Friday, June 26, 2015

மோடியின் செய்தியா? மோசடிச் செய்தியா?



நேற்று எங்கள் வேலூர் கிளையின் ஆண்டுப் பேரவைக் கூட்டம். கூட்டம் முடிந்ததும் அதுவரை மௌனமாய் வைத்திருந்த அலைபேசியை உயிர்ப்பித்து வந்திருந்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மின்னஞ்சலைப் பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன். என்னவென்று பக்கத்தில் அமர்ந்திருந்த தோழர் விபரம் கேட்க, அவரையும் அதை படிக்கச் சொன்னேன். எனக்குக் கூட இந்த மின்னஞ்சல் முன்னரே வந்திருந்தது என்றார்.

இதோ கீழேயுள்ள அச்செய்தியை நீங்களும் படியுங்கள்.



பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக  பொங்கி எழுந்து சுதேசியம் பேசி உள்ளது இந்த மின்னஞ்சல்.

இது நிஜமாகவே மோடி அனுப்பியதா?

பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்டை அதிகரிக்க ஒவ்வொரு நொடியும் கடுமையாக உழைக்கிற மோடி பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களை புறக்கணிக்கச் சொல்கிறாராம்.

இந்தியாவில் உள்ள எல்லா தொழிலாளர் நலச் சட்டங்களையும் ஒழித்துக் கட்டி விடுகிறேன். எந்த தொந்தரவும் இல்லாமல் இந்தியாவில் தொழில் செய்து லாபத்தை அள்ளிச் செல்லுங்களென்று நாடு நாடாக “இந்தியாவில் உருவாக்கு” என்று கூவி கூவி விற்கிற மோடி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கிற பணத்தைப் பார்த்து கவலைப்படுகிறாராம்.

இந்திய விவசாயிகளின் நிலத்தைப் பறித்து கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்து இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் மோடி, இளநீர் குடியுங்கள், பழரசம் பருகுங்கள் என்று போதிக்கிறாராம்.

கரும்பிற்கான அடிப்படை விலையை உயர்த்த மறுத்துள்ளது மட்டுமல்ல, மாநிலங்கள் வழங்கும் கூடுதல் தொகையையும் தரக்கூடாது என்று சொல்லிக் கொண்டே கரும்புச்சாறு அருந்தச் சொல்கிறாராம்.

அமெரிக்க நலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிற, அணு உலை வெடித்து இந்தியாவே எழவு வீடாக மாறினாலும் அவற்றை நிறுவிய அமெரிக்கக் கம்பெனிகள் ஒரு ரூபாய் கூட இழப்பீடு தர வேண்டாம் என்று ஒப்பந்தம் போட்டவர் இந்திய ரூபாயின் மதிப்பும் டாலரின் மதிப்பும் ஒன்றாக வேண்டும் என்று விரும்புகிறாராம்.

இப்படியெல்லாம் மோடி சொன்னால் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளை அவரை வீட்டிற்கு அனுப்பி விடும் என்பது தெரியாத இளிச்சவாயரா மோடி?

ஆக மோடியின் செய்தி என்ற பெயரில் யாரோ உருவாக்கி மோடிக்கு “ரொம்ப நல்லவர்” என்ற பிம்பத்தை உருவாக்க முயல்கின்றனர்.

ஒரு வேளை இந்தச் செய்தியை அனுப்பியது நிஜமாகவே மோடி என்றால் அதற்குப் பெயர் “களவாணித்தனம்”. ஏனென்றால் அவரது நடவடிக்கைகள், கொள்கைகள் எல்லாமே இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு எதிராகவும் முரணாகவும்தான் இருக்கிறது.  

4 comments:

  1. இது தேர்தலுக்கு முன்னால் மோடியின் இமேஜை பில்ட் அப் பண்ண APCO நிறுவனம் அனுப்பிய முழுப் பொய் மின்னஞ்சல்களில் ஒன்றாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. மோடி சொல்ல வில்லை என்றாலும்கூட, விஷயம் நல்லாதானே இருக்கு. கடைபிடித்துத்தான் பார்ப்போமே, பின்னர் வெளிநாட்டு நிறுவனங்கள் எப்படி கடை நடத்துகின்றார்கள் என்றும் பார்ப்போம்.

    கொஞ்ச நாளுக்கு பழச்சாறு குடித்தால் உடம்புக்கும் ஆரோக்கியம் தானே.

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் , மெய்பொருள் காண்பது தானே அறிவு?

    வேலூர்ல சூடு கொஞ்சம் தணிந்து விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. செய்தியில் பிரச்சினையே கிடையாது சார். பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களை பயன்படுத்துவதை இயன்றவரை குறைக்க வேண்டும் என்பதை நாங்களும் நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். பிரச்சினை அது மோடி சொன்னதா என்பதுதான். காரணத்தை பதிவில் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

      இன்னும் வேலூரை விட்டு வெயில் விலகவில்லை

      Delete
  3. செய்தி சரிதான்! மோடி அனுப்பினார் என்றால் முரண்பாடுள்ள மனிதர் என்று தோன்றுகின்றது!

    ReplyDelete