Saturday, August 5, 2023

இறக்குமதித் தடை யாருக்காக டிமோ?

 


நேற்று காலை பார்த்த செய்தி.

லேப்டாப் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அந்த விதிகள் உருவாகும் வரை இறக்குமதி த்டை செய்யப்படும் என்பதுதான் அச்செய்தி.

அப்படியொன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக செயல்படுகிற ஆள் டிமோ கிடையாதே என்று யோசனை வந்தது.

பிறகுதான் தெரிந்தது.

அம்பானி “ஜியோபுக்” என்ற பெயரில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை உருவாக்கி விற்பனைக்கு வந்து விட்டது.

அம்பானிக்காக பன்னாட்டுக் கம்பெனிகளைக் கூட முறைத்துக் கொள்ளலாம்.

நண்பேன்டா . . .

 

பிகு: இன்னும் ஒரு நண்பேன்டா சம்பவம் மாலை . . .

Friday, August 4, 2023

நீயெல்லாம் ஐ.பி.எஸ் ஆ இருந்து?

 


கையில காசே வச்சுக்கக் கூடாதுன்னு டிமோ சொல்றாரு. நீயோ பர்ஸ்ல 25,000 ரூபாய் வச்சுக்கிட்டு அலையறே! நண்பர்கள் கொடுக்கற காசுல பிழைப்பு நடத்தறவனுக்கு எதுக்கு நாலு பேங்கில அக்கவுண்டு? அந்த பர்ஸை கூட பாதுகாப்பா வச்சுக்க துப்பில்லை, நீயெல்லாம் ஐ.பி.எஸ் ஆபிசரா இருந்து என்ன கிழிச்ச?

தன்னுடைய பர்ஸையே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாத ஆள் மாநிலத் தலைவராகவும் மாநிலத் தலைவரின் பர்ஸையே திருடிக் கொண்டு போகிறவரை உறுப்பினராகவும் கொண்ட ஒரே கட்சி பாஜகதான்.

 


பிகு: திருடப்பட்டது ஆட்டோக்காரனின் பர்ஸ்தானாம்.  புகார் கொடுத்தவர் பாஜகவிலிருந்து ரஜினி கட்சிக்கு டெபுடேஷனில் வந்து மீண்டும் அங்கே சென்ற அர்ஜூன் மூர்த்தி.

Thursday, August 3, 2023

ஆட்டுக்காரா, டிமோ அவ்ளோ கலீஜா?

 


ஆட்டுக்காரனின் ட்வீட்டும் அதற்கு நான் போட்ட பின்னூட்டமும் கீழே உள்ளது. 


ஆட்டுக்காரன் ஒரு தத்தி என்பதற்கு இந்த உதாரணம் லட்சத்தி பத்தாயிரமாவது சாட்சி.

இதை எழுதும் வேளையில் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.

டிமோவின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது என்று மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாடெல்லா சொன்னதும், 

நேற்று இங்கே அந்த சாத்தான் வந்துள்ளது. அதன் கந்தக நாற்றம் இன்னும் அடிக்கிறது என்று ஐ.நாவில் ஜார்ஜ் புஷ் பற்றி ஹூயுகோ சாவேஸ் சொன்னதும் நினைவுக்கு வந்தது. 

ஹரியானா கலவர அரசியல்

 


ஹரியானாவில் கலவரம். இதுவரை எட்டு பேர் இறந்து போயுள்ளார்கள். அமைதி திரும்புவதாக தெரியவில்லை.

காவிகளின் கலவரப்படைகளான விஸ்வ இந்து பரிஷத்தும் பஜ்ரங் தள்ளும் நூ என்ற ஊரில் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்துள்ளது. பேரணியின் போதும் அதற்கு முன்பும் இந்த கயவர் கூட்டம் ஏராளமான வெறியேற்றும் காணொளிகளை பரப்பியதாகவும் இஸ்லாமியர்களில் சிலரும் அதே போன்ற வெறியேற்றும் காணொளிகளை எதிர்வினையாக பரப்பினர் என்றும் செய்திகள் சொல்கிறது. கலவரம் எங்கே வெடித்தது? உடனடிக் காரணம் என்ன என்பதில் எல்லாம் குழப்பம் நீடிக்கிறது.

இஸ்லாமியர்களின் திட்டமிட்ட சதி என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பாஜக முதல்வர் கட்டார், காவிக்கயவர்களின் வெறுப்புப் பேச்சுக்கள், வெறுப்பு முழக்கங்கள் பற்றி பேச மறுக்கிறார். அப்படி பேசினால் அந்தாள் பதவி தப்பாது என்பது வேறு விஷயம்.

ஒரு கோவிலுக்குள் 3000 பக்தர்களை இஸ்லாமியர்கள் பணயக் கைதிகளாக அடைத்து வைத்திருந்தார்கள் என்று சொல்கிறார் உள்துறை அமைச்சர் அனில் விஜ். அதெல்லாம் சுத்த அபத்தம். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சிவனின் சக்தியையே அவமானப்படுத்துகிறார் என்று மறுக்கிறார் அந்த கோவிலின் தலைமை பூசாரி. உள்துறை அமைச்சரின் முகத்தைப் பார்த்தாலே கண்களில் கபடம் தெரிகிறது,


 

பேரணி சென்றவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன, அவர்கள் வெறியூட்டும் வகையில் நடந்து கொண்டார்கள் என்று துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா சொல்கிறார்.

 இப்படி ஏராளமான முரண்பாடுகள்.

 ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

 பக்கத்து மாநிலங்களில் தேர்தல் வரும் சூழலில் கலவரங்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் அயோக்கியத்தனமாக ஹரியானா கலவரத்தை பாஜக தூண்டி விட்டுள்ளது. பயன்படுத்துகிறது.

Wednesday, August 2, 2023

தோழர் சுவாமி - சுற்றறிக்கையையும் தாண்டி.

 



தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்கள் 31.07.2023 அன்று எல்.ஐ.சி பணியை நிறைவு செய்துள்ளார்.

இந்த வலைப்பக்கத்தின் வாசகர்களுக்கு அவர் நன்கு அறிமுகமானவர்தான். அவருடைய பல சிறப்பான கட்டுரைகளை இப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவருடைய பணி நிறைவை ஒட்டி எங்கள் வேலூர் கோட்டச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.





 

சுற்றறிக்கையையும் தாண்டி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குத்தான் இந்த பதிவு.

 


தோழர் சுவாமிநாதனை எப்போது முதல் முறையாக பார்த்தேன்?

 

1990 ல் கட்டாக்கில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 14 வது பொது மாநாடு. அம்மாநாட்டில் தமிழகத்தின் ஒரு மூத்த தலைவர், இன்னமும் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் உள்ளவர், பேசுகிற போது  அவர்கள் கோட்டத்தில் செய்யப்பட்ட பல பணிகள், இயக்கங்கள் ஆகியவற்றைப் பற்ற் புள்ளி விபரங்களாக அடுக்கி கரவொலியை அள்ளிக் கொண்டிருந்தார். மறு நாள் காலை உணவு நேரத்தில் தட்டுக்களை ஏந்தி சென்று கொண்டிருந்த போது அந்த தலைவரை ஒருவர் “our மதுரை சிட்டி இஸ் ஹேவிங் அ பாபுலேஷன் ஆப் டென் லேக்ஸ்” என்று சொன்னால் கூட கை தட்டுவார்கள் என்று சொல்லி கலாய்த்துக் கொண்டிருந்தார். அவர்தான் தோழர் சுவாமிநாதன். தோழர்களுக்குள் தலைவர், உறுப்பினர் என்று எந்த இடைவெளியும் இல்லாத அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பதை உணர வைத்த சம்பவம். அப்பொது மனதில் ஒட்டிக் கொண்டவர் தோழர் சுவாமிநாதன்.

 

தூரத்தில் நின்றே பார்த்துக் கொண்டிருந்த அவரின் ஆளுமையை, சிறந்த அமைப்பாளராக, மதுரைக் கோட்டச்சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் தண்டபாணி அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவின் போதுதான் பார்த்தேன்.

 

தென் மண்டல செயற்குழுக் கூட்டங்கள் இரண்டு நாட்கள் நடக்கும் வேளையில் எல்.ஐ.சி பாண்டி பஜார் விருந்தினர் இல்லத்தில் முதல் நாள் இரவு தூங்குவதற்கு நள்ளிரவுக்கு மேல் ஆகி விடும். அவ்வளவு நேரமும் பேச்சு, பேச்சு, பேச்சுதான். அது ஒரு அழகிய நிலாக்காலம். அவரும் மற்றவர்களை கலாய்ப்பார். மற்றவர்களும் அவரை தயவு தாட்சண்யமின்றி கலாய்க்கலாம். திருவனந்தபுரம் தென் மண்டல மாநாட்டின் போது அதிகாலையில் வந்து சேர்ந்த அவரின் ஜோல்னா பையிலிருந்து எலி தப்பித்துப் போன கதையை எல்லாம் இப்போதும் சொல்லி சிரிக்க முடியும்.

 

தென் மண்டலப் பொறுப்பாளரான பின்பே அவருடனான நெருக்கம் அதிகமானது.

 

காதல் திருமணம் செய்து கொண்ட அவர் எங்களிடம் “உங்க டிவிஷனில் காதன் போன்ற உணர்வுகளே கிடையாதா?” என்று வேறு கேட்பார். அதற்கு திரேதா யுகத்திலும்  துவாபர யுகத்திலும் நடந்த சம்பவங்களையெல்லாம் நினைவு படுத்தி பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

 

இயக்கங்கள் சிறப்பாக நடந்தால் மனமாற பாராடுவது, அதுவே இயக்கங்களில் பலவீனம் இருந்தால் மனம் நோகாமல் விமர்சிப்பது என்று இரண்டுமே அவரிடம் உண்டு. புதிய புதிய வடிவங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பவர், செயல் வடிவமும் கொடுப்பவர்.

 

கோபத்தை அவரிடம் கொட்டி விட முடியும். அதை அவர் இதயத்துக்கு எடுத்துச் செல்ல மாட்டார். சமீபத்தில் ஒரு பிரச்சினை நடந்த போது திருச்சியில் ஒரு நிகழ்வில் இருந்தோம். திருச்சியிலிருந்து நான் வேலூருக்கு காரில் திரும்ப, சென்னைக்கு பேருந்து பிடிக்க அவர் உளுந்தூர்பேட்டை வரை உடன் வந்தார். வழி முழுதும் மட்டுமல்லாது உளுந்தூர்பேட்டையில் அவர் இறங்கிய பின்பும் கூட நானும் இறங்கி கோபத்தில் சில வார்த்தைகளை வீசினேன். ஆனால் அவர் டென்ஷனாகவே இல்லை. அதன் பின்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றித்தான் பேசினார். தீர்வுக்காக முயல்கிறார்.

 

எப்போது எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வருவார். அது எத்தனை பேருக்கானது என்று பார்க்க மாட்டார். கோட்டச் சங்கப் பொறுப்பாளர்களுக்கான ஒரு வகுப்பிற்காக ஒரு முறை அவர் வேலூர் வந்தார். கோட்ட அலுவலகம் வாசலில் இரு சக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்த அவர் மீது இன்னொரு இரு சக்கர வாகனம் மோத அவர் குதிகாலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. உடனே ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கே தையல் போட்டு ஓய்வெடுக்கச் சொன்னார்கள். மதியம் வகுப்பை எடுக்க வேண்டிய தோழரும் வந்து விட்டதால் அந்த ஒரு வகுப்போடு நிறுத்திக் கொள்வோம். உங்களை சென்னையில் கொண்டு விட்டு விடுகிறோம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அடிபட்ட காலை ஒரு ஸ்டூலில் வைத்துக் கொண்டே அந்த வகுப்பை எடுத்து விட்டார். அடுத்த வகுப்பும் முடியட்டும், அதன் பின்பு புறப்படுகிறோம் என்றார். நாங்கள் அதற்கு உடன்படவில்லை. நான் உங்களோடு வருகிறேன் என்பதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் பிடிவாதமாக இருந்து நானும் அவரோடு சென்னை சென்றேன். எடுத்துக் கொண்ட பணியை முடிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பிற்கு இது ஒரு உதாரணம்.

 

வேலூர் கோட்டத்தின் சார்பாக நாங்கள் வெளியிட்ட இரண்டு நூல்களையும் கச்சிதமாக எடிட் செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் அழகான அணிந்துரையும் எழுதிக் கொடுத்தார்.

 

“முற்றுகை” நாவலை எழுதி முடித்ததும் அவரிடம்தான் கொடுத்தேன். அதற்கும் அவர்தான் மெருகேற்றும் வேலையைச் செய்தார். அது மட்டுமல்ல பாரதி புத்தகாலயத்தோடு பேசி அதனை வெளியிட வைத்ததோடு மெய்ப்பும் பார்த்தார். அட்டையை இறுதிப்படுத்தும் வேலையை செய்தது அவர்தான். அத்தோடு நிற்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள கோட்டங்களோடு பேசி நூலையும் வாங்க வைத்தார். விசாகப்பட்டிணம் அகில இந்திய மாநாட்டிற்கு முன்பு அச்சிட்டு வருவதை உறுதி செய்தார்.  முற்றுகை வெளியீட்டின் பின்னணியாய் திகழ்ந்த தோழர் சுவாமிநாதன், அந்நூலை வெளியிடும் போதும் பின் வரிசையில்தான் நின்றிருந்தார்.

 


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று அவர் தீவிரமாக  பணியாற்றுவதற்றுவதற்கான தளங்கள் காத்திருக்கின்றன. ஆனாலும் நாங்கள் அவரை அவ்வளவு சுலபமாக விடுவதாக இல்லை.

 

ஆமாம்.

 

எங்கள் கோட்டத்தின் சார்பில் வரும் 17 ஆகஸ்ட் 2023 அன்று வேலூரில் சுதந்திர தின சிறப்புக்கருத்தரங்கில் உரையாற்ற வரவுள்ளார்.

 

Tuesday, August 1, 2023

உளவுத்துறைக்கு இதுவா வேலை?

 

கவிஞரும் ஆசிரியருமான தோழர் சுகிர்தராணி அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். அதானி அளிக்கும் விருதை வேண்டாம் என்று சொல்பவர்களை எல்லாம் விசாரிப்பதுதான் உளவுத்துறையின் வேலையா? இப்படி வெட்டி வேலைகள் பார்த்த காரணத்தால்தான் கார்கிலில் ஊடுறுவல் நடந்து கூட தெரியவில்லை. இப்போதும் அதே நிலைதான் நீடிக்கிறது.



கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் எனக்கு அறிவித்த 'சக்தி விருதில்' அதா* னி முதன்மை நன்கொடையாளர் என்பதை அறிந்து, அவ்விருதை பெறுவதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.

அப்போது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத் துறையால் நான் விசாரிக்கப்பட்டேன். விருதை ஏன் மறுத்தீர்கள்? எவ்வளவு ஆண்டுகளாய் எழுதுகிறீர்கள்? என்னென்ன எழுதியிருக்கிறீர்கள்? எத்தனைப் புத்தகம் எழுதியிருக்கிறீர்கள்? எதைப் பற்றி எழுதுகிறீர்கள்? புத்தகங்களை எங்களுக்கு அனுப்ப முடியுமா? என நிறைய கேள்விகள்..
நான் அச்சப்படாமல் முதலில் கேட்ட கேள்வி.அதா*நிக்கும் அரசுக்கும் என்ன தொடர்பு? அவர் என்ன அமைச்சரா? எம் பியா? அவர் நன்கொடை அளிக்கும் விருதை நான் மறுத்தால், அரசு ஏன் என்னை விசாரிக்க வேண்டும்?
இரண்டாவது, ஒரு விருதை ஏற்பதற்கு எனக்கு உரிமையும் சுதந்திரமும் இருப்பதைப் போலவே, அதை வேண்டாமென்று நிராகரிக்கவும் உரிமையும் சுதந்திரமும் எனக்கு இருக்கிறது. இது என் உரிமையைப் பறிக்கும் செயல் அல்லவா?
மூன்றாவது, நான் எழுதிய புத்தகங்கள் என்னிடம் கையிருப்பு இல்லை.உங்களுக்கு வேண்டுமானால்,பதிப்பகம் தொடர்பு எண் தருகிறேன். புத்தகங்களை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்.
தற்போது ஒன்றிய அரசு, சாகித்திய அகாடெமி விருதை அளித்தால், அதைத் திரும்ப அளிக்க மாட்டேன் என்று எழுத்தாளர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டுமாம்.
நானெல்லாம் சாகித்திய விருது வாங்கும்போது நீங்கள் ஆட்சியிலேயே இருக்க மாட்டீர்கள். எனவே நான் நிச்சயம் சாகித்திய அகாடெமி விருது வாங்கிக் கொள்வேன்.
🙂

தினமலரே நம்பாது.

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். அதிலே ஒருவர் தினமலர் பத்திரிக்கையின் அருமை பெருமையை எல்லாம் ஒருவர் எழுதியுள்ளார். நல்ல காமெடி.

 “இதை இட்லின்னா சட்னியே நம்பாது”  என்ற "சூது கவ்வும்" வசனம் போல தின மலர் பத்திரிக்கையே தன்னைப் பற்றி சொல்லப்பட்டதை நம்பாது.


இந்தக் கூத்தையும் படித்து சிரிக்கவும்😂😂😂😂 (போர் வால் தெரியுமா போர் வால்😄)

‘தினமலர்’ மிக ஆபத்தானது; யாருக்கு?
‘அரசு பள்ளி மாணவ, மாணவியரின் பொதுஅறிவு, வாசிப்புத்திறனை மேம்படுத்த ‘தினமலர்’ நாளிதழை கோவை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வினியோகிக்கலாம்’ என, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம்.
அவ்வளவுதான், இதற்கு முடிவுரை எழுதுவதாக முகநுாலில் மூக்கை நுழைத்த ஆங்கில பத்திரிகை ஒன்றின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர் என்பவர், ‘இதைநான் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்; நடவடிக்கை எடுப்பதாக ‘நல்ல செய்தி’ வந்திருக்கிறது’ என, ஏதோ புரட்சியாளர் போல புளங்காகிதமடைந்து, தனக்குத்தானே சொரிந்து கொண்டு சுகம் கண்டுள்ளார். இவரைப்போலவே இன்னும் பலரும்... ‘திராவிட போர்வால்’கள் சில வலைதளத்தில் வாலையாட்டி, தினமலருக்கு எதிராக வக்கிரமழை பொழிந்துள்ளனர்.
மக்களை எப்போதும் இருட்டிலேயே வைத்திருக்க விரும்பும் உருட்டுப்புலிகளின் குருட்டுக் விழிகளுக்கு, திமுகவின் கட்சிப் பத்திரிகையான முரசொலி, மாணவர்களின் அறிவுக்கண்களைத் திறக்கும் அறிவுக்கேணியாக தெரிவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை; அவற்றை பள்ளிகளில், நுாலகங்களில் தாராளமாக வினியோகிக்கலாம்; ஆனால், தினமலர் மட்டும் கூடாது. காரணம் அது, ஆபத்தானது!
ஆம்...
* அது மாணவர் மத்தியில் தேசப்பற்றை வளர்த்துவிடும்.
* லஞ்ச, ஊழலுக்கு எதிரான மனநிலையை விதைத்துவிடும்.
அதனால்தான், தினமலர் திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறது; தடுக்கப்படுகிறது!
அரசு விளம்பரங்கள் அடியோடு நிறுத்தப்படுகின்றன!
குறிப்பிட்ட ஒரு ஊடகத்தின் மீது நடத்தப்படும் மிக நுட்பமான துல்லிய தாக்குதல் இவை.
இந்த தாக்குதலின் வாயிலாக இவர்கள் சொல்ல வருவது...
* ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டாதே
* அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தாதே
* தவறான கொள்கை முடிவுகளை விமர்சிக்காதே
* முடிந்தால் ஊமையாகிவிடு; அதுவே, சாலச்சிறந்தது!
என்பதுதான்.
இதற்கெல்லாம் கட்டுப்பட்டால், மறைமுக நெருக்கடிகள் போகும்; விளம்பரங்கள் வரும்!
இந்த மறைமுக மிரட்டல்களுக்கெல்லாம் மண்டியிடாததைக் கண்டுதான், உலகம் முழுவதுமுள்ள லட்சோப லட்சம் வாசகர்கள், மாபெரும் ஆதரவை வழங்கி தினமலருக்கு தோள் கொடுத்து நிற்கிறார்கள்; என்றும் நிற்பார்கள்!

சுப்ரமணிய ஸ்வாமி, கிஷோர் கே ஸ்வாமி வரிசையில் இன்னொரு உருப்படாத ஸ்வாமி