Sunday, September 23, 2012

படவேட்டம்மன் ஆலயத்தில் படுபாதகச் செயல், காவல்துறை பாதுகாக்கும் தீண்டாமைச்சுவர்




வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையிலிருந்து  சோளிங்கர் செல்லும் சாலையில்  வாலாஜா பி.டி.ஓ அலுவலகம் முன்பாக நெடிதுயர்ந்து நிற்கும் படவேட்டம்மனின் சிலையை கவனிக்காமல் யாரும் கடக்க முடியாது. பரபரப்பான அந்த கோயிலுக்குப் பின்னே ஒரு பெருந்துயரம் ஒளிந்திருப்பது சாலையைக் கடப்பவர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் சாலையோரத்தில் மூன்று செங்கற்களை வைத்து படவேட்டமனாக தலித் மக்கள் வழிபடத் தொடங்கினார்கள். காலப் போக்கில் அது சிறிய ஆலயமாக உருவாகியது. ஆலயம் இருந்த பகுதியை ஆலயத்திற்கும், அதற்குப் பின்னால் தலித் மக்கள் குடியிருந்த பகுதியை அவர்களுக்குமே அந்த நிலத்திற்குச் சொந்தமானவர் பட்டா போட்டுக் கொடுத்தார். அங்கே அம்பேத்கர் காலனி உருவானது. ஆலயத்திற்கும் அம்பேத்கர் காலனிக்கும் இடைப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தின் புகழ், படவேட்டம்மன் புகழ் பரவ, பரவ பக்தர்களாய் வந்து போன பணக்காரர்கள் ஆலயத்தின் நிர்வாகத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். வரவு செலவும் அதிகமானது. கோயிலுக்குச் சொந்தமானவர்கள், அதனை உருவாக்கி காலம் காலமாக பராமரித்தவர்கள் மெல்ல, மெல்ல ஒதுக்கப்பட்டனர். அந்த  எளிய மக்களும் வேறு வழியின்றி விலகிப் போனார்கள்.

விலகிப்போனாலும் துரத்தி வந்து தாக்கினார்கள் கோயிலின் புதிய நிர்வாகிகள். ஆலயத்திற்கும் அம்பேத்கர் காலனிக்கும் இடையில் உள்ள ஏராளமான இடம் அவர்களின் கண்ணை உறுத்தியது. ஏராளமான லாரிகளைக் கொண்ட நிர்வாகக் குழுத் தலைவருக்கு தனது லாரிகளை நிறுத்த வசமான இடமாக இந்த காலி இடம் தெரிந்தது. கூடவே ஒரு கல்யாண மண்டபம் கட்டினால் கூடுதல் காசும் பார்க்கலாம்.

ஆனால் அம்பேத்கர் காலனி மக்கள் அந்த இடத்தை வழிப்பாதையாக பயன்படுத்துவது ஒரு தடையாக இருந்தது. காலம் காலமாக பயன்படுத்துவதை எப்படி தடுத்து நிறுத்துவது? நல்லதைச் செய்ய யோசனைகள் கிடைப்பது கஷ்டம். கெட்டதைச் செய்ய வினாடிக்குள் கோடி திட்டங்கள் கொட்டுமே! படவேட்டம்மன் போல பஞ்சமுக ஆஞ்சனேயர் பெரிய சிலையும், கோயிலுக்கு சுற்றுச்சுவரும் கட்டுவதாக அறிவித்தார்கள். பக்தர்களிடம் நன்கொடை கேட்டு அறிவிப்பு பலகை வைத்தார்கள்.

பண வசூல் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் ஆஞ்சனேயருக்கு ஒரு மேடை எழுப்பி, பிறகு. அதை அப்படியே அம்போவென்று போட்டு விட்டு, பிரம்மாண்டமான சுற்றுச்சுவரை எழுப்பி விட்டார்கள். தங்களின் பயன்பாட்டில் இருந்த பாதை பறி போனதைக் கண்டித்து தலித் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். சட்ட விரோதமாக கட்டப்பட்ட நீண்ட நெடிய சுவரின் சிறு பகுதியை ஆவேசம் கொண்ட சில இளைஞர்கள் இடித்து விட்டனர்.  பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை உருவாக்குகிறோம் என்று காவல்துறை உறுதியளித்தது. ஆனால் அதன் உள்ளத்தை ஆதிக்க சக்திகள் கொள்ளையடித்து விட்டார்கள்.   

சுவர் கட்டப்பட்ட இடம் அரசின் நிலம். அங்கே சுவர் எழுப்பியது ஆக்கிரமிப்புக் குற்றம். தலித் மக்கள் பயன்பாட்டில் இருந்த பகுதியில் சுவர் எழுப்பியது தீண்டாமைக் குற்றம். ஆனால் காவல்துறையும் அரசு நிர்வாகமும் ஆதிக்க சக்திகளுக்கு துணையாகவே இருக்கிறது. கட்டப்பட்ட சுவருக்கு பாதுகாப்பாக அங்கே காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு சக்தி மிக்க ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து நடத்தியுள்ளது.

கோயில் நிர்வாகத்திற்கு இது வருமானப் பிரச்சினை, நிர்வாகிக்கு கௌரவப் பிரச்சினை. ஆனால் அம்பேத்கர் காலனி மக்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினை. உரிமைப் பிரச்சினை. சுற்றுச்சுவருக்கு உட்பட்ட பகுதியில் மூன்று வீடுகள் உண்டு. அவர்கள் இப்போது பயந்து போய் எங்கோ தலைமறைவாகி விட்டார்கள்.

நேற்று சம்பவ இடத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தீண்டாமை முன்னணியின் தலைவருமான தோழர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என்.குணசேகரன், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைக் கட்சியின் பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.

அரசு நியாயம் வழங்க தயாராக இல்லாத போது நியாயத்தை நாமே எடுத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தீண்டாமைச் சுவர் அகற்றப்பட வேண்டும், படவேட்டம்மன் ஆலய நிர்வாகம் தலித் மக்களிடமே அளிக்கப்பட வேண்டும், இல்லையேல் இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நேரடி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து வரும் முப்பதாம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போகிறது. அடித்தால் திருப்பி அடி என்று எண்பதாண்டுகளுக்கு முன்பே கீழத் தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்து, போராட்ட உணர்வேற்றிய மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாச ராவ் அவர்களின் நினைவு நாளில் நடைபெறவுள்ள இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.

பெண்களின் கண்களிலும் இளைஞர்களின் வார்த்தைகளிலும் தெரியும் கோபம் அதற்கு கட்டியம் கூறுகிறது.

தகரப்போவது தீண்டாமை சுவர் மட்டுமல்ல,
ஆதிக்க சக்திகளின் ஆணவமும் அரசின் அலட்சியமும் கூட.









No comments:

Post a Comment