Saturday, May 21, 2022

கலக்கமில்லை குழப்பமில்லை

 *கலக்கமில்லை குழப்பமில்லை*


*எதிர்ப்பினைத் தொடர்வோம்!*




("இன்சூரன்ஸ் ஒர்க்கர்" தலையங்கம்- ஜூன் 2022)

 _தமிழாக்கம் : ஜி.சுதா (கோவை) நா. சுரேஷ்குமார் (மதுரை)_ 
#########################

எல்.ஐ.சி, ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதோடு, 17.05.2022 முதல் அதன் பங்கு விற்பனையும் துவக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியின் நிர்வாகம், "பழையன கழிதலும், புதியன புகுதலும்" (Ring out the old and ring in the new) என்கிற வரிகளோடு, இதனை பெரும் கொண்டாட்டமாக மாற்றிட விரும்பியது. எல்.ஐ.சியின் ஒவ்வொரு அலுவலகமும் இக் கொண்டாட்டங்களை விமரிசையாக மேற்கொள்ள பணிக்கப்பட்டது. இந்த நிர்வாகம், அரசியல் தலைமைக்கு மகிழ்வூட்டும் தனிப்பட்ட ஆர்வத்தால், எல்.ஐ.சியின் 66 ஆண்டு கால போற்றத்தக்க பங்களிப்பை வரலாற்றின் பக்கங்களுக்குள் தள்ளிவிட்டு, இது ஒரு புதிய பயணத்தின் துவக்கம் என அறிவிக்க முனைகிறது. தேச வளர்ச்சிக்கான இலக்குகளுக்காகவும், சமூகத்திற்கான பெரும்பொறுப்புகளை நோக்கி முன்னேறிடவும் பங்களிக்கிற ஒரு சீர்மிகு நிதி நிறுவனம் எல்.ஐ.சி என்கிற தனது நிலையிலிருந்து விலகி, இனி ஒரு "பரிசுத்தமான" வணிக நிறுவனமாக மட்டுமே எல்.ஐ.சி செயல்பட வேண்டும் என்கிற செய்தி தெளிவாகவும், உரத்தும் சொல்லப்பட்டுள்ளது. “ஒரு வணிக நிறுவனத்தின் ஒரே வேலை, லாபத்தைப் பெருக்குவது மட்டுமே, அதைத் தரும் மற்றவை எல்லாம் சந்தேகத்திற்கிடமின்றி கலப்படம் இல்லாத சோசலிசமே” எனக் கூறிய, நவீன தாராளமய பொருளாதார சிந்தனைகளின்  பிரபல பிரச்சாரகர் மில்டன் பிரைட்மேன் அறிவுரையை பின்பற்ற எல்.ஐ.சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. எல்.ஐ.சியின் இந்த புதிய பிம்பம்தான், "மக்கள் பணம் மக்கள் நலனுக்கே" என நம்புகிற எல்லோருக்கும் பெருங்கவலையைத் தருகிறது.

வெற்றிகரமான பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியை, இப் பங்கு விற்பனை நிச்சயமாக தனியார்மயத்திற்கே இட்டுச்செல்லும் என்கிற தெளிவான புரிதலோடு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. ஐபிஓவிற்கு எதிரான சங்கத்தின் வலுமிக்க வாதங்கள் குடிமைச் சமூகத்தின் பெரும் பகுதியினரை கிளர்ந்தெழச் செய்தது. நிதித்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்கள் எல்.ஐ.சி ஊழியர்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை நல்கின. குடிமைச் சமூக நிறுவனங்களான "முதலில் மக்களே" (People's first), சிறந்த பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய "தனியார் மயத்திற்கு எதிரான மக்கள்" (People against Privatisation), ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பெரும் எண்ணிக்கையில் பிரசுரங்களை வெளியிட்டு எல்.ஐ.சி ஐ.பி.ஓவிற்கு எதிரான தங்கள் கருத்துக்களை வலுவாக முன்வைத்தனர். துரதிருஷ்டவசமாக, இன்று நாம் பெற்றிருப்பதோ "ஜனநாயகப் பற்றாக்குறை" ( Democratic Deficit) கொண்டதொரு அரசாங்கம். ஆகவே அது அனைத்து எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு பங்கு விற்பனையை நடைமுறைப்படுத்த எல்.ஐ.சி துணிந்தது.

எல்.ஐ.சி பங்குவிற்பனை முடிவின் மீதான சங்கத்தின் பிரச்சாரம் சட்டப்பூர்வமாக, தார்மீகமாக என இரண்டு முனைகளிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எல்.ஐ.சி சட்டம் 1956, என்கிற எந்தச் சட்டத்தின் கீழ் எல்ஐசி துவக்கப்பட்டதோ, அது அரசின் பாத்திரம் ஒரு காப்பாளர் (Trustee) என்றே வரையறுத்திருக்கிறது என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்றைய வணிகத்தை போல், அதாவது நிறுவனத்தை நடத்தவும், விரிவுபடுத்தவும் அதன் முதலாளியோ அல்லது அதன் பங்குதாரர்களோ அதற்கான முதலீடுகளைச் செய்வார்கள் என்பதாக இங்கு இல்லை. மாறாக எல்.ஐ.சியைப் பொறுத்தவரை ஒட்டு மொத்த இடர் மூலதனமும் (Risk Capital) பாலிசிதாரர்களின் பங்களிப்பாக  தரப்பட்டது. இப் புரிதலின் மீதான தனது அப்பட்டமான அலட்சியப்போக்கினால் அரசாங்கம் உண்மையில் பாலிசிதாரர்களுக்கு உரித்தான நிதியினை அபகரித்துக் கொண்டது என்பதே. இந்த அபகரிப்பின் தீவிரத்தை உணர்த்துகிற அம்சம் இதுதான். 31.03.2021ல் எல்.ஐ.சி ஒற்றை ஆயுள் நிதியைக் கொண்டிருந்த காலத்தில், பங்குதாரர் மதிப்பு 0.97 லட்சம் கோடிகள் என மதிப்பிடப்பட்டிருந்ததும், அதுவே, 30.09.2021ல், அதாவது, ஆயுள் நிதியினை இருவேறாகப் பிரித்த பிறகு, 5.4 லட்சம் கோடிகளாக குதித்தெழுந்ததுமான அனுபவத்தைப் பார்க்கும் போது இதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பீப்பிள்ஸ் பர்ஸ்ட் எனும் அமைப்பினைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் இப்பிரச்சினையை சட்டரீதியாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

தனது நிதிப்பற்றாக்குறைச் சமாளிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும் என்கிற தேவையிலிருந்து மட்டுல்ல, நவீன தாராளமயத்திற்கு இன்றும் எங்களை நாங்கள் ஒப்புக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்கிற செய்தியை உலக முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்துடனுமே எல்.ஐ.சி பங்குவிற்பனையை அரசு மேற்கொண்டது. சர்வதேச பங்குச்சந்தைகள் கசப்பான நிகழ்வுகளைக் கொண்டிருப்பதும், வளரும் நாடுகளின் சந்தையிலிருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை திரும்பப்பெற்று வருகிறார்கள் என்பதும் அரசுக்குத் தெரியும். அதிகரித்துவரும் பணவீக்கமும், வேலையின்மையும் ஏனைய கவலைமிகு சவால்கள். இத்தகைய சூழலிலும் பங்கு விற்பனைக்கு (IPO) செல்வது இடர்பாடுமிக்கதாக அமையும் என பங்கு விற்பனையைக் கையாள இருந்த வங்கிகள் அரசினை எச்சரித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த சூழ்நிலைகளை அறியாமல் இல்லை என்றாலும், அரசாங்கம் ஐ.பி.ஓ அளவினை 3.5 சதமெனக் குறைத்ததோடு, எல்.ஐ.சி மதிப்பீட்டில் மிகப் பெரும் சமரசத்தையும் செய்தது. சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இத்தகைய மதிப்பீட்டினைத் தான் வலியுறுத்துகிறார்கள் என்று சொல்லி தனது குறைமதிப்பீட்டினை நியாயப்படுத்தியதோடு, நம் நாட்டின் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மதிப்பீட்டு விகிதத்தையும் அரசாங்கம் முற்றிலுமாக புறந்தள்ளியது. இந்தியாவின் தனியார்மயமாக்கல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய ஊழல். சர்வதேச நிதிமூலதனத்தை தாஜா செய்வதற்கான இத்தகைய அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் கூட, அந்நிய மூலதனம் எல்.ஐ.சி ஐ.பி.ஓவிலிருந்து விலகி நின்றது. எல்ஐ.சி ஐபிஓவானது, உள்நாட்டில் இந்நிறுவனம்  பெற்றிருந்த மதிப்பினாலும், மக்கள் அபிமானத்தினாலும் மட்டுமே ஈடேறியது.

எல்.ஐ.சி செல்வ மறுபங்கீட்டிற்கானதொரு முயற்சியே ஐ.பி. ஓ என அரசு வாதிட்டது. எல்.ஐ.சியால் உருவாக்கப்பட்ட பெரும் செல்வமதிப்பினை மக்களுக்கும், பாலிசிதாரர்களுக்கும் பங்கிட விரும்புவதாக அரசு தெரிவித்தது. இந்திய மக்கள் தொகையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மூன்று சதத்திற்கும் குறைவானவர்களே என்கிற உண்மையை இந்த வாதம் மறைக்க முடியாது. நாட்டிற்குச் சொந்தமான செல்வ வளத்தை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகிற ஒரு சிறு பகுதியினர் சுயலாபத்தைப் பெருக்க அனுமதிக்கலாம் என பரிந்துரைப்பது உண்மையில் ஒரு கொடும் தாக்குதலேயாகும். 

*ஏமாற்றலாமா பாலிசிதாரர்களை?* 

எல்.ஐ.சி பங்குகள் ஒதுக்கப்பட்ட முதலீட்டாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவரவில்லை. விண்ணப்பித்த 76 லட்சம் பேரும் பங்குதாரர்கள் என்று எடுத்துக் கொண்டால்கூட அது மொத்த இந்திய மக்கள் தொகையில் 0.56சதவீதம்தான். எல்ஐசியின் கணக்கில் இருக்கிற ஏறத்தாழ 25 கோடி தனிநபர் பாலிசிதாரர்களுள் 5 லட்சம் பாலிசிதாரர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடலாம். எனவே, இந்திய மக்களில், பாலிசிதாரர்களில் பெரும்பகுதி எல்ஐசியின் பங்குதாரர்களாக மாறிவிட்டார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது.

எல்.ஐ.சி ஐபிஓ, முதலீட்டுச் சந்தையை ஆழப்படுத்த உதவியிருப்பதில் அரசு வேண்டுமானால் ஆறுதல் கொள்ளலாம். ஆனால், அது எல்.ஐ.சியின் மதிப்பை சேதாரப்படுத்தி செய்யப்பட்ட ஒன்றாகும். எல்.ஐ.சி பங்குகளை தள்ளுபடியோடு பட்டியலிட்டது பெரும்பகுதி முதலீட்டாளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. காப்பீடு செய்துள்ள பொதுமக்கள், எல்.ஐ.சி பங்குகளின் இந்நிலையை, அதன் உண்மையான வணிக செயல்பாட்டோடு ஒப்பிட்டு குழப்பமடைவதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மை மீது ஐயப்பாடு கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது. இது எல்ஐசியின் வணிக வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் அமையக்கூடும். எல்ஐசியின் நிறுவன மதிப்பினைப் பயன்படுத்தி முன்னிறுத்தப்படும் இந்த பங்குவிற்பனை கலாச்சாரம், முதலாளித்துவம் அள்ளிஅள்ளித்தரும் என்கிற மாயையை உருவாக்கும் அதே நேரத்தில், இந்த சுரண்டல் முறைக்கு எதிரான எதிர்வினைகளை பலவீனப்படுத்துவதுமாகும். மேலும் ஊழியர்களையும் தாங்கள் தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகிய இரண்டுமாக பார்க்கச் செய்கிற முரண்பாட்டினை உருவாக்குவதிலும் இது வெற்றி கண்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலன்களும், ஊழியர்களின் நலன்களும் ஒரே மாதிரியானதாக இருக்க முடியாது என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஐபிஓவுக்குப் பிறகு ஏராளமான சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இந்திய ஆளும் அரசு ஒரு முதலாளித்துவ அரசு என்பது தெளிவானது. ஆகவே, முதலாளிவர்க்கத்தின் கைப்பாவையான அரசு அதன் அனைத்து நிறுவனங்களையும் முதலாளித்துவ நலன்களை விரிவுபடுத்திக் கொள்ள பயன்படுத்தும். எல்.ஐ.சி மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே, போராட்டமென்பது மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துத்தந்துள்ள சமூகத்திற்கான அதன் பொறுப்புகளை கற்பிப்ப்பதாக இருக்க வேண்டும். ஐபிஓக்குப் பின்பு, எல்ஐசியின் ஒட்டுமொத்த உழைப்பும் பங்குதாரர்களுக்கு முன்னுரிமை தரவும், அவர்களது லாபத்தைப் பெருக்கவுமே செலுத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நடைமுறையால், எல்.ஐ.சியின் வணிக மாதிரி, மாற்றத்திற்கு உள்ளாக நேரிடும். அதனால், பங்குதாரர்களுக்கு பெருமளவு லாபத்தை ஈட்டித் தருகிற பாலிசி திட்டங்களை விற்கவேண்டுமென்கிற மனோபாவம் முன்னிலை பெறும், இதனைத் தான் பாலிசிதாரர்களின் நலன்களை மீறி பங்குதாரர்களுக்கான பலன்களைத் தருவது என்கிறோம். வணிக யுக்திகளில் தற்போதே இத்தகைய திசைமாற்றம் தென்படுகிறது. இந்திய சமூகத்தின் அடிமட்ட, மத்திய தரத்தினரை புறந்தள்ளிவிட்டு, உயர் தட்டு மனிதர்களுக்கான பாலிசிகளை மட்டுமே திரட்டுவதை நோக்கி சக்தி முழுவதையும் பயன்படுத்தப்படக்கூடும்.

தொழிற்சங்கங்கள் இதனை சவாலாக எடுத்து முறியடிக்க வேண்டும். தற்போது நடப்பிலுள்ள பாலிசிதாரர்கள் மற்றும் எதிர்கால பாலிசிதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்களுக்கான சேவைகளை உறுதிசெய்யவும், நலன்களைப் பாதுகாக்கவும் இத்துறையின் தொழிற்சங்க இயக்கம் தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்கிற உத்தரவாதத்தை அளிக்கவேண்டும். பிரச்சாரத்தின் வாயிலாக, பங்குச்சந்தையில் பிரதிபலித்துள்ள மதிப்பினை விட பன்மடங்கு உள்மதிப்பினை எல்.ஐ.சி தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். எல்ஐசி ஒரு மகத்தான நிறுவனம். அது சிறு பாலிசிதாரர்கள் மற்றும் சமூகத்தின் வறிய எளிதில் பாதிப்புகளுக்குள்ளாகக் கூடிய பிரிவினரின் நலன்களை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட நிறுவனமாகும். அதன் அடிப்படைக் கடமையானது, ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் தனது செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. எல்.ஐ.சி ஐபிஓ வினைக் கண்டு கலங்காமல், குழப்பமடையாமல், எல்.ஐ.சி தனது அடிப்படை இலக்குகளிலிருந்து பிறழாமல் நடைபோடுவதை உறுதி செய்வதற்கான இயக்கங்கள் தொடர வேண்டியது அவசியம். அற்புதமான இந்த நிறுவனத்தை சிதைப்பதென்கிற முதலாளித்துவ அரசின் முயற்சிகளை ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு முனையிலும் போராடுவோம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பதாகையின் கீழ் அணிவகுத்துள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் அனைவரும் அத்தகையதொரு போராட்டத்திற்கு துணிந்தும், தம்மை அர்ப்பணித்துக் கொண்டும் உள்ளோம்.

No comments:

Post a Comment