Monday, November 2, 2020

கொலைக்கு சமமன்றோ?

  


அரசு மருத்துவமனைகளின் பணியாற்றுபவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை நாம் புரிந்து கொள்ள,

 அரசு மருத்துவமனைகளின் தேவையையும் முக்கியத்தையும் நாம் உணர்ந்து கொள்ள

 ஒரு கொரோனா வர வேண்டி உள்ளது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முக்கியமான பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 “உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் மருத்துவம் பார்க்க இயலாது என்று கை விரிப்பது ஒரு கொலைக்குச் சமம்”

 எவ்வளவு காத்திரமான வரிகள் இவை!

 இந்த கொரோனா காலத்தில் தனியார் மருத்துவ மனைகள் எத்தனை கொலைகளை நிகழ்த்தியுள்ளார்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.



 "உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் மருத்துவம் பார்க்க இயலாது என்று கைவிரிப்பது ஒரு கொலைக்குச் சமம்" !

 குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 30 வயோதிகர்களை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தொடர்ச்சியாக பராமரித்து கொண்டிருக்கிறது என்கிற செய்தி நேற்றைய புதிய தலைமுறை யில் ஒளிபரப்பாகியது .அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த திரு. சுகன்யாவிடம் Suganya Mercy Bai  நான் பேசும்போது

  "உண்மையில் அவர்களை பராமரித்து கொண்டிருக்கும் 20 வயது இளைஞர்  ஒருவரது பெயரைச் சொல்ல மறந்து விட்டோம் .என்னால் அந்த இடத்தில் இரண்டு மணி நேரம் கூட நிற்க முடியவில்லை .ஆயினும் அந்த இளைஞர்(கௌரிசங்கர் -வார்டுபாய்) தொடர்ச்சியாக இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

  அதோடு மட்டுமின்றி பொதுவாக அவர்களைப் பராமரிக்க  ராஜீவ்காந்தி மருத்துவமனை எடுத்துக் கொண்டிருக்கும் பல்வேறு முயற்சிகளையும் தெரிவித்தார்.

 உண்மையிலேயே இப்படி ஒரு பணியை எந்த தனியார் மருத்துவமனையாவது செய்கிறதா என்று தேடினால் அப்படி ஒரு மருத்துவமனையை நீங்கள் பார்க்கவே முடியாது

 நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்த பேச்சின் ஊடாக சுகன்யா "அரசு மருத்துவமனைகள் எத்தனை உயிர்களை எப்படி எல்லாம் போராடி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன என்பதை நேரில் சென்று நீங்கள் பார்க்கவேண்டும்" என்று குறிப்பிட்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன்கள் தான் அங்கு செல்லும் நேரமெல்லாம் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள். இப்படி ஒரு அர்ப்பணிப்பு பாராட்டப்படாமலேயே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னது உண்மைதான். ஏதாவது மருத்துவமனையில் தவறுகள் நேர்ந்து விட்டால் உடனடியாக நாம் விமர்சிக்கும் அதே சமயம் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி இத்தகைய மருத்துவமனைகளில் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை  நோக்க பூர்வமாக இல்லை என்றாலும் கவனம் செலுத்துவது இல்லை .

 இது குறித்து மேலும் விபரங்களை தெரிந்து கொள்வதற்காக சிலரிடம் பேசியபோது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் 575 பேர் என்று குறிப்பிட்டார் .வேறு சிலரும் கூட இதுபற்றி கூறும்போது இந்தியாவிலேயே வேறு எங்கும் இத்தனை நோயாளிகள் இந்தக் காலத்தில் டயாலிசிஸ் செய்து கொள்வதில்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்கு காரணம் என்ன திடீரென ஏன் இந்த எண்ணிக்கை இப்படி உயர்ந்திருக்கிறது என்று கேட்டபோது இவர்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தவர்கள் என்றும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஏதோ ஒரு வகையில் தொற்று ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைகளால்  கைவிடப்பட்டவர்கள் என்றும் இன்னும் சிலருக்கு நோய்த் தொற்றுஏற்பட்டால்  என்ன செய்வது என்பதால் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்

 ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இதை எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று கேட்டேன் அவர் தெரிவித்த பதில்

 " இது வேறு ஒரு தொழில்  இல்லையே! உயிர் காக்கும் பணி அல்லவா உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவர் உங்களிடம் வந்து நிற்கிறபோது மருத்துவம் பார்க்க இயலாது என்று கைவிரிப்பது ஒரு கொலைக்குச் சமம் எனவே எங்களிடம் இருக்கக்கூடிய கட்டமைப்புகளையும் திறமையையும் வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த உயிர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறோம்

 என்று கூறினார் .

 ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் Therani Rajan, மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் நாம் பாராட்டுகள்.வணக்கங்கள்.அன்பும் மகிழ்ச்சியும்

 

 

“இட்லி பொடி” யும் நீலாம்பரியும்

 


நேற்றைய முயற்சி இது.

 என் மனைவி அவருடைய தங்கையோடு வெளியே செல்ல, கொஞ்ச நேரம் இணையத்தில் மேய்ந்தேன், தொலைக்காட்சி பார்த்தேன். இரண்டும் போரடித்ததால் உருப்படியாக ஏதாவது செய்வோம் என்று முயன்றதுதான் “இட்லி பொடி”

 எப்போதாவது அவர் பிஸியாக இருக்கும் நேரத்தில் வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸியில் அரைத்துத்தரச் சொல்வார்.

 அந்த நினைவின் வலிமையில் செய்தது.

 முதலில் ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும்

 ஒரு கப் வெள்ளை உளுந்து, ஒரு கப் கடலைப் பருப்பு போட்டு நன்றாக சிவக்க சிவக்க வறுத்தேன்.

 பிறகு அதே வாணலியில் பொட்டுக்கடலை அரை கப் வறுத்துக் கொண்டேன்.

 பிறகு இரண்டு கப் அளவிற்கு மிளகாய் வற்றலையும் தும்மல் வரும் வரை, கறுப்பாக தீய்ந்து போகும் முன்னால்  வரை வறுத்துக் கொண்டேன்.

 பிறகு கொஞ்சம் உப்பு, துளியளவு புளி, சின்னதாய் வெட்டி எடுத்த கட்டி பெருங்காயம், ஒரு சின்ன கட்டி வெல்லம் இவை அனைத்தையும் கொஞ்ச நேரம், வெல்லம் உருகுவதற்கு முன்பாக வறுத்துக் கொண்டேன்.





 கடைசியாக எள் அரை கப், கறுப்பு எள் போதுமான அளவு ஸ்டாக் இல்லாததால் வெள்ளை எள்ளையும் சேர்த்து வறுத்துக் கொண்டேன். எள்ளை மட்டும் எண்ணெய் வாணலியில் வறுக்காமல் தனியே எண்ணெய் சேர்க்காமல் வறுத்திருக்கலாமோ என்று பிறகு தோன்றியது. மிக்ஸியில் தனியாக அரைத்த போது பேஸ்ட் போல ஆகிவிட்டது. 
அனுபவமே பாடம்.”

 இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்து

 முதலில் பருப்பு வகையறாவை மிக்ஸியில் அரைத்து,

அதோடு மிளகாய் வற்றலையும் அரைத்து

உப்பு, பெருங்காயம் வகையறாக்களை மூன்றாக அரைத்து

 வறுத்த எள்ளை தனியாக வேறு ஜாரில் அரைத்து

அதனையும் இத்தோடு சேர்த்து  மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டால்

நன்றாக கலந்து

 “இட்லி மிளகாய் பொடி”



 கச்சிதமாக வந்திருந்தது.

 கொஞ்சம் தற்பெருமைதான். ஆனாலும் உண்மையை சொல்ல வேண்டும் அல்லவா?

 படையப்பாவைப் பார்த்து நீலாம்பரி சொல்லும் வசனம் நினைவிருக்கிறது அல்லவா?

 “நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். எனக்கே உன்னை பிடிச்சுருக்கு”

 அது போல இந்த இட்லி பொடியின் வாசமும் ருசியும் எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது.

 பிகு: இத்தனை வருஷமா நான் செஞ்சதை காப்பியடிச்சு செஞ்சிட்டு இவ்வளவு தெனாவெட்டா என்று மனைவி திட்டாமல் இருக்க வேண்டும்  என்று அந்த நளனை வேண்டிக் கொள்கிறேன்.

 பிகு 2 : என் பேரப்பசங்களுக்கு நான் செய்யும் எள்ளு மிளகாய் பொடிதான் ரொம்பவும் பிடிக்கும் என்று பாட்டையா பாரதி மணி எழுதியதும் நினைவுக்கு  வந்தது. அதே நிறம், திடம்,  எல்லாம் . . .

வேள்பாரியின் கொரோனா அனுபவம்

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசனின் அனுபவப் பகிர்வு



 குணபாடம்

-சு.வெங்கடேசன் எம்.பி
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டேன். 22ஆம் தேதி கோவிட் சோதனையில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 23ஆம் தேதி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டேன். 10 நாள்களுக்குப்பின் குணமடைந்து இன்று வீடுதிரும்பி உள்ளேன். அடுத்துவரும் வாரங்களில் வீட்டில் தனித்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றுத் தொடங்கிய மார்ச் கடைசி வாரத்திலிருந்து இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கட்டுரைகளையும் அறிக்கைகளையும் எழுதியுள்ளேன். ஆனாலும் கோவிட் நோயாளியாக இப்பதிவினை எழுதுவது அவசியம் என்று நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் மிகமோசமான மனநிலையில் நான் துவண்டுகிடந்த போது தொற்று ஏற்பட்டது. உடல்பற்றிக் கவனங்கொள்ளும் திறனற்று இருந்தது மனம். ஆனால் வீட்டில் ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக விழிப்புக்கொண்டு இயங்க வேண்டிய தேவைக்கு உந்தித்தள்ளப்பட்டேன்.

11 வயது சிறுவன் முதல் 66 வயது பெரியவர் வரை வீட்டிலுள்ள பெரும்பாலானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதால் அனைவருக்கும் நுரையீரல் பரிசோதனையையும் இரத்தபரிசோதனையையும் முடித்து நோய்த்தொற்றின் தாக்கத்தை மதிப்பிட்ட பின்னரே, யார்யாரை எங்கெங்கு சேர்ப்பது என முடிவெடுக்க வேண்டியிருந்தது. மருத்துவ நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப்பெற்றேன். யாராவது ஒருவரை நம்பிப்போவது எவ்வளவு வசதியானது என்பதை இதுபோன்ற நேரங்களில் கூடுதலாக உணரமுடியும்.

நிறைய நண்பர்களிடம் அவரவர்களுக்கு அவரவர்களின் கருத்துகளில் உள்ள தெளிவையும் துறைசார் அறிஞர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் கருத்துகளையும் கேட்டுவிட்டால் நாம் முடிவெடுப்பது எளிதன்று.

இறுதியில், தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்வது என்று முடிவெடுத்தோம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, மற்றும் மரு.செந்தில் ஆகியோரின் ஆலோசனைகள் மிகப்பயனுடையனவாக இருந்தன.

தோப்பூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏறி குடும்பத்தோடு புறப்பட்டோம். பயணத்தின்பொழுது என் மகள் உற்சாகமாக ஒரு செல்பி எடுத்தாள். தந்தையாக, அடிமனதின் நடுக்கத்தை மறைக்க முயன்றுகொண்டிருந்தேன். வாழ்க்கை, இப்படித்தான் நம்மைப் பணயம்வைத்து நம்மையே விளையாடச் சொல்லும்.

தோப்பூர் மருத்துவமனைப் பொறுப்பாளர் மரு. காந்திமதிநாதன் அங்கிருந்தார். கடந்த ஜனவரிமாதம் ஆனந்தவிகடன் ”டாப்10” மனிதர்களில் ஒருவராக அவரைத் தேர்வுசெய்து, விழா மேடையில் நான்தான் அவ்விருதினை அவருக்கு வழங்கினேன். அந்தத் தேர்வு எவ்வளவு சரியானது என்பதைத் தோப்பூர் மருத்துவமனைக்கு வந்து பார்ப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

உலகில் சவாலான விசயங்களில் ஒன்று, “நல்லது செய்வது”. ஒரு நல்ல செயலைச் செய்வது என முடிவெடுத்து இறங்கிப்பாருங்கள், அப்பொழுதுதான் உங்களின் போதாமைகளை நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். நல்லது செய்வதற்கான திறனை நல்லவர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் மற்றவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவார்கள். அதற்காக எவ்வளவு சட்டதிட்டங்கள், நீதி நூல்கள், அறிவுரைகள் குவிந்துகிடக்கின்றன இந்த நாட்டில்.

“காட்டாஸ்பித்திரி” என்று அழைக்கப்படும் தோப்பூர் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அன்பிற்குரிய சீத்தாராம் யெச்சூரி, என்.சங்கரய்யா, மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமா, இரா.முத்தரசன். கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் செல்லூர் கே.ராஜ் ஆகியோரை உள்ளிட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எண்ணிலடங்காத தோழர்கள், வாசகர்கள் என அன்பிற்குரிய பலரும் நாங்கள் நலம்பெற விரும்பி தங்களின் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அனைவருக்கும் இந்நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 10 நாள்களாக நுரையீரல் மருத்துவர்கள் இளம்பரிதி, ஜெய்கணேஷ் ஆகிய இருவரும் செவிலியர் குழுவும் என்னையும் குடும்பத்தாரையும் சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர். ஐந்து நாள்கள் ரெடம்சவிர் வைரஸ் மருந்து, இரத்தம் உறையாமல் இருக்கவும் நுரையீரலினுள் அழற்சி ஏற்படாது இருக்கவும் ஐந்து ஆறு நாள்கள் சிரைவழி ஊசிகள், கூடவே மயில்களுடன் காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி, 'எப்படி இருக்கிறாய்?' என ஒவ்வொரு இரவிலும் அடிக்கடி எட்டிப்பார்த்து கேட்காமல் கேட்டுச் செல்லும் நிலவோடு மனப்பயிற்சி, இளநீரும் சூப்பும் பழங்களும் விடாதுகொடுத்து அனுப்பிய தோழர்கள், 'மூச்சை இழுத்து மெதுவா' என ஆயுஷ் மருத்துவர்களின் யோகப்பயிற்சி, "இஞ்சி, மஞ்சள், மிளகு எல்லாம் சேர்க்கிறீங்கதானே?" எனும் மருத்துவ நட்பு வட்டாரங்களின் உணவுப்பயிற்சி ஆகிய எல்லாம் சேர்ந்து இன்று காலை, "சார்! வைரஸ் சுவடே இல்லை. . . நீங்க கிளம்பலாம்" என்னும் செய்தியைச் சொல்ல வைத்துவிட்டன.

பத்து நாள்களில் உயிருக்கு அச்சுறுத்தலான வைரைசை விரட்டி அடித்தன மிகநேர்த்தியான மருத்துவ அணுகுமுறையும் சரியான மருந்துகளும் மருத்துவமனையின் சூழலும் மருத்துவர்களின் திறனும் செவிலியர்களின் மாசற்ற அன்பும் மருத்துவமனைப் பணியாளர்களின் கண்துஞ்சா கடின உழைப்பும்தான். காங்கிரீட் கட்டடத்திற்குள் அடுத்தடுத்து இருக்கும் பச்சைப்போர்வை போர்த்திய வலிநிறைந்த மனிதர்களுடன் வசதிக்குறைவாய்ப் படுக்கவேண்டி இருக்குமோ?, கழிப்பிடம் சுகாதாரமாய் இருக்குமோ? இராதோ? என்கிற மனத்தடைதான் பலரையும் அரசு மருத்துவமனைப் பக்கம் வராமல் வைக்கின்றது. கண்டிப்பாய் இத்தேசத்தில் இப்படியான பேரிடர்க்கால மருத்துவ மேலாண்மைக்குத் தோப்பூர் மருத்துவமனை போன்ற இயற்கையோடு இயைந்த ஒருங்கிணைந்த மருத்துவமனைகள் மிக மிக அவசியம்.
பெருந்தொற்றுக்கென தனித்த இடங்களில் மருத்துவமனைகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை அறுபதாண்டுகளுக்குப் பின்பும் அத்தியாவசியத் தேவையாக மாறிநிற்கிறது. அரசுகள் தொலைநோக்குப் பார்வையோடு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான உதாரணமே இது.

கிட்டத்தட்ட 11,000 மக்களை தமிழகத்திலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இந்தியாவிலும் இழந்திருக்கிறோம். மரணவிகிதம் பெருமளவு குறைந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. மருத்துவர்கள் பலர் தேர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்நோயை அணுகும் உத்திகளைக் காணமுடிகிறது. ஆனாலும் இன்னும் போராட்டம் ஓய்வில்லை. நாடாளுமன்ற உறுப்பினராய் அரசு மருத்துவமனையில் எனக்கு மிகச்சிறப்பான சிகிச்சை கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை. ‘அனைவருக்கும் இத்தகைய சிறப்பான மருத்துவத்தை உத்தரவாதப்படுத்த முடியாதா? அதற்கான கட்டமைப்புகள் எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளனவா?’ என்கிற வலுவான வினாகள் எழத்தான் செய்கின்றன.

இருபதாயிரம் கோடிக்கு ராஜவீதியும் எட்டாயிரம் கோடிக்கு தனிவிமானமும் இந்த நாட்டுக்கு இப்போதைய தேவையா? கல்விக்கும் மருத்துவத்துக்குமான கட்டமைப்புகளுக்கு எண்ணிலடங்காத் தொகையைக் கொண்டுபோய்க் கொட்டுவதுதான் இன்றைய அவசரத்தேவையும் வருங்காலத்துக்கான அவசியத்தேவையும் ஆகும்.

உலக சுகாதார நிறுவனம், "இந்த ரெட்சிவீரினால் ஒரு பயனும் இல்லை" எனச் சொல்கிறது. நமது நாட்டின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர், ‘நுரையீரல் தாக்கம் பெறும் முன்னர் இந்த ரெடம்சவீர் செலுத்தப்படும் போது முழுமையான முன்னேற்றம் கிடைக்கிறது’ என அறிவிக்கிறார். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இக்கருத்தாக்கத்தை உறுதியாகச் சொல்கின்றனர். “நாங்கள் தொடக்கத்திலேயே ரெடம்சிவீர் கொடுத்த நோயரில் 100% வெற்றி காண முடிகிறது” என்கிறார்கள் அவர்கள். இதைப்பார்க்கும் போது, மருத்துவப் பயிற்சியில் "நோயும் மருந்தும் உனது நிலத்தில் உன் மக்களில் எப்படி பணியாற்றுகிறது?” என்பது, ‘ட்ரம்ப் என்ன சொல்கிறார்? WHO என்ன சொல்கிறது’ என்பதைவிட பேரிடர் காலத்தில் மிக மிக முக்கியம் என்பதை முழுமையாக உணரமுடிகிறது. அப்படியான இயலிடஞ்சார்ந்த (Indigenous) ஆய்வுகளையும் தரவுகளையும் இந்த ஒன்பதுமாத காலத்தில் நாம் இந்தியாவில் இன்னும் பெறவில்லையோ என ஐயமுறச் செய்கிறது.

ஐசிஎம்ஆர் அமைப்பு மருந்து ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடட்டும். நமக்கென நமது நாட்டுக்கென ஒரு முழுமையான மத்திய நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு (CDC) மிக மிக அவசியம் அல்லவா? அட்லாண்டாவில் சொல்வதையும் ஜெனீவாவின் கட்டளையையும் மட்டுமே கேட்டு நடக்க வேண்டுமா என்ன? முழுமையாக பொதுசுகாதார வசதிக்கென, பேரிட மேலாண்மைக்கென ஓர் அமைப்பை அரசு ஏன் உருவாக்கத் தயங்குகிறது? இப்படியான தேவைகள் குறைந்த அளவிலாவது உணரப்படுகிறதா? இப்படியான வினாகள் எழும்போது மாட்டுக்கோவியமும் கோவிட் அப்பளமும் நினைவுக்கு வராமல் இல்லை. நமக்கான ஆய்வு என பேசத்தொடங்கினாலே அடிவயிற்றில் இருந்து ஓர் அச்சம் மேலேறி வரத்தான் செய்கிறது. ஏனென்றால் கடந்த எட்டு மாதகாலத்தில் கொரோனாவுக்கு எதிராக இவர்களின் பேச்சுக்களும் செயல்களும் அப்படி.

'பேரிடர்கள் இனி தொடர்செய்திகளாய்த்தான் இருக்கப்போகின்றன,' என சூழலியலாளர்கள் உலகெங்கும் எச்சரித்துக்கொண்டேதான் உள்ளனர். முதலில் கோவிட்டை வெல்வதிலும் சரி, பின்னர் வர இருக்கும் பேரிடரை மேலாண்மை செய்வதிலும் சரி, பின்வருவன மிக மிக முக்கியமானவை:

⁃ நமது ஊரில் இப்பேரிடர்கள் எப்படிப் பரிணமிக்கின்றன?
⁃ நம் மக்களிடையே எந்த மருந்துகள் சிறப்பாக பயனளிக்கின்றன?
⁃ உணவு ஆயுஷ் மருந்துகளின் கூட்டணி எப்படியெல்லாம் பயனளிக்கின்றன?
⁃ மரணம் நிகழ்கையில், ஒவ்விரு மரணமும் கற்றுத்தரும் பாடம் என்ன?
⁃ விரைவாய் மருத்துவம் செய்ய முனைகையில் அவசியப்படும் மருந்துகள் கட்டமைப்பு வசதிகள் என்ன?

இவை எல்லாம் உன்னிப்பாக கற்று ஆய்ந்தறியப்பட வேண்டும். இதில் கிடைக்கும் தரவுகளால் மட்டுமே எம் மக்களின் நலவாழ்விற்கு அடித்தளம் அமைக்க முடியும்.

Sunday, November 1, 2020

உருகுதே . மருகுதே . .

 



வெயில் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான "உருகுதே, மருகுதே"  பாடலின்

வயலின் வடிவம் என் மகனின் கை வண்ணத்தில்

யூட்யூப்  இணைப்பு இங்கே

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

கலவரத்திற்கு உசுப்பேத்தும் கண்ணியவான்

 


சில நாட்கள் முன்பே “ உண்மையைச் சொன்னால் சங்கிகளுக்கு????” என்ற பதிவில் அதி மேதாவியான, அனுபவஸ்தரான, முதியவரான, மன நல ஆலோசகரான ஒருவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

 நான் சங்கியல்ல என்று சொன்ன அவரது பின்னூட்டத்தை முதலில் பாருங்கள்.

 


அதன் பின்பு அவர் தொடர்ச்சியாக போட்டுள்ள பல்வேறு பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுக்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

















அப்பட்டமான சங்கி மொழியில் மிரட்டுவது மட்டுமல்லாமல் தலையை வெட்டி எடுத்த காளியின் படத்தையும் இரண்யனின் வயிற்றைக் கிழிக்கும் நரசிம்ம அவதாரத்தின் படத்தையும் வேறு பகிர்ந்து கொண்டு அடிஷனல் மிரட்டல் செய்கிறார். 




முகப்புப் படத்தில் உள்ள திரிசூலத்தை யார் மீது பாய்ச்சப் போகிறாரோ? திரிசூலத்தின் ஒரு முனை மூலம் இஸ்லாமியர்களையும் இரண்டாவது முனை மூலம் கிறிஸ்துவர்களையும் மூன்றாவது முனை மூலம் கம்யூனிஸ்டுகளையும் அழிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகவே பேசியதை நாம் மறந்து விட முடியுமா?

 அரசு அலுவலகங்களில் பணி புரிந்து கொண்டு அர்பன் நக்ஸல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஜான் அரைத்த அதே புளிச்ச மாவை இவரும் அரைத்துள்ளார்.

 பாவம் ஆடிக்கொரு பதிவு, அமாவாசைக்கு ஒரு பதிவு என்று போட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதர் ஒரே ஒரு கடுமையான எதிர்வினையை தாங்க முடியாமல் முழுசாக  சந்திரமுகியாக மாறி  கலவரத்திற்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறார்.

 மேலே உள்ளதை விட இன்னொரு ஸ்பெஷல் ஐடம் வேறு வைத்துள்ளார். அதை தனியாக பதிவு செய்கிறேன்.

 ஒரு தனிப்பட்ட நபருக்காக இப்படி ஒரு பதிவு அவசியமா என்று நீங்கள் நினைக்கலாம். வெளிப்படையான ரௌடிகளான எச்.ராசா வகையறாக்களை விட இது போன்ற பசுந்தோல் போர்த்திய குள்ள நரிகள் மிகுந்த ஆபத்தானவர்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறேன் என்ற பெயரில் அவர்களின் மனதில் நச்சினை ஊட்டுபவர்கள். முற்போக்கு சக்திகள் தொடர்ந்து கண்காணித்து  கவனம் செலுத்தி தலையில் தட்டி வைக்காவிட்டால் இன்னொரு கல்யாண்ராமனாக மாறும் வாய்ப்பு அதிகம்.

இவ்வளவு யோக்கியமாக எச்.ராசாவின் ஹை கோர்ட் போல பேசுகிற இந்த மனிதர் அடுத்த வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சுப்பையா பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை என்கிற போதே இவர்களின் பெண்கள் மீதான அக்கறை பல்லிளித்து விடுகிறது.