Tuesday, December 2, 2014

படுபாவிகளே, நக்கலை நிஜமாக்கிட்டீங்களே

 












பாஜக எம்.பி தருண் விஜய் திருக்குறள் ஒரு ஹிந்து மொழியில் எழுதப்பட்ட  ஹிந்து நூல் என்று அபத்தமாக உளறியதைக் நையாண்டி செய்து 

"குரான், பைபிள் என எல்லா நூல்களுமே ஹிந்து நூல்கள் என்று சொல்லி விடுங்கள். இந்த உலகமே ஹிந்து உலகம் என்றும் சொல்லி விட்டால் அதன் பின்பு இந்த உலகம் முழுதுமே உங்கள் ராஜ்யம்தான்" 

என்று  நேற்று  எழுதியிருந்தேன்.

நேற்று அதை ஒரு மோடியின் மந்திரி  நிரஞ்சன் ஜோதி சாத்வி என்ற பெண் சாமியார் பேசி விட்டார் என ஒரு நண்பர் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். துபாய் திரு சேஷனுக்கு நன்றி.  முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என எல்லோரும் ராமரின் பிள்ளைகளாம். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாம் இந்தியாவை விட்டு வெளியேறி விட வேண்டுமாம். 

நக்கலுக்கு சொல்றதையெல்லாம் நிஜமாக்கினீங்கனா, இந்தியாவோட நிலைமை என்ன ஆகறது?

பரமார்த்த குருவும்  சீடர்களும் போலத்தான் மோடியும் அவரது அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

அது என்ன, ஆனா ஊனா இந்தியாவை விட்டு வெளியே போகச் சொல்றீங்க?  அது என்ன உங்க பாட்டன் சொத்தா?

உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களைச் சொல்லனும். 

அவங்களும் பரமார்த்த குருவின் சீடர்கள்தான். 




சஹாரா, சாரதா பாஜக திரிணாமுல் மோதல் – பங்கு பிரிப்பதில் பிரச்சினையா?




சாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தா பானர்ஜி குற்றவாளி என்று பாஜக கட்சியினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

ஊரை அடித்து உலையில் போட்ட சஹாரா நிறுவனத்தின் முதலாளி சுப்ரதோ ராயின் டைரி படி அவரிடமிருந்து பாஜக தலைவர் அமித் ஷா லஞ்சம் வாங்கியுள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் ஆட்கள் புகார் சொல்கின்றனர்.

கொள்ளையடித்த பின்பு பங்கு பிரிப்பதில் பிரச்சினை வந்தால் திருடர்கள் ஒருவர் மற்றொருவர் மீது இப்படித்தான் மாறி மாறி குற்றம் சொல்லி அடித்துக் கொள்வார்கள்.

இவர்கள் இப்படி மோதுவதும் அது போலத்தானோ?

Monday, December 1, 2014

காவிக்கூட்டத்திற்கு ஒரு சூப்பர் ஐடியா

 http://chennaionline.com/images/gallery/2014/November/20141111095513/Vairamuthu_Felicitating_Tarun_Vijay_Event_Stills004.jpg

வைரமுத்துவால் விழாவெடுத்து கொண்டாடப்பட்ட தருண் விஜய் என்ற காவிக்கூட்ட பிரதிநிதி ஏன் தமிழையும் திருக்குறளையும் உயர்த்திப் பிடித்தார் என்பதை திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.

"திருக்குறள் ஹிந்து மொழியில் எழுதப்பட்ட ஒரு ஹிந்து நூல்"

நல்ல வேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து விட்டார். இல்லையென்றால் அவர் இப்போது தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

இப்படி ஒவ்வொரு மொழிக்கும்  ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியே ஹிந்து அடையாளம் கொடுப்பதற்குப் பதிலாக ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், உருது, அரபி, ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம், கன்னடம், மலையாளம், துளு, என்று எல்லா மொழிகளுமே ஹிந்து மொழிகள் என்று சொல்லி விடுங்கள்.

பிறகு குரான், பைபிள் என எல்லா நூல்களுமே ஹிந்து நூல்கள் என்று சொல்லி விடுங்கள். இந்த உலகமே ஹிந்து உலகம் என்றும் சொல்லி விட்டால் அதன் பின்பு இந்த உலகம் முழுதுமே உங்கள் ராஜ்யம்தான். 

சரி இந்த அறிவிப்பையெல்லாம் செய்த பின்பு அதற்காக அண்ணன் வைரமுத்து இன்னொரு விழா எடுப்பார். 

அதற்கும் எல்லோரும் அவசியம் வந்து விடுங்கள்.

சே! வெக்கம் கெட்டவர்கள்.

 

Sunday, November 30, 2014

வைகோ மயங்கி விட வேண்டாம்




பாஜக தன் கோர முகத்தை, சகிப்புத் தன்மையற்ற பாசிஸ குணாம்சத்தை அதன் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வைகோவிற்கு விடுத்த மிரட்டல் மூலம் வெளிப்படுத்தி விட்டது. "பெரியாரை செருப்பால் அடிப்பேன்" என்ற கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான ஹெச்.ராஜா இப்போது வைகோ பாதுகாப்பாக நடமாட முடியாது என்று நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

"அப்படியென்ன நரேந்திர மோடி வானிலிருந்து குதித்த தேவதையா? உலகின் மிக உன்னதமான மனிதனா? ரத்தக்கறை படிந்த களங்கமான மனிதன் தானே! மோடியை விமர்சித்தால் சும்மா இருக்க மாட்டோம் என்று மிரட்டுவது வைகோவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிரட்டல். கருத்துரிமைக்கு விடப்பட்ட மிரட்டல். இதை அனுமதிக்க முடியாது. கண்டிக்கிறேன். கண்டியுங்கள், எல்லோரும் கண்டிப்போம்.

இப்போது பாஜக வின் தமிழிசையும் பொன்னாரும் ஹெச்.ராஜா பேசியது அவரது சொந்தக் கருத்து என்று சொல்லி அந்த அநாகரீகத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். திருமதி தமிழிசை சௌந்தரராஜன் பேசும் போது கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்யாதீர்கள். கோரிக்கை வையுங்கள் என்று சொல்லியுள்ளார்.

இந்த வார்த்தைகளுக்கு உள்ளேயுள்ள அர்த்தம் என்ன?

ஒழுங்காக இருங்கள், எலும்புத் துண்டுகளை வீசியெறிவோம் என்பதுதானே!

வைகோவிற்கு ஒரு வார்த்தை.

பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாகச் சொல்லும் நீங்கள் ஹெச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுபடுத்திய போது அமைதியாக இருந்தீர்கள். அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். பிரச்சாரம் செய்தீர்கள், சான்றிதழ் கொடுத்தீர்கள். இப்போது உங்களை மிரட்டுகிறார்கள். அதே நேரம் ஆசையும் காட்டுகிறார்கள்.

பெரியாரை நீங்கள் நேசிப்பது உண்மையென்றால் இனியாவது காவிக்கூட்டத்திற்கு முட்டு கொடுக்கும் தவறை திருத்திக் கொள்ளுங்கள், உங்களது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  

Saturday, November 29, 2014

மோடியின் காஷ்மீர் மௌனம் ஏனோ?

மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டதிலேயே  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது பற்றி விவாதித்தோம் என்று ஒரு குட்டி மந்திரி மூலம் சொல்ல வைத்து பின்பு பல்டி அடித்த மோடி வித்தை நினைவில் உள்ளதல்லவா?

 http://i.telegraph.co.uk/multimedia/archive/02393/kashmir2_2393438b.jpg


அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்று. பாஜகவின் விருப்பமும் அதுவே. அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது கிட்டத்தட்ட செத்த பாம்பை அடிப்பதற்க்கு சமம். ஏனென்றால் மற்ற மாநிலத்து ஆட்கள் காஷ்மீரில் நிலம் வாங்கக் கூடாது என்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை. 

காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மோடி, ஏன்  370 ஐ அகற்றுவது  பற்றி வாய் திறக்கவே இல்லை. வீராதி வீரர், சூராதி சூரர், புஜபல பராக்கிரம தைரியசாலியான மோடி எதற்காக அங்கே மௌனம் அனுஷ்டிக்கிறார்? 370 ஐ அகற்றுவேன் என்று சொல்ல வேண்டியதுதானே? தேர்தல் கூட்டங்களில் அறிவிக்க வேண்டியதுதானே?

சொல்லுங்க மோடி சொல்லுங்க்


Friday, November 28, 2014

கோபி மிளகு பிரெட் - ஆணின் சமையல் குறிப்பு

கொஞ்சம் பெரிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் சமையல் குறிப்போடு.

தோழர் சங்கர் ஓகேயா?

வழக்கமான பிரெட் உப்புமாதான். ஆனால் வழக்கமான முறையல்ல, முற்றிலும் மாறு பட்ட தயாரிப்பு முறை, மாறு பட்ட சுவையோடு.

சின்ன வெங்காயத்தை உரித்து வைத்துக் கொள்ளவும். காலி ப்ளவரை கொஞ்ச நேரம் சுடு தண்ணீரில் ஊற வைக்கவும். பிரெட்டை சின்ன துண்டங்களாக வெட்டி வைக்கவும். கொஞ்சம் மிளகை பொடியாக்கிக் கொள்ளவும். 


என்ன எல்லாம் தயாரா? 

சரி நாம் சமையலைத் துவக்குவோம். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காயும் வரை காத்திருக்கவும். முதலில் சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பிறகு ஊற வைத்த காலிப்ளவரை வதக்கவும். இப்போதே உப்பையும் மிளகு பொடியையும் சேர்க்கவும். 

பிறகு பிரெட் துண்டுகளையும் சேர்த்து நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை  வதக்கி கொஞ்சம் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



சூப்பரா இருந்தது - இது என் மகனின் கமெண்ட்.
வேறென்ன வேண்டும் எனக்கு.........

நாய்களின் பேரணி யாருக்கு நன்றி சொல்ல?

இன்றைக்கு காலையில் கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்த போது பார்த்த காட்சி இது.




எங்கள் தெருவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஒரு பேரணி போல ஏழெட்டு முறை  நடை போட்டுக் கொண்டே இருந்தன. சாலையில் சென்ற ஒவ்வொருவருமே அச்சத்துடனேயே ஒதுங்கிச் சென்றனர்.

தாங்கள் இப்படி சுதந்திரமாக திரிய வழி வகுத்த மேனகா காந்திக்கோ அல்லது கண்டு கொள்ளாத வேலூர் மாநகராட்சிக்கோ நன்றியைச் சொல்லத்தான் அவைகள் இந்த பேரணியை நடத்தியது போல எனக்கு தோன்றியது.

எங்கள் பகுதி மட்டுமல்ல, வேலூரின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற காட்சிகள் இப்போது சாதாரணமாகி விட்டது.