Sunday, November 27, 2016

படித்து நெகிழ்ந்து ரசித்த மொமெண்ட்


எங்களின் மதுரைக் கோட்டத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ், மறைந்த இசை மேதை பாலமுரளி பற்றி எழுதி தீக்கதிரில் இன்று பிரசுரமாகி உள்ளதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

பாலமுரளி கிருஷ்ணா பற்றிய அவரது கட்டுரை நெகிழ வைத்தது. அதிலே குறிப்பிட்டுள்ள பாடல்களை யுட்யூப் சென்று பார்க்கையில் மனது கொஞ்சம் இதமானது. 

மூன்று துயரங்கள் அளித்த  மன அழுத்தத்தைப் போக்க பாலமுரளியின் இசை  உதவியது. 




 கடைசி வரை மறக்காத சங்கீதம்

ச.சுப்பாராவ்
 
குழந்தை மேதைகள் பெரியவர் களாக வளர்ந்த பிறகு பேரும் புகழும் பெற்று ஒளிராமல் காலவெள்ளத்தில் எங்கோ ஓரமாக ஒதுங்கி விடுவதுண்டு. குறிப்பாக இது கர்னாடக சங்கீத இசையுலகில் பல முறை நிகழ்ந்திருக்கிறது. குழந்தை வித்வானாகப் புகழ் பெற்றவர்கள் வளர்ந்த பிறகு ஏதோ தன்னளவில் கச்சேரி செய்து கொண்டு இருப்பதாகவே அமைந்துவிடுகிறது. வீணை காயத்ரி.சித்ரவீணைக் கலைஞர்களான ரவிகிரண், சசிகிரண் சகோதரர்கள், மாஸ்டர் சங்கரன் நம்பூதிரி என்று பல உதாரணங்கள் உண்டு. குழந்தை வித்வான்கள் பெரியவர்களான பின் சோபிப்பதில்லை என்ற எழுதப்படாத விதியை உடைத்துத் தூளாக்கியவர் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா.

பாலமுரளி கிருஷ்ணா தன் தாயாரின் கருவிலிருந்தபோது, தாயார் சூரிகாந்தம்மா மணிக்கணக்காக வீணை வாசித்தபடி இருந்தாராம். “ஏன் இப்படி சிரமப்பட்டு வாசிக்கிறாய்,” என்று கேட்டால் “என் குழந்தைக்கு பாட்டுச் சொல்லித் தருகிறேன்,” என்பாராம். குழந்தை பிறந்த பதின்மூன்றாம் நாள் தாயார் காலமானார். ஆனால் அதற்கு முன்னரே கருவிலேயே தன் குழந்தைக்கு நிறைய சங்கீதம் கற்றுத் தந்துவிட்டார். 

கருவில் கற்ற அந்தக் குழந்தை பாலமுரளி தன் எட்டாவது வயதில் மூன்று மணிநேரக் கச்சேரி செய்தது. பதினான்காவது வயது தொடங்கி, பதினாறாம் வயதிற்குள் கர்னாடக இசையின் தாய் ராகங்களான 72 மேளகர்த்தா ராகங்களிலும் , அந்த ராகங்களின் ஜீவனைக் காட்டும்படியான பாடல்களை அவர் இயற்றிவிட்டார். இத்தனைக்கும் அவர் ஆறாம் வகுப்பில் ஒரு மாதம் வரைதான் படித்தார். தானாகவே வயலின், வயலின் குடும்பத்தைச் சேர்ந்த சற்றே பெரிய அளவிலான வயோலா, மிருதங்கம், கஞ்சிரா என்று பல வாத்தியங்களையும் கச்சேரி செய்யுமளவு வாசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டார். 

செம்மங்குடி சீனிவாச அய்யர் தனது முதிர்ந்த வயதில் செய்த ஒரு கச்சேரிக்கு பாலமுரளி கிருஷ்ணா வயோலா வாசிக்கும் ஒரு அபூர்வமான, அற்புதமான காணொளி யூ ட்யூபில் கிடைக்கிறது. பதினோராவது வயதில் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் அரை மணிநேரக் கச்சேரி செய்யும் வாய்ப்பு. பாலமுரளிகிருஷ்ணா பாடுவதைக் கேட்டு அடுத்த கச்சேரி செய்ய வந்திருந்தவரான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தனக்கான நேரத்திலும் பாலமுரளியே பாடட்டும் என்றார். இப்படியாக பாலமுரளி ஒரு மணிநேரம் பாட, அடுத்துப் பாட இருந்த மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் தனது நேரத்திலும் பாலமுரளியே பாடட்டும் என்று விட்டுக் கொடுத்தார். 

முதன்முறையாக திருவையாற்றில் பாட வந்த அந்தச் சிறுவனுக்காக சங்கீத உலகின் ஜாம்பவான்கள் வழிவிட்டு ஒதுங்கிக் கொண்ட அந்த ஆச்சரியகரமான சம்பவம் நடந்தது 

1941ல்.வானொலி நிலையத்தில் நிலைய வித்வான் வேலைக்கு மனுச் செய்தார் பாலமுரளி கிருஷ்ணா. பாடச் சொல்லிக் கேட்டார்கள். அன்று வானொலியில் அதிகபட்ச சம்பளம் 90 ரூபாய். பாலமுரளி 100 ரூபாய் கேட்டார். மேலிடத்திற்கு எழுதிக் கேட்பதாகச் சொல்லி அனுப்பினார்கள். சில நாட்களுக்குப் பிறகு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது. சம்பளம் 250 ரூபாய்! பின்னர் விஜயவாடா வானொலி நிலையத்தின் மெல்லிசைத் துறை பொறுப்பாளராக ஆக்கப்பட்ட போது சம்பளம் ரூபாய் 450. மாவட்ட ஆட்சியர் சம்பளத்தை விட அதிகம். இதெல்லாம் 1952ல் அவரது 22வது வயதில் நடந்தவை.பெரிய பெரிய அங்கீகாரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. 

ஆனால் பாலமுரளி கிருஷ்ணா என்ற கலைஞர் சங்கீதத்திற்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவராக, புது முயற்சிகள் செய்பவராக மட்டுமே இருந்தார். அக்காலத்தில் நல்ல களையான முகம் கொண்ட சங்கீதக்காரர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம். பாலமுரளியும் ‘பக்த பிரகலாதா’ என்ற படத்தில் நாரதராக நடித்தார். (இப்படத்தை அடிக்கடி முரசு, சன்லைஃப் சானல்களில் போடுகிறார்கள்). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்ற நான்கு மொழிகளில் வெளிவந்த படம். ஆனால் மனம் முழுக்க இசை மட்டுமே நிரம்பியிருந்ததால்,அவர் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே ‘சதி சாவித்திரி’ என்ற படத்தில் பல பாடல்கள் பாடிவிட்டார். 

உடன் பாடியது அவரது சீடர் எஸ். வரலட்சுமி. ஆம், திரைத்துறையின் பல பிரபலங்கள் அவரிடம் சங்கீதம் பயின்றவர்கள்தான். எஸ். வரலட்சுமி, பி. லீலா, வைஜெயந்திமாலா, ஜெயச்சந்திரன், கமலஹாசன் என்று பெரிய சீடர் படை அவருக்கு உண்டு.‘கலைக்கோவில்’ (1962) படத்தில் அவர் ஆபோகி ராகத்தில் பாடிய ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடல் மூலம் அவர் திரையிசையின் நட்சத்திரப் பாடகரானார். உண்மையான சங்கீதக் கலைஞரான, உபாசகரான அவருக்கு சாஸ்திரிய இசை, சினிமா இசை என்ற பேதங்கள் எல்லாம் கிடையாது என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. அதே போல பெரும் சங்கீத வித்வான்களுக்கே உரித்தான ஞானச் செருக்கும் கிடையாது. 

இன்று பலரும் தம் அஞ்சலிக் குறிப்புகளில் தவறாது குறிப்பிடும் “ஒரு நாள் போதுமா” பாடலை அவர் பாடியதே அதற்குச் சான்று. கே.வி. மஹாதேவன் முதலில் அப்பாடலைப் பாட சீர்காழி கோவிந்தராஜனைத்தான் ஏற்பாடு செய்திருந்தார். கதைப்படி தோற்றுப் போகும் பாடகனுக்குப் பாட சீர்காழி மறுத்துவிட்டார். பின்னர்தான் பாலமுரளி கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டார்கள். ஏன் முதலிலேயே என்னைக் கூப்பிடவில்லை என்பது போலெல்லாம் சொல்லாமல் தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், ராகங்களின் பெயர் வரும் வரிகளுக்கு அந்த ராகங்களின் சாயல் தெரியுமாறு மெட்டுப் போட்டதும் அவர்தான். பாடலின் வெற்றி பற்றி தனியே சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் என திரையிசைக்காக தேசிய விருதுகள் வாங்கியவர் அவர். ஆனாலும், பெரிய நட்சத்திரங்களுக்குத்தான் பாடுவேன், பெரிய நிறுவனங்களின் படங்களில்தான் பாடுவேன் என்றில்லாமல், நல்ல இசை என்ற ஒரே காரணத்திற்காகப் பாடிக் கொடுத்திருப்பது அவரது தனிச்சிறப்பு. அப்படித்தான் ‘சாது மிரண்டால்’ படத்தில் “அருள்வாயே நீ” என்ற பாடலை டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பாடினார். இது விஸ்வநாதனை விட்டுப் பிரிந்தபிறகு ராமமூர்த்தி தனியாக இசையமைத்த அற்புதமான சிந்து பைரவி. ‘அபூர்வ ராகம்’ படத்திற்கு “அதிசய ராகம் ஆனந்தராகம்” பாடலை ஒரு அபூர்வமான ராகத்தில் போட வேண்டும் என்று பாலச்சந்தர் விரும்பியபோது, எம்.எஸ். விக்கு ஸ ,க, ப, நீ, என்ற நான்கே ஸ்வரங்கள் கொண்ட மஹதி என்ற அபூர்வ ராகத்தைக் கற்றுத்தந்தார். ‘திசை மாறிய பறவை’ என்ற படத்தில் “அருட்ஜோதி தெய்வம்” என்ற பாடலை ஜி.சீனிவாசனுக்குப் பாடினார். 

அதற்கும் மேலாக ‘மிருதங்கச் சக்ரவர்த்தி’ படத்தில் அவர் பாடிய “இது கேட்கத் திகட்டாத கானம்” பாடல் நம்பியாருக்கு! நண்பர் குன்னக்குடி வைத்தியநாதனுக்காக ‘நவரத்தினம்’ படத்தில் “ஏதாவுனாரா” என்ற கல்யாணி ராகத்தில் தியாகராஜ கீர்த்தனையையும், “குருவிக்காரன் பொஞ்சாதி” என்ற குத்துப் பாட்டையும் பாடிக் கலக்கினார்.மிக அரிதான ராகமான ரீதிகௌளையில் இளையராஜாவிற்காக அவர் பாடிய “சின்னக்கண்ணன் அழைக்கிறான்,” எம்.எஸ்.வி.க்காக சாமா ராகத்தில் “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” (இது மானஸ சஞ்சரரே யின் உல்டா) இரண்டு மட்டுமே பரவலாகத் தெரிந்தாலும் அவர் சங்கர் கணேஷ் இசையில் “ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே” (உயர்ந்தவர்கள் 1977) என்று பாடியிருக்கிறார். ‘தெய்வத் திருமணங்கள்’ என்ற படத்தில் “தங்கம், வைரம், நவமணிகள்” என்று வாணி ஜெயராமுடன் டூயட்டும் பாடியிருக்கிறார். 

சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், செவாலியே என்று எத்தனையோ பட்டங்கள் வாங்கினாலும் கூட, புதிய, இளைய திறமையாளர்களைப் பார்த்து மனம் விட்டுப் பாராட்டும் பரந்த மனம் அவருடையது. ஜேம்ஸ் வசந்தனின் ரீதிகௌளை பாடலான “கண்கள் இரண்டால்” பாட்டில் மயங்கி, அவரிடம், “உன் அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் கொடு. கிழவன் என்று நினைக்காதே. நல்லபடியாகப் பாடித் தருகிறேன்,” என்று தானாகப் போய் சான்ஸ் கேட்ட குழந்தை மனது. 

அப்படித் தானாகக் கேட்டு அவர் பாடிய பாட்டு ‘பசங்க’ திரைப்படத்தின் “அன்பாலே அழகாகும் வீடு” என்ற சுகமான பாடல். அப்போது அவருக்கு வயது 79 !தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராணிமைந்தனிடம், “வாழ்வின் பல சுவையான சம்பவங்கள் எனக்கு மறந்து போய்விட்டன. ஏதோ சங்கீதம் மறக்காமல் இருந்தால் சரி,” என்றாராம்! அதுபோலவே கடைசி வரை அவருக்கு சங்கீதம் மறக்கவில்லை. நம்மாலும் அவரது சங்கீதத்தை என்றுமே மறக்க முடியாது.


செம்மங்குடிக்கு பாலமுரளி வயலின் வாசித்த கச்சேரி இங்கே 

ஆங்கிலம், கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி என்று  மூன்று மொழிகளில் கலக்கும் நவரத்னம் பாட்டு இது. குருவிக்கார மச்சான் பாட்டை முந்தைய பதிவிலேயே கொடுத்துள்ளேன்.





No comments:

Post a Comment