இன்று காதலர் தினம். ஒரு புறத்தில் மலர் விற்பனை, வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் விற்பனை, குறுஞ்செய்திகள், மின் அஞ்சல்கள், இத்யாதி, இத்யாதி என பரபரப்பாய் நடந்து கொண்டிருக்கிறது. மறு புறத்தில் காதலர் தினத்தை அனுமதிக்க மாட்டோம் என ஆர்ப்பாட்டங்கள், எல்லை மீறும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை எச்சரிக்கை என்று நடந்து கொண்டிருக்கிறது. சிவப்பு ரோஜா காதலைத் தெரிவிக்க, மல்லிகை மலர் சமாதனத்தை உருவாக்க என்ற புதிய அறிவியல் கண்டு பிடிப்பு வேறு இந்த ஆண்டு வெளியாகி உள்ளது. மலர் பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தால் சரி.
இன்னொரு சுவாரசியமான கதையும் பார்த்தேன். ரூம் போட்டு யோசித்த ஒரு ஜோசியர், காதலைச் சொல்ல நல்ல நேரம் எது? எந்த ராசிக்காரர்கள் எந்த இடத்தில் காதலை தெரிவிப்பது நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள். காதலர்களுக்கு நல்லதோ இல்லையோ, ஜோசியர்களுக்கு இனி யோகம்தான். காதலிப்பவர்கள் காதல் கடிதம் எழுதும் முன் ஜாதக நோட்டை எடுத்துக் கொண்டு ஜோசியர்கள் முன் நிற்கப் போகின்றார்கள்.
காதலர் தினம் தேவையா இல்லையா என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. எந்த ஒரு உணர்வுகளையும் தெரிவிக்க குறிப்பிட்ட ஒரு நாள் என்பது அவசியமில்லை. சில தினங்கள் வரலாற்று முக்கியத்துவம் படைத்தவை. உழைக்கும் மக்களின் உரிமைக்கான மே தினம், பெண்களின் உரிமைகளுக்கான மகளிர் தினம், அடிமைப் பட்டுக் கிடந்த நாடுகள் சுதந்திரம் பெற்ற தினம், உலகின் எதிரியாய் விளங்கிய ஹிட்லர் வீழ்த்தப்பட்ட தினம் ஆகியவை எல்லாம் முக்கியமானவைதான். அதோடு இன்று ஊடகங்கள் உருவாக்கி வரும் புதிய புதிய தினங்களை ஒப்பிடக் கூடாது. இந்த நவீன புதிய தினங்கள் எல்லாம் வணிக நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது.
காதலர் தினத்தை இரு பால் பிரிவினரின் உணர்வுகள் என்று மட்டும் ஒதுக்கி வைத்து விட வேண்டாம். அன்பு செலுத்துவதும் நேசிப்பதும், அந்த நேசத்தை வெளிப்படுத்துவதும் காதல்தான். அப்படி காதலை வெளிப்படுத்த எத்தனையோ விஷயங்கள் உள்ளதாய் நான் உணர்கின்றேன்.
அமைதியை காதலிப்போம். ஆதிக்கம் செலுத்துவதை கைவிட்டால் அங்கே அமைதி உருவாகும். அது நாடுகளுக்கும் பொருந்தும், சில பெரிய மனிதர்களுக்கும் பொருந்தும். ஏன் நமது குடும்பத்திற்குள் கூட கைவிட வேண்டிய அம்சம் இது. உலகெங்கும் போர்களும், வன்முறையும் கலவரங்களும் இல்லையென்றால் இந்த பூமியே ஒரு அழகிய பூங்காவன்றோ! அமைதியை காதலிப்போம்.
இல்லாதவரைக் காதலிப்போம். இந்த பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் அனைவரும் கொஞ்சம் வசதியானவர்கள்தான். சொந்தமாக கணிணி வசதியும், இணையதள இணைப்பும் வைத்துள்ளவர்கள்தான். சொந்தமாக இல்லையென்றாலும் கூட ஒரு மணி நேரத்திற்கு இருபது ரூபாய் ப்ரௌசிங் சென்டருக்கு செலவழிக்கும் வாய்ப்புள்ளவர்கள்தான். மாண்டெக்சிங் அலுவாலியா நிர்ணயித்த வறுமைக் கோட்டிற்கு மேலாக உள்ளவர்கள்தான். நம்மை விட வறியவர்களை நேசிப்போம், நம்மால் இயன்றதை அவர்களுக்கு அளித்திடுவோம். விரயமாய் செலவழிக்கும் தொகையில் சிறு பகுதியையாவது அடுத்தவருக்கு அளித்திடுவோமே!
பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்று பாட்டில்களிலும் கேன்களிலும்தான் கிடைக்கிறது. நாளை சுவாசிப்பதற்கான காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் உருவாகலாம். ஏற்கனவே மாசுபட்ட பூமியை மேலும் மாசு படாமல் பாதுகாப்போம். சுற்று சூழல் பாதுகாப்பு என்ற அம்சத்தை காதலிப்போம்.
இன்னும் காதலிக்க எவ்வளவோ இருக்கிறது.
நல்ல புத்தகங்களை,
நல்ல திரைப்படங்களை,
காதிற்கு இனிய இசையை,
கருத்தில் நல்லதான கவிதைகளை,
மக்களுக்கு நல்லது செய்யும் மனிதர்களை, இயக்கங்களை,
எல்லாவற்றிலும் நேர்மையை,
காதலிப்போம்.
அனைவரும் காதலிப்போம். நல்லது அனைத்தையும் காதலிப்போம்,
இன்று மட்டுமல்ல,
என்றென்றும்.
இனைறைய உலகில் அனைவருக்கும் தேவையான அருமையான கருத்துக்கள் நண்பரே!
ReplyDelete