Wednesday, June 7, 2017

சொல்வதைக் கேட்காத கண்கள்





வேலூர் மக்கான் முனையில் ஒரு பலகை. அங்கே நேரத்தை காண்பிக்கும் ஒரு எலக்ட்ரானிக் கடிகாரம். கூடவே இன்னொரு தகவலையும் சொல்லும். அந்த நொடியின் வெப்ப அளவை காண்பிக்கும் கருவியும் உண்டு.

அந்த பகுதியை கடக்கும் போதெல்லாம் எவ்வளவு வெப்பம் என்று பார்க்காதே என்று ஒவ்வொரு முறையும் மனது சொல்லும், ஆனால் அந்த மனதின் பேச்சை கண்கள் எப்போதும் கேட்கவே கேட்காது. அனிச்சை செயலாய் கண்கள் அங்கேதான் செல்லும். ஏற்கனவே வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் உடல், 104, 106 என்று வெப்ப அளவை பார்த்த உடன் இன்னும் அதிகமாக கொதிக்கத் தொடங்கும்.

நேற்றும் அப்படித்தான் விழுப்புரத்திற்கு ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இரண்டு மணிக்கு புகை வண்டியை பிடிக்க ஒரு தோழரின் வாகனத்தின் பின்னே அமர்ந்து வேகமாகச் செல்கையில் கூட கண்கள் வழக்கம் போல அதிகப்பிரசங்கித்தனமாக இப்போது வெப்பத்தின் அளவு என்ன என்று பார்க்கத்தான் செய்தது.

103 டிகிரி என்பது ஒரு சோர்வை உடனடியாக அளித்தது. அந்த சோர்வு விழுப்புரம் போகும் வரை கூடவே தொடர்ந்தது என்பதும் யதார்த்தம். விழுப்புரத்தில் கூட்டம் முடிந்து மீண்டும் புகை வண்டியை பிடிக்க ரயில் நிலையத்திற்கு புறப்பட்டபோது மழைத்தூறல்கள் கனமாகவே விழுந்து கொண்டிருந்தன. அலுவலகத்திற்கு மிக அருகாமையிலிருக்கிற ரயில் நிலையத்தை அடைந்த உடனேயே அந்த தூறல்களும் விடை பெற்று சென்று விட்டன.

புழுக்கத்தோடுதான் மீண்டும் பயணத்தை தொடர வேண்டுமோ என்ற மனதில் ஏக்கக்குரல் மழைக்கு கேட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை, ரயில் புறப்பட்டது, கூடவே மழையும் தொடங்கியது. ஏழே முக்காலுக்கு தொடங்கிய மழை இரவு பதினொன்றரை மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடையும் வரையில் கூட நிற்கவில்லை.

ஆட்டோவில் வீட்டிற்கு வந்தாலும் மழைச்சாறல்கள் இரு புறமாக மேலே விழுந்து கொண்டே இருந்தது. உடல் நனைய நனைய உள்ளமும் குளிர்ந்து கொண்டே இருந்தது. ஏதோ ஊட்டி, கொடைக்கானல் போல வேலூரும் குளிர்ச்சியாகத்தான் இருந்தது. மக்கான் முனை வந்தது. இப்போது மனதே கண்களுக்கு ஆணையிட்டது. வெப்பத்தின் அளவைப்பார் என்று சொன்னது.

80 டிகிரி பாரன் ஹீட் என்று அது காண்பித்தபோது வேலூர் இன்னும் இனிமையாகத் தெரிந்தது.

பி.கு : காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தால் முந்தைய தினத்தில் மாலை முதல் இரவு வரை மழை பெய்த சுவடே சிறிதும் இல்லாமல், குளிர்ச்சியான வேலூர் என்பது ஏதோ கனவில் நிகழ்ந்ததோ என்று  கேள்வி எழுப்பும் அளவிற்கு சூரியன் தனது உக்கிரமான கிரணங்களுடன் தாக்கிக் கொண்டிருந்தான்.  

Tuesday, June 6, 2017

மூடர் கூட மோடி அரசு




முரடர்களும் மூடர்களும் மட்டுமே நிரம்பியது தனது அரசு என்பதை பெரும் மூடர் மோடி மீண்டும் ஒரு முறை மொக்கை காரணமொன்றை வைத்து என்.டி. டிவி மீது சி.பி.ஐ யை ஏவியதன் மூலம் நிரூபித்துள்ளார். 

தங்கள் கட்சியின் அநாகரீகப் பேர்வழியை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதற்கான பழி வாங்கல் நடவடிக்கை என்பதை சிறு குழந்தைகள் கூட புரிந்து கொண்டு எள்ளி நகையாடும் வண்ணம் அவசரம் அவசரமாக எதிர்வினையாற்றியுள்ளார்கள்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொல்கிறார்கள்!

இன்னும் கேவலமான குற்றச்சாட்டுக்கள் கூட வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். 

அப்படி செய்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் அவ்வளவு கேவலமான குணாம்சங்கள் கொண்டவர்களின் ஆட்சியில் எதுவும் நடக்கும்/ 

Monday, June 5, 2017

அந்த சாமியார் நிலைதான் மற்றவர்களுக்கும் . . . .





சில நாட்களுக்கு முந்தைய ஒரு பதிவில்

“அவர் இறப்பின் மூலம்தான் அவர் இங்கே இத்தனை நாள் வாழ்ந்திருந்தார் என்பதே தெரிந்தது” 

என்று எழுதியிருந்தேன்.

சாமானியர்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் சர்வ சக்தி படைத்தவராய் விளங்கியவர்களுக்கும் பொருந்தும் என்பது இன்னொரு மரணத்தின் மூலம் தெரிய வந்தது.

ஆம்,

சந்திரா சாமி எனும் சாமியார் இறந்த தகவல் வந்த பின்பே, அவர் இத்தனை நாள் உயிரோடுதான் இருந்தாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பியிருந்தார்கள்.

சாதாரணமான ஆளாகவா இருந்தார் அவர்?

ராஜீவ் காந்தி, சந்திர சேகர், நரசிம்மராவ் என்று மூன்று பிரதமர்களை ஆட்டி வைத்தவர். உலகின் மிகப்பெரிய செல்வந்தரான ப்ரூனேய் சுல்தான், ஆயுத வியாபாரி அடனோன் கஷோகி ஆகியோரோடு நெருக்கமானவர்.

ராஜீவ் காந்தியின் வீழ்ச்சிக்கு காரணமான போபோர்ஸ் பீரங்கி ஊழலின் முக்கியமான புள்ளி. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னே இவரும் ஒளிந்து கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு வலுக்கட்டாயமாக மறைக்கப்பட்டது.

அனைத்து விதமான மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளான ஆசாமி. சிறைப்பறவையாக இருந்த போதும் “பிள்ளையாரை பால் குடிக்க வைத்ததாக” நாடெங்கும் புரளி கிளப்பிய மோசடிப் பேர்வழி. திரைப்படங்களில் வரும் சாமியார் வில்லன்களுக்கு ரோல் மாடலாக இவரைத்தான் எடுத்துக் கொள்வார்கள்.

 என்ன இருந்தால் என்ன?

சந்திராசாமி உயிரோடு இருக்கிரா இல்லையா என்று தெரியாத அளவிற்கு கடந்த பதினைந்து வருடங்களில் இவரைப்பற்றி எந்த செய்தியுமே இல்லை. சாமியார் என்று மட்டுமில்லை, ஒரு காலத்தில் பரபரப்பு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பல அரசியல், வணிகப் பிரபலங்களின் நிலைமையும் இதுதான்.

மோடியின் ஆட்சியில் இன்று சர்வ வல்லமை படைத்தவர்களாக காட்சி அளிக்கும் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ், சீ,சீ ரவிசங்கர் ஆகியோரும் தங்களின் எதிர்காலமும் இது போலத்தான் ஆகும் என்பதை உணரட்டும். ஓவர் ஆட்டத்தை இனியாவது நிறுத்தட்டும்.

பின் குறிப்பு:

சந்திரா சாமி குறித்து பாட்டையா பாரதி மணி முக நூலில் எழுதிய பதிவு சுவாரஸ்யமானது. அதை சுட்டு கீழே தந்துள்ளேன். 



சந்திரா ஸ்வாமி!

இருக்கும் ஸ்வாமிகளில் ஒரு ஸ்வாமி நேற்று போய்விட்டார்.....சந்திரா ஸ்வாமி! ஊடகங்களால் Cunning Conman என்று அறியப்பட்டவர். அவர் காட்டில் மழைபெய்த நாட்களில் பிரதமர்களும், முதல்வர்களும் அவர் காலில் விழுந்தார்கள்! அவரால் வளர்த்துவிடப்பட்ட பூதங்கள் அனேகம்.
நம்மில் பலர் சந்திரசேகர், நரசிம்மராவோடு இவரும் போய்விட்டார் என்றே நினைத்திருந்தார்கள். 

நேற்றைய செய்தி “ஓ! இப்போ தான் போனாரா?’ என்று பலரைக் கேட்க வைத்தது. தன்னுடைய செல்வாக்கு காலாவதியாய்விட்டதென்று தெரிந்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகாமல் ஊடகங்களிலிருந்தும் சுத்தமாக விலகிவிட்டார். 

தொண்ணூறுகளில் அவர் புகழ் உச்சத்திலிருந்தபோது அவரை ’தரிசிக்கும்’ வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அருந்ததி ராயின் "The Electric Moon" என்ற ஆங்கிலப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த லீலா நாயுடுவுடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது, ‘மணி! கொஞ்சம் காரை கிரேட்டர் கைலாஷுக்கு திருப்பு. ஸ்வாமிஜியைப்பார்க்கணும்!’ என்றார். போனதும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திரா ஸ்வாமியின் ‘இன்ஸ்டண்ட் தரிசனம்’. 

‘ஆயியே பெஹன் ஜி! உங்களைப்பார்த்து யுகங்களாகிறது!’ என்று கட்டிப்பிடித்து வரவேற்பு. இல்லையா பின்னே? ஆறு உலக அழகிகளில்ஊ ஒருவராக கருதப்பட்டவர். Householder படத்தில் சசி கபூருடன் ஜோடி...எழுத்தாளர் டாம் மோரியஸின் மனைவி! அவர் என்னை அறிமுகப்படுத்தியவுடன் ஸ்வாமிஜி என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்... ....ஏதோ நாய் கொண்டுவந்து போட்டதை பார்ப்பது போலிருந்தது! முதல் பார்வையிலேயே அவரை நானும், என்னை அவரும் வெறுத்தோம். 

அவர் இருந்த அறை பூரா மாலைகளும், தட்டுத்தட்டாக கும்பாரமாக எலுமிச்சம்பழங்களும் இருந்தன. வர்த்தகமுறையில் “மாம்பலம் மாமீஸ்’ ஊறுகாய் போடுமளவுக்கு கண்ணைப்பறிக்கும் எலுமிச்சங்காய்கள்! தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல “அய்யர்வாள்! இந்தாங்கோ!” என்று ஒரு பழத்தை எடுத்து நீட்டுவாரென்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை! ஆமாம்! இந்த ஒரு சாக்கு எலுமிச்சம்பழங்களைக்கொண்டு என்ன செய்வார்? தினமும் நான்குவேளை தலைக்கு தேய்த்துக்கொள்வாரோ? கேட்க தைரியமில்லை!

அரைமணிநேர தற்புகழ்ச்சி உரையாடலுக்குப்பிறகு --

எல்லாமே “நான் தான் அவனுக்கு (நரசிம்ம) ராவ்ஜியிடம் சொல்லி கேஸ் வராமெ முடிச்சேன். இன்னிக்கு நன்றியில்லாமெ இருக்கான்!......நேத்து இதே நேரம் வந்திருந்தா (ஒரு பிரபலம்) இவர பாத்திருக்கலாம். ஒருமணிநேரம் இருந்தார். எங்கிட்டே வந்தவங்களுக்கு நல்லதே பண்ணியிருக்கேன்”....இப்படி.....விடைபெறும்போது நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன். அவரும் என்னை கண்டுகொள்ளவில்லை!


இப்படி என் ‘ஸ்வாமி தரிசனம்’ இனிதே நடந்தேறியது!

--00ஓ00--



படத்தில் ரோஷன் ஸேட், மேக்கப்மென் ஜான்ஸன், லீலா நாயுடுவுடன் நான். படப்பிடிப்பின்போது.



Saturday, June 3, 2017

சரக்கு பாட்டில் எனும் பொதுச்சொத்து





டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்களில் பெண்கள் ஈடுபடுகையில் அவர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துகின்றனர். ஆகவே அவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமென்று யாரோ ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.

அப்படி என்ன பொதுச்சொத்தை பெண்கள் சேதப்படுகிறார்களாம்?

வேறென்ன மது பாட்டில்களைத்தான்.

யப்பா, நல்ல பொதுச்சொத்து!!!

நல்ல பொது நலன்!!!!

அரசு எவ்வழியோ, மக்களும் அதே வழியில்தானே செல்வார்கள்!

டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது “அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாகச் சொல்லி” வழக்கு பதிந்த சமாதி அம்மையாரின் ஆன்மா படி ஆட்சி நடத்துவர்களின் ராஜ்ஜியத்தில் மக்களும் ஆட்சியாளர்களைப் போலத்தானே இருப்பார்கள், கேவலமாக.

எலே ராசா, இதைப் படி, வயிறெரிஞ்சு போ

இந்திய ஒற்றுமையை நிஜமாகவே  சீர்குலைக்கும் வகையில் அன்றாடம் வெறிக்கூச்சலிட்டு, விஷத்தை பரப்பி  வரும் உண்மையான தேச விரோதி  எச்.ராசாவிற்கு இச்செய்தி சமர்ப்பணம்.

நீ எல்லாம் தலைகீழா நின்னாலும் இந்த ஒற்றுமையை குலைக்க முடியாது. அதனால் அரசியலை விட்டுவிட்டு சீட் பண்ட் தொழிலுக்கே போயிடு.



 இதுவும் கேரள புதுமை
 
விஷ்ணு கோவிலில் இப்தார்
 
மலப்புரம், ஜூன் 2 -

கேரள மாநிலம் மலப்புரத்தில் லட்சுமி நரசிம்ம மூர்த்தி விஷ்ணு கோயில் உள்ளது.இங்கு இஸ்லாமியர்களின் புனித மாதமானரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் சுமார் 400 இஸ்லாமியர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட இதர மதத்தின ரும் உற்சாகமாக கலந்துகொண்டுள்ளனர்.

மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டாக நடந்த இந்நிகழ்ச்சி குறித்து கூறியுள்ள கோயில் நிர்வாகமானது, “நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது, மனிதநேயத்திற்குத் தான்; மதத்திற்கு அல்ல! அவரவர் மதத்தை அவரவர் பின் பற்றுகிறார்கள்; ஆனாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான்” என்று தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வெட்டிச்சிரா பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. தற்போது கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு சுமார் 300 இஸ்லாமிய குடும்பங்கள் நிதியுதவி அளித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Friday, June 2, 2017

சந்திப்பில் .... முதல்வரோடு ஒரு சந்திப்பு,








ஆம், முதல்வரோடுதான் ஒரு சந்திப்பு. எடப்பாடி அல்ல. பாபா திரைப்பட முதல்வர் பாட்டையா பாரதி மணி அவர்களோடுதான். பல்வேறு பரிமாணங்கள் கொண்ட அவரோடு முக நூல் மூலமாகத்தான் அறிமுகம். கடந்த வருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய அவரது ஐநூறு பக்க புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து அவருக்கும் ரசிகனானேன். நகைச்சுவை உணர்வும் நையாண்டியும் கலந்த அந்த சுவாரஸ்யமான மனிதர் திருப்பத்தூருக்கு வந்திருப்பதாக முகநூலில் எழுதியிருந்தார். அந்த நூல் குறித்த பதிவின் இணைப்பு  இங்கே. . . .

வியாழனன்று திருப்பத்தூருக்கு ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் அன்று வரை நீங்கள் அங்கே இருப்பீர்களா என்று கேட்பதற்கு பதிலாக திங்கள் கிழமை வரை இருப்பீர்களா என்று கேட்டு இன்பாக்ஸில் தொடர்பு கொண்டேன். செய்தி அனுப்பிய உடனேயே  திங்கள் கிழமை காலை அன்று பெங்களூர் புறப்படுகிறேன் என்று பதில் போட்டார். பிறகுதான் வியாழன் என்பதற்குப் பதிலாக திங்கள் என்று எழுதிய தவறு புரிந்தது. அலுவலகம் போகாத நாளுக்கு மறுநாள் திங்கள் என்றே மனதில் பதிவாகியுள்ளது. கிழமையை தவறாக எழுதி விட்டேன் என்று சொன்னால் ஆமாம், நானும்தான் என்று பதில் போட்டார். வியாழன் காலை ஜோலார்ப்பேட்டை சந்திப்பில் சந்திப்பது என்று முடிவானது.

காலையில் திருப்பத்தூர் திருமணம் முடிந்து, முக்கியமாக சாப்பிட்டு முடித்த பின்பு அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்க திருப்பத்தூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் திருப்பத்தூர் அருகில் இருப்பதாகச் சொன்னதும் ஜோலார்ப்பேட்டைக்கு காரில் செல்வதாகவும் ஒன்றாகவே கூட போகலாம் என்றும் சொன்னார். நான் காரில் வந்திருப்பதாகச் சொன்னதும் சரி நேரில் பார்ப்போம் என்றார்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஜோலார்ப்பேட்டை சந்திப்பில் நான் காத்திருக்க, காரிலிருந்து இறங்கி ரயில் நிலையத்துக்கு உள்ளே வராமல் எதிர்ப்பக்கமாக வேகமாக அவர் செல்ல, துரத்திக் கொண்டே போனேன். அது ஒரு மொபைல் கடை. அவர் வந்த வேலையை பார்க்க விடவில்லை. அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினேன், இல்லையில்லை அவர் பேசுவதை கேட்கத் தொடங்கினேன்.

உங்கள் நூல் என்னை மிகவும் கவர்ந்தது என்று சொன்னதற்கு

என்னைப்  எழுத்தாளன் என்று சொல்லும் போது அப்படியே கூனிக்குறுகிப் போகிறேன். நான் எழுத்தாளன் என்றால் அப்புறம் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன் எல்லாம் யார்?

பதில் சொன்னார்.

அவரது திரைப்பட அனுபவங்கள், டெல்லி தொடர்புகள் குறித்து பேசினார். சாகித்ய அகாடமி யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற தகவல் கிடைக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று மட்டும் சொல்வேன். ஏதோ நான்தான் முயற்சி எடுத்து வாங்கிக் கொடுத்ததாக நன்றி சொல்வார்கள் என்றார். எமி ஜாக்சனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததை மறக்காமல் சொன்னார். பாரதி மணி நடிக்கும் படத்திற்கு விருது கிடைக்கும் என்று லெனின் ஷங்கரிடம் சொன்னது, அதன் படியே அன்னியனுக்கு கிடைத்தது, ஊருக்கு நூறு பேர் நல்ல படமாக இருந்தாலும் ஓடாதது, ஒரு சீனாக இருந்தாலும் பளிச்சென்று இருக்கும் என முப்பத்தி ஆறு வயதினிலே படத்தில் நடிக்க ஜோதிகா அழைத்தது பற்றி சொன்னார். சுகாவின் படத்தில் நடிக்க இருப்பது என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

சந்திரா சுவாமி பற்றி எழுதியது சுவாரஸ்யமாக இருந்தது என்று சொன்னேன். நாளை அதை சுட்டு பதிவிடலாம் என்று யோசித்துள்ளேன்.

புழல் நிரம்பாமால் சென்னை வர மாட்டேன், சிறை அல்ல, ஏரி என்று முகநூலில் பதிவு போட்டதை நினைவு படுத்தி அதில் உறுதியாக இருக்கிறேன் என்றார். சிறை வேண்டுமானால் நிரம்பலாம், ஏரி நிரம்பும் வாய்ப்பு குறைவு என்றேன் நான்.

அந்த மொபைல் கடையில் அவர் வந்த வேலை நடக்கவில்லை ஆனாலும் கூட அவர் கிளம்புகையில் அந்த உரிமையாளரைப் பார்த்து “நுகர்வோருடனான உங்கள் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கிறது, காட் ப்ளெஸ் யு” என்று வாழ்த்தி விட்டுத்தான் புறப்பட்டார்.

நீங்கள் படிகளில் ஏறுவதற்கு பதிலாக ஸ்லோப்பில் செல்லுங்கள் என்று அவர் சொல்ல, எனக்கு முட்டியில் எல்லாம் பிரச்சினை இல்லை என்றும் என்னுடைய ஸ்பைனில் எல்.5, எல்6 பிரச்சினைக்கு ஸ்விம்மிங்தான் நல்லது என்று டாக்டர் சொல்கிறார். சென்னையில் எந்த ஸ்விம்மிங் பூலும் சுகாதாரமில்லாமல் நாற்றமடிக்கிறது. பெங்களூரில் இருப்பதே அதற்காகத் தான் என்று சொன்னார்.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். பிளாட்பார்மிற்கு புறப்பட்டார். எனக்கு முட்டியில் பிரச்சினை இருக்கிறது. அதனால் இங்கிருந்தே விடைபெற்றுக் கொள்கிறேன் என்றேன், கொஞ்சம் வெட்கத்துடன். மெல்லமாக அணைத்து “காட் பிளஸ் யு” என்று சொல்லி புறப்பட்டார். படிகளில் அவர் கொஞ்சம் வேகமாக ஏறுகையில் பொறாமையாகக் கூட இறந்தது.

பின் குறிப்பு 1 : நடுவில் அவர் பைப்பை எடுத்து புகைக்கையில் நாமும் பைப்பிற்கு மாறி விடுவோமா என்று யோசித்தேன். விரைவில் விட்டுவிடுவதாக மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவிற்கு வந்ததால் அந்த யோசனையை அந்த நிமிடத்திலேயே துறந்து விட்டேன். 

பின் குறிப்பு 2 : கடைசி படத்தில் இருப்பவர் எங்கள் தோழர் சி.கணேசன். "இந்த வயசுலயும் எவ்வளவு வேகமா இருக்காரு, கொஞ்சம் கூட பந்தாவே இல்லாம" என்று இன்று காலையில் சொன்னார்.

"அதனால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கிறது" என்று பதில் சொன்னேன்.

ஆமாம். அதுதானே உண்மை!

Thursday, June 1, 2017

மயிலுக்கு வந்த சோதனை




மயில்களுக்கு மட்டும் மனிதர்களுக்கு உள்ள பேசும் திறனும் சமூக வலைத்தளங்களை கையாளும் திறனும் இருந்தால் கோபத்தில் கொந்தளித்திருக்கும் அல்லது வேதனையில் நொந்து நூலாயிருக்கும். 

முக நூல் முழுக்க மயில்கள் இனப்பெருக்கம் செய்வது தொடர்பான புகைப்படங்களும் காணொளிக் காட்சிகளும்தான். 

பிள்ளையாருக்கு மோடி செய்த பிளாஸ்டிக் சர்ஜரி,
பிரம்மாஸ்திரம்தான் அணுகுண்டு,
புஷ்பக விமாணங்கள்,
வைகை அணையை மூட தெர்மகோல்

ஆகிய அதி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம் ராஜஸ்தான் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா மிஞ்சி விட்டார்.

ஆண் மயிலின் கண்ணீரிலிருந்தே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று சட்டப்புத்தகங்களை ஆராய்ந்து அவர் அரிய கண்டுபிடிப்பை அறிவிக்க, ஆண் மயிலும் மோடியைப் போல பிரம்மச்சாரி என்று தன் வாதத்திற்கு வலு சேர்க்க 

பாவம், அவரை எல்லோரும் சேர்ந்து கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள். இப்படி உதை வாங்குவதே காவிக்கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கு வழக்கமாக போய் விட்டது. கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் முகத்தை துடைத்துக் கொண்டு போய் விடுவார்கள் என்பது வேறு கதை. 

இந்த மனிதனால் மயில்களின் அந்தரங்கப் படங்கள் (அதானே உண்மை) வெளியானதுதான் கொடுமை!

பின் குறிப்பு : ஒரு மாறுதலுக்காக பதினாரு வயதினிலே மயிலு படம்!