Thursday, September 20, 2012

இத்தனை பணம் எங்கே இருக்கிறது?





சமீபத்தில் நான் எனது பழைய இரு சக்கர வாகனத்தை விற்று விட்டு புதிய இரு சக்கர வாகனம் வாங்கினேன். ஜூன் மாதம் முதல் நாள் வாகனம் பதிவு செய்யப்பட்டது. வாகன எண் 3802. இரு தினங்கள் முன்பு ஒரு அதிகாரி வாங்கிய புதிய காரைப் பார்த்தேன். அதன் எண் 9200. அவரைக் கேட்ட போது ஆகஸ்ட் முப்பது அன்று பதிவு செய்ததாய் கூறினார். ஆக மூன்றே மாதங்களில் வேலூரில் மட்டும் 5400 புதிய வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.

ஒரு சின்ன கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு மாதத்திற்கு 1800 வாகனங்கள். அவை 35,000 ரூபாய் மதிப்புள்ள டி.வி.எஸ் 50 ஆகவும் இருக்கலாம், பல லட்சம் மதிப்பிலான சொகுசு கார்களாகவும் இருக்கலாம். இருப்பினும் சராசரியாக ஒரு வாகனத்தின் மதிப்பு 50,000 ரூபாய் என்று மட்டும் எடுத்துக் கொண்டேன். அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு வேலூர் நகரத்தில் மட்டும் விற்பனையாகிற வாகனங்களின் மதிப்பு ஒன்பது கோடி ரூபாய், வருடத்திற்கு 108 கோடி ரூபாய்.

உண்மையில் இந்த தொகை அதிகரிக்குமே தவிர குறையப் போவது இல்லை. எனது சந்தேகம் எல்லாம் இந்த அளவு பணம் வேலூரில் எங்கே இருக்கிறது. சரி பாதிக்கும் மேல் வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் அளிக்கும் கடன் என்றே வைத்துக் கொண்டாலும், கடன் பெறுபவரின் நிதி நிலைமை உணர்ந்தே தரப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

புதிய வாகனத்திற்காக ஆசை காட்டி கடன் வலையில் சாதாரண, நடுத்தர மக்களை சிக்க வைக்கிறார்களோ என்ற கவலையும் ஏற்படுகிறது. இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுந்தது.

வாகனத்திற்காக இவ்வளவு ரூபாய் கடன் அளிக்கும் நிறுவனங்கள், விவசாயத்திற்காகவோ அல்லது தொழில் வளர்ச்சிக்காகவோ கடன் அளிக்குமா? கல்விக்கடன் பெறவே வங்கிகள் அலைக்கழிப்பதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

இந்த கணக்குகளை நாம் போடுகிறோமோ இல்லையோ பன்னாட்டுக் கம்பெனிகள் சரியாகவே போடுகின்றன. அதனால்தான் அவை இந்தியாவை சுரண்ட ஆசைப்படுகின்றன.

பொருளாதார நிலைமை முன்னேறி இந்த விற்பனையும் வளர்ச்சியும் இருந்தால் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் கடன் மட்டுமே அடிப்படை என்றால் நீர்க்குமிழி எப்போது வேண்டுமானாலும் உடையலாம், அமெரிக்க வீட்டுக் கடன் பிரச்சினை போல. கடன் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் சற்று சிந்தித்தால் நல்லது.

2 comments:

  1. இது எனக்கு உண்மையிலேயே புரியாத புதிர்.

    ReplyDelete
  2. They will make us get used to comforts, then hike the prices to loot us!. Modern era pick pocketting.
    Our people wont realize it before it is too late

    ReplyDelete