Monday, June 8, 2015

தடையைத் தகர்த்த நம்பிக்கையளிக்கும் வெற்றி

 

தமிழகத்தில் தொடங்கி இந்தியா முழுதும் கடந்த சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்திற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ஐ.ஐ.டி நிர்வாகம் திரும்பப் பெற்றதைக் கண்டித்து தமிழகத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாய் நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

கருத்தியல் தளத்தில் நடைபெற்ற இந்த போராட்டமும் அதன் வெற்றியும்  மிக முக்கியமானது. பாசிஸத்தை நோக்கி நகரும் மோடி அரசின் முயற்சிகளுக்கு  போடப்பட்டுள்ள முதல் முட்டுக்கட்டை இது. 

நவீன தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளையும் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான சமூகக் கண்ணோட்டத்தையும் கொண்ட ஆபத்தான அரசு இது என்பதுதான் மோடி அரசைப் பற்றிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மதிப்பீடு.

ஒருபுறம் இந்தியாவை பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் விற்றுக் கொண்டே மறுபுறம் தனது மதவெறி செயல்திட்டத்தையும் அமலாக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய மனித வளத்துறை  அமைச்சகம் அதற்கான கருவியாய் செயல்படுகிறது. குரு உத்சவ், சமஸ்கிருத வாரம் என்று தொடங்கி அனைத்து கல்வி, கலாச்சார, வரலாற்று அமைப்புக்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பி வருகிறது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப உயர் கல்வி நிறுவனங்களை வளைத்து வருகிறது. ஐ,ஐ,டி பிரச்சினையும் அதன் வெளிப்பாடுதான். ஆர்.எஸ்.எஸ்  நிர்வாகி ஒருவர் கடிதம் அனுப்ப  உயர் கல்வி நிறுவன விடுதிகளில் அசைவ உணவு வழங்கப்படுவதை நிறுத்த முடியுமா என்று பரிசீலனை செய்யுங்கள் என மனித வளத் துறை  அமைச்சகம் கடிதம் அனுப்பியது பலருக்கும் நினைவிலிருக்கலாம்.

இயற்கை எழில் நிறைந்த கானகச் சூழலில் அமைந்துள்ள ஐ.ஐ.டி யில்  பல பாரபட்சங்கள் நிலவுகின்றன என்பது அங்கே கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் திருமதி வசந்தா கந்தசாமி அவர்களுக்கு பதவி உயர்வு தொடர்ந்து மறுக்கப்பட்ட அநீதி வெளியான போதுதான் தெரிய வந்தது.

அந்த பாரபட்சமான நிலை மாறவில்லை என்பதைத்தான் தற்போதைய சம்பவமும் உணர்த்தியுள்ளது. 

நாடெங்கிலும் உள்ள ஐ.ஐ.டி களில் பல பெயர்களில் பல வாசகர் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கூட வலதுசாரி சித்தாந்தங்களை வெளிப்படுத்தக்கூடிய பல வாசகர் வட்டங்கள் நிர்வாகத்தின் தாராளமான ஆதரவோடு செயல்படுகிறபோது அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரது பெயரில் அமைந்துள்ள வாசகர் வட்டத்தை மட்டும் தடை செய்தது இவ்விரு தலைவர்கள் மீது சங் பரிவாரத்திற்கு உள்ள காழ்ப்புணர்வு ஒரு முக்கியக் காரணம்.

சங் பரிவாரம் உயர்த்திப் பிடிக்கிற அனைத்து பிற்போக்குத்தனமான கருத்தோட்டங்களுக்கும் எதிரானவர்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, சமூக அநீதிகளுக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஏற்க முடியாது என்பது இயல்பானதுதான், நாகம் நச்சைத்தான் கக்கும் என்பது போல.

பிரதமரை விமர்சித்தார்கள் என்று அனுப்பப்பட்ட ஒரு மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் மனித வளத் துறை  அமைச்சகம்  செயல்பட்டுள்ளது என்பதே நகைப்பிற்குரிய ஒரு விஷயமாகும். மோடியை விமர்சனத்திற்கு  அப்பாற்பட்ட மனிதராக சித்தரிக்க நினைப்பதே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. சகிப்புத்தன்மையற்ற ஒரு அரசு என்பதை மீண்டும் ஒரு வெளிப்படுத்தி தங்கள் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காண்பித்துக் கொண்டது மத்தியரசு.

ஆனால் இந்த அடக்குமுறையை தமிழகத்தின் முற்போக்குச் சிந்தனையாளர்களும் இடதுசாரி அமைப்புக்களும் கண்டித்ததோடு இல்லாமல்  உடனடியாக போராட்டக் களத்திலும் இறங்கினர். சென்னை ஐ.ஐ.டி மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐ,ஐ.டி க்களிலும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் போராட்டம் பரவியது. சமூக வலைத்தளங்களிலும் கண்டனக்குரல் சக்தியோடு எழுந்தது.

இறுதியாக ஐ.ஐ.டி நிர்வாகம் தான் பிறப்பித்த தடையை விலக்கிக் கொண்டு விட்டது. ஒன்றுபட்ட போராட்டம் என்றுமே வெற்றியடையும் என்பதற்கான சான்றாக திகழ்கிறது  ஐ,ஐ.டி மற்றும் மனித வளத் துறை அமைச்சகத்திற்கு எதிரான போராட்டம். ஒரு கடுமையான கருத்துப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

தமிழகம் கொந்தளிப்பான சூழலில் இருந்த போது, தமிழக அரசு கள்ள மௌனம் சாதித்தது என்பதும் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி விட்டது என்பதும் கவனத்திற்குரியது. அவர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இப்போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத பிற்போக்கு சக்திகள் "படிக்கிற மாணவர்களுக்கு அரசியல் எதற்கு/" என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான் தலைவர் தோழர் சுனில் மைத்ரா கூறியதை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

"இன்றைய ஆட்சியாளர்கள் மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, தொழிலாளர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, பெண்கள் வரக்கூடாது, ஆசிரியர்கள் கூடாது என்று சொல்கின்றனர். பின் யார் அரசியலுக்கு வரவேண்டும்? நிலப்பிரபுக்களும் பண்ணையார்களுமா? முதலாளிகள் மட்டும்தானா? திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்குமானதா அரசியல்?" 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete