Thursday, July 31, 2025

விடை பெறும் வேளை இது



வாழ்க்கைப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். முப்பத்தி ஒன்பது வருடம், மூன்றரை வருடங்கள் பணி செய்து இன்று எல்.ஐ.சி நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். 

16.07.1986 அன்று பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்து உயர் நிலை உதவியாளராக ஓய்வு பெறுகிறேன். சங்கப்பணி என்ற திசை வழியில் பயணம் அமைந்ததால் பதவி உயர்வுகளை நாடவில்லை. திருமணம் ஆன போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு என்னால்  அவரால் மாறுதல் பெற இயலவில்லை. இருவரும் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பு இருந்த வேலூருக்கு என்னால் உதவியாளராக மாறுதல் பெற இயலாது. உயர்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றால்தான் சாத்தியம் என்பதால் அந்த பதவி உயர்வு பெற்றேன். என் மனைவி ஏன் நெய்வேலி வர வேண்டும்? நான் ஏன் அவர் பணியாற்றிய கும்பகோணத்திற்கு சென்றிருக்கக் கூடாது> இந்த சிந்தனை நீண்ட காலத்திற்கு பிறகே வந்தது. ஆணாதிக்க் சிந்தனையின் வெளிப்பாடுதான் மனைவியை மாறுதல் நாட வைத்தது என சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன்.

எல்.ஐ.சி பணி மூலம் என்ன பெற்றேன்?

மிக முக்கியமானது சமூக அந்தஸ்து. கல்லூரி தேர்வு முடிவு வந்த ஆறாவது மாதத்திலேயே வேலையில் சேர்ந்து விட்டேன். பார்வைகளே சொன்னது வித்தியாசத்தை. வேலைக்கு செல்பவன் என்று கிடைக்கும் மரியாதையை விட எல்.ஐ.சி வேலை எனும் போது ஒரு படி மேலேதான்.

பொருளாதார தன்னிறைவு  என்பது பொருளாதார வளம் என்ற அளவிற்கு முன்னேற்றம் கிடைத்தது. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கையை எடுத்துச் செல்லும் வாய்ப்பை, நம்பிக்கையை எல்.ஐ.சி அளித்துள்ளது.

முன்பெல்லாம் பல நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பற்றி மகாத்மா காந்தி சொன்னதை எழுதி வைத்திருப்பார்கள். அதை வாசகமாக பார்க்காமல் வாழ்க்கை முறையாக பார்க்கும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி. இங்கே கற்றுக் கொண்ட பொறுப்புணர்வு வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

எல்.ஐ.சி எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பு எல்.ஐ.சி க்கு முன்பே தோன்றி எல்.ஐ.சி தோன்ற காரணமாக இருந்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். 

எல்.ஐ.சி பற்றி நான் முன்னர் சொன்னது அனைத்தின் பின்னணியிலும் எங்கள் ஏ.ஐ.ஐ.இ.ஏ உள்ளது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம். இனி அவசரம் அவசரமாக ஓடி பத்து மணிக்கு ரேகை வைக்க அவசியம் கிடையாதல்லவா!

இன்று நான் பெற்ற எல்லாமே பொருளாதார வளம், ஞாஅம், மிகப் பெரும் அனுபவம், புரிதல், தோழர்கள் பட்டாளம் என எல்லாமே எங்கள் சங்கம் தந்ததுதான். எந்த சவாலாக இருந்தாலும் சந்திக்கும் உறுதியும் கூட.

02.05.2025 அன்று நடந்த மோசமான சாலை விபத்தில் இரண்டு இடங்களில் எலும்பு  முறிந்து அறுவை சிகிச்சைநடந்த வேளையில் இந்த நாளில் பணியில் மீண்டும் சேர்ந்து ஓய்வு பெறுவேனா அல்லது ஸ்டெர்ச்சர் அல்லது வீக் சேரில் கடைசி நாள் மட்டும் வந்து செல்வேனா என்ற கேள்வி இருந்தது. 

கடந்த மாதமே பணியில் இணைய முடிந்ததென்றால் அதற்கு சங்கம் ஊட்டி வளர்த்த உறுதிதான் காரணம்.

இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறேன்.

களத்திற்குச் செல்ல உடல்நிலை உடனடியாக அனுமதிக்காது. அதனால் நிலுவையில் உள்ள எழுத்துப் பணிகளுக்கு முன்னுரிமை.

இங்கே வந்து போகும் நேரமும் அதிகமாகும், இயல்பாகவே . . .


Tuesday, July 29, 2025

எங்கள் மனதில் தேசம். உங்கள் மனதில் ?????

 எங்கள் மனதில் தேசம் உள்ளது .

உங்கள் மனதில் தேர்தல் உள்ளது .



- ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் எனது உரை
அவைத் தலைவர் அவர்களே உங்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது. வீழ்ந்த ஒவ்வொரு உயிரும் ஏற்படுத்திய வலியும் வேதனையும் ரணமாய் நிற்கிறது.
அந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா தொடுத்த எதிர்வினை அதுசார்ந்த விவாதத்தை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இந்த அவையிலே நடத்துவதற்கு எதிர்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த முயற்சி இன்றைக்கு நேற்றைக்கு அல்ல , கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியை எதிர்கட்சிகள் பொறுப்புணர்ச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாதங்களாகவும் பொறுப்புணர்ச்சி என்றால் என்ன என்ற விலை கேட்பதைப் போல ஆளுங்கட்சித் தரப்பு தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கிறது. அவற்றினுடைய ஒரு சான்று தான் இந்த அவையிலே இப்போதும் நடந்திருக்கிறது என்பதை முதலில் நான் பதிவு செய்கிறேன்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசினார். 2016 ஆம் ஆண்டு உரி தாக்குதல் நடந்த போது ஆளுங்கட்சி என்ன சொன்னதோ , 2019 ஆம் ஆண்டு பதன்கோடு தாக்குதல் நடந்த பின்னணியில் ஆளுங்கட்சி என்ன சொன்னதோ அதையே தான் இன்றைக்கு மீண்டும் இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் பேசிய இவ்வளவிற்கும் பிறகு இந்தத் தீவிரவாதத் தாக்குதல் பகல்ஹாமில் எப்படி நடந்தது ? தாக்குதல் துவங்கி ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு தான் உதவியோ , தகவலோ அரசுக்கு கிட்டியிருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது . இது மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. இராணுவத்தின் தோல்வி , CRPF யினுடைய தோல்வி , ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினுடைய தோல்வி என மூன்றினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்கப் போவது ? அதிகாரிகளா ? அமைச்சரா ? ஒரே தேசம் ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்கிற மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதற்கு பொறுப்பேற்கப் போகிறாரா ? யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் ?
நீங்கள் உங்கள் ஆட்சிக்கு முன்புவரை நடந்த எல்லா சம்பவங்களுக்கும் நேரு துவங்கி மன்மோகன்சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என சொல்லுவீர்களே , இப்போது நீங்கள் யாரைக் கையைக் காட்டப் போகிறீர்கள் என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம் . இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்த போது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்கள் தனது பயணத் திட்டத்தைக் குறுக்கிக் கொண்டு உடனடியாகப் புறப்பட்டார்.
நேரடியாக அவர் பகல்ஹாமிற்கு போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. நேரடியாக காஷ்மீருக்குப் போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் நேரடியாக பீஹாரினுடைய தேர்தல் பேரணிக்குப் போனார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும் தான் இருக்கிறது என்பதை இந்த நாடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் கூட்டுங்கள் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். பிரதமர் என்ன சொன்னார் ? ஜனநாயகத்தின் கோவில் இந்த நாடாளுமன்றம் என்று சொன்னார். சரி கோவிலுக்கு வாங்க என நாங்கள் கூப்பிடுகிறோம். கோவிலுக்கு வர இவ்வளவு பயப்படுகிற ஒரு பிரதமரை நீங்கள் கொண்டிருப்பது சரியா ? நியாயமா ? ஏன் அதுவும் சிறப்பு வழிபாட்டிற்கு வாருங்கள் , சிறப்பு கூட்டத் தொடருக்கு வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.
இங்கே வராமல் பீஹாருக்குப் போய் பிரதமர் பேசுகிறார் “ கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நாங்கள் நடத்துவோம்” என்றார். கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நடத்துவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நடத்தினார் , யார் நடத்தினார் ? அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தினார் கற்பனையே செய்ய முடியாத ஒரு தாக்குதலை. இந்தப் பிரச்சனையில் அதிகமாகத் தோல்வி அடைந்திருப்பது உள்துறை அமைச்சகமா ? அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமா? என்ற விவாதத்தை இந்த அவை நடத்திக் கொண்டிருப்பது எதிர்கட்சிகளாகிய நாங்கள்.
சர்வதேச நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. அதன் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் இருக்கிறது . அதில் ஒரு நாடு கூட இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் நீங்கள் என்பதை இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல பாலஸ்தீன பிரச்சனையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துப் போடாதது, ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது , வர்றீங்க மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் இங்கே குற்றஞ்சாட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனக்கு முன்னாள் பேசிய மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குச் சொல்வதற்கு அனைத்துக் கட்சிக் முழுசா நீங்கள் அனுப்பினீர்கள். எதிர்கட்சிகளெல்லாம் அதில் பங்கெடுத்தார்கள். என்ன விசித்திரம் தெரியுமா ? உங்களால் கடந்த காலங்களில் யாரெல்லாம் தேச துரோகிகள் என்று சொன்னீர்களோ , அந்த தேசத்துரோகிகளில் பலர் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால் எங்களுக்கு முக்கியம் தேசம் தான். அதுமட்டுமல்ல ஒவ்வொரு குழுவிலும் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய எம்.பிக்கள் பங்கெடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இஸ்லாமிய எம்பிகளுக்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்த முதல் விசயம் இது தான் . அதைக் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சிகளாகிய நாங்கள்.

நேற்றைய தினம் நம்முடைய மரியாதைக்குரிய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து சோழர்களுடைய பேரரசை நினைவுபடுத்தி சோழர்கள் நடத்திய போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளன் என்ற முறையில் சொல்கிறேன் , இந்தியாவில் இருந்த ஒரு பேரரசு கடல்கடந்த வெற்றியைப் பெற்றது என்றால் அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழப் பேரரசு மட்டும்தான்.

அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா ? ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ தான் நடத்திய எல்லா போரையும், தான் ஆரம்பித்த எல்லா போரையும் அவன் தான் முடித்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைக்கவில்லை. '

மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை முடித்து வைத்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பதை 25 முறை சொன்னார். ராஜராஜன் ஆரம்பித்த போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜனும் , ராஜேந்திரச் சோழனும்.

எனவே இன்றைக்கும் கூட இந்த அவையில் நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் விவாதத்தை ஆரம்பித்து பேசினார் . ராமன் எப்படி இலங்கையின் மீது படையெடுத்து ராவணனைக் கொன்றானோ அதேபோல இந்தப் படையெடுப்பை பிரதமர் நடத்தியிருக்கிறார் என்று சொன்னார். இன்னொரு அமைச்சர் எழுந்து சொல்கிறார் , என்ன சொன்னார் ? சிசுபாலனுடைய தலையை வெட்டுவதற்கு சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியதைப் போல பிரதமர் படைகளைப் பயன்படுத்தினார் என்று சொல்கிறார். "ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள்களை எல்லாம் உங்கள் தோல்விகளை மறைக்க இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண்படாதா? என்பதை மிக வேதனையோடு நாங்கள் இங்கு கேட்கிறோம்.

மாண்புமிகு பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பேச்சில் ஒருமுறை கூட மறந்துகூட கர்னல் சோஃபியா குரேஷிக்கு ஏற்பட்ட அவமதிப்பை , மத்திய பிரதேசத்தின் உங்கள் எம்பி விஜய் ஷா அவமரியாதையாக பேசியதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் ?

அதேபோல பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரை ஓட்டியான அதில் ஷா. அதில் ஷாவின் வீரத்தைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவில்லை. ஒரு அதில் ஷா மட்டுமல்ல தீவிரவாதத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அதில் ஷாக்கள் இருக்கிறார்கள் என உணர்த்தியது காஷ்மீர் மக்கள் . அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒருவார்த்தை நீங்கள் பேசவில்லை .

வேதனையோடு நாங்கள் சொல்கிறோம் . மதரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பதுதான் இந்தியா சொல்கிற செய்தி. அது தான் இந்தியா . அந்த இந்தியாவை உங்களால் ஒருபோதும் பிளக்கவோ, வெறுக்கவோ முடியாது .
நாங்கள் வெல்வோம் !

மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் முழங்கியது.

மோடி எனும் தெய்வக்குழந்தையையா?

 


ஏன் மேலே உள்ள படம்?

கீழேயுள்ள படத்தை பாருங்கள்

இப்படி கர்ப்பகிரகத்தில் புகைப்படம் எடுக்கலாமா?
ஆகம விதி அனுமதிக்கிறதா?
பல கோவில்கள் போன் எடுத்துச் செல்வதையே தடை செய்துள்ள போது இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?

என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். அந்த கேள்வி நியாயம் போல கூட தோன்றலாம்.

அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

"ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் உள்ள ஒருவனால் பேட்டரி இல்லாவிடில் கூட அலைபேசி பேச முடியும்"  என்பது போல தாய் தந்தை இல்லாமல் தெய்வக்குழந்தையாக அவதாரம் எடுத்த ஒருவருக்கு எங்கும் எந்த விதியும் பொருந்தாது. 


Sunday, July 27, 2025

பாவம்யா மோடியின் கருப்புப்பூனை!

 


நேற்று மதியம் சேனல்களை மாற்றி வருகையில் ஏதோ ஒரு சேனலில் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கருவறையில் தியான நாடகம் நடத்தியதை (இது பற்றி தனியாக எழுத வேண்டும்) காண்பித்துக் கொண்டிருந்தது. இன்னொரு சேனலோ இளைய ராஜாவின் பாடலை கண்ணை மூடி ரசிப்பது போல சீன் போட்டு  தப்புத் தாளம் போட்டுக் கொண்டிருந்த கொடுமையை காண்பித்தது.

அப்போது பின்னால் நின்றிருந்த கருப்புப் பூனையையும் காண்பித்தார்கள்.

உண்மையிலேயே அவர் பாவம்!




மோடி செய்யும் கோணங்கித்தனம், சேஷ்டைகள், கோமாளித்தனங்கள் ஆகியவற்றைப் பார்த்தாலும் அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தலையில் அடித்துக் கொள்ள முடியாது. சிரிக்க முடியாது. தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதை மறைக்கத்தான் கருப்புக் கண்ணாடி அணிந்துள்ளார் போலும்!

Saturday, July 26, 2025

மோடி வஞ்சனை செய்யலீங்க! ஆமாங்க

 


சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட பதிவையும் காணொளியையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்திரா காந்தி 1966-1977 மற்றும் 1980-1984 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்த காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தொடங்கப்பட்டு, ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருந்தது. 1983இல் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா, சோவியத் யூனியனின் சோயூஸ் T-11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணித்தார். இது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்.

ராகேஷ் ஷர்மா விண்ணில் இருந்தபோது, இந்திரா காந்தி அவருடன் தொலைபேசி மூலம் உரையாடினார். இந்த உரையாடல் இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முக்கியத்துவத்தையும், தேசிய பெருமையையும் வெளிப்படுத்தியது. இந்திரா காந்தி, ராகேஷ் ஷர்மாவிடம், "விண்ணில் இருந்து இந்தியா எப்படி தெரிகிறது?" என்று கேட்டார். அதற்கு அவர், "சாரே ஜஹான் சே அச்சா" (எல்லா உலகங்களிலும் மிகச் சிறந்தது) என்று பதிலளித்தார்.
மோடி விண்வெளியில் இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் உரையாடு காணொளியை உற்சாகமாக பார்க்க தொடங்கினேன், அதில் மோடி நீ உன்னுடன் கொண்டு சென்ற கேரட் ஹல்வாவை சாப்பிட்டாயா என்று பேசியது, லேப்டாப்பை மூடி வைத்து விட்டு வேறு வேலைகள் நிறைய கிடக்கும் என்று இடத்தை காலி செய்தேன்.


ஏன் தோழர்! மோடி யார்? அவர் படிப்பு என்ன என்பதெல்லாம் நமக்கு தெரியாதா என்ன? அவர் என்ன நேருவா? இந்திராவா? மொரார்ஜியா இல்லை வி.பி.சிங்கா? அல்லது ஐ.கே.குஜ்ராலா? அவர் என்ன வச்சுகிட்டா வஞ்சனை செய்யறாரு! அவரது மூளை எனும் களிமண் சட்டியில் அவ்வளவுதாங்க இருக்கு!!!!!!

..

Friday, July 25, 2025

அன்புமணியால் சட்டம் ஒழுங்கு கெடும் - ஐயா

 


அன்பு மணி ஏதோ யாத்திரை போகிறாராம். அப்படி போனால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என்று பெரிய ஐயா போலீஸில் புகார் சொல்லியுள்ளார். தன் பெயரை இனிஷியலைத் தவிர வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

இந்த காமெடிச்சண்டை போரடிக்கத் தொடங்கி விட்டது.  "கண்கள் பணித்தது, இதயம் கனத்தது, கனி இனித்தது" சீனை சீக்கிரமாக அரங்கேற்றுங்கள்.

Thursday, July 24, 2025

இல்லாத நாட்டுக்கு போலி ......

 



மேற்கு ஆர்டிகா,

சபோர்கா,

பௌல்வியா,

லோடோனியா

ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளீர்களா? குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டுள்ளீர்களா?

நான் இன்றுதான் கேள்விப்பட்டேன், அந்த பெயர்களில் எந்த நாடும் கிடையாது என்றும் அந்த நாடுகளின் தூதர் என்றபெயரில் ஒருவன் போலி தூதரகம் நடத்தி மோசடி செய்து வந்துள்ளான் என்று இன்றுதான் கேள்விப்பட்டேன்.

உபி மாநிலம் காஸியாபாத்தில் ஒரு ஆடம்பர மாளிகையில் ஹர்ஷவர்த்தன் ஜெயின் என்பவன் தன்னை தூதராக காண்பித்துக் கொண்டு "வெளிநாடுகளில் வேலை, ஹவாலா ஆகிய மோசடிகளை செய்து வந்துள்ளான். நேற்று அவன் கைதாகியுள்ளான்.

பழைய போலிச்சாமியார் சந்திராசாமி, போபோர்ஸ் பீரங்கி தரகர் அட்னான் கஷோகி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவன் என்று சொல்லும் ஊடகங்கள் இப்போது அவனுக்கு பின்புலம் யார் என்றோ எத்தனை வருடங்களாக இந்த மோசடியை செய்து வருகிறான் என்பதை மட்டும் சொல்லவில்லை.

ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த சில கமெண்டுகள் சுவாரஸ்யமானவை.

இந்த முறை குஜராத்தை மிஞ்சி விட்டது உ.பி.

உ.பி யில் புத்திசாலிகளும் கூட இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

காஸியாபாத் மக்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. குஜ்ராத்திகள் கூட சிந்திக்காத மோசடி இது!

சரி, இதில் மொட்டைச்சாமியார் பங்கு என்ன?