Tuesday, July 10, 2012

அரசு வேண்டுமானால் அலட்சியப்படுத்தலாம், ஆனால்






வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதல் எழுச்சி தோன்றிய வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற நாள் இன்று. சிப்பாய் கலகம் என்று வரலாற்றில் சொல்லப்பட்டது ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் சிப்பாய் புரட்சி என்று அரசால் மாற்றப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் சிப்பாய் புரட்சியின் இருநூறாவது ஆண்டைக் கொண்டாடுகையில் அப்போதிருந்த திமுக  அரசு, இந்த மகத்தான புரட்சியை நினைவு படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்தது.

குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்பார்கள். ஆட்சியாளர் பேச்சு மேடையோடு பேச்சு என்பது இன்றைய புது மொழி. அரசு சொன்னது எல்லாமே வெறும் அறிவிப்பாகவே இன்னமும் இருக்கிறது.

சிப்பாய் புரட்சியின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணிற்கு ஆண்டிற்கு ஒரு முறை ஒரு மலர் வளையம் வைப்பதோடு அரசின் கடமை முடிந்து போகின்றது.

சிப்பாய் புரட்சியின் மகத்துவமே இந்து சிப்பாய்களும் முஸ்லீம் சிப்பாய்களும் ஒன்று பட்டு போராடியதுதான். மத நல்லிணக்கத்தின் அடையாளம் சிப்பாய் புரட்சி. இந்த செய்தியை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதல்லவா? தங்கமான வாய்ப்பை நழுவ விடலாமா?

அரசு செய்யத் தவறுகின்ற வேலையை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் செய்து வருகின்றது. கலைஞர்களின் பேரணி, கலை விழா, உரை வீச்சு என்று பல்வேறு நிகழ்வுகளோடு ஒவ்வொரு ஆண்டும் சிப்பாய் புரட்சியை எழுச்சியாய் கொண்டாடி வருகிறது.

தியாகத்தை அரசு அலட்சியப் படுத்தலாம், ஆனால் உண்மையான தேச பக்தர்கள் தியாகிகளை என்றென்றும் போற்றுவார்கள், அவர்களின் தியாகம் வீண் போக அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்கான உதாரணம் த.மு.எ.க.ச  நடத்தும் நிகழ்வுகள்

No comments:

Post a Comment