Wednesday, September 26, 2012

பணக்கார சாமியானதால் ! பறிபோன தலித் சாமி !

 -தோழர் பி.சம்பத்,
தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ளது அம்பேத்கர் காலனி (இப்பகுதியின் முந்தைய பெயர் பாக்குப் பேட்டை) இங்கு பல நூற்றுக்கணக்கான தலித் குடும்பங்கள் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு நூற்றாண் டுக்கு முன்னதாக இவர்கள் வழிபடுவதற்கு என்று தங்கள் கால னியின் முன்பகுதியில் சோளிங்கர் பிரதான சாலையை யொட்டி ஒரு வழிபாட்டு தலத்தை உருவாக்கினர். முதலில் சில செங்கல்களை மட்டும் அடுக்கி வைத்து வழிபட்ட அவர் கள் பிறகு சிறிய மேடை கட்டி அதன் மேல் சாமியை வைத்து வழிபட்டனர். தாங்கள் வழிபடும் சாமிக்கு அம்மாவட்டத்தில் பிரபலமான சாமியான படவேட்டம்மன் என பெயரிட்டனர். அந்த பிரதான சாலை வழியாக செல்லும் லாரி டிரைவர் கள் அங்கு வண்டிகளை நிறுத்தி வழிபட்டு காணிக்கையாக நிதியளித்துவிட்டுச் சென்றனர். ஏராளமான லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டு ஏராளமான நிதிய ளித்ததால் சிறிய அக்கோவிலின் வருமானம் பெருகியது. இதனால் கோவிலும் சற்று விஸ்தரிக்கப்பட்டு அம்மன் சிலை யும் பெரிதாக வைக்கப்பட்டது. காலப்போக்கில் வருடந் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் வரும் கோவிலாக மாறி விட்டது. வருடத்திற்கு 50 முதல் 60 லட்சம் வரை நிதி திரள்வ தாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனை தலித் மக்கள் நிர்வகிக்கப் பொறுத்துக் கொள்வார்களா ஆதிக்க சக்திகள்?, கோவிலுக்கு கொடை நடத்துவது என்ற பெயரால் ஆதிக்க சக்திகள் தலித்துகளிடமிருந்து தந்திரமாக வும், படிப்படியாகவும் கோவில் நிர்வாகத்தை கைப்பற்றிக் கொண்டு விட்டனர். தலித்துகள் வழிபடும் சாமி பணக்கார சாமியானதால் அவர்களின் சாமியையும் கைப்பற்றிக் கொண்டார்கள் ஆதிக்க சக்திகள். இவ்வளவிற்கும் இக் கோவிலைச் சுற்றிலும் தலித் மக்கள் தான் மிகக் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.ஆதிக்க சக்திகள் சார்பாக தற்போது இக்கோவிலை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர் துரைவேல் என்பவர். இவர் ஒரு லாரி உரிமையாளர், அஇஅதிமுகவின் பிரமுகரும் கூட. கோவிலுக்கு வருடம் தோறும் கிடைக்கும் பல லட்சக்கணக்கான ரூபாய் வரு மானத்தை சுயநலத்தோடு நிர்வகித்து வருகிறார்.


இதுமட்டுமல்ல. காலம் சென்ற திரு. நாராயணசாமி என்பவர் தனக்குச் சொந்தமான கோவிலைச் சுற்றியுள்ள 5 ஏக்கர் நிலத்தில் 2 /2 ஏக்கர் நிலத்தை அம்பேத்கர் நகர் தலித் மக்களுக்கும், எஞ்சியுள்ள 2 1/2 ஏக்கர் நிலத்தை இக்கோவி லுக்கும் எழுதி வைத்துள்ளார். தலித் மக்களுக்கு எழுதி வைக் கப்பட்ட 2 1/2 ஏக்கர் நிலம் 50 தலித் குடும்பங்களுக்கு குடி மனைப்பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி யுள்ள மற்றொரு 2/2 ஏக்கர் நிலம் தற்போது தலித் மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலமாகவும் அவர்களின் நடைபாதை யாகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலத்தில் உள்ளடங்கி தலித் மக்களின் 3 வீடுகளும் உள்ளன. இவர்கள் 40 ஆண்டு களுக்கும் மேலாக அங்கு குடியிருந்து வருகின்றனர். கோவி லுக்குச் சொந்தமான இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாயாகும். தற்போது துரைவேல் உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் இந்நிலத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.படவேட்டம்மன் கோவிலைச் சுற்றி ஏற்கனவே காம்ப வுண்டு சுவர் உள்ளது. தற்போது கோவிலைச் சுற்றியுள்ள தலித் மக்களின் பயன்பாட்டையும் நடைபாதையாகவும் பறிக்கும் வகையில் ஆதிக்க சக்திகள் 15 அடி உயரத்தில் மற்றொரு சுற்றுச் சுவரைக் கட்டி நிலத்தை தமது கட்டுப் பாட்டிற்குள் வளைத் துப்போட்டுள்ளனர். இந்நிலத்தில் தீர்வை ரசீது, மின்கட்டண ரசீது, ரேஷன் கார்டு உள்பட தக்க ஆதாரங்களுடன் வாழ்ந்து வரும் 3 தலித் குடும் பங்களின் வீடுகளையும் காலி செய்யவும் இடித்து தரை மட்டமாக்கவும் மிரட்டி வருகின்றனர். கோவி லுக்கும், தலித் மக்களின் பயன்பாட்டிற்கும் சொந்தமான நிலத்தில் துரை வேலுவும் இதர சில லாரி உரிமையாளர் களும் தங்களது லாரிகளை கழுவி விடவும் நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்து இந்த அடாவடித்தனமான செயலில் இறங்கியுள்ள னர். சுற்றுச் சுவரின் பல முனைகளில் லாரிகளை கழுவ உதவும் குழாய் இணைப்புக்களையும் பொருத்தியுள்ளனர். ராட்சத பம்பு செட் வைத்து இந்நிலத்தடி நீரையும் கொள்ளை யடிக்கத் திட்டமிட்டுள்ளனர். காலம் காலமாக தலித் மக்கள் நடந்து வந்த நிலத்திற்குள் ஆதிக்க சக்திகள் அத்துமீறி நுழைந்து தங்கள் சொந்த லாபத்திற்காக கட்டிக் கொண்ட இந்த சுவரில் ஒரு பாதை ஏற்படுத்திக் கொண்டதற்காக தலித் மக்கள் கடுமையாக மிரட்டப்படுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு மிரட்டி அடாவடித்தனம் செய்வது ஆதிக்க சக்திகள் மட்டுமல்ல அரசு நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து தான்.கோவில் சொத்தை கொள்ளை யடித்து நிலத்தையும் ஆக்கிரமித்து சுவர் எழுப்பியதை வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் இதனால் பாதிக் கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளனர்.


அத்து மீறல்கள் செய்து கட்டப் பட்டுள்ள அக்கிரமமான தீண்டாமைச் சுவருக்கு காவல்துறை யினரே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ள வெட்கக் கேடும் அரங்கேறியுள்ளது. மொத்தத்தில் 300 ஆண்டுகாலமாக கோவில் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்து வரும் அம்பேத்கர் நகர் தலித் மக்களின் வாழ்வுரிமையும், பாதை உரிமை யையும் சில தனி நபர்கள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக பறித்துள்ள போது ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்துள்ளது. ஊழல் அதிகாரிகள் சுயநல ஆதிக்க சக்திகளின் கைப்பாவை யாக மாறியுள்ளது கண்டு தலித் மக்களும் ஜனநாயக சக்திகளும் கொதிப்படைந்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இப்பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத் தின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதங்கள் கொடுத்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. இம்மக்களின் பிரச்சனைக ளுக்காக இந்த அமைப்புகள் ஒரு கண்டன இயக்கத்தையும் நடத்தியுள்ளன. சுயநல சக்திகளின் அத்துமீறல் கண்கூடாக நடந்துள்ள நிலையில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்பாவி மக்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டுவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை என இழுத்தடிக்கும் நிலைபாட்டிலேயே அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தீண்டாமை, வன்கொடுமை தமிழகத்தில் இல்லை என வெட் டிச் சவடால் பேசிய அதிமுக அமைச்சர் பெருமக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் இவை.22.9.2012 அன்று அம்பேத்கர் நகர் பகுதிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினர் என். குண சேகரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. நாராயணன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கவிதா சம்பத், மாவட்ட நிர்வாகி சம்பத், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் தினகரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சக்திவேல், மாநிலத் துணைத் தலைவர் லதா, மாதர் சங்க மாநில நிர்வாகி சங்கரி, வாலாஜாபேட்டை சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஊர் நாட்டாமை பெரியவர் மணி, துணை நாட்டாமை பிரகாஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சென்றனர்.ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், நடைபாதை அத்துமீறலால் கட்டப்பட்டுள்ள சாதிச் சுவர், சிறைச்சாலைக்குள் அமைந்தது போல உள்ள 3 தலித் வீடுகள் போன்றவற்றை நேரில் கண்ட னர். மக்கள் நெஞ்சம் கொதிப்போடும், ஆவேசத்தோடும் தங்க ளது பாதிப்பை விவரித்தனர். தலைவர்கள் மக்களுக்கு ஆறுத லும் நம்பக்கையும் அளித்ததோடு செப்டம்பர் 29ம் தேக்குள் மாவட்ட அரசு நிர்வாகம் அந்த சுவரை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


அரசு நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறினால் செப்டம்பர் 30ல் மேற்கண்ட அமைப்புகள் சார்பாக நேரடி நடவடிக்கையில் இறங்குவதென தீர்மானிக்கப்பட்டது. சுவர் அப்புறப்படுத்தப் படுவதோடு மிகுந்த வருமானம் வரும் கோவில் நிர்வாகத்தை தலித் மக்க ளிடம் ஒப்படைக்குமாறும் இல்லையேல் தமிழக அரசின் அறங் காவலர் துறையே இக்கோவிலை ஏற்று நடத்துமாறும், தலித் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிற நடைபாதையில் அப்புறப்படுத்தித் தருமாறும், கோவில் நிலத்தில் வாழும் 3 தலித் குடும்பங்களின் வீடுகளையும் பாதுகாக்குமாறும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறு மாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அளவில் அறைகூவல் விடுத்துள்ள செப்டம்பர் 30ல் ஆதிக்க சக்திகளுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் அரசு நிர்வாகத்திற்கும் எதி ராக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மட்டுமல்ல வேலூர் மாவட் டம் முழுவதுமிருந்து சாதிபேதமற்ற முறையில் உழைப்பாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் வாலாஜாபேட்டையில் ஆவேசமாக அணி திரளப் போகிறார்கள். தமிழக அரசு தாமதமின்றி தலையிடுமா?

 நன்றி - தீக்கதிர் 

பின் குறிப்பு ;  மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்
மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள்
நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது பிடி கொடுக்காமலே
பேசியுள்ளார்.  ஆதிக்க சக்திகளில் சிலரையும் பாதிக்கப்பட்ட
மக்களில் சிலரையும்  நேற்று நள்ளிரவு முதல் இன்று
அதிகாலை வரை கைது செய்துள்ளனர். போராட்டத்தை
பலவீனப்படுத்தும் முயற்சி இது. ஆனாலும் மக்கள் 
உறுதியாக உள்ளனர். போராட்டத்திற்கான தயாரிப்புக்கள்
நடந்து கொண்டிருக்கிறது, வேகமாகவே. 


No comments:

Post a Comment