கள் மறைந்தாலும் அவரது பணிகள் மூலம் என்றென்றும் நம் நெஞ்சத்தில் வீற்றிருப்பார். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டாலும் அவரது வாழ்க்கை, உற்சாகம், உறுதி நம்மை வழி நடத்தும்.

தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா அவர்களுக்கும் நம் செவ்வணக்கம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்

7 comments:

 1. ஆழ்ந்த அஞ்சலி! ஈடு செய்ய முடியா இழப்பு!

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. எந்த பதிவில் என்ன பின்னூட்டம் போடுவது என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாதா?

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. I don't to reply you in this post. You repeat in some other post and get blasted

   Delete
 4. இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கிறது. எப்பொழுதும் கலகலப்பாகவும் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்.நண்பர்களிடம் அடிக்கடி விசாரிப்பேன். உண்மையிலேயே பேரிழப்பு sorry madam உங்ககிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு. Nr.shankar tirukoilurல் தோழருடன் பணியாற்றியவன்

  ReplyDelete