நாகையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் அமர்வில் நெகிழ்ச்சியூட்டிய இரு நிகழ்வுகள் பற்றி பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.
கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு எதிராக போராடியதால் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் நாவலன் வெட்டிக் கொல்லப்பட்டார். மாநாடு அவரது குடும்பத்தினரை கௌரவித்தது. நாவலனின் தந்தை தோழர் ஜகன்னாதனும் ஒரு கட்சி உறுப்பினர்தான் என்றும் என் மகன் இப்போது கொல்லப்பட்டாலும் எங்கள் குடும்பம் எப்போதும் போல் கட்சியில் உறுதியாக நிற்போம் என அவர் கூறினார் என்று தோழர் ஜி.ஆர் சொன்ன போது உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.
தோழர் பிரகாஷ் காரத் அவர்களுக்கு சால்வை போர்த்துகையில் உடைந்து போய் கதறத் தொடங்கினார்கள். அப்போது அவையிலிருந்து “தோழர் நாவலனுக்கு வீர வணக்கம், வீண் போகாது, வீண் போகாது நீங்கள் செய்த தியாகம் வீண் போகாது” என்ற முழக்கங்கள் இயல்பாகவே ஒலிக்கத் தொடங்கியது. அந்த முழக்கங்களைக் கேட்ட தோழர் நாவலனின் மனைவி கண்ணில் வழியும் நீரோடு கையை உயர்த்தி செங்கொடிக்கு ஜே என்ற போது அந்த முழக்கத்திலே முதிய தாயும் தந்தையும் இணைந்து கொண்ட போது எழுந்த உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அதே போல நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டி அராஜகக் கும்பலை எதிர்த்து போராடியதற்காக படுகொலை செய்யப்பட்ட தோழர் வேலுச்சாமியின் சகோதரனும் மகனும் மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர். அந்த ஐந்து வயது பச்சிளம் பாலகன் அனைவரையும் பார்த்து புன்னகைச் சிரிப்பை உதிர்த்த போது அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஒரு கணம் கலங்கித்தான் போனார்கள்.
மனதை இளக வைத்தது இவ்விரு நிகழ்வுகளும்.
ராமன் அவர்களே! மடிக்கணினியில் "அவன் சிரித்தான்....." படித்தபோது கண்ணிர் வடிந்தது.அருகில் இருந்தமனைவி "என்னாச்சு?" என்று பதறியபடி கேட்டார். அவரைப்படிக்கச்சொன்னேன். படித்தார். அவரும் கண்ணீர் விட்டார். அருமையான பதிவு தோழர்---காஸ்யபன்
ReplyDelete