தமிழகம் பல்வேறு ஊழல்களைக் கண்டிருந்தாலும் இது சற்று வித்தியாசமான ஒன்று. ஊழல் செய்யப்பட்டதிலோ, அரசு கஜானாவிற்கு வர வேண்டிய பணம் பறி போனதிலோ வித்தியாசம் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை பாதுகாக்க சொன்ன காரணம், இடையில் வந்த தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவைதான் வித்தியாசமானது.
தமிழக முதல்வராக முதல் முறையாக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றபோது அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. அதிலே முக்கியமான ஒன்று டான்சி நில ஊழல். தமிழக அரசு நிறுவனமான டான்சி (தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம்) ஒரு காலத்தில் லாபமீட்டும் நிறுவனமாக இருந்தது. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நொடித்துப்போனது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் டான்சிக்கு சொந்தமான நிலம், ஜெயலலிதாவும் அவரது முன்னாள் ( தற்போதைய நிலவரப்படி) உடன் பிறவா சகோதரி சசிகலாவும் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்ப்ரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.
ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ஏழு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தாலும் மூன்று லட்ச ரூபாய் என்று நிர்ணயம் செய்து விற்கப்பட்டதாலும், அதனால் முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தப்பட்டதிலும் அரசுக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறப்பு தனி நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று சொல்லி ஜெ, சசிகலா மற்றும் பலருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கியது.
இந்த நிலம் தொடர்பான கோப்பில் உள்ள கையெழுத்து என்னுடையதே கிடையாது என்று ஜெ தடாலடியாக சாதித்து விட்டார். டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதால் தவறு எதுவும் நடைபெறவில்லை என்று உயர்நீதி மன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைக்கிறேன் என்றும் ஜெ கூறினார்.
வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போனது. இதிலே தவறு என்பது நடத்தை விதிகளுக்கு எதிராக ஜெயலலிதா நடந்து கொண்டார். இதனை சட்டப்படியான தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும் தார்மீக அடிப்படையில் தவறு. ஒரு சாதாரண ஊழியனுக்கு உள்ள பொறுப்பு கூட முதலமைச்சருக்கு இல்லாதது வருத்தத்திற்குரியது.
ஜெயலலிதா, நிலத்தை திருப்பித் தருவது மட்டும் போதுமானதல்ல. நடந்த தவறுக்காக வருந்த வேண்டும், நன்னடத்தை விதிகளுக்கு மாறாக, சுய நலமாக நடந்து கொண்டது சரியா, சந்தேகம் வருவது போல் நடந்து கொண்டது சரியா என அவரது மனசாட்சிக்கு பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. அப்படியெல்லாம் செய்தாரா என்பது கூட ஜெ வின் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும்.
எங்கள் சங்க மாத இதழில் வரும் ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக எழுதியது
தங்களுக்கு ஒரு விருது வழங்கி உள்ளேன் .. தயவு செய்து பார்க்கவும்
ReplyDeleteபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.