Sunday, June 7, 2015

"பாபனாசம்" ஏமாற்றமளித்தாலும் .. . (வ்ராத பட விமர்சனம் அல்ல)

இன்னும் வெளிவ்ராத "பாபனாசம்" திரைப்படம் பற்றியதல்ல இந்த பதிவு. 

கோடை விடுமுறையில் எங்காவது இரண்டு நாள் சென்று வரலாம் என்று விவாதிக்கத் தொடங்கிய உடன் நான் சொன்னது பாபனாசம், காரையார் அணை சென்று வரலாம் என்றுதான்.

அதற்குக் காரணம் என்னவென்பதை இந்த இணைப்பிற்கு சென்று பார்க்கும் போது நீங்களே  உணர்ந்து கொள்வீர்கள். அழகிய புகைப்படங்களைக் காண்பித்தும் அங்கே இருந்த அமைதியான சூழலை சிலாகித்தும்  குற்றாலம், ஹொகனேக்கல் போல அருவியின் சுற்றுப்புறம் மாசு படாமல் உள்ளது என்று பாராட்டியும் நான் சொல்ல பாபனாசம், காரையார் அணை செல்வது என்று ஏகமனதாக முடிவானது.

வேலூரிலிருந்து ஈரோடு வரையிலும் பின்பு ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரையிலும் புகைவண்டியில் சென்று விட்டு பிற்கு ஒரு வேனில் எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.

முதலில் சென்றது மணிமுத்தாறு.

கூட்டம் அவ்வளவாக இல்லாததால் மணிமுத்தாறு அருவியில் நன்றாக குளிக்க முடிந்தது. குறைவான உயரத்திலிருந்து  தண்ணீர் விழுந்ததால் அதன் சக்தியும் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டு பாபனாசம் அகஸ்தியர் அருவிக்குச் சென்றோம். 2013 டிசம்பரில் இருந்த சூழல் முற்றிலுமாக மாறியிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தது மட்டுமல்ல, தடைசெய்யப்பட்ட எண்ணெய், ஷாம்பூ, சோப்பு எல்லாமே அதிகமான பயன்பாட்டில்தான் இருந்தது. அருவி செல்லும் வழியிலிருந்து அருவி வரைக்கும் அத்தனை இடங்களுமே குப்பைத் தொட்டியாகவே மாறியிருந்தது. ஒரு இளைஞர் பட்டாளம் வேறு மொத்தமாக அருவியை ஆக்கிரமித்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு கொஞ்சம் கூட நேரமோ, இடமோ தராமல் தாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்ற முறையில் நடந்து கொண்டது வேறு ஒரு கொடுமை.

சரி, காரையார் அணையாவது செல்வோம் என்றால் அடுத்த அதிர்ச்சி. அங்கே படகுப் பயணம் நிறுத்தப்பட்டு விட்டது  என்ற தகவலை வாகன ஓட்டுனர் சொல்ல என்ன செய்வது என்று புரியவில்லை.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் அருணன் எழுதிய "கொலைக் களங்களின் வாக்குமூலம்" நூல் நினைவிற்கு வந்தது.

முத்துப்பட்டன் கொல்லப்பட்ட இடமான சொரி முத்தையனார் கோயில் பற்றியும் கோயிலுக்கு முன்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடை பற்றியும் அவர் எழுதியுள்ளார். காரையார் அணைக்கு முன்பாக அந்த இடம் இருக்கும் என்றும் இயற்கை எழில் கொஞ்சும் பூமி என்று அவர் விவரித்தது மனதில் இருந்ததால் வாகன ஓட்டுனரிடம் கேட்க அவரும் சூப்பர் இடம் சார், போகலாம் என்று சொல்ல அங்கே சென்றோம்.

மிகவும் அழகான இடம். கோயில் சூழலைத் தாண்டி ஓடைக்கரைக்குச் சென்று விட்டால் அதன் பின்பு சொர்க்கம்தான்.

சிலிரென்ற குளிரோடு ஓடி வரும் ஆற்றில் அத்தனை பேரும் மகிழ்ச்சியாகவே குளித்தார்கள். எழுப்பி அழைத்துக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

விபத்தில் ஒரு கால் பாதிக்கப்பட்டதால் இன்னொரு காலுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதால் அந்த காலில் அவ்வப்போது நரம்பு இழுத்துக் கொண்டு தாங்க முடியாத வலியைக் கொடுத்து விடும். அந்த இடத்திலும் அப்படி நரம்பு இழுத்துக் கொள்ள, மற்றவர்களின் மகிழ்ச்சியை கண்டு மகிழும் வாய்ப்புதான் கிடைத்தது.

சரி இன்னொரு முறை பார்த்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து புறப்பட்டோம்.

சில புகைப்படங்கள் 

உங்களுக்காக

மணித்தாறு


 பாபனாசம் பகுதி

 
சொரி முத்தையனார் கோயில் மற்றும் ஓடை
 

1 comment:

  1. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்றபோதோ காரையார் அணைக் கட்டில்
    படகுச் சவாரி நிறுத்தப்பட்டிருந்தது நண்பரே
    கேட்டதற்ககு நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று சொன்னார்கள்
    சுற்றுலா தலங்களை நிர்வகிக்கும் நம்மவர்களின் திறமை இதுதான்

    ReplyDelete