Monday, September 10, 2012

சிங்களர் மீதான தாக்குதல் - இலக்கு மாறிய கோபம்




தமிழக தேவாலயங்களுக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள் தாக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதே போல விளையாட்டு அணி ஒன்றும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை அரசின் மீது தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கோபம் வருவது என்பது இயல்பானது. நியாயமானது. இலங்கைத் தமிழர்கள் இன்றும் இரண்டாம்தர குடிமக்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் இக்கோபத்திற்கான காரணம்.

இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கும் சாதாரண மக்கள் பயணம் வருவதற்கும் வேறுபாடு உள்ளது. பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது என்று ஆணவமாக பேசிய மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் மீது யாரும் பாயவில்லை. யாரும் தாக்கவில்லை.

ஆனால் அரசின் மீதுள்ள கோபத்தை சாதாரண மக்கள் மீது வெளிப்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? இத்தாக்குதல் மூலம் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு வந்திடுமா? இல்லை, மாறாக புதிய பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். சிக்கல்களை அதிகரிக்கும்.

பணம் கொழிக்கும் ஐ.பி.எல் விளையாட்டில் ஏதோ தமிழகத்தின் ரஞ்சிக் கோப்பை அணி போல கொண்டாடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாடியபோது இந்த கோபம் எங்கே போனது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே அருகாமையில் உள்ள திருப்பதிக்கு வந்த போது எங்கே போயிருந்தார்கள். பண பலமோ, அரசியல் செல்வாக்கோ இல்லாத சாமானிய இலங்கை மக்களிடம்தான் இவர்களின் கோபத்தை வெளிப்படுத்த முடியும் போல!

இந்திரா காந்தியின் படுகொலைக்கு ஒட்டு மொத்த சீக்கிய இனத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது போன்ற செயல் இது. இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு என்பது சாதாரண சிங்கள் மக்களைத் தாக்குவதால் கண்டிப்பாக வரப்போவதில்லை. இந்த புரிதலோடு இந்த அமைப்புக்கள் தங்களது எதிர்கால செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளட்டும்

1 comment: