Saturday, September 15, 2012

ரத்தத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கிறார்கள்
மத்தியில் உள்ள இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. மக்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாத அரசு, மக்களின் துயரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்ற கவலை இல்லாமல் அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

விலைவாசி உயர்வை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லாத மத்திய அரசு, உணவுப் பாதுகாப்பு சட்டம் என்பதன் மூலம் ரேஷன் கடைகளையே ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. வெளிச்சந்தையிலேயே எல்லோரும் எல்லாப் பொருட்களை வாங்கி சிரமப்பட வேண்டும் என்பதுத்தான் இந்த உணவுப் பறிப்புச் (பாதுகாப்பு என்று பெயர் வைத்திருப்பது வெறும் பம்மாத்து வேலை) சட்டத்தின் நோக்கம்.

இந்த சூழலில் அடுக்கடுக்கான தாக்குதல்களை அன்றாடம் மத்தியரசு நடத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக போலியான புள்ளி விபரம் கொடுத்துக் கொண்டு வருகிற மத்தியரசு இப்போது டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் ஐந்து உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயரப் போகிறது. ஆனால் இதைப் பற்றி மத்தியரசுக்கு என்ன கவலை?

மானிய விலையிலான சமையல் எரி வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு ஆறு என்று கட்டுப்படுத்தி  இன்னொரு சுமையை மக்கள் தலை மீது ஏற்றியுள்ளது மத்தியரசு. லட்சம் கோடிகளில் முதலாளிகள் ஸ்பெக்டரமிலும் நிலக்கரியிலும், எண்ணெய் படுகையிலும், நிறுவன வரிகளிலும் கொள்ளையடிக்க அனுமதிக்கிற மத்தியரசு, சாமானிய மக்களின் உணவுத் தேவைக்கான சிலிண்டருக்கு மானியம் வழங்க அனுமதிப்பதில்தான் தேசம் குடிமுழுகிப் போய்விடும் என ஒப்பாரி வைக்கிறது.

இந்தத் தாக்குதல் நேற்று முன் தினம் நடைபெற்றது என்றால் நேற்று மீண்டும் தொடர் தாக்குதல்கள். தீவிரவாதிகளின் தொடர் குண்டு வெடிப்புக்களில் கூட மக்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கலாம். மன்மோகன், சிதம்பரம் வகையறாக்களின் தொடர் தாக்குதல்களில் தப்பிக்க வாய்ப்பே கிடைக்காது.

மத்திய அமைச்சரவை மோசமான சில முடிவுகளை நேற்று எடுத்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை எடுப்பது என்று முடிவெடுத்தது. இடதுசாரிக்கட்சிகளும், வணிகர் அமைப்புக்களும் நடத்திய போராட்டங்கள் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட முடிவை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்து இப்போது மீண்டும் எடுத்துள்ளது.

கோடிக்கணக்கான வணிகர்கள், அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின் வாழ்வை சீரழித்து, அவர்களின் ரத்தத்தைக்  கொண்டு வால்மார்ட் போன்ற ராட்சத நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கிறது மத்தியரசு. விலைவாசி குறையும், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கற்பனைக் காரணங்களைச் சொல்லி இந்தியர்களை ஏமாளிகளாக்க முயல்கிறது மத்தியரசு. இதனை நம்மால் எப்படி அனுமதிக்க முடியும்?

ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் விமானப் போக்குவரத்துத் துறையை அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது என்பது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மூடு விழா நடத்துவதற்கான ஒத்திகை. விஜய் மல்லய்யா போன்ற உல்லாசப் பேர்வழிகள் விமானக் கம்பெனிகள் துவங்கி இந்திய வங்கிகளை ஏமாற்றி வருவதைப் பார்த்து வரும் நமக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளின் மோசடி அனுபவமும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது மத்தியரசு.

லாபத்தில் செயல்படும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்ற தேசத்துரோக முடிவை எடுத்துள்ளது அமைச்சரவை. இதற்குப் பதிலாக லாபத்தில் செயல்படும் காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளின் பங்குகளை அன்னியர்களுக்கு விற்று விட்டு அவற்றின் நிர்வாகத்தையும் வெளிநாட்டு நிர்வாகங்களுக்கு அளித்து விடலாமே? திறமையான அன்னிய நிர்வாகங்கள் இந்தக் கட்சிகளின் கோஷ்டிப் பிரச்சினைகளைக் கூட தீர்ப்பார்களே!

கையாலாகாத பிரதமர், முடிவெடுக்க திராணியில்லாத பிரதமர் என்று அமெரிக்க ஊடகங்களும் இந்திய, அன்னிய முதலாளிகளும் வைத்த விமர்சனங்கள் பொய்யாக்க வேண்டும், ஒபாமாவின் மனம் குளிர வேண்டும் என்பது மட்டுமே இவர்களுக்கு முக்கியமாக உள்ளது. மக்கள் வாழ்க்கை என்பது இவர்களுக்கு பொருட்டே கிடையாது.

இத்தகைய போக்கை தேசத்தை நேசிக்கிற எந்த ஒரு அமைப்பாலும் அனுமதிக்க முடியாது. மத்தியரசின் தொடர் தாக்குதல்களை கண்டிப்போம், தொடர்ந்து போராடுவோம். போராடும் இதர அமைப்புக்களோடு கரம் கோர்ப்போம். முறியடிப்போம். 

இந்திய மக்களின் ரத்ததில் அமெரிக்கர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கிறார்கள்.
அனுமதியோம், அனுமதியோம், அனுமதியோம், அனுமதியோம்
என்றே கிளர்ந்தெழுவோம்.

No comments:

Post a Comment