Friday, June 2, 2023

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.

 



அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
 
என்ன குற்றம் செய்தீர்கள் எனக் கேட்டேன்.
 
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்...
 
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
'திருடன் திருடன்' என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
 
என் வருமானத்தைக் கேட்டார்கள்
நான் வேலையில்லாப் பட்டாதாரி என்றேன்,
வருமானத்தை மறைத்ததாக வழக்குப்
போட்டு விட்டார்கள்....
 
நான் கரி மூட்டை தூக்கும் கூலி -
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்....
 
என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்....
 
அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்...
 
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படச் சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள்..
 
வறுமைக் கோட்டை அழிப்போம் என்று பேசினேன். 
அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக அடைத்துவிட்டார்கள்...
 
ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்  என்று எழுதினேன். கடத்தல்காரன் என்று கைது செய்து விட்டார்கள்...
 
நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில் உண்மையை எழுதினேன். 
நாட்டின் ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக் கொண்டு வந்து விட்டார்கள்...
 
சுதந்திர தின விழாவில் 'ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில் அடைத்து விட்டார்கள்.,.
 
'அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச் சொன்னான் கண்ணன்' என்று யாரோ கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என் பெயர் கண்ணன்.
பயங்கரவாதி என்று என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
 
நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.
 
- கவிக்கோ அப்துல் ரகுமான்

 
இன்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவு நாள்

 

ஜெயமோகனை ஜெயிலில் போடுங்கள்

 


கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாத்திகவாதிகளுக்கும் எதிராகவும் அவர்களை அவதூறு செய்தும் இந்து மதத்தை இழிவு செய்து பேசினால் கோடிக்கணக்கில் பணம் தரப்படுவதாகவும் புளிச்சமாவு பேசிய காணொளி ஒன்று உண்டு.

அதை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஜெயமோகனுக்கு விபரம் தெரியும் என்றால் அதை போலீசிடம் சொல்ல வேண்டுமே தவிர, விளம்பரத்திற்காக வீடியோ போடக்கூடாது. அந்த வீடியோவை தரவிறக்க முடிந்ததால் அதை இணைத்து காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். 


பெறுனர்

காவல்துறை தலைவர்,
தமிழ்நாடு, சென்னை

மதிப்பிற்குரிய ஐயா,

மத மோதலை தூண்டுவதற்கு எதிரான புகார்.

எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை முக நூலில் பார்க்க நேரிட்டது.

மத மோதல்களை உருவாக்கும் வண்ணம் அவர் பேசியுள்ளார். பணம் வாங்கிக் கொண்டு மத மாற்றத்திற்காகவும் இந்து மதத்தை பழித்தும் பேசுபவர்களை தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட தகவல்கள்   தெரியுமாயின் காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். அதுவன்றி இப்படி பேசி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது தேவையற்ற பிரச்சினைகளுக்கு 
வழி வகுக்கும்.

குறிப்பிட்ட காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன்.

தக்க நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவண்
எஸ்.ராமன்,


பார்ப்போம், காவல்துறை எனக்கு பதிலாவது அனுப்புகிறதா என்று!

Thursday, June 1, 2023

நடுராத்திரி சுடுகாடு வேண்டாம் சரத்குமார்

 


"நான் ஏன்டா நடுராத்திரியில சுடுகாடு போகனும்" என்று வடிவேல் கேட்டது போல நாங்க ஏன்யா 150 வயது வரை உயிர் வாழனும் மிஸ்டர் சரத்குமார்?

 


இன்றைய அரசியல், பொருளாதார, சமூக சூழலில் 150 வயது வரை வாழ்வது எல்லாம் மிகப் பெரிய சாபம்.

 அதனால் 150 வயது வாழ்வும் வேண்டாம், அதற்காக நீங்கள் முதலமைச்சர் ஆகவும் வேண்டாம்.

 பிகு: அப்படியே தேவையென்றால் நூற்றான்டை கடந்த பிதாமகர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா,  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான தோழர் சந்திரசேகர் போஸ், இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். உம்முடைய முதலமைச்சர் டீலிங்கை எல்லாம் ஏற்க முடியாது.

ஆதீனங்களின் வரலாறுகள் இவ்வளவுதான் . . .

 



ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டு ஆதினங்கள் சென்றதிலிருந்து ஆதீனங்கள் பற்றிய பில்ட் அப் அதிகமாகி விட்டது. அதனால் அந்த ஃபர்னிச்சரை கொஞ்சம் உடைத்தால் நன்றாக இருக்குமே என்பதால்தான் இப்பதிவு.

 

மதுரை ஆதீனம்.

 

முக்கியமான நான்கு நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் நிறுவியதாக சொல்லப்படுகிறது. பார்வதி இவருக்கு ஞானப்பால் கொடுத்ததாக சொல்லப்படும் புனைவில் தொடங்குகிறது இவரது வரலாறு. சமணர்களை அனல்வாதம், புனல்வாதத்தில் இவர் வென்றார் என்று சொல்லப்படும் வரலாறு முழுக்க முழுக்க அறிவியலுக்கு முரணானது. எண்ணாயிரம் சமணர்களை பாண்டிய மன்னன் மூலம் கழுவேற்ற வைத்ததன் மூலம் உலகில் இனப்படுகொலை செய்த முதல் பயங்கரவாதி, ஹிட்லர், டிமோவுக்கு முன்னோடி.

 

இப்போதுள்ள மதுரை ஆதீனத்துக்கு முந்தைய ஆதீனம் சரியான காமெடி பீஸ். துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்குப் போவேன் என்பது முதல் எம்.ஜி.ஆர், ஜெ, சசிகலா ஆகியோருக்கு ஆதரவாக இவர் விடாத அறிக்கைகளே இல்லை. நித்தியிடம் ஐந்து கோடி வாங்கிக் கொண்டு அடுத்த ஆதீனமாக முடி சூட்டியவர்.  இருவரும் சேர்ந்து அடித்த கூத்துக்கள் பல வார இதழ்களில் கவர் ஸ்டோரிகளாகவே வந்தது. கடும் எதிர்ப்பால் நித்திக்கு கொடுத்த பதவி ரத்து செய்யப்பட, சமீபத்தில் அவரும் மண்டையைப் போட இன்றைய ஓசி ப்ளைட் ஆதீனத்திற்கு அடித்தது லாட்டரி.

 

திருவாடுதுறை ஆதினம்.

 

இப்போதுள்ள ஆதீனம் “என்னை மற்றவர்கள் தூக்கும் பல்லக்கில்தான் பட்டிணப்பிரவேசம் வருவேன்” என்று அடம் பிடித்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

 

இவருக்கு முந்தைய சாமியாரை கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலைக்கு திட்டம் போட்டு பணம் கொடுத்தது வருங்கால ஆதீனமாக பட்டம் கட்டப்பட்ட இளைய தம்பிரான் என்று சொல்லப்பட்டது.  பத்து வருடத்துக்கு மேல் கேஸ் நடந்து கடைசியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள். சொத்து பிரச்சினை காரணமாக ஆதீனம் என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டார் என்பது இளைய தம்பிரான் குற்றச்சாட்டு.

 

இந்த சொத்து பிரச்சினை இப்போதும் நீடிக்கிறது. இப்போதுள்ள ஆதீனம் தனது வாரிசாக பட்டம் கட்டிய கட்டளைத் தம்பிரானுக்கும் பாஜக நகரச் செயலாளருக்கும் “கோயில் குளங்களை தூர் வாரும் போது வெளியேற்றும் மணலை யார் விற்பது” என்பதில் பிரச்சினை. பாஜக நகரச் செயலாளர் என்னை கொலை செய்ய முயற்சித்தார் என்று ஆதீன வாரிசு போலீஸில் புகார் எல்லாம் கொடுத்தார். ஆனால் இறுதியில் வென்றது பாஜக நகரச் செயலாளர்தான். வாரிசின் பதவி பறிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.

 

இந்த ஆதீனத்தை வைத்துத்தான் ஆரென் ரவியும் ஆடிட்டர் விஷ மூர்த்தியும் செங்கோல் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

 

மற்ற ஆதீனங்கள்

 

திருப்பனந்தாள் மடம், தருமபுரம் ஆதீனம், திருப்பறாய்த்துறை ஆதீனம் ஆகியவையும் வாரிசுச் சண்டைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவைதான்.

 

பேரூர் ஆதீனம் போல சில ஆதீனங்கள் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள்தான்.

 

காவி அணிந்த நல்ல சாமியார் என்று இது நாள்வரை மதித்திருந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் டிமோ வலையில் விழுந்ததுதான் மிகவும் அதிர்ச்சியளித்தது.

 

இந்து அற நிலையத்துறையின் கைகளில் கோயில்கள் இருக்கக்கூடாது என்று சங்கிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் எப்படி உள்ளன?

 

சமீபத்தில் திருவாடாதுறை மற்றும் தருமபுரம் ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில், சூரியனார் கோயில், கஞ்சனூர் கோயில், திருக்கொள்ளிக்காடு ஆகிய கோயில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

 

கொஞ்சம் கூட பராமரிப்பு இல்லாத, வௌவால்களின் வேட்டைக்காடாக, துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிற, பாசி படிந்த தரைகளோடு இருள் படிந்து காணப்படுபவைதான் இக்கோயில்கள். கோயில்கள் மூலம் வரும் பணத்தை கல்லா கட்டுவதுதான் ஆதீனங்களின் பணி.

 

இந்திய வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதிய “யார் கைகளில் இந்துக் கோயில்கள்?” நூலில் இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையாளராக இருந்த திரு ஜெயராமன் ஆதீன ஊழல்கள் பற்றி நிறைய பேசியிருப்பார். அந்த நூலை தேடிப் பிடித்து அந்த பக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 

சங்கிகள் எதைத் தொட்டாலும் அவை தேவையில்லாத ஆணிகளே, ஆதீனங்கள் உட்பட.