Sunday, September 25, 2016

சாட்சி சொல்ல . . . சாக அல்ல . . .வண்ணக்கதிரில் இன்று வெளியான என் சிறுகதை, சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின்பு. கோட்டச்சங்க மாநாட்டுப் பணிகள்  காரணமாக மனதில் உருவான சில கருக்களுக்கு வடிவம் அளிக்க முடியவில்லை. அவற்றுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். 

கருப்பாடுகள்

- வேலூர் சுரா


ஃபேன் காற்றில் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த காகிதம் படபடத்தது. பத்தாவது முறையாக அதை எடுத்து பாஸ்கர் படித்தான். அரசாங்க காகிதங்களுக்கே உரிய லட்சணத்துடன் பழுப்பு நிறத்தில் மக்கிப் போன வாடையடித்த காகிதம் ஒரு மிரட்டல் கடிதமாகவே அவனுக்கு தோன்றியது.

வரும் ஜூலை மாதம் பனிரெண்டாம் தேதி செவ்வாய் கிழமையன்று “உ.பி அரசு எதிர் தனஞ்சய்சிங்” வழக்கில் நீர் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராக வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் உம் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும்” என்று எழுதப்பட்ட அந்த சம்மனில் யாரோ இந்தியில் கையெழுத்திட்டிருந்தார்கள்.

மீண்டும் அலகாபாத் செல்ல வேண்டும் என்ற நினைப்பிலேயே அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. வயிற்றைத் தொட்டுப்பார்த்துக் கொண்டான். சட்டை பனியனை மீறி அறுவை சிகிச்சையின் வடுவை உணர்ந்தான்.

எந்த சம்பவத்தை நினைவுகளிலிருந்து அழிக்க முடியாமல் அவ்வப்போது தூக்கத்தை தொலைத்து தவிக்கிறானோ, அதே சம்பவ இடத்திற்கு மீண்டும் செல்வதா? மரணத்தின் எல்லைக்கு தன்னை தள்ளிய அந்த கொடியவனின் முகத்தை மீண்டும் பார்த்திடத்தான் வேண்டுமா என்று குழப்ப நதியில் விழுந்து மீண்டெழ முடியாமல் தத்தளித்தான்.

மூன்று வருடங்களுக்கு முந்தைய அந்த அதிகாலைப் பொழுதிற்கு அவனது நினைவுகள் சென்றன.

பட்டப்படிப்பை முடித்த சில மாதங்களிலேயே வங்கி அதிகாரி வேலை கிடைத்தது ஒரு புறத்தில் மகிழ்ச்சி கொடுத்தாலும் அலகாபாத் அருகில் பஸ்வாரியா என்ற சின்ன ஊரில் உள்ள கிளையில் வேலை பார்க்க வேண்டும் என்பது கசப்பாக இருந்தது.

“உங்களையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு தூரத்துக்கு அவசியம் போகனுமாப்பா? வேற நல்ல வேலை கிடைக்காதா என்ன?”

என்று கிடைத்த வாய்ப்பை நிராகரிக்கும் மன நிலைக்கு வந்தவனை அவனது அப்பாதான் தேற்றி அனுப்பினார்.

‘இப்போ இருக்கிற வேலை இல்லா திண்டாட்டத்தில கிடைச்ச நல்ல வேலையை உதறக் கூடாது. இங்கேயே கிடைச்சு இரண்டு மூணு வருசத்தில டிரான்ஸ்பர் செஞ்சா என்ன பண்ண முடியும்? அது மாதிரி எடுத்துக்க. சின்ன வயசுலுயே ஆபிஸர் வேலை கிடைச்சுடுச்சுங்கிற பொறாமைல நிறைய சொந்தக்காரங்க வெந்துக்கிட்டு இருக்கானுங்க. அப்படி தூரமா போனாலாவது அவங்க கண்ணிலேந்து தப்பிக்கலாம். இந்த வயசுலயே எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் அனுபவம் கிடைச்சா, அது எதிர்காலத்திற்கும் உதவிகரமா இருக்கும்”
அப்பா பேசப் பேச பாஸ்கருக்கு தெளிவு கிடைத்தது.

பஸ்வாரியா போய் வேலையில் சேர்ந்தான் பாஸ்கர். சின்ன ஊராக இருந்தாலும் பொருளாதாரம் செழிப்பாகவே இருந்தது. யமுனையின் ஒரு கிளை நதி பாய்ந்து கொண்டிருந்ததால் விவசாயம் அமோகமாக இருந்தது. ஆனாலும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கே உரிய புழுதிப் பூச்சோடுதான் சாலைகளும் வீடுகளும் இருந்தது.

தங்கியிருந்த அறையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் காசுக்குத் தரும் காய்ந்த சுக்கா ரொட்டிகள், எந்த எண்ணெய் என்று புரியாத ஒரு வாடையோடு ஒரு சப்ஜியும் அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு கார்சனா சின்ன நகரம், அங்கே போய் தங்கலாம் என்றால் அங்கிருந்து பஸ்வாரியா வரும் புளிமூட்டை பேருந்துகள் அச்சுறுத்தியது. மொழி தெரியாத இந்த ஊரில் வங்கியிலேயே முடங்கி அப்படியே துருப்பிடித்துப் போய் விடுவோமோ என்று மேலாளரிடம் சலித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்தான் அந்த யோசனையைக் கூறினார்,

“வேலையில சேர்ந்து மூணு மாசம் ஆயிடுச்சு. மூணு மாச சம்பள சிலிப்பை வைச்சு பைக் லோன் தரேன். டெய்லி பைக்கில வந்தா உனக்கு எந்த சிரமமும் கிடையாது” .

அவரும் பக்கத்து நகரத்திலிருந்து வருபவர்தான். என்னோடு தினம் காரில் வந்து விடு என சொல்வார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவரோடு பாஸ்கர் பேசினான். ஆனால் இந்த யோசனையும் நன்றாக இருந்தது. அலகாபாத்திற்குப் போய் வண்டியை முடிவு செய்து கொடேஷன் வாங்கி பின்பு காசோலையையும் எடுத்துப் போய் எல்லாம் அதி வேகத்தில் நடந்தது.

வங்கிக்கு ஒரு நாள் விடுப்பு போட்டு வண்டியை எடுத்து வந்திருக்கலாம். மாறாக வங்கி நேரம் முடிந்து அலகாபாத் போனால் கம்பெனியிலிருந்து வண்டியை வெளியே கொண்டு வர இரவு ஒன்பது மணியாகி விட்டது. பாஸ்கரோடு வங்கியில் சேர்ந்த இன்னொரு தமிழ்நாட்டு அதிகாரி அலகாபாத்திலேயே தங்கி இருந்தான். அவனுடைய அறையில் இரவு தங்கி அதிகாலை புறப்படலாம் என்று திட்டமிட்டான். அதனால்தான் பைக் வாங்கியதற்கு ட்ரீட் கொடு என்றதையும் சமாளித்து விட்டான். மறு நாள் அதிகாலை புறப்பட்டு விட்டான். புது வண்டி சுகமாகவே இருந்தது. சாலையின் மேடு பள்ளங்கள் கூட சுமையாகத் தெரியவில்லை. சின்னஞ்சிறு கிராமங்களை வேகமாக கடந்து வந்து கொண்டிருந்தான். சூரியன் இன்னும் உதிக்கத் தொடங்காத நேரம். கார்சனாவுக்கு கொஞ்சம் முன்னதாக வருகையில் சாலையின் ஓரம் இருவர் நின்று கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அவர்களை பாஸ்கர் நெருங்கும் நேரத்தில் அவர்கள் சாலையை மறிப்பது போல நின்றார்கள். அது என்ன? அவர்கள் கைகளில் என்ன வைத்திருக்கிறார்கள்? யோசிப்பதற்கு முன்பே அது கைத்துப்பாக்கி என்று தெரிந்து விட்டது.

இப்பகுதியில் வழிப்பறிக் கொள்ளைக் கூட்டம் ஒன்று இருப்பதாக பாஸ்கர் கேள்விப்பட்டிருக்கிறான். கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர்கள், யாராவது எதிர்த்தால் சுட்டுத் தள்ளி விட்டு கிடைப்பதை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்களை தான் எதிர்கொள்ள நேரிடும் என்று பாஸ்கர் கனவிலும் நினைத்ததில்லை. தன்னிடம் பைக்கைத் தவிர பணமாக இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. அதை பிடுங்கிக் கொள்வார்களோ இல்லை பைக்கை பறித்துச் செல்வார்களோ என்ற குழப்பத்தில் “எது நடந்தாலும் சரி, இவர்கள் நினைத்ததை நடத்த நான் அனுமதிக்கக் கூடாது” என்று மனதில் ஒரு தைரியத்தோடு பைக்கின் வேகத்தை மெல்லமாக குறைத்து அவர்களை நெருங்கிய போது திடீரென்று வேகம் எடுத்து அவர்களை மோதுவது போல போக்கு காட்டி விட்டு அதிகபட்ச வேகத்தைத் தொட்டான்.

துப்பாக்கி ஒன்று வெடிக்கும் ஓசையும் முதுகிலே ஏதோ வலி பரவுவதும் உணர மயக்கத்தில் ஆழ்ந்தான் பாஸ்கர். அதன் பின்பு அவன் கண் விழித்தது அலகாபாத் பொது மருத்துவமனையில்தான். அப்பா, அம்மா, மேனேஜர், இரண்டு டாக்டர்கள், நர்ஸ்கள், அவனோடு வங்கியில் சேர்ந்த நண்பன் ஆகியோர் கவலை தோய்ந்த முகத்தோடு சுற்றி நிற்பதைப் பார்க்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பைக்கை நிறுத்தாமல் போனதால் கோபம் கொண்ட கொள்ளையர்கள் அவனை சுட்டு விட்டனர் என்றும் முதுகில் குண்டு பாய்ந்து மயக்கம் இழந்து விட்டானாம். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு பக்கத்து வயலில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். பைக் அந்நேரம் ஸ்டார்ட் ஆகாததால் கொள்ளையர்களால் தப்பிக்க முடியவில்லை. துப்பாக்கி இருந்ததால் பக்கத்தில் நெருங்க கொஞ்சம் பயப்பட்டாலும் ஒருவர் கல்லை எறிந்து ஒருவனை காயப்படுத்தி உள்ளார். அந்த குழப்பத்தில் இன்னொருவன் ஓட முயற்சிக்க அவனையும் துரத்தி பிடித்து விட்டார்கள்.

அவர்களால்தான் வழியில் போன ஒரு காரை நிறுத்தி இவனை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு போலீசிடம் கொள்ளையர்கள் இருவரையும் ஒப்படைத்திருக்கிறார்கள். பைக் வாங்கிய கம்பெனியிலிருந்து விபரம் கிடைத்து அவன் அப்பாவும் அம்மாவும் விமானத்தில் வந்து விட்டார்கள். இரண்டு நாட்கள் கழித்துத்தான் அபாயகட்டத்தைத் தாண்டி கண் விழித்திருக்கிறான். பிறகு போலீஸ் வந்து ஸ்டேட்மெண்டெல்லாம் வாங்கிப் போனார்கள். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜாகி நேரே ஊருக்குப் போய் விட்டான். வங்கி நிர்வாகமும் பெருந்தன்மையாக அவனுக்கு தமிழ்நாட்டிற்கே மாறுதல் கொடுத்து விட்டது.

இதெல்லாம் முடிந்து இரண்டாண்டுகள் ஓடிய பின்பு இப்போதுதான் கோர்ட் சம்மன் வருகிறது. தன்னை சுட்ட கொள்ளையன் பெயர் தனஞ்சய்சிங் என்பதைக் கூட சம்மனைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டான். வாழ்க்கையில் மீண்டும் காலடி வைக்கக் கூடாது என்ற இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டுமா என்ற குழப்பத்தில் தவித்த போது  அவனது அலைபேசி ஒலித்தது. ஏதோ ஒரு புது எண். எடுத்துப் பேசினான். அலகாபாத்திலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் தன்னை கணேஷ் யாதவ் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசினார்.

“அந்த தனஞ்சய்சிங் மோசமான கொள்ளைக்காரன். ஏராளமான குற்றங்கள் செய்தாலும் உங்கள் வழக்கில்தான் முதல் முறையாக பிடிப்பட்டுள்ளான். உங்கள் சாட்சியம் இருந்தால்தான் அவனை தண்டிக்க முடியும். அவசியம் நீங்கள் வர வேண்டும். உங்களுக்கு எல்லா பாதுகாப்பும் கொடுக்கிறோம். நீங்கள் தங்க ஹோட்டல் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்.”

என்று கெஞ்சாத குறையாக மன்றாட பாஸ்கரும் ஒப்புக் கொண்டான்.

“நீங்கள் தங்கும் ஹோட்டல் எது என்று எஸ்.பி யைத் தவிர டிபார்ட்மெண்டிலேயே யாருக்கும் தெரியாது. ஹோட்டலிலிருந்து நானே ஜீப்பில் அழைத்துச் செல்கிறேன்” என்று புறப்படும் முன்னால் கூட  கணேஷ் போன் செய்து சொன்னார். முதல் நாள் இரவு விமானத்தில் வந்து சேர்ந்த பாஸ்கரும் அவன் அப்பாவும் நேராக ஹோட்டலில் போய் தங்கினார்கள். அறைக்கே உணவை வரவழைத்து சாப்பிட்டார்கள், சீக்கிரமாய் தூங்கி விட்டார்கள்.

காலையில் எழுந்து தயாரானார்கள். மனதில் என்னமோ சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் பாஸ்கர் உறுதியாகவே இருந்தான். அடுத்த சில நிமிடங்களில் வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அத்தனை உறுதியையும் புரட்டிப் போட்டு விட்டது. ஹோட்டல் அறைக்கு நேரடியாக வந்த அந்த தொலைபேசியில் பேசியவன் நல்ல ஆங்கிலத்தில் ஒரே ஒரு நிமிடம்தான் பேசினான்.

“தனஞ்சய்சிங்கை அடையாளம் காட்டினால் இந்த முறை உன் பிணம்தான் தமிழ்நாட்டுக்குப் போகும்”

கணேஷ் யாதவ் வந்து கோர்ட்டிற்குக் கூப்பிட்டுப் போனார். வழி முழுதும் அவர் பேசிக் கொண்டே வந்தார். அது எதுவுமே பாஸ்கர் மூளையில் ஏறவே இல்லை. கோர்ட் காம்பவுண்டில் காரிலிருந்து இறங்கி படிக்கட்டில் ஏறுகையில் இருவர் அவனையே முறைத்துக் கொண்டு நிற்பது போல தெரிந்தது. ஜெர்கின்ஸ் அணிந்த ஒருவன் அதை விலக்கிக் காண்பிக்க ரிவால்வர் துருத்திக் கொண்டு தெரிந்தது.

பொட்டு பொட்டாய் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றான் பாஸ்கர். இவனது முறை வந்ததும் கூண்டிலேறி நீதிபதியை வணங்கினான்.

“எதிரே நிற்கிற மனிதர்தான் உங்களை சுட்டதா?”
என்று அரசு வழக்கறிஞர் கேட்க

 “சரியான வெளிச்சம் இல்லாததால் என்னை சுட்டவன் யார் என்று கவனிக்கவில்லை. இவர்தானா என்று சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டு கீழிறங்கி விட்டான்.

விமான நிலையத்துக்குச் செல்ல முன்னரே ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியில் ஏறும் தருவாயில் ஓடி வந்த கணேஷ் யாதவ்

“இப்படி ஒரு கோழையா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று கோபத்துடன் சொல்ல

அதே கோபத்துடன் பாஸ்கரும் சொன்னான்.

“நீங்களோ, இல்லை உங்க எஸ்.பி யோ இவ்வளவு பெரிய துரோகியா இருப்பீங்கன்னு நானும் எதிர்பார்க்கலை. நான் சாட்சி சொல்லத்தான் அலகாபாத் வந்தேன். சாகறதுக்கு இல்லை”

கரும்புகையை வெளியிட்டபடி டாக்ஸி புறப்பட்டு விட்டது.

2 comments:

  1. பணியில் எதிர்கொள்ளும் சூழல்கள் பல இவ்வாறான நிலையில் வேதனையே.

    ReplyDelete