Friday, September 16, 2016

தலைவர்களுக்கு தீக்குளிக்கத் தெரியாதா?



விக்னேஷின் தீக்குளிப்பு  உசுப்பேற்றிப் பேசும் தலைவர்கள் வாங்கிய அடுத்த பலி.

பிரச்சினைகளை சந்திக்க உணர்வுகளை தூண்டி விடுவதை மட்டுமே பிழைப்பாகக் கொண்டுள்ள அரசியல் தலைவர்கள் யாரும் தங்கள் உயிரைக் கொடுத்து தீர்வினைக் காண்பதில்லை. காவிரிப் பிரச்சினை இன்று தீராமல் இருப்பதற்கு அதனை விவசாயிகள் பிரச்சினை, அரசியல் பிரச்சினை என்ற தளங்களைத் தாண்டி உணர்வு ரீதியான ஒன்றாக சில சுயநலம் மிக்க கர்னாடக அரசியல்வாதிகள் மாற்றியதுதான் காரணம்.

விக்னேஷின் தீக்குளிப்பை நாம் தமிழர் கட்சி முயன்றிருந்தால் தடுத்திருக்கலாம். 



இப்படி ஒரு நிலைத்தகவலை அவர் முக நூலில் வெளியிட்ட பின்பு அவர் மீது கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இதனை தவிர்த்திருக்கலாம்.  அரசியல் ஆதாயத்திற்காக நாம் தமிழர் கட்சி மௌனமாக இருந்திருந்தால் அவர்களை விட மோசமானவர்கள் யாருமே இருக்க முடியாது.

தங்களை வலிமைப்படுத்துவதற்காக தொண்டர்களின் தற்கொலைகளை தலைவர்கள் விரும்புகிறார்களோ என்ற ஐயத்தை தனது ஓவியங்கள் மூலம் தோழர் ஸ்ரீரசா எழுப்பியுள்ளார்.




ஆம், தமிழக வரலாற்றில் தொண்டர்கள்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்காக, தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததற்காக, கைது செய்யப்பட்டதற்காக, நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியதற்காக என்று மாநிலத் தலைவர்களுக்காக தொடங்கி உள்ளூர் தலைவர்களுக்காக வரை தொண்டர்கள்தான் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தலைவர்கள் அல்ல.



தமிழகத்தில் மாறுபட்ட ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்ல முடியும். ஆதித்தமிழர் பேரவையின் மாநிலச் செயலாளர் தோழர் பி.நீலவேந்தன், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆறு சதவிகிதமாக  உயர்த்த வேண்டும் என்று தீக்குளித்த துயர நிகழ்வு அது.

அப்போது சொன்னதைத்தான் மீண்டும் இப்போது உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது.

தற்கொலை என்பது ஒரு போராட்ட நடவடிக்கை கிடையாது.

உசுப்பேத்தி விடுகிற தலைவர்கள் தங்கள் தொண்டர்களிடம் இனியாவது இதனைச் சொல்லட்டும்.
 

2 comments:

  1. விக்னேஷ் சீமான் கட்சி ஊர்வலத்தில் சென்ற போது தன்னுடன் பெட்ரோலையும் காவிக் கொண்டு சென்றாரா?
    அல்லது வெளியில் இருந்து பெட்ரோல் எனன காரணத்துக்காக அவருக்கு வழங்கபட்டது?

    இந்த மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இம்மாதிரி மரணங்களைத் தடுக்க வேண்டுமென்றால் காவிரி பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
    http://www.bbc.com/tamil/india-37383441

    ReplyDelete